கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கட்டுரைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுரைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தொடக்கப் பள்ளிகளை ஒருங்கிணைக்கலாம் - நாளிதழ் கட்டுரை



 தொடக்கப் பள்ளிகளை ஒருங்கிணைக்கலாம் - நாளிதழ் கட்டுரை


கட்டுரையாளர்: லோகநாதன் பழனிசாமி, எழுத்தாளர்.


தமிழக அரசுப் பள்ளிகளில் கடந்த ஆண்டு 42.3 லட்சம் மாணவர்கள் கல்வி பயின்ற நிலையில், நிகழாண்டு அந்த எண்ணிக்கை 40 லட்சமாகக் குறைந்துள்ளது. இதன் விளைவாக, சில இடங்களில் நான்கைந்து மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்ற நிலை உருவாகியுள்ளது. எமிஸ் தரவுகளின்படி, தமிழகம் முழுவதும் சுமார் 5,800 தொடக்கப் பள்ளிகளில் 10 மாணவர்களுக்கும் குறைவாக மட்டுமே பயின்று வருகின்றனர். இது கல்வி வளங்களையும் அரசின் நிதியையும் திறமையாகப் பயன்படுத்தாத நிலையை உருவாக்கியுள்ளது.

எடுத்துக்காட்டாக, திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள 155 தொடக்கப் பள்ளிகளில் மொத்தம் 927 மாணவர்களுக்காக 310 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். அதாவது, சராசரியாக ஓர் ஆசிரியருக்கு மூன்று மாணவர்கள் மட்டுமே உள்ளனர்.

பெரும்பாலான தொடக்கப் பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்களும், இரண்டு பகுதிநேர மதிய உணவுத் திட்டப் பணியாளர்களும் பணியாற்றுகின்றனர். ஓர் ஆசிரியரின் சராசரி ஆண்டு ஊதியம் ரூ. 5 லட்சம் என்றும், ஒரு பகுதிநேரப் பணியாளரின் ஆண்டு ஊதியம் ரூ. 75 ஆயிரம் என்றும் எடுத்துக்கொண்டால், ஒரு தொடக்கப் பள்ளியை நடத்த ஆண்டுக்கு சுமார் ரூ. 11.5 லட்சம் செலவாகிறது.

ஒரு மாணவருக்கான ஆண்டு அரசுச் செலவு ரூ. 1 லட்சம் எனக் கணக்கிட்டால் கூட, ஒரு தொடக்கப் பள்ளியில் குறைந்தபட்சம் 11 மாணவர்கள் இருக்க வேண்டும். எனவே, 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள தொடக்கப் பள்ளிகளை அருகிலுள்ள அரசுப் பள்ளிகளுடன் இணைப்பது காலத்தின் கட்டாயமாகும்.

இணைக்கப்படும் பள்ளி சற்று தொலைவில் இருந்தால், 10 மாணவர்கள் பயணிக்கக் கூடிய மினி வேனை ஓட்டுநருடன் ஒரு கல்வியாண்டுக்கு வாடகையில் இயக்க சுமார் ரூ. 5 லட்சம் செலவாகும். அனைத்து குறைந்த மாணவர் எண்ணிக்கையுள்ள தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கும் இத்தகைய போக்குவரத்து வசதியை ஏற்பாடு செய்ய ஆண்டுக்கு சுமார் ரூ. 295 கோடி மட்டுமே செலவாகும்.

தற்போது, 10 மாணவர்களுக்கும் குறைவாக உள்ள 5,800-க்கும் மேற்பட்ட தொடக்கப் பள்ளிகளை இயக்குவதற்கு, பள்ளி ஒன்றுக்கு சராசரியாக ரூ. 11.5 லட்சம் என்ற அடிப்படையில் ஆண்டுக்கு சுமார் ரூ. 670 கோடி செலவாகிறது. ஆனால், மேலே சொன்னதுபோல இந்த மாணவர்களுக்கு பாதுகாப்பான போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்ய ஆண்டுக்கு சுமார் ரூ. 295 கோடி மட்டுமே போதுமானது.

இந்த ஒருங்கிணைப்பின்மூலம் மாணவர்கள் அதிகமான சக மாணவர்களுடன் சேர்ந்து கற்கவும், குழு நடவடிக்கைகளில் பங்கேற்கவும், விளையாடவும், சமூகத் திறன்களை வளர்த்துக் கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கும். மாணவர்கள் ஆசிரியர்களிடமிருந்து கற்பதைப் போலவே, சக மாணவர்களின் கேள்விகள், பதில்களின் மூலமும் பலவற்றைக் கற்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

ஆசிரியர்களும் தங்கள் கல்வித் திறமையையும் நேரத்தையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆசிரியர்களும் ஓரிரு மாணவர்களிடையே மீண்டும் மீண்டும் கேள்வி கேட்பதற்குப் பதிலாக, பல மாணவர்களை வகுப்பில் ஈடுபடுத்த முடியும்.

கழிப்பறைகள், நூலகங்கள், விளையாட்டு வசதிகள் போன்ற கட்டமைப்புகளையும் மேம்படுத்துவது எளிதாகும். காலை உணவுத் திட்டம் போன்ற நலத் திட்டங்களை பெரிய, ஆனால் குறைந்த எண்ணிக்கையில் உள்ள பள்ளிகளில் செயல்படுத்துவதும் எளிதாகும்.

ஆண்டு விழா, விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றையும் சிறப்பான முறையில் நடத்த முடியும். கலைத் திருவிழாக்களில் பங்கேற்று வெற்றிகளைக் குவிக்க முடியும்.

மேலும், ஒருங்கிணைக்கப்படும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பிற பள்ளிகளுக்கு மாற்றிப் பணியமர்த்தலாம். தமிழகம் முழுவதும் சுமார் 11,800 ஆசிரியர்களை (ஒவ்வொரு பள்ளிக்கும் இரண்டு ஆசிரியர்கள் என்ற அடிப்படையில்) தேவையுள்ள பள்ளிகளுக்கு மாற்றுவதன் மூலம் ஆசிரியர் பற்றாக்குறையையும் கணிசமாகக் குறைக்கலாம். ஓராசிரியர் பள்ளிகள் என்பதே இருக்காது.

பயன்படுத்தப்படாமல் இருக்கும் பள்ளிக் கட்டடங்களை சமூகக் கூடங்கள், பொது நூலகங்கள், திறன் மேம்பாட்டு மையங்கள் அல்லது பிற பொதுப் பயன்பாட்டு மையங்களாக மாற்றிப் பயன்படுத்தலாம்.

இந்தத் திட்டத்தை ஒரே நேரத்தில் தமிழகம் முழுவதும் செயல்படுத்துவதற்குப் பதிலாக, தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் தலா ஒரு ஒன்றியத்தைத் தேர்ந்தெடுத்து ஓராண்டு முன்னோடித் திட்டமாக செயல்படுத்தலாம். அதன் முடிவுகளை அறிவியல் ரீதியாக மதிப்பீடு செய்து, மாணவர் நலன், கல்வித் தரம், நிதிச் சிக்கனம் மற்றும் ஆசிரியர் பயன்பாட்டில் கிடைக்கும் முன்னேற்றங்களை ஆய்வு செய்த பிறகு, படிப்படியாக தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தலாம்.

இந்த முன்னோடித் திட்டத்தின்மூலம் பள்ளிகளின் கட்டமைப்பு, கற்றல் முதலியவை மேம்படுவதால், சம்பந்தப்பட்ட ஒன்றியங்களில் அடுத்த ஆண்டு மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாகும் என்றும், குறைந்தபட்சம் மாணவர் எண்ணிக்கை குறையாது என்றும் நம்பலாம்.

ஒருவேளை, இந்தத் திட்டத்தின் பலன்கள் என்ன என்பதை ஓராண்டுக்குள் தீர்க்கமான முடிவை எட்ட முடியவில்லை என்றால், இந்தத் திட்டத்தை தமிழகம் முழுவதும் விரிவு செய்வதைத் தாமதப்படுத்தலாம்.

