அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள், நீண்ட விடுப்பில் செல்லும் போது, அந்தப்
பணியிடங்களில் மாற்று ஆசிரியர்களை நியமிக்காமல், தற்காலிக ஆசிரியர்களை
நியமிக்க, துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் கோரியுள்ளனர். துவக்கப்பள்ளிகளில்,
ஆசிரியர்கள், மகப்பேறு மற்றும் மருத்துவ விடுப்பு போன்ற, நீண்ட கால
விடுப்பில் செல்லும் போது, அப்பணியிடங்களில், வேறு பள்ளிகளிலிருந்து,
மாற்று ஆசிரியர்கள் வந்து, வகுப்புகளை நடத்துகின்றனர். இதனால், இரு
பள்ளிகளிலும் முழுமையாக வகுப்புகள் நடத்த முடியாமல், மாணவர்களின்
கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது. கடந்த, 1997க்கு முன், நீண்ட கால விடுப்பு
பணியிடங்களில் பணியாற்ற, தற்காலிக ஆசிரியர்கள் இருந்தனர். இதனால்,
மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படாமல் வகுப்புகள் நடந்தன. தற்போதும்,
அதுபோன்று, தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் முறையை, அரசு மேற்கொள்ள,
துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர். அரசு பள்ளிகளில் தற்போது,
காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இப்போதே,
மாவட்ட வாரியாக தற்காலிக ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டால், விடுமுறை
பணியிடங்களில், வகுப்புகள் பாதிக்கப்படாமல் இருக்க வசதியாக இருக்கும். இது
குறித்து, பல பள்ளிகளின் மேலாண்மைக் குழுச் சிறப்புக் கூட்டங்களில்,
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.