>>>தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு பர்கூர் மலை கிராம மாணவர்கள் தேர்வு

வரும், 24ம் தேதி, வாரணாசியில் துவங்கவுள்ள, தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்ள, பர்கூர் உறைவிடப்பள்ளி மாணவர்கள், ஐந்து பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை சார்பில், டிசம்பர், 24ம் தேதி துவங்கி, 2013ம் ஜனவரி, 3ம் தேதி வரை, வாரணாசியில் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, நடக்க உள்ளது. இதற்காக, மாநிலம் தோறும், மாநில அளவிலான தேசிய அறிவியல் மாநாடு நடத்தப்பட்டு, மாணவர்கள் தேர்வு நடத்தப்பட்டது. தமிழகத்தில், கோவை மாவட்டம், காரமடையில், நவம்பர், 30, டிசம்பர், 1 மற்றும், 2 ஆகிய தேதிகளில், மாநில மாநாடு நடந்தது. "ஆற்றல்' எனும் தலைப்பு வழங்கப்பட்டு, ஆய்வுக் கட்டுரை கோரப்பட்டது. மாநிலம் முழுவதுமாக, பல பள்ளி மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்று, 180 ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தனர். இதில், 30 ஆய்வுக் கட்டுரைகள், தேசிய போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டன. ஈரோடு மாவட்டத்தில், நான்கு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள், போட்டியில் கலந்து கொண்டனர். ஈரோடு மாவட்டம், பர்கூர் மலைக் கிராமம், தாமரைக்கரை, சுடர் உறைவிடப் பள்ளியில் படித்து வரும், இடை நின்ற மாணவர்கள் அனுப்பிய, ஆய்வுக் கட்டுரை, தேசிய போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டது.
தேசிய போட்டிக்கு தேர்வான ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்த, உறைவிடப் பள்ளியின் மாணவர்கள், ஐந்து பேர், நேற்று, ஈரோடு கலெக்டர் சண்முகத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.