மாணவர் நலன், ஆசிரியர் வளத்தின் சிறந்த பயன்பாடு, அரசின் நிதிச் சிக்கனம் மற்றும் கல்வித் தர மேம்பாடு ஆகிய அனைத்தையும் ஒரே நேரத்தில் அடைய, மிகக் குறைந்த மாணவர் எண்ணிக்கையுடன் செயல்படும் தொடக்கப் பள்ளிகளை ஒருங்கிணைத்து, முதல்கட்டமாக 38 மாவட்டங்களிலும் தலா ஒரு ஒன்றியத்தில் இந்த முயற்சியைத் தொடங்குவது காலத்தின் தேவையாகும்.



திறமையால் பிறவிக் குறைபாட்டை வென்ற மாவீரன்

 


தன் திறமையால் 

பிறவிக் குறைபாட்டை வென்ற மாவீரனின் கதை. 


ஜூன் 24,1987 

தென் அமெரிக்க கண்டத்தில் 

அர்ஜெண்டினா நாட்டின் 

ரொசாரியோ நகரில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த குழந்தைக்கு 

லியோனல் மெஸ்ஸி என்று பெயர் சூட்டினார் அவரது தந்தை ஜோர்ஜ் .


லியோனெல்- பிரெஞ்சு- பொருள் - குட்டி சிங்கம் 

மெஸ்ஸி - இத்தாலி - பொருள் - அறுவடை செய்பவன் 


பெயர் வைத்தது போலவே

லியோனெல் பிறந்ததில் இருந்து தனது சக நண்பர்களைப் போல வயதுக்கேற்றாற் போல வளர்ச்சி காணாமல் "குட்டியாகவே" இருந்தார். 


அர்ஜென்டினாவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் பரிசாக வழங்கப்படுவது எது என்றால் கேட்டால் 

தயக்கமே இல்லாமல் அது

"கால் பந்து" தான். 


குட்டையாக இருந்தாலும் 

சிங்கம் சிங்கம் தான். 

கால்பந்தாட்ட களத்தில் எதிர் அணியினர் அமைக்கும் கோட்டைகளை லாவகமாகக் கடந்து சென்று கோல் அடிப்பதில் 

இவரது ஆட்ட நேர்த்தி என்பது 

குழந்தைப் பருவத்திலேயே பிரபல்யம். 


அவரது குடும்பத்தினருக்கு 

அவர் சரியான அளவில் 

உடல் வளர்ச்சியைக் காணவில்லை என்பதை பத்தாம் வயதிலேயே ஒட்டியே உணர்ந்தனர். .


அவரது பதினோறாம் வயதில் 

அந்த செய்தி அவரது குடும்பத்தில் பேரிடியாக இறங்கியது.


ஆம்... மூளையில் பிட்சுசுவரி சுரப்பி எனப்படும் நாளமில்லா சுரப்பியில் இருந்து உடலின் வளர்ச்சியைத் தூண்டும் முக்கியமான ஹார்மோனான

"உடல் வளர்ச்சிக்கான ஹார்மோன்" (GROWTH HORMONE) சரியான அளவில் சுரக்கவில்லை என்பது உறுதியானது. 


இதை Growth Hormone Deficiency என்று அழைக்கிறோம். 

இதன் விளைவாக உடலின்  வளர்ச்சி என்பது அதிகபட்சம் 140 செண்ட்டிமீட்டரில் தடை படும். 

கால்பந்தாட்ட வீரனுக்குத் தேவையான தசை வளர்ச்சியோ எலும்பு வலிமையோ கிடைக்காது. 


ஒட்டுமொத்த குடும்பமே நொறுங்கிப் போனது. 


அசாத்தியமான கால்பந்தாட்டத் திறனைக் கொண்டிருக்கும் ஒரு சிறுவனின் எதிர்காலம் - பிறவிக் குறைபாட்டினால் பாதிக்கப்படப்போவது கண்கூடாகத் தெரிந்தது. 


அக்கால அர்ஜென்டினாவில்

வளர்ச்சிக்கான ஹார்மோன் சிகிச்சை என்பது பிரபலமானதாகவும் இல்லை. 

எளிதில் கிடைக்கக் கூடியதாகவும் இல்லை. 


பிரதிமாதம்  900 முதல் 1500 டாலர்கள்

செலவு புடிக்கும் சிகிச்சைக்கு அந்த ஏழைத் தகப்பனால் எப்படி வழி செய்ய முடியும்? 


மெஸ்ஸிக்கு தேவைப்படும் உதவியை 

குடும்பத்தாலோ சுற்றத்தாராலோ 

அவர் விளையாடிய உள்ளூர் அணியாலோ செய்ய இயலவில்லை. 


எனவே, 13 வயதுச் சிறுவனான மெஸ்ஸியை அழைத்துக் கொண்டு 

ஸ்பெய்ன் நாட்டில் உள்ள பார்சிலோனா மாகாணத்திற்கு சென்றார் அவரது தந்தை. 


அங்கு பார்சிலோனா கால்பந்து கிளப் சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான அணியாகும். 

அந்த அணியின் பயிற்சி மற்றும் அணி மேலாண்மை செயலாளராக இருந்த கார்லஸ் ரெக்சாக் அவர்கள் பார்க்க ஒரு ஆட்டத்தில் விளையாடினார் 


இவரது மிரட்டலான ஆட்டத்திறனையும் 

எதிரிகளிடம் பதுங்கிப் பாயும் திறனையும் 

பந்தை லாவகமாக அங்கும் இங்கும் கொண்டு செல்லும் நேர்த்தியும் பார்த்து விட்டு "அசாத்தியமான திறன்" கொண்டவனாக இருக்கிறானே என்று வியந்தார். இவரை உடனே இந்த கிளப்பிற்குள் புக் செய்யலாம் என்று முடிவு செய்தார். 


ஆனால் பார்சிலோனா அணியின் ஏனைய நிர்வாகக் குழுவினருக்கு இவரது முடிவில் உடன்பாடு ஏற்படவில்லை. 


- வெளிநாட்டு வீரர் 

- வயது மிகவும் குறைவாக உள்ளது. 

- கூடவே பிறவு வளர்ச்சிக் குறைபாட்டு நோய் உள்ளது . அதனால் போதிய வளர்ச்சி இல்லை 

- அவரது மருத்துவ செலவுக்கும் சேர்த்து செலவு செய்ய வேண்டும். 


இத்தனை அஃகன்னாக்கள் இருப்பதால் 

வேண்டாம் என்றே முடிவு செய்தனர். 

போர்ட் கமிட்டியின் இந்த முடிவு, மெஸ்ஸிக்கும் அவரது தந்தைக்கும் அவரது செயலாளர்களுக்கும் பின்னடைவாக அமைந்தது. 


டிசம்பர் 14, 2000

பொம்பேயா டென்னிஸ் கிளப் 

உள்ளே 

பார்சிலோனா டெக்னிக்கல் மேனேஜர் 

ரெக்சாக்குடன் மெஸ்ஸியின் மேனேஜர்கள் 

நீண்ட நேரம் பேசிய பிறகு 

உடன்படிக்கை எட்டப்பட்டது. 


ரோக்சாக்குக்கு மெஸ்ஸியை விட மனசில்லை. 

எனவே, போர்டு கமிட்டியின் முடிவையும் மீறி மெஸ்ஸிக்காக ரிஸ்க் எடுக்கிறேன் என்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட எத்தனித்தார். 


ஒப்பந்தம் கையெழுத்தாக 

சரத்துகளை எழுத அங்கே காகிதங்கள் கூட தயார் செய்து வைக்கப்பட்டிருக்கவில்லை. 


