முதல் வருடத் தேர்வில் தவறும் மருத்துவ மாணவர்கள், இனிமேல்
காத்திருக்காத வகையில், புதிய திட்டத்தை தமிழ்நாடு டாக்டர்.எம்.ஜி.ஆர்
மருத்துவ பல்கலைக் கொண்டுவந்துள்ளது.
தற்போதை நிலையில், முதலாமாண்டு
படிக்கும் ஒரு மாணவர், அவ்வருட தேர்வில் தோல்வியடைந்து விட்டால், அவர் 2ம்
வருட படிப்பில் அனுமதிக்கப்படாமல், 6 மாதங்கள் காத்திருக்க வேண்டிய சூழல்
ஏற்படும். ஆனால், தற்போது புதிதாக அப்பல்கலை கொண்டு வந்துள்ள
விதிமுறைகளின்படி, முதல் வருடத்தில் தோல்வியடைந்த மாணவர், 2ம் வருட
படிப்பில் அனுமதிக்கப்படுவார். ஆனால் முதல் வருட தேர்வை மீண்டும் எழுதி
தேறிய பிறகுதான், 2ம் வருட தேர்வில் கலந்துகொள்ள முடியும். இதுகுறித்து பல்கலை துணைவேந்தர் மயில்வாகனன் கூறியதாவது: தேர்வில் தவறிய
மாணவர்கள், 6 மாதங்கள் நிறுத்திவைக்கப்படுவதால், அவர்கள் மனதளவில் மிகவும்
பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள், பிற மாணவர்களோடு கலந்து செயல்பட
முடியாமல், தனி அணியாக இருக்க வேண்டியுள்ளது. ஆனால், 2ம் ஆண்டிற்கு
சென்றாலும், அந்தாண்டின் தேர்வை, முதலாமாண்டு தேர்வில் தேறிய பின்புதான்,
எழுத முடியும் என்றார். இம்முடிவை வரவேற்றுள்ள மாணவர் அமைப்பினர் சிலர் கூறியதாவது உண்மையிலேயே
இது வரவேற்கத்தகுந்த முடிவு. 5 ஆண்டுகள் மருத்துவப் படிப்பில், மாணவர்களை
நிறுத்தி வைப்பது சரியல்ல. பிற கல்லூரிகளைப் போலவே, தேர்வுகளில்
தோல்வியடைந்தாலும், அடுத்தடுத்த ஆண்டுகளுக்கு மாணவர்களை அனுமதிக்கும்,
மருத்துவப் பல்கலையின் முடிவானது, வரவேற்கத்தக்கது என்றனர். ஆனால், மருத்துவப் பல்கலையின் இந்த முடிவிற்கு MCI அனுமதி பெற வேண்டுமா? அல்லது தேவையில்லையா? என்றும் சிலர் கேள்வியெழுப்பி உள்ளனர்.