>>>தேர்வு போர்க்களமல்ல... ஆடுகளம்!

பன்னிரண்டு, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இதோ கண்ணுக்கெட்டும் தூரத்தில். 'எக்ஸாம் ஃபீவர்’ பதற்றத்தில் இருந்து தப்பிப்பது எப்படி? இதோ சில டிப்ஸ்...

மாணவர்கள் படிக்கும் முறையிலேயே பயத்தையும் பதற்றத்தையும் விரட்டி அடித்துவிடலாம் என்று நம்பிக்கை விதைக்கிறார் மன நல மருத்துவர் அசோகன்.

''எந்தத் தேர்வையும் மாணவர்கள் சுமையாகக் கருதக் கூடாது. சரியான தூக்கம் இல்லாமல் படிப்பதும், சாப்பிடாமல் படிப்பதும் சோர்வை உண்டாக்கும். தேர்வு சமயம் தினமும் குறைந்தது 6 மணி நேரம் நன்றாகத் தூங்கி எழுந்தால்தான், படித்த பாடங்கள் மனதில் பதியும். காலையில் எழுந்ததும் கஷ்டமான பாடங்களைப் படித்தால், அவை எளிதாக மனதில் பதியும். ஏனெனில், அப்போது மூளையின் சிந்தனைத் திறன் மற்றும் கிரகிக்கும் திறன் உச்சத்தில் இருக்கும். மந்தமான மதியப் பொழுதுகளில் படித்ததை எழுதிப் பார்க்கலாம். ஒரு முறை எழுதிப் பார்ப்பது பத்து முறை படிப்பதற்குச் சமம். களைப்பாக உணரும் சமயம், மனதுக்கு உற்சாகம் அளிக்கும் வேலைகளில் மனதைத் திசை திருப்பலாம்.

படிக்கும்போது நல்ல உற்சாகமான மனநிலை இருப்பது அவசியம். படித்ததை நினைவில் வைத்துக்கொள்வது, அதை மனதில் பதியவைப்பது, மறுபடியும் நினைவுகூர்ந்து நிரந்தரமாகப் பதியவைப்பது என்று மூன்று முறைகளில் உங்கள் படிக்கும் பழக்கம் அமைய வேண்டும். கேள்வித்தாளை விஷ§வலாக நினைத்துப் பார்த்தால் தானாகவே உற்சாகம் தொற்றிக்கொள்ளும். எந்தக் கேள்விக்கு எத்தனை பக்கம் பதில் எழுதுவது, படம் எங்கு வரைவது என்பதை மனக் கண்ணில் காட்சியாக ஓட்டிப் பாருங்கள். 300 நாட்களில் படித்ததை 3 மணி நேரத்தில் வெளிப்படுத்துவதுதான் திறமை. அதற்கு நேர மேலாண்மை அவசியம். ஆல் தி பெஸ்ட்!'' என்கிறார் அசோகன்.