எனவே, அங்கிருந்த பேப்பர் நேப்கினை எடுத்து அதில் ஒப்பந்த உடன்படிக்கையை எழுதி கையெழுத்திட்டு 

மெஸ்ஸியின் தந்தையிடம் கொடுத்து

"இனி உங்களின் மகன் எங்களின் அணிக்கு விளையாடுவான்" என்றார். 


நெருப்பை வயிற்றில் கட்டிக் கொண்டிருந்த தந்தையின் வயிற்றில் பால் வார்த்த முடிவல்லவோ அது. 


மெஸ்ஸியின் மருத்துவ செலவு முழுவதையும் பார்சிலோனா கிளப் ஏற்கும் என்பதும் முக்கியமான ஒப்பந்தமாகும். 


அதற்கடுத்து 

மெஸ்ஸி, அவருடன் அவரது குடும்பமும் 

ஸ்பெயினுக்கு இடம்பெயரவும் பார்சிலோனா உதவி செய்தது. 


இதன் மூலம் 

மெஸ்ஸி சரியான உடல் வளர்ச்சியை அடைந்தார். 140 செமீட்டர் உயரம் தான் வளருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முறையான ஹார்மோன் சிகிச்சை கிடைத்து 170 செமீட்டர் என்ற அளவை எட்டினார். 



 தனக்கு வாழ்வளித்த பார்சிலோனா அணியில் 2000 முதல் 2021 வரை தொடர்ந்தார். 


அதற்குப் பின்பும் 

அங்கேயே தொடர்ந்து தனது ஓய்வை அந்த அணியில் இருந்தே அறிவிக்க வேண்டும் என்று விரும்பினார். 


ஆனால், பார்சிலோனா அணி நிர்வாகத் திறமையின்மையால் பொருளாதார நலிவுறுதலைச் சந்தித்தது. கிளப்களை நிர்விக்கும் கடுமையான பொருளாதாரம் சார்ந்த நெறிமுறைகளின்  விளைவாக மெஸ்ஸியை அந்த அணியால் தக்க வைக்க இயலவில்லை. 


இத்தனைக்கும் மெஸ்ஸி பணமே வாங்காமலும் விளையாடத் தயாராக இருந்தும், நெறிமுறைகள் சாதகமாக இல்லாததால் கடினமான இதயத்துடனும் கண்ணீருடனும் தனக்கு வாழ்வு தந்த பார்சிலோனாவைப் பிரிந்து  தற்போது இண்டர்மியாமி சிஎஃப் (INTERMIAMI CF) 

அணிக்கு விளையாடி வருகிறார். 


சிறுவனாக சரியான வளர்ச்சி அடைய இயலாமல் 

பொருளாதாரத்திலும் உடல் நிலை சார்ந்தும் பாதிப்பில் இருந்தாலும், 


தனது தனித்திறமையின் காரணமாகவும் 

பார்சிலேனா அணியின் மேலாளர் கார்லஸ் ரெக்சாக்கின் நம்பிக்கை காரணமாகவும் 

இன்று கால்பந்தாட்ட உலகின் மன்னனாக இருந்து வருகிறார் .


 குட்டி சிங்கமான லியோனெல்

கோல்களையும் கோப்பைகளையும் 

அறுவடை செய்யும் மெஸ்ஸியாக மாறியது 

நமக்கெல்லாம் உத்வேகம் தரும் கதை என்றால் அது மிகையாகாது. 


பின்குறிப்பு :- தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாவட்ட அளவிலான ஆரம்ப கால தலையீடு மையங்கள் இயங்கி வருகின்றன. அங்கு குழந்தைகள் நல நிபுணர்கள் குழந்தைகளின் வளர்ச்சிக் குறைபாட்டைக் கண்டறிந்து " பிறவி வளர்ச்சிக்கான ஹார்மோன் குறைபாடு" இருப்பின் அவர்களுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 

"ஹார்மோன் சிகிச்சை" இலவசமாக வழங்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 


நன்றி


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை



கடும் குளிரிலும் கற்றல் நன்றே | உறைபனியைக் கடந்து பள்ளிக்குச் சென்ற 8 வயது சிறுவன் Ice Boy Wang Fuman



 கடும் குளிரிலும் கற்றல் நன்றே | உறைபனியைக் கடந்து பள்ளிக்குச் சென்ற 8 வயது சிறுவன் Ice Boy Wang Fuman


8 வயதில் உறைபனியைக் கடந்து பள்ளிக்குச் சென்ற சிறுவன் | உலகையே நெகிழவைத்த உண்மைக் கதை


வெறும் 8 வயதிலேயே, பின்னர் "ஐஸ் பாய்" (Ice Boy) என்று உலகம் முழுவதும் அறியப்பட்ட வாங் ஃபுமான், தனது விடாமுயற்சியால் கல்வியின் முக்கியத்துவத்தை உலகிற்கு உணர்த்திய சிறுவனாக மாறினார்.


சீனாவின் மலைப்பகுதியில் வசித்த அவர், -9°C கடும் குளிரிலும் தினமும் 4.5 கிலோமீட்டர் தூரம் நடந்து பள்ளிக்குச் செல்வார். குடும்பத்தின் பொருளாதார நிலை மிகவும் மோசமாக இருந்ததால், அவரிடம் மெல்லிய ஜாக்கெட் மட்டுமே இருந்தது. கையுறை, கம்பளித் தொப்பி போன்ற குளிர் பாதுகாப்பு ஆடைகள் எதுவும் அவரால் அணிய முடியவில்லை.


ஒரு நாள், உறைபனி நிறைந்த பாதையில் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நடந்த பிறகு, அவரது தலைமுடி, புருவம், இமைகள் அனைத்தும் பனியால் வெண்மையாக உறைந்த நிலையில் பள்ளியை அடைந்தார். கடும் குளிரால் அவரது கைகள் சிவந்து வீங்கியிருந்தன.


ஆனால் அந்தக் கடினமான பயணம் அவரது மன உறுதியைத் தளரச் செய்யவில்லை. அன்றைய இறுதித் தேர்வில் அவர் 100-க்கு 99 மதிப்பெண்கள் பெற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.


📸 பள்ளி முதல்வர் எடுத்த அவரது புகைப்படம் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களை நெகிழச்செய்தது. கல்விக்கான அவரது அர்ப்பணிப்பும், தன்னம்பிக்கையும் பலருக்கு உத்வேகமாக அமைந்தது.


💙 சூழ்நிலைகள் எவ்வளவு கடினமாக இருந்தாலும், உறுதியும் விடாமுயற்சியும் இருந்தால் உயரங்களை அடைய முடியும் என்பதை வாங் ஃபுமானின் வாழ்க்கை நமக்கு நினைவூட்டுகிறது.


வாங் ஃபுமான் (Wang Fuman) என்பவர் சீனாவின் யுன்னான் மாகாணத்தின் கிராமப்புறத்தில் வசித்து, உலகப் புகழ் பெற்ற "ஐஸ் பாய்" (Ice Boy) என்று அறியப்பட்ட சிறுவன் ஆவார். 


2018ஆம் ஆண்டு ஜனவரி மாதம், தனது இறுதித் தேர்வை எழுதுவதற்காகக் கொட்டும் பனியில் (-9° C வெப்பநிலையில்) சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தை நடந்தே கடந்து பள்ளிக்குச் சென்றார். 


கடுமையான குளிரால் உறைந்த தலைமுடி மற்றும் புருவங்கள், சிவந்த கன்னங்களுடன் அவர் வகுப்பறையில் இருந்த புகைப்படம் உலகளவில் வைரலானது. 


கல்வியின் மீது அவர் கொண்டிருந்த இந்த அசைக்க முடியாத உறுதி, பலரின் கவனத்தை ஈர்த்து கோடிக்கணக்கான நிதியுதவிகளை அவரது பள்ளிக்குக் கொண்டுவந்தது.



ஆசிரியர்களை சிறுமைப்படுத்த நடத்தப்படுவதல்ல ஆசிரியர் தகுதித் தேர்வு - பிரின்ஸ் கஜேந்திர பாபு

 


ஆசிரியர்களை சிறுமைப்படுத்த நடத்தப்படுவதல்ல ஆசிரியர் தகுதித் தேர்வு! 


