>>>பழங்குடியின மாணவர்களுக்கு ஜார்க்கண்டில் பைலட் பயிற்சி

ஜார்க்கண்ட்டில், விமான பயிற்சியில் ஆர்வம் இல்லாத பழங்குடியின மாணவர்களை, மாநில அரசு, வலுக்கட்டாயமாக பயிற்சியில் ஈடுபடுத்தியுள்ளது.பழங்குடியின மக்கள் நிறைந்த, ஜார்க்கண்ட் மாநிலத்தில், அந்த இனத்தவர்களை முன்னேற்றுவதற்காக, மாநில அரசு, பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எனினும், அந்த திட்டங்களில், இளைஞர்கள் முழு ஆர்வத்துடன் ஈடுபடுவதில்லை என்பது, தெரிய வந்துள்ளது.பழங்குடியினம், எஸ்.சி., மற்றும் ஓ.பி.சி., பிரிவினரை சேர்ந்த, 26 இளைஞர்களை தேர்வு செய்த மாநில அரசு, கடந்த ஆண்டில் அவர்களுக்கு, விமானம் ஓட்டும் பயிற்சி அளிக்க, முடிவு செய்தது.இதற்காக அவர்கள், சத்தீஸ்கர் மாநிலத்தின், பிலாஸ்பூரில் உள்ள, தனியார் விமான பயிற்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைத்தது. அங்கு சரியாக பயிற்சி பெறாத இளைஞர்கள், பயிற்சி, அரை குறையாக இருக்கும் போதே, ஓடி வந்து விட்டனர்.அவர்களை மீண்டும் சமாதானப்படுத்தி, உத்தர பிரதேசத்தில் உள்ள, விமான பயிற்சி நிறுவனத்திற்கு, மாநில அரசு அனுப்பி வைக்க உள்ளது.இது குறித்து, மாநில, பழங்குடியினர் நல விவகார துறை அமைச்சர், சாம்பாய் சோரன் கூறுகையில், ""இளைஞர்களுக்கு சிறப்பான முறையில் பயிற்சி அளிக்க, மாநில அரசு விரும்புகிறது. அதற்கு அவர்கள் ஒத்துழைக்க வேண்டும். சத்தீஸ்கரில் பயிற்சியை நிறைவு செய்யாத இளைஞர்களுக்கு, உத்தர பிரதேசத்தில் பயிற்சி வழங்க உள்ளோம்,'' என்றார்.