சென்னை:அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தினை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில்,"அனைத்து அரசு
மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு
'ஸ்மார்ட் கார்டு' வழங்கிட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.
இதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் முன்னோட்டமாக, திருச்சி மாவட்டத்தில்
அரசு மேல்நிலைப்பள்ளி, திருச்செந்துறை - அரசு மேல்நிலைப் பள்ளி,
அய்லாப்பேட்டை - அரசு மேல் நிலைப்பள்ளி, சோமரசம் பேட்டை - அரசு
மேல்நிலைப்பள்ளி, எட்டரை - அரசு மேல்நிலைப்பள்ளி, இனாம் குளத்தூர் ஆகிய
ஐந்து மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு முதலமைச்சர்
ஜெயலலிதா தலைமைச் செயலகத்தில் ஸ்மார்ட் கார்டுகளை வழங்கி திட்டத்தினை
துவக்கி வைத்தார். இந்த ஸ்மார்ட் கார்டு மூலம், மாணவ, மாணவியர்களின் பெயர், பெற்றோர் முகவரி,
பெற்றோர் வருமானம், பிறப்பு, பள்ளி சேர்க்கை, தேர்ச்சி, நடத்தை, ரத்த வகை
போன்ற அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்படும். மேலும், மாணவ, மாணவிகள்
குடும்பச் சூழ்நிலைக் காரணமாக இடம் பெயர நேரும் போது இதில் பதிவு
செய்துள்ள விவரங்களின் அடிப்படையில் எந்தப் பள்ளியிலும் சேர முடியும்.
இந்த ஸ்மார்ட் கார்டு திட்டத்தின் மூலம் 91,54,741 மாணவ, மாணவியர்
பயன்பெறுவார்கள். மாணவ, மாணவியர்களின் உடல்நலம் குறித்த விவரங்களை பதிவு செய்யும் ஹெல்த்
கார்டுடன் 'ஸ்மார்ட் கார்டு' ஒருங்கிணைக்கப்படும். இத்திட்டம் படிப்படியாக
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ,
மாணவியருக்கு வழங்கப்படும். தலைமைச் செயலகத்தில், 2011-12ஆம்
கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ம் வகுப்பு
பயின்று தேர்ச்சி பெற்றுள்ள 4,60,779 மாணவ, மாணவியருக்கு முதிர்ச்சியடைந்த
சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் தொடங்கி வைத்து,
மாணவ, மாணவியருக்கு ஊக்கத் தொகையினை வழங்கினார்.2011-12ஆம் கல்வியாண்டில் 21 லட்சத்து 36 ஆயிரம் மாணவ, மாணவிகள்
பயன்பெறும் வகையில் 313 கோடியே 13 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு
தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்தில் வைப்பு செய்யப்பட்டுள்ளது. மேலும்,
2012- 13ஆம் கல்வி ஆண்டில் 21,52,986 மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில்
353 கோடியே 56 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரசு மற்றும்
அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவியரின் வருமானம் ஈட்டும்
தாய் தந்தையர் விபத்தில் இறந்தாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ,
அப்பெற்றோர்களின் குடும்பத்தில் உள்ள அனைத்து பள்ளிச் செல்லும்
குழந்தைகளின் கல்விச் செலவு மற்றும் பராமரிப்புச் செலவிற்காக ஒரு
மாணவருக்கு 50 ஆயிரம் ரூபாய் வீதம் நிரந்தர வைப்பு நிதியாக வழங்கப்படும். இந்த திட்டத்தின் கீழ் 2011-12 மற்றும் 2012-13ஆம் கல்வியாண்டுகளில் 720
மாணவ மாணவியர் பயன்பெறும் வகையில் 3 கோடியே 60 லட்சம் ரூபாய்க்கான வைப்பு
நிதி பத்திரங்களை முதலமைச்சர் ஜெயலலிதா மாணவ, மாணவியருக்கு வழங்கினார்.
முதன்மை கல்வி அலுவலர்களுக்கு 6 புதிய வாகனங்களும், மாவட்ட கல்வி
அலுவலர்களுக்கு 9 புதிய வாகனங்களும், என மொத்தம் 83 லட்சத்து 460 ரூபாய்
செலவில் வாங்கப்பட்ட 15 புதிய வாகனங்களையும் முதல்மைச்சர் ஜெயலலிதா
வழங்கினார்" என்று கூறப்பட்டுள்ளது.