அரசு அதிகாரிகளும் ஊடகங்களும் கவனத்துடன் நடந்துக் கொள்ள வேண்டும்! 


தகுதித் தேர்வு எழுதச் செல்லும் ஆசிரியர்கள் தேர்வு மையத்திற்கு உரிய நேரத்திற்கு வருகைப் புரிவது உள்ளிட்ட தேர்வு விதிகளை மிகவும் கவனத்துடன் பின்பற்ற வேண்டும்! 


பொதுப் பள்ளிக்கான மாநில மேடை வேண்டுகோள் நாள் 04.06.2026


ஆசிரியர் தகுதித் தேர்வுத் தாள் ஒன்று (TET: Paper 1) இன்று (04.06.2026) நடந்துள்ளது. ஊடகங்களில் ஒளிபரப்பான ஒரு காணொளியை ஒருவர் பகிர்ந்தார். 


காணொளியில் ஒரு தேர்வு மையத்தில் தகுதித் தேர்வு எழுத வந்த ஒருவர், தேர்வு மையத்தின் கதவுகள் அடைக்கப்பட்ட நிலையில், ஒரு அதிகாரியிடம், தான் ஒரு நிமிடம் மட்டுமே தாமதமாக வந்ததாகவும், தன்னை அனுமதிக்குமாறும் கெஞ்சுகிறார். அந்த அதிகாரி விதிகளை படித்துப் பாருங்கள் என்று கூறி வாகனத்தில் ஏறுகிறார், அவரின் முகம் கடமையை நிறைவேற்றிவிட்ட மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறது.  ஒரு அவலக் குரல் ஒலித்துக் கொண்டு இருக்கும் போது முகத்தில் மகிழ்ச்சி வெளிப்படுமா? என்ற கேள்வி எழுகிறது. 


நடந்து முடிந்த, மறுமுறை "நீட்"  நடைமுறையில் இதே போல, மாணவர்கள், அவர்கள் பெற்றோர் வாயில் கதவுகளின் முன் தரையில் புரண்டு, ஒரு நிமிடம் தாமதமாக வந்ததற்காக‌ அனுமதி மறுப்பது நியாயமில்லை என்று கெஞ்சினர், கதறினர். அடுத்தநாள் ஒன்றிய அமைச்சர் தெளிவாக பேசினார். ஒரு நிமிடம் என்றாலும் தாமதம் தாமதம் தான் உள்ளே அனுமதிக்க இயலாது. நடந்தது சட்டப்படி சரியானதே என்றார்.


தேர்வை நடத்துபவர்கள் கேள்வித்தாள் தாமதமாக தந்தால் மறுத்தேர்வு நடத்துவார்கள்.‌ குற்றம் செய்தது தேர்வு முகமை, தண்டனை தேர்வர்களுக்கு. சந்தையின் பார்வையில்,  மனிதர்களாக இருந்தாலும், தேர்வர்கள் என்றால் நுகர்வோர்தான். எந்தவிதமான மனிதாபிமானத்தையும் வணிகச் செயல்பாடுகளில் எதிர்பார்க்க இயலாது‌. 


இன்று, கல்வி வணிகப் பொருள். வணிகச் சந்தையின் பிடிக்குள் கல்வி. 


நம் கண் முன்னே நமது மாணவர்கள் பட்ட துன்பத்தை பார்த்த ஆசிரியர் பெருமக்கள், இன்னும் சற்று எச்சரிக்கை உணர்வுடன் தங்களுக்கு நடத்தப்படும் தேர்வினை எதிர்கொள்ள வேண்டும்‌‌. யாரிடமும் யாரும் எந்த கருணையும் எதிர்பார்க்க இயலாது, அது சாத்தியம் இல்லை என்பதை உணர வேண்டும். 


ஆசிரியர்களின் கெஞ்சலும் கதறலும் காணொளியாக பதிவாகி ஊடகத்தில் உலா வருவது, ஆசிரியர் தொழிலை சிறுமைப்படுத்தவே உதவும். ஊடகங்கள் அத்தகைய காணொளிகளை பதிவேற்றம் செய்வதை தடை செய்ய வேண்டும். பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளிகள் அகற்றப்பட வேண்டும். பொறுப்புள்ள ஊடகம் அதை செய்யும் என்று நம்புகிறோம். 


அதிகாரிகள் இத்தகையச் சூழலை மிகவும் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். தனது செயல் ஒட்டுமொத்த பள்ளிக் கல்வித் துறை செயல்பாட்டையும் பாதிக்க வாய்ப்புள்ளது என்பதை உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும். 


இத்தகைய கேலியும், சிரிப்பும் இத்துடன் நிற்கப் போவதில்லை. தேர்வு முடிவுகள் வந்தவுடன், முடிவுகள் அடிப்படையில் நடக்கப்போகும் விவாதம் இன்னும் கொடூரமாக இருக்கப்போகிறது. ஆசிரியர்கள் மனதை புண்படுத்தி ரசிக்கும் மனநோயாளிகளாக பலர் காட்சித் தருவார்கள். 


2012 ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளிவந்தவுடன் அன்றைய ஊடகங்கள் எந்தளவு விவரம் தெரியாமல், பொறுப்பற்ற முறையில் விவாதம் என்ற பெயரில் மக்களின் மனங்களில் குழப்பத்தை ஏற்படுத்தினார்கள் என்பதை பார்த்தோம். அதே காட்சிகள் மீண்டும் அரங்கேற வாய்ப்புகள் உருவாகிவிடக்கூடாது. 


2002ம் ஆண்டு, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 86வது சட்டத் திருத்தத்தில் குழந்தைகளின் உரிமை என்பதாக கூறு 21Aயில் எதை தெரிவித்தனரோ, அதை அப்படியே கூறு 51A(k) மூலம் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் கடமை ஆக்கினார்கள். இந்த சூழ்ச்சி குறித்து இதுவரை எந்த விவாதமும் நடைபெறவில்லை. 


குழந்தைகளுக்கு கல்வி உரிமை வழங்கப்பட்டதா? அல்லது  கல்வியை  மறுக்கும் உரிமை அரசிற்கு வழங்கப்பட்டதா?  என்று எந்த ஊடகமும் இன்று வரை விவாதிக்க முன் வரவில்லை. 


அரசமைப்புச் சட்டத்தின் கூறு 21A நடைமுறைப் படுத்த 2009ல் இயற்றப்பட்ட சட்டம், தகுதியான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றுதான் கூறுகிறது. 


கல்வியியலில் பட்டயமோ /  பட்டமோ ஆசிரியருக்கான தகுதி. அதை பெறாமல் ஆசிரியர்‌ பணி செய்பவர்கள் இருந்தனர், அவர்களை தகுதிப்படுத்த உரிய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும. 


அதற்கு மாறாக, ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத வேண்டும், அதை எழுத கல்வியியல் பட்டயமோ / பட்டமோ பெற்றிருக்க வேண்டும் என்பதாக விதி முறைகளை உருவாக்கி கொண்டனர். 


அறிவிற்கு பொருந்தாத இந்த விதிமுறையை பொதுப் பள்ளிகளை நடத்தும் மாநில அரசுகள் எதிர்க்கவில்லை. 


மாறாக, ஆசிரியர்களை பழி தீர்க்க இதை ஆயுதமாக பயன்படுத்திக் கொண்டனர்.‌ 


அதன் தொடர்ச்சிதான் அரசுப் பணியில் இருக்கும் கல்வியியல் தகுதிப் பெற்ற ஆசிரியர் கூட, மனப்பாட கல்விமுறை அடிப்படையிலான தேர்வு முறையில், தனது நினைவாற்றலை வெளிப்படுத்தும் ஒரு தேர்வை, ஆசிரியர் தகுதித் தேர்வு என்ற பெயரில் எழுத வேண்டும் என்ற கட்டாயத்தை உருவாக்கிக் கொண்டனர். 


