நிறைவேற்றப்பட்ட தேர்தல் வாக்குறுதிகள் குறித்து வெள்ளை அறிக்கை தேவை - சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் வலியுறுத்தல்
Demand White Paper on Fulfilled Election Promises - CPS Abolish Movement Urges
அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது குறித்து வெள்ளை அறிக்கை தேவை - சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் வலியுறுத்தல்
A white report is needed on how many of the promises made to teachers & government employees have been fulfilled - CPS Abolition Movement Urges
திண்டுக்கல்லில் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் பிரெடரிக் ஏங்கெல்ஸ் கூறியதாவது:
தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என முதல்வர் ஸ்டாலின் கடந்த தேர்தலின் போது வாக்குறுதி அளித்தார்.
நான்காண்டுகளாகியும் இக்கோரிக்கை குறித்து தொடர்ந்து முதல்வர் மவுனம் சாதித்து வருவதை சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் கண்டிக்கிறது.
2016ல் ஓய்வூதியம் தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கை என்ன ஆனது என்பது தெரியவில்லை. தற்போது மீண்டும் ஒரு வல்லுநர் குழு அமைப்பதாக ஏமாற்றுகின்றனர். இதனால் தொடர் போராட்டத்தில் ஈடுபட சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் முடிவெடுத்துள்ளது.
வரும் மார்ச் 13ல் மாவட்ட தலைநகரங்களில் மறியல், மே மாதம் குமரி முதல் சென்னை வரை டூவீலர் பேரணி, ஜூலையில் 72 மணி நேர உண்ணாவிரதம், செப்டம்பரில் ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம், அக்டோபரில் மீண்டும் மறியல், நவம்பரில் சென்னையில் ஊர்வலம், டிசம்பரில் ஒரு நாள் வேலைநிறுத்தம், 2026 ஜனவரியில் காலவரையற்ற வேலை நிறுத்தம் என புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் நடக்கவுள்ளது. 90 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என முதல்வர் தெரிவிப்பது உண்மையானால் விரிவான வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் அரசு நிறைவேற்றவில்லை. ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு, சம வேலைக்கு சம ஊதியம், சிறப்பு கால முறை ஊதியம், காலிப்பணியிடங்களை நிரப்புவோம் என தேர்தலின் போது கூறிவிட்டு ஒன்றுமே செய்யவில்லை. எதிர்கட்சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாடு, ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு நிலைப்பாடு என தி.மு.க., ஆட்சியாளர்கள் இருக்கின்றனர். 2026 தேர்தலிலும் இதே போல் வாக்குறுதியளித்தால் ஏமாற மாட்டோம் என்றார்.