கொரோனா ஆபத்து இன்னும் ஓயவில்லை; தயக்கம் தவிர்த்து, வதந்திகளை விடுத்து தடுப்பூசி போட்டுக் கொள்வீர்: பிரதமர் மோடி வேண்டுகோள்...
பிரதமர் நரேந்திர மோடி, "மன் கி பாத்" எனும் வானொலி நிகழ்ச்சியின் வாயிலாக நாட்டு மக்களுக்கு அவ்வப்போது உரையாற்றி வருகிறார். அந்த வகையில் இன்று பிரதமர் மோடி, நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். இது 78வது மன் கி பாத் அத்தியாயம்.
இந்த நிகழ்ச்சியில், பிரதமர் பேசியதாவது:
மக்களே, நீங்கள் அனைவரும் அறிவியலை நம்ப வேண்டுகிறேன். நம் விஞ்ஞானிகள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள். இதுவரை கோடிக்கணக்கானோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். எனது தாய் 100 வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறார். அவர், இரண்டு டோஸ் தடுப்பூசியையும் செலுத்திக் கொண்டுள்ளார். ஆகையால், தடுப்பூசி தொடர்பான எந்தவொரு வதந்தியையும் நம்பாதீர்கள்.
தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் மட்டுமே கொடிய உயிர்க்கொல்லி நோயில் இருந்து நம்மை நாம் தற்காத்துக் கொள்ள முடியும். தடுப்பூசிக்கு எதிராக சிலர் வதந்திகளைப் பரப்பலாம். அவர்கள் பரப்பட்டும். நாம் நமது வேலையைச் செய்வோம். கரோனா தொற்றின் பேராபத்து இன்னும் ஓய்ந்துவிடவில்லை. ஆகையால் இப்போது நாம் அனைவரும் தடுப்பூசியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
நிகழ்ச்சியின் போது மத்தியப் பிரதேச மாநிலம் பீடுல் மாவட்டம் துலாரியா கிராமத்தைச் சேர்ந்த இருவரிடம் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர்கள், சமூகவலைதளங்களில் பரவும் தடுப்பூசி தகவல்கள் பற்றி கூறினர். அதற்கு பிரதமர் வதந்திகளை நம்ப வேண்டாம். தடுப்பூசி செலுத்திக் கொள்வது மட்டுமே இப்போதைக்கு ஒரே தீர்வு என்று எடுத்துரைத்தார்.
முன்னதாக நேற்று, தடுப்பூசி திட்டம் தொடர்பாக பிரதமர் மோடி உயரதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அவர், "நாட்டில் தடுப்பூசி வழங்கலின் வேகம் திருப்தியளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இதுவரை 5.6% மக்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டிருக்கிறது.
தடுப்பூசி மக்களை சென்றடைவதற்காக புதுமையான முறைகளை ஆராய்ந்து செயல்படுத்த தொண்டு நிறுவனங்கள் மற்றும் இதர அமைப்புகளை ஈடுபடுத்த வேண்டும்.
எந்தவொரு பகுதியிலும் அதிகரித்து வரும் தொற்றுகளை கண்காணித்து கட்டுப்படுத்துவதற்கான மிக முக்கிய ஆயுதமாக பரிசோதனைகள் இருப்பதால், மாநிலங்களுடன் இணைந்து பணியாற்றி பரிசோதனைகள் குறைந்து விடாமல் இருப்பதை உறுதி செய்யுங்கள்" என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.