இத்தகைய நெருக்கடிகளை ஆசிரியர்களுக்கு தருவதன் மூலம் கல்வித் தரம் மேம்படாது என்ற எந்த புரிதலும் இல்லாமல் நீதிமன்றங்களைக் காரணம் காட்டி அரசுகள் இத்தகையத் தேர்வுகளை நடத்துகின்றன என்பதை உணர்ந்து, ஆசிரியர் பெருமக்கள் இத்தகைய சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது. 


கண்ணியத்துடனும், மன வலிமையுடனும் இத்தகைய சூழலை  ஆசிரியர்கள் எதிர்கொள்ள 

வேண்டும். 


பல நெருக்கடிகளை எதிர் கொண்டு வெற்றி பெற்றுவரும் ஆசிரியர் பெருமக்கள் இத்தகைய நெருக்கடிகளையும் எதிர்கொண்டு வெற்றி பெறுவார்கள். 


அச்சமின்றி, கவலையின்றி, நம்பிக்கையுடன் தங்களின் பணிகளை ஆசிரியர்கள் ஆற்றிடுவார்கள் எனும் பெரும் நம்பிக்கை மக்களிடம் உண்டு. மாணவர்களும், பெற்றோரும் ஆசிரியர்களுக்கு  உற்ற துணையாக இருப்பார்கள். 


ஆசிரியர்களை சிறுமைப்படுத்திட, எந்த வகையிலும் வாய்ப்பு தந்து விடாமல் அரசும் ஊடகமும் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது. 


பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு 

பொதுச் செயலாளர்,

பொதுப் பள்ளிக்கான மாநில மேடை 

14-A, சோலையப்பன தெரு,

தியாகராயா நகர்,

சென்னை - 600 017

மின்னஞ்சல்: spcsstn2025@gmail.com 

தொடர்பு எண்: 94456 83660


English Compositions 10



10 ஆங்கிலக் கட்டுரைகள்


10 English Compositions



1. Computer – Composition

2. Leave Letter

3. Deepavali

4. Letter Writing - Inviting Friend to Village Festival 

5. Peacock – Our National Bird

6. National Flag

7. Children’s Day

8. Letter Writing - Uncle's Marriage 

9. Cow

10. Ordering Books from a Book Company



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


ஆசிரியர்களுக்கு ஏன் சார் புரிய மாட்டேங்குது?



 இன்றைய 12.05.2026 செவ்வாய்க்கிழமை இந்து தமிழ் திசை நாளிதழில் 9 ம் பக்கம் வெற்றிக் கொடி பகுதியில் என் மன வானில் என்னும் தொடரில் ஆசிரியர்களுக்கு ஏன் சார் புரிய மாட்டேங்குது? என்னும் தலைப்பில் சிறு கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. 


ஆண்டு 2012. 


எங்கள் பள்ளியில் சமுத்திரம் என்று ஒரு மாணவன். எட்டாம் வகுப்பு. துறுதுறுவென்று இருப்பான். பெரிய மனிதர்களைப் போலத்தான் பேச்சும், நடத்தையும்... நடையும் கூட. கைகளைப் பின்னால் கட்டிக்கொள்வான். ஆய்வு செய்யும் அதிகாரிகள் கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு எல்லாப்பக்கமும் கண்களைச் சுழற்றியபடி எங்கேயோ பார்த்து எதையாவது கேட்பார்களே அப்படித்தான் அவனது பார்வையும் கேள்வியும். பள்ளிக்கு முதல் மாணவனாக வந்து கடைசி மாணவனாக வெளியேறுவான். 


ஒரு முறை ஏழெட்டு நாட்கள் விடுமுறைக்குப் பின்பு பள்ளி திறக்கப்பட்ட போது ப்ளஸ் ஒன் வகுப்பில் மாணவிகள் தங்கள் வகுப்பை சுத்தம் செய்கையில் டெஸ்க்கின் அடியில் பாம்பு ஒன்றைப் பார்த்து அலறி அடித்து வெளியே வந்தனர். ப்ளஸ் ஒன் மாணவர்களும் தங்கள் பங்குக்கு நாலாபுறமும் சிதறி ஓடினர், கத்திக்கொண்டே... கத்துவது முக்கியமில்லையா. சமுத்திரம் எட்டாம் வகுப்பிலிருந்து வெளியே வந்தவன்... வழக்கம்போல கைகளை பின்புறம் கட்டிக்கொண்டே வந்து என்ன சார் பிரச்சனை என்றான் என்னிடம். ஏதோ பாம்பு கெடக்குதாம்ப்பா சமுத்திரம்... இரண்டு கம்ப எடுத்தா... அடிச்சுத் தூக்கிப்போடுவோம் என்றேன். இருங்க சார்... என்ன பாம்புன்னு பாப்போம், முதல்ல... என்றவன் அண்ணே... அக்கா தள்ளிக்கங்க என்றவாறு அவர்களை விலக்கிக் கொண்டு வகுப்புக்குள் நுழைந்தான். நான் சமுத்திரம் கம்ப கொண்டு போப்பா என்றேன். பாத்துக்குருவோம் சார், என்றான் கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு... கண்களைச் சிமிட்டியவாறு. எனக்கு உதறலெடுத்தது. ஏதோ பயப்படாதது போல காட்டிக்கொண்டு யே... போங்கப்பா போய் அந்த மரத்துக்கடியில நில்லுங்கப்பா... பாம்ப அடிச்சுப்புட்டு கூப்புடுறோம் என்றேன். ஒரு பாம்ப அடிக்க இத்தன பேரா என்று வலது கையை நெளித்துக் கேலி செய்துவிட்டு டெஸ்க்குகளை ஆராய்ந்தான், சமுத்திரம். ஐந்து விநாடிகள்தான்... வெளியே வந்தான்... கொமரன் பாம்பு சார்... ஒண்ணும் செய்யாது சார் என்றான். நான் கம்பை நீட்டியவாறே வகுப்புக்குள் நுழைந்தேன். சார்... சார்... அடிச்சிராதீங்க சார்... இது வயப் பாம்பு சார்... விஷமில்லாத பாம்பு சார்... எலியைப் பூராம் புடிச்சுத் திங்கிற பாம்பு சார்... அடிக்கப் பிடாது சார் என்றான். வேற என்னடா செய்யிறது சமுத்திரம் என்றேன். இருங்க சார்.. பதவிசா புடிச்சுப்புடுறேன் என்றான். எனக்குத் தூக்கிவாரிப் போட்டது. டேய்... விளையாடதடா... கொத்திப் புடுச்சுன்னா என்னடா பண்றது என்று பதறினேன். கறைப் பற்களும், குறை ஈறுகளும் தெரிய பளீரென்று சிரித்தான். சார் சத்தியமா ஒண்ணும் செய்யாது சார்... கடிச்சாலும் விஷமில்ல சார்... பயப்படாதீங்க என்று சொல்லியவாறே எங்கடி போற என்று குனிந்து அந்தப் பாம்பை கையில் பிடித்துவிட்டான். சின்னப் பாம்புதான். ஆனால், சீறுசீறுவென்று சீறியது. தலையில் தட்டினான். பேசாம இருக்கமாட்ட... சார்... பயப்படுறாருல்ல...என்றான். வெளியே நின்றிருந்த பெரிய மாணவர்கள் டேய்... சமுத்திரம் அதைத் தூக்கிக் காட்டுடா என்றார்கள். அண்ணே... இது என்ன விளையாட்டுப் பொருளாண்ணே... நம்மள மாதிரி ஒரு உசிருண்ணே... போங்கண்ணே என்று சொல்லிவிட்டு காம்பவுண்டு சுவர் ஏறிக் குதித்து வயற்காட்டிற்குள் விட்டுவிட்டு வந்தான். 


