>>>'நீங்களும் விஞ்ஞானி ஆக விரும்புகிறீர்களா?

 
'நீங்களும் விஞ்ஞானி ஆக விரும்புகிறீர்களா? அய்யய்யோ அறிவியல்.'

இப்படி நீளமான தலைப்பிலேயே பயமுறுத்துகிறார் ஆசிரியர். தைரியமாக புத்தகத்தில் நுழைந்தால், பித்தாகரஸ் முதல் இன்றைய இத்தாலி விஞ்ஞானி ஸ்டீபன் போர்க் வரை அத்தனைப் பேரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை கதை நடையில் சொல்கிறது புத்தகம். சாதாரணக் கதைகள் இல்லை. ஒவ்வொன்றுமே காட்டுக்குள் அட்வென்ச்சர் பயணம் போவதைப்போல் திக் திக் அனுபவங்கள். சில உதாரணங்கள்...

கி.மு. 470-ம் நூற்றண்டில் வாழ்ந்தவர் 'எம்பெடோகல்ஸ்' என்ற கிரேக்க ஞானி. பூகம்பம், மழை என அனைத்தையும் மிகச் சரியாக கணித்து சொல்பவர். திடீர் என ஒரு நாள் 'நான் கடவுளாக மாறப்போகிறேன்' என சொல்லிவிட்டு ஓடிப்போய் ஆழமான எரிமலைக்குள் குழிக்குள் குதித்துவிட்டார்.

நெம்புகோல் தத்துவத்தை அறிவதற்காக அடிமைகளை வைத்து பல்வேறு பாறைகளை தூக்கவைத்த ஆர்க்கிமெடிஸ்... செத்துப்போவது என்ன என்பதை அறிவதற்காக சோதனையில் இறங்கி நிஜமாக இறந்துவிட்ட பாவ்லவ்... ஆராய்ச்சியில் முழுமையாக ஈடுபட்டதால் தான் யார்? என்ன பெயர் என்பதையே 20 வருடங்களாக மறந்துபோய் தனது ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு வென்ற ஜான்நேஷ்...

இப்படி பல்வேறு கண்டுபிடிப்பாளர்கள் சந்தித்த சவால்கள், ஆபத்துகள், அவற்றால் ஏற்பட்ட பாதிப்புகள், அறிவியலாளர்களின் விசித்திர குணங்கள் என நமக்கு அதிகம் தெரிந்து இருக்காத விஷயம் புத்தகம் முழுவதும் நிறைந்து இருக்கிறது. புத்தகத்தை கையில் எடுத்தால் ஓரிரு மணி நேரத்திலேயே படித்து முடித்துவிடலாம். அப்படி முடித்த பிறகு இரவு தூக்கத்தில் கலிலியோவும், பிளாட்டோவும் வந்தால் ஆச்சர்யம் இல்லை. இன்னொரு விஷயம்... இந்தப் புத்தகத்துடன், 10 எளிய இயற்பியல் சோதனைகள், 10 எளிய வேதியியல் சோதனைகள், 10 எளிய உயிரியல் சோதனைகள் என்ற மூன்று புத்தகங்கள் இலவசம்.