>>>அனுமதிக்காக காத்திருக்கும் பொதுத்தேர்வு அட்டவணை

முதல்வர் அனுமதிக்காக, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு அட்டவணை பட்டியல் கோப்பு, இரு வாரங்களாக, முதல்வர் அலுவலகத்தில் காத்திருக்கிறது.
மார்ச், ஏப்ரலில், பிளஸ் 2, 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடக்க உள்ளன. இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை, தேர்வுத்துறை இயக்குனரகம், மும்முரமாக செய்து வருகிறது. பிளஸ் 2 மாணவ, மாணவியர் குறித்த விவரங்கள் பெறப்பட்டு, இறுதி செய்யப்பட்டுள்ளன. 10ம் வகுப்பு தேர்வை எழுதும் மாணவ, மாணவியர் குறித்த விவரங்களை, இணையதளத்தில் பதிவு செய்ய, தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
தேர்வு மையங்கள் அமைக்கும் பணிகள், பிளஸ் 2 செய்முறைத் தேர்வுக்கான பணிகளும், விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. பிப்ரவரி, முதல் வாரத்தில் இருந்து, பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதனால், பிளஸ் 2 மட்டுமில்லாமல், 10ம் வகுப்பு தேர்வுக்கும் சேர்த்து, அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் அனுமதிக்காக, தேர்வு அட்டவணையை, தேர்வுத்துறை அனுப்பி உள்ளது. இது தொடர்பான கோப்பு, முதல்வர் அலுவலகத்திற்கு சென்று, இரு வாரங்களாக காத்திருக்கிறது. அட்டவணையைப் பார்த்து, இறுதி செய்து, முதல்வர் அனுமதி வழங்கியதும், அவை வெளியிடப்படும் என, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், தேர்வு அட்டவணையை, மாணவர்கள், பெரிதும் எதிர்பார்த்து உள்ளனர். எனவே, அட்டவணையை, விரைவில் வெளியிட, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர்களும், பெற்றோரும் எதிர்பார்க்கின்றனர்.