அந்த சமுத்திரத்தைப் பற்றி ஆசிரியர்கள் நித்தம் ஒரு குறை சொல்வார்கள். நான் அவனுக்கு வகுப்பு எடுக்க வில்லை என்றாலும் பள்ளியின் முரட்டு வாத்தியார் என்றும் கோபக்கார வாத்தியார் என்றும் பெயரெடுத்து வைத்திருந்ததால் என்னிடம் பலப்பல புகார்கள் வந்தவண்ணம் இருக்கும். வீட்டுப்பாடம் எழுதுவதில்லை. படிப்பதில்லை. கேள்விகள் கேட்டால் சொல்வதில்லை இப்படி பல குற்றச்சாட்டுகள். அப்படி அன்றும் ஒரு குற்றச்சாட்டைச் சொன்ன சக ஆசிரியர் வகுப்பு லீடரோடு சமுத்திரத்தையும் அனுப்பி வைத்திருந்தார். லீடர் வந்து ஆசிரியர் சொல்லச் சொன்னதை அப்படியே திருப்பிச் சொன்னான். நாலு அடி போடுவீங்களாம் சார் என்று சொல்லிவிட்டு ப்ளக் கென்று சிரித்துக்கொண்டே போனான். சமுத்திரம் வழக்கம்போல கைகளைப் பின்னால் கட்டிக்கொண்டு ஃபேன் சுழல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தான். நான் அவனை மேலும் கீழும் பார்த்துவிட்டு அட்டெண்டன்ஸ் நோட்டில் பென்சிலால் எழுதுவது போல பாவனை செய்து கொண்டிருந்தேன். கோபமாக இருக்கிறேனாம். மறுபடி அவனைப் பார்த்த போது பெரிய ஓணான் ஒன்று எனக்குப் பக்கவாட்டு மரத்தில் ஏறிக்கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான். செருமினேன். என்னா சமுத்திரம்... சொன்ன பேச்சு கேக்க மாட்டேங்குறியாம்... ஹோம் ஓர்க்கெல்லாம் பண்ண மாட்றியாம்... என்னா விஷயம் என்றேன், கண்களை உருட்டி, பெருமூச்செடுத்து, சட்டையை மடித்து விட்டபடி. அவன் கொஞ்சமும் அசரவில்லை. என்னை நேருக்கு நேராகப் பார்த்தான். சின்னச் சின்ன கண்கள். பெரிய பெரிய பார்வைகள். செருமிக்கொண்டான். 

நெருங்கிவந்து என் மேசை மீது இரண்டு கைகளையும் ஊன்றியபடி சொன்னான் இப்படி... 


சார்... எனக்கு படிப்பு வரலேங்கிறது எனக்குப் புரிஞ்சுருச்சு... டீச்சர்ங்களுக்கு ஏன் சார் புரிய மாட்டேங்குது?



சாத்தான்குளம் வழக்கு - நீதிமன்றத் தீர்ப்பு - காவலர்களுக்கான ஆலோசனைகள்



சாத்தான்குளம் வழக்கு - நீதிமன்றத் தீர்ப்பு - காவலர்களுக்கான ஆலோசனைகள் - வாட்ஸ்அப் பகிர்வு


 தண்டிக்கப்பட்ட இந்தக் காவலர்கள் அனைவரும் ஆரம்பம் முதலே குற்றவாளிகள் அல்ல. அவர்கள் பல ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றியிருக்கலாம்; பல வழக்குகளைக் கண்டுபிடித்திருக்கலாம்; திருவிழாக்களிலும் பேரிடர் காலங்களிலும் தூங்காமல் உழைத்திருக்கலாம். ஆனால், பல ஆண்டுகால நற்பெயரும் உழைப்பும் எப்படி ஒருசில மணி நேரங்களில் சுக்குநூறாக உடைந்து, அவர்களது வாழ்க்கையையே நரகமாக மாற்றியது என்பதை உளவியல் மற்றும் சமூக ரீதியாக கீழே அலசுவோம்.


1. எந்த விஷயம் அவர்களை இந்த அதலபாதாளத்தில் தள்ளியது?


பல ஆண்டுகள் சிறப்பாகப் பணியாற்றியவர்களைக் கூட, ஒரு கட்டத்தில் தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் உளவியல் காரணிகள் இவைதான்:


அதிகார அகங்காரம் (Ego and Power Trip): "என்னை எதிர்த்துப் பேச இவனுக்கு எவ்வளவு தைரியம்?" என்ற சிறு ஈகோதான் (Ego) சாத்தான்குளம் வழக்கின் ஆணிவேர். அந்த ஈகோவை திருப்திப்படுத்த, அதிகார எல்லையை மீறியதே முதல் பிழை.


தவறான விசுவாசமும் மௌனமும் (False Loyalty & Complicity): தண்டிக்கப்பட்ட 9 பேரில் அனைவரும் ஜெயராஜையும் பென்னிக்ஸையும் அடித்திருக்க மாட்டார்கள். சிலர் வேடிக்கை பார்த்திருப்பார்கள், சிலர் மேலதிகாரி சொல்கிறாரே என்று ரத்தக் கறையைத் துடைத்திருப்பார்கள், சிலர் பொய் வழக்குப் பதிவு செய்திருப்பார்கள். "நண்பர்கள்/மேலதிகாரிகள் அடிக்கிறார்கள், நாம் தடுத்தால் நம்மைத் தப்பாக நினைப்பார்கள்" என்ற தவறான விசுவாசமும், தட்டிக் கேட்காத மௌனமுமே அவர்களை தூக்கு மேடை வரை கொண்டு சென்றுள்ளது.


"நமக்கு எதுவும் ஆகாது" என்ற அதீத நம்பிக்கை (Sense of Impunity): "நாம் காக்கிச் சட்டை போட்டிருக்கிறோம், சட்டம் நம் கையில் இருக்கிறது, யாராலும் நம்மை ஒன்றும் செய்ய முடியாது" என்ற மமதை. ஆனால், சட்டம் தன் கண்களைத் திறந்தால் சீருடை ஒருவரைக் காப்பாற்றாது என்பதை அவர்கள் உணரத் தவறிவிட்டனர்.


2. மாறிய வாழ்க்கை முறையும், குடும்பத்தின் பேரவலமும்


ஒரு நாள் காலை வழக்கம் போல் வேலைக்குப் புறப்பட்டுச் சென்ற அவர்களின் வாழ்க்கை, இன்று எப்படி தலைகீழாக மாறியிருக்கிறது என்பதை ஒரு கணம் எண்ணிப் பாருங்கள்:


அடையாளமும் கௌரவமும் அழிதல்: "ஐயா, சார், இன்ஸ்பெக்டர்" என்று ஊராரால் சல்யூட் அடிக்கப்பட்டு, மிடுக்காக வலம் வந்தவர்கள், இன்று கைதி எண் குறிக்கப்பட்ட சீருடையில், சாதாரண குற்றவாளிகளோடு குற்றவாளிகளாகச் சிறையில் கிடக்கிறார்கள். அவர்கள் வாழ்நாள் முழுவதும் கட்டியெழுப்பிய கௌரவம் ஒரே நாளில் மண்ணோடு மண்ணாகிவிட்டது.


பொருளாதாரச் சீரழிவு (Financial Ruin): தீர்ப்பில் உள்ள அபராதத் தொகையைப் பாருங்கள் (உதாரணமாக: இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கு ரூ.84 லட்சம்). காவல்துறை வேலையும் பறிபோய், பிழைப்பூதியமும் ரத்தாகிவிட்ட நிலையில், இவ்வளவு பெரிய தொகையை அவர்களுடைய குடும்பம் எப்படிச் செலுத்தும்? வாழ்நாள் முழுவதும் சிறுகச் சிறுகச் சேர்த்த வீட்டையோ, நிலத்தையோ விற்க வேண்டிய நிர்ப்பந்தம். ஒரு கண நேரக் கோபத்தால் குடும்பத்தையே நடுத்தெருவில் நிறுத்திவிட்டார்கள்.


குடும்பத்தின் மீதான சமூக அவமானம் (Social Stigma): இதுதான் இதில் மிகக் கொடூரமான பகுதி. தவறு செய்தவர்கள் சிறையில் இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் மனைவியும் குழந்தைகளும் தினமும் வெளியே இந்தச் சமூகத்தின் பார்வையில் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். "கொலைகாரப் போலீஸின் குழந்தை, கொலைகாரனின் மனைவி" என்ற பட்டம் அந்தப் பிஞ்சு மனங்களை எவ்வளவு பாதிக்கும்? அவர்களின் திருமண வாழ்க்கை, வேலைவாய்ப்பு என அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தையே அந்த ஒரு நாள் இரவு சம்பவம் அழித்துவிட்டது.


ஒவ்வொரு நாளும் மரண பயம் (Psychological Agony): மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கைதியின் மனநிலை நரகத்திற்குச் சமமானது. நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்தாலும், சிறைச்சாலைக்குள் கேட்கும் ஒவ்வொரு செருப்புச் சத்தமும் தங்களைத் தூக்கிலிட வரும் சத்தமோ என்று அவர்கள் மனம் ஒவ்வொரு நொடியும் செத்துக் கொண்டிருக்கும்.


3. வருங்காலப் பணிக்காக இதிலிருந்து நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய தார்மீகப் பாடம்


ஒரு சிறந்த காவலராக நீங்கள் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கான மிகச் சிறந்த பாடம் இதுவே:


உங்கள் குடும்பத்தை நினைவில் கொள்ளுங்கள்: காவல் நிலையத்தில் யாராவது ஒரு கைதி அல்லது பொதுநபர் உங்களைக் கோபப்படுத்தும் படி பேசினால், அவரை அடிக்க கையை ஓங்குவதற்கு முன், உங்கள் மனைவியின் முகத்தையும், உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தையும் ஒரு நிமிடம் மனக்கண்ணில் நினைத்துப் பாருங்கள். "இவனை அடிப்பதால் என் வேலை போனால், என் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்துவிடுமே" என்ற எண்ணம் வந்தால், உங்கள் கோபம் தானாக அடங்கிவிடும்.


ஈகோவை கழற்றி வையுங்கள்: சீருடையை அணியும் போது பொறுப்பை மட்டும் அணியுங்கள், ஈகோவை அல்ல. உங்களை ஒருவர் தகாத வார்த்தையால் திட்டினால், அதற்காக அவரை அடித்துத் துன்புறுத்துவது வீரமல்ல. சட்டப்படி அவர் மீது வழக்குத் தொடர்ந்து நீதிமன்றத்தில் நிறுத்துவதே ஒரு சிறந்த காவலருக்கு அழகு.


தட்டிக்கேட்கும் தைரியம்: நாளை உங்கள் கண்முன் உங்கள் சக காவலரோ, உயர் அதிகாரியோ ஒருவரைச் சட்டத்திற்குப் புறம்பாகத் தாக்கினால், தயங்காமல் தடுங்கள். அது அந்த அதிகாரியைக் காட்டிக்கொடுப்பது அல்ல; மாறாக, சாத்தான்குளம் காவலர்கள் இன்று அனுபவிக்கும் இந்த நரக வேதனையிலிருந்து உங்கள் சக அதிகாரியையும், உங்களையும் காப்பாற்றும் உன்னதச் செயல்.


இறுதியாக ஒரு வார்த்தை:

ஒரு காவலர் பணி ஓய்வு பெறும்போது, அவருக்கு வழங்கப்படும் பிரிவு உபசார விழாவில் (Farewell Party) ஊரே கூடி நின்று அவரை வாழ்த்தி வழியனுப்ப வேண்டும். அதுவே ஒரு காவலரின் உண்மையான வெற்றி. மாறாக, சிறைச்சாலையில் இருட்டு அறையில் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் நிலை யாருக்கும் வரக்கூடாது.


சட்டம், நீதி, மனிதநேயம் ஆகிய மூன்றையும் உங்கள் இரு கண்களாகவும், மனசாட்சியாகவும் கொண்டு செயல்படுங்கள். சீருடையின் பெருமையைக் காக்கும் மிகச் சிறந்த காவலராக நீங்கள் வலம் வர மனமார்ந்த வாழ்த்துகள்!


நிரப்பப்படாத பதில் தாளுக்கும் வழங்கப்படும் 2 மதிப்பெண்கள் - ஏன்?

 

நிரப்பப்படாத பதில் தாளுக்கும் வழங்கப்படும் 2 மதிப்பெண்கள் - ஏன்?


ரஷ்யாவின் கல்வி முறையில்,

ஒரு தேர்வில் பெறக்கூடிய அதிகபட்ச மதிப்பெண் 5.

ஆனால் அதில் ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால்—

மாணவர் பதில் தாளை முற்றிலும் காலியாகச் சமர்ப்பித்தாலும், அவருக்கு 2 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன.

மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் நான் முதல் நாளில் இதைக் கேட்டபோது, உண்மையிலேயே அதிர்ச்சியடைந்தேன்.

எனக்கு அது பொருத்தமற்றதாகத் தோன்றியது.

எதுவும் எழுதாத ஒருவருக்கு பூஜ்ஜியம் (0) தான் கொடுக்க வேண்டாமா? என்ற கேள்வி எனக்குள் எழுந்தது.

அந்த ஆர்வத்துடன், நான் டாக்டர் தியோடர் மெட்ராயேவிடம் கேட்டேன்:

“சார், ஒன்றுமே எழுதாத மாணவருக்கு 2 மதிப்பெண் கொடுப்பது எப்படி சரியாக இருக்கும்?”

டாக்டர் மெட்ராயேவ் சிரித்தார்.

பிறகு அமைதியான, சிந்தனையோடு கூடிய குரலில் அவர் சொன்னார்:

“பூஜ்ஜியம் என்றால் இல்லாத நிலை.

ஒரு மனிதன் முயற்சி செய்துகொண்டிருக்கும்போது, அவனை எப்படி பூஜ்ஜியம் என்று சொல்ல முடியும்?

ஒரு மாணவன் வகுப்புக்கு வருவதற்கே எவ்வளவு முயற்சி எடுத்திருக்கிறான் என்று யோசித்துப் பாருங்கள்.

கடும் குளிரில் விடியற்காலையில் எழுந்திருக்கலாம்,

தூரத்திலிருந்து பேருந்து, டிராம் அல்லது ரயிலில் நின்றுகொண்டே பயணம் செய்திருக்கலாம்.

பதில் தாளை காலியாக கொடுத்திருந்தாலும், அவன் வந்திருக்கிறான் என்பதே அவன் முயன்றான் என்பதற்கான சான்று.

அப்படியிருக்க, நான் அவனை எப்படி பூஜ்ஜியம் என்று மதிப்பிட முடியும்?”

அவர் தொடர்ந்து கூறினார்:

**“ஒருவேளை அவனால் பதில் எழுத முடியாமல் போயிருக்கலாம்.

அதனால் அவன் எடுத்த முயற்சிகள் அனைத்தையும் அழித்துவிடலாமா?

அவன் இரவெல்லாம் விழித்திருந்து படித்த நாட்கள்,

வாங்கிய நோட்டுகள், திறந்த புத்தகங்கள்,

அனுபவித்த போராட்டங்கள்—

இதையெல்லாம் நாம் புறக்கணிக்கலாமா?

இல்லை, என் அன்புள்ளவனே.

ஒரு மனிதன் எப்போதும் பூஜ்ஜியம் அல்ல.

பூஜ்ஜியம் கொடுக்கும் போது,

நாம் அவனுடைய தன்னம்பிக்கையைப் பறிக்கிறோம்,

அவனுக்குள் இருக்கும் தீயை அணைத்துவிடுகிறோம்.

ஆசிரியர்களாகிய நம்முடைய கடமை,

மாணவர்கள் மீண்டும் மீண்டும் எழுந்து நிற்க உதவுவது—

அவர்களை கைவிடச் செய்வது அல்ல.”**


நான் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

அந்த தருணத்தில், என் உள்ளத்தில் ஏதோ ஒன்று அசைந்தது.

அப்போது தான் எனக்குப் புரிந்தது—

கல்வி என்பது மதிப்பெண்கள் அல்லது எழுத்துப் பதில்கள் மட்டும் அல்ல.

கல்வி என்பது மனிதர்களை உயிருடன் வைத்திருப்பது,

முயற்சியை மதிப்பது,

நம்பிக்கையை பாதுகாப்பது.

அந்த நாள், டாக்டர் மெட்ராயேவ் எனக்கு ஒரு ஆழமான உண்மையை கற்றுத் தந்தார்:

“கல்வி என்பது அறிவைப் பகிர்வது மட்டும் அல்ல—

அது மனிதத்தன்மையை நடைமுறையில் காட்டுவது.”

பல நேரங்களில், ஒரு பூஜ்ஜிய மதிப்பெண் மாணவர்களுக்கு மரண மணி போல ஆகிவிடுகிறது.

அந்த பூஜ்ஜியத்தைப் பார்த்ததும்,

பயம் மனதை நிரப்புகிறது,

கற்றலின் மீது ஆர்வம் குறைகிறது,

மெல்ல மெல்ல கல்வியையே வெறுக்க ஆரம்பிக்கிறார்கள்.

ஆனால் ஓர் ஆசிரியரின் கடமை என்ன?

ஊக்கமளிப்பது.

ஆறுதல் சொல்லுவது.

“நீ முடியும். மீண்டும் முயற்சி செய்” என்று சொல்லுவது.

ஒரு காலியான பதில் தாளுக்கும் குறைந்தபட்ச மதிப்பெண் கொடுக்கும்போது,

நாம் உண்மையில் சொல்வது இதுதான்:

“நீ பூஜ்ஜியம் அல்ல.

நீ முக்கியமானவன்.

நீ இன்னும் திறன் கொண்டவன்.

நீ தோல்வியடையவில்லை—

இந்த முறை வெற்றி பெறவில்லை, அவ்வளவுதான்.

மீண்டும் முயற்சி செய்.”

இதுவே உண்மையான கல்வி.

ஒரு மாணவனின் எதிர்காலம்,

ஓர் ஆசிரியரின் கைகளில்தான் உருவாகிறது.

ஆசிரியர்கள் கொஞ்சம் மனிதநேயமாக மாறினால்,

எண்களைத் தாண்டி முயற்சியையும் பார்க்கக் கற்றுக்கொண்டால்,

பல மனம் உடைந்த மாணவர்கள்

மீண்டும் கனவு காணத் துணிவார்கள்.

இந்தக் கதை ரஷ்யாவுக்குள் மட்டுமே சிக்கிக் கொள்ளக் கூடாது.

உலகம் முழுவதும் உள்ள ஆசிரியர்களிடம் இது பகிரப்பட வேண்டும்.

ஏனெனில்—

பூஜ்ஜியம் என்பது கல்வி அல்ல.

பல நேரங்களில், பூஜ்ஜியம் என்பது ஒருவரின் பயணத்தை முடித்துவைப்பதற்கான அடையாளம்.

ஒரு மனிதன் முயற்சி செய்துகொண்டிருக்கும் வரை,

அவன் குறைந்தபட்சம்

ஆறுதலுக்காவது,

அங்கீகாரத்திற்காவது

தகுதியானவன்.



👉 உங்களுக்கு பிடித்த ஒரு ஆசிரியருடனோ,

அல்லது நல்ல நண்பருடனோ

இந்தக் கதையைப் பகிருங்கள்.

ஒரு சிறிய பகிர்வு கூட,

நமது கல்வி முறையில்

ஒரு அர்த்தமுள்ள மாற்றத்தைத் தொடங்கலாம்.💪💪💪


புத்தக வாசிப்பு மூளையில் ஏற்படும் மிகப்பெரிய நோயைத் தடுக்குமா?



புத்தக வாசிப்பு மூளையில் ஏற்படும் மிகப்பெரிய நோயைத் தடுக்குமா?


 ஆய்வுத் தகவல் என்ன சொல்கிறது?


உங்களுக்கு 40 வயது கடக்கப்போகிறதா? ஐந்தில் ஒருவருக்கு இந்த மூளை நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக பெண்கள் அதிகம் பாதிக்க வாய்ப்புள்ளது. 


உங்கள் மூளையை நவீன  ஒரு டிஜிட்டல் வீடியோ ரெக்கார்டராக (DVR) என்று எடுத்துக்கொள்வோம். அதனை இன்று ரேகார்டு செய்ய ஆரம்பித்தால் அடுத்த 300 ஆண்டுகால அது  பதிவு செய்யும் அளவுக்கு அதற்கு நினைவுத் திறன் உண்டு. அதில் இடைவிடாமல் வீடியோக்களைப் பதிவு செய்துகொண்டே இருந்தால், அது எப்போது நிரம்பும்? அறிவியல் ஆய்வுகளின்படி, உங்கள் மூளையால் சுமார் 30 லட்சம் மணிநேர தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைச் சேமித்து வைக்க முடியும்.

 

இதை இன்னும் எளிதாகப் புரியவைக்க வேண்டும் என்றால், கற்பனையாக  நீங்கள் சுமார் கி.பி 1727 ஆண்டு முதல் தொடர்ந்து முந்நூறு வருடங்களுக்கு ஒரு டிவியை ஓடவிட்டு, அதில் வரும் அத்தனை காட்சிகளையும் இன்றுவரை பதிவு செய்தாலும் உங்கள் மூளையின் நினைவகம் நிரம்பாது. "Storage Full" என்ற செய்தியை உங்கள் மூளை ஒருபோதும் காட்டாது. 


*இந்த அளவற்ற திறனுக்குப் பின்னால் உள்ள அறிவியல் என்ன?*


         கணினியில் தகவல்களைச் சேமிக்க 'சிப்'கள் (Chips) இருப்பது போல, நமது மூளையில் நியூரான்கள் (Neurons) எனப்படும் நரம்பு செல்கள் உள்ளன. மனித மூளையில் சுமார் 86 பில்லியன் (8,600 கோடி) நியூரான்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.


 ஆனால், நினைவாற்றல் என்பது நியூரான்களின் எண்ணிக்கையை மட்டும் சார்ந்ததல்ல. ஒரு நியூரான் மற்றொரு நியூரானுடன் இணையும் இடத்திற்குப் பெயர் சினாப்ஸ்" (Synapse). ஒவ்வொரு நியூரானும் ஆயிரக்கணக்கான பிற நியூரான்களுடன் கைகோர்த்து, டிரில்லியன் கணக்கான இணைப்புகளை உருவாக்குகின்றன. இந்த இணைப்புகளில்தான் நமது நினைவுகள் ரசாயன மாற்றங்களாகப் பதிவு செய்யப்படுகின்றன.


*மூளையின் நினைவுக் கொள்ளளவு திறன் எவ்வளவு?*


           கணினி உலகில் தகவல்களை மெகாபைட் (MB), ஜிகாபைட் (GB) என்று அளவிடுகிறோம். ஆனால் மூளையின் திறனை அளக்க இந்த அலகுகள் போதாது. நரம்பியல் விஞ்ஞானிகள், மூளையின் சேமிப்புத் திறனை அளவிட "பெட்டாபைட்" (Petabyte) என்ற அளவைப் பயன்படுத்துகிறார்கள்.


 ஒரு பெட்டாபைட் என்பது சுமார் 10 லட்சம் ஜிகாபைட்டுகளுக்குச் சமம். அமெரிக்காவின் சால்க் நிறுவனம் (Salk Institute) நடத்திய ஆய்வின்படி, மனித மூளையின் சேