தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 4,00,000-ஐ எட்டி சாதனை
தமிழ்நாட்டில் நிகழ் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்து சாதனை படைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை மார்ச் 1-ம் தேதி தொடங்கியது. இதுவரை 4,00,364 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 76 ஆயிரம் கூடுதலாகும். இந்தக் கல்வியாண்டில் மழலையர் வகுப்பில் 32,807 பேர், முதலாம் வகுப்பு தமிழ் வழியில்-2,11,563 பேர், ஆங்கில வழியில் 63,896 பேர், 2 முதல் 8-ம் வகுப்பு வரை 92,098 பேர் சேர்ந்துள்ளனர்.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அலுவலர்கள் கூறியதாவது: பல்வேறு வசதிகளுடன் கூடிய உள்கட்டமைப்பு, கற்றல் செயல்பாடு உள்ளிட்ட அம்சங்களால் அரசு பள்ளிகள் மீது பெற்றோருக்கு நம்பிக்கை அதிகரித்துள்ளது. மேலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அரசு நலத்திட்ட உதவிகள், உயர் கல்வியில் இட ஒதுக்கீடு போன்றவற்றால் சேர்க்கை அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வி துறையில் 58 கல்வி மாவட்டங்கள் உள்ளன. முதலாம் வகுப்பு மாணவர் சேர்க்கையில் தென்காசி கல்வி மாவட்டம் 8,571 மாணவர்கள் எண்ணிக்கையுடன் முதலிடம் பிடித்துள்ளது. மிக குறைந்த அளவாக நீலகிரி கல்வி மாவட்டம் 1,022 மாணவர் சேர்க்கையுடன் கடைசி இடத்தை பிடித்துள்ளது.
முதலாம் வகுப்பில் அதிக மாணவர்கள் சேர்ந்துள்ள முதல் 10 கல்வி மாவட்டங்கள் விவரம்: தென்காசி- 8,471, திண்டுக்கல்-8,000, திருச்சி - 7,711, கள்ளக்குறிச்சி - 7,554, திருவண்ணாமலை- 7,386, சிவகாசி- 6,809, திருப்பூர்- 6,777, திருவாரூர்- 6,592, கோயம்புத்தூர்- 6,423, திருப்பத்தூர்- 6,418.
குறைந்த எண்ணிக்கையில் மாணவர் சேர்க்கை செய்த பத்து கல்வி மாவட்டங்கள் விவரம்: நீலகிரி- 1,022, தேனி- 2,207, ஒட்டன்சத்திரம்- 2,480, தாராபுரம்- 2,594, பொள்ளாச்சி- 2,597, அரியலூர்- 2,625, பெரம்பலூர்- 2,636, வள்ளியூர்- 2,748, கரூர் - 3,077, சிவகங்கை- 3,223