ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி...



ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி துவங்கும் என மத்திய அரசு கூறியுள்ளது.


தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி தொடர்பான வழக்கில், மத்திய அரசு தாக்கல் செய்த மனுவில், ஜைடஸ் காடிலா நிறுவனம் தயாரித்த தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்த பின்னர் விரைவில் சிறுவர்களுக்கு செலுத்தப்படும் என தெரிவித்திருந்தது. ஜைடஸ் காடிலா நிறுவனம், தனது தடுப்பூசிக்கு அனுமதி கேட்டு, விரைவில் விண்ணப்பம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தடுப்பூசி பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கும் கொடுக்க முடியும் என அந்த நிறுவனம் தெரிவித்து உள்ளது.


இது தொடர்பாக தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு தலைவர் டாக்டர் என் கே அரோரா கூறியதாவது: ஜைடஸ் கடிலா தடுப்பூசி பரிசோதனை முடிவடையும் நிலையில் உள்ளது. ஜூலை அல்லது ஆக., துவக்கத்தில் 12 முதல் 18 வயதுள்ள குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி துவங்கும். இந்த தடுப்பூசிக்கு அனுமதி கிடைக்கும் போது, நமக்கு கூடுதலாக ஒரு தடுப்பூசி கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


முன்னதாக இந்த தடுப்பூசி தொடர்பாக, எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப்குலேரியா கூறுகையில், இந்த தடுப்பூசி, பயன்பாட்டிற்கு வரும் போது மிகப்பெரிய சாதனையாக அமையும். பள்ளிகள் மற்றும் வெளிப்புற நடவடிக்கைகளை துவக்குவதற்கான பெரிய வழியை ஏற்படுத்தும். 2 முதல் 18 வயதுள்ள குழந்தைகளுக்கு கோவாக்சின் தடுப்பூசி குறித்த இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட பரிசோதனை முடிவுகள் செப்., மாதம் கிடைக்கும். மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் ஒப்புதல் பெற்ற பின்னர், அந்த தடுப்பூசி குழந்தைகளுக்கு செலுத்தப்படும். பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தாலும், அதுவும் குழந்தைகளுக்கான மற்றொரு தடுப்பூசியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.