>>>ஆசிரியருக்கு பணி நீட்டிக்காதது பள்ளிக்கு ஐகோர்ட் கண்டனம்

"ஓய்வுபெறும் ஆசிரியருக்கு, கல்வியாண்டு முடியும் வரை, பணி நீட்டிப்பு வழங்காதது சட்ட விரோதமானது" என சென்னை ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னை, தி.நகரில் உள்ள, கேசரி மேல்நிலைப் பள்ளியில், 1982ல், ராமலிங்கம் என்பவர், ஆசிரியராக சேர்ந்தார். கடந்த ஜூலை மாதம், ஓய்வு பெறும் வயதை எட்டினார். கல்வியாண்டின் நடுவில், ஓய்வுபெறும் வயது வந்ததால், கல்வியாண்டு முடியும் வரை, பணியில் தொடர, அனுமதித்திருக்க வேண்டும்; ஆனால், அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படவில்லை.
இதை எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், ராமலிங்கம் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த, நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு:அரசாணையை மேற்கோள் காட்டி, கல்வியாண்டு இறுதி வரை, பணி நீட்டிப்பு வழங்கும்படி, மனுதாரர் கோரி உள்ளார். "அவரது நடத்தை திருப்திகரமாக இல்லை" எனக் கூறி, பணி நீட்டிப்பு வழங்க, நிர்வாகம் தன்னிச்சையாக முடிவு செய்துள்ளது.
பள்ளி நிர்வாகத்துக்கு எதிராக, கல்வித் துறை அதிகாரிகளுக்கு, புகார் கடிதங்களை ராமலிங்கம் அனுப்பியதால், அவருக்கு பணி நீட்டிப்பு மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. புகார் மனு அனுப்பியதற்காக, 30 ஆண்டுகளுக்கும் மேல், பணியாற்றிய ஆசிரியருக்கு, பணி நீட்டிப்பு பலனை மறுக்க முடியாது.மாணவர்களின் நலன்களுக்காக தான், கல்வியாண்டு இறுதி வரை, ஆசிரியர்கள் பணியில் இருக்க வேண்டும் என, அரசாணை கூறுகிறது.
கூடுதல் அரசு பிளீடர் சஞ்சய் காந்தி, மனுதாரருக்கு பணி நீட்டிப்பு கோரி, பள்ளியிடம் இருந்து, எந்த தகவலும் வரவில்லை. பணியில் தொடர அவருக்கு உரிமை உள்ளது என, கோர்ட் முடிவெடுத்தால், பணி நீட்டிப்பு வழங்க, கல்வித் துறைக்கு ஆட்சேபனை இல்லை என, தெரிவித்துள்ளார்.மனுதாரருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எதையும், பள்ளி நிர்வாகம் எடுக்கவில்லை.
எனவே, அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க மறுத்தது, சட்ட விரோதமானது. மனுதாரருக்கு, பணி வழங்கும் வரை, ஆக., முதல், சம்பளம் வழங்க வேண்டும். பணி வழங்கிய பின், 2013ம் ஆண்டு, மே மாதம் வரை, சம்பளம் வழங்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதி அரிபரந்தாமன் உத்தரவிட்டுள்ளார்.