அது
பிரசித்தி பெற்ற கோயில். அங்கே வந்து வணங்கியவர்கள், தாம் நினைத்தது
நடந்துவிட்டால், காணிக்கை செலுத்திவிட்டுச் செல்வார்கள். ஒருநாள் அந்தக்
கோயிலின் பூசாரி, கடவுளிடம் வேண்டினார். ''கடவுளே உங்களை வணங்குபவர்கள்
எல்லாம் முன்னேறுகிறார்கள். நான் இப்படியே இருக்கிறேனே'' என்றார். கடவுள்,
''இன்று உன் வீட்டிற்கு பாம்பு ஒன்று வரும். அதைப் பிடி. உனக்கு நல்வழி
காட்டுகிறேன்'' என்று சொல்லி மறைந்தார்.
பூசாரி சந்தோஷத்துடன்
வீட்டுக்குச் சென்றார். அப்போது வீட்டின் பின் பக்கத்தில் இருந்து பெரிய
பாம்பு உள்ளே நுழைந்தது. ''பாம்பு...பாம்பு!'' என்று மனைவி பயத்துடன்
கத்தினாள். கடவுள் சொல்லி இருந்தும் பூசாரி பயப்பட்டார். நேரம் கடந்தது.
பாம்பு சுவரில் இருந்த ஒரு துளைக்குள் நுழைந்து, வெளியேற ஆரம்பித்தது.
பூசாரி மனதைத் தைரியப்படுத்திக் கொண்டு பிடிக்க முயற்சித்தார். பாம்பின்
வால் பகுதி மட்டுமே கையில் கிடைத்தது. அது முழுவதும் தங்கமாக மாறியது.
'அடடா! முழுப் பாம்பையும் பிடித்திருந்தால்...!’ என்று நினைத்தார்.
'கடவுளே... கோயிலுக்கு வந்தவர்கள் உன்னை வணங்கியதால் மட்டுமே
முன்னேறிவிடவில்லை. ஒரு வாய்ப்பு வரும்போது, அதை சரியாகப் பயன்படுத்திக்
கொண்டதால் முன்னேறி இருக்கிறார்கள். இதைப் புரியவைத்ததற்கு நன்றி’ என்று
மனதுக்குள் சொல்லிக் கொண்டார் பூசாரி.