>>>பல்கலை., வாகனங்களை ஜப்தி செய்ய மாணவர்கள், பொதுமக்கள் எதிர்ப்பு

நில உரிமையாளர்களுக்கு, கூடுதல் இழப்பீடு தொகை வழங்கும் விவகாரத்தில், பாரதியார் பல்கலைக்கழக வாகனங்களை ஜப்தி செய்ய, நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், மாணவர்கள், பொதுமக்களின் எதிர்ப்பால், ஜப்தி செய்ய சென்றவர்கள், நடவடிக்கை எடுக்க முடியாமல் திரும்பினர்.
கடந்த, 1982ம் ஆண்டு, கோவையில் பாரதியார் பல்கலை அமைக்க, தொண்டாமுத்தூர், வடவள்ளி பகுதியைச் சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் நிலம் பெறப்பட்டது. ஆனால், நில உரிமையாளர்களுக்கு, குறைந்தளவே இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கூடுதல் தொகை வழங்கக் கோரி வலியுறுத்திய போதும், நிர்வாகம் கண்டுகொள்ளாததால், வடவள்ளி, மருதாபுரத்தைச் சேர்ந்த ரங்கப்பமுதலியார் மற்றும் இவரது மகன்கள் குருகேசன், 71, மாரியப்பன், 65, ஆகியோர், 2009ம் ஆண்டு, கோவை இரண்டாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். கடந்த ஜூலை, 27ம் தேதி நடத்தப்பட்ட விசாரணையில், இவர்களுக்கு, 40 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. பல்கலை நிர்வாகத்திடம் கோர்ட் உத்தரவு சமர்பிக்கப்பட்ட நிலையிலும், உத்தரவை அமல்படுத்தாததால், வழக்கு தொடுத்தவர்கள், மீண்டும் கோர்ட்டில் மனு செய்தனர். விசாரணையில், பல்கலைக்குச் சொந்தமான, 11 வாகனங்களை ஜப்தி செய்ய, நீதிபதி சந்திரன் உத்தரவிட்டார். கோர்ட் உத்தரவுப்படி, வழக்கறிஞர்கள் விஜயகுமார், திருஞான சம்பந்தம், ஜப்தி அலுவலர்கள் மற்றும் வழக்குத் தொடர்ந்தவர்கள், பாரதியார் பல்கலைக்கு நேற்று சென்று, "வாகனங்களை ஜப்தி செய்ய வேண்டும்" என்ற கோர்ட் உத்தரவைக் காட்டி நடவடிக்கைக்கு முயன்றனர். ஆனால், பல்கலை மாணவர்களும், பொதுமக்களும் எதிர்ப்புத் தெரிவித்து, வளாகத்தில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், ஜப்தி செய்ய சென்றவர்கள், "கோர்ட்டில் முறையிட்டு, போலீஸ் பாதுகாப்புடன் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என, தெரிவித்து, நடவடிக்கையை மேற்கொள்ள முடியாமல் திரும்பிச் சென்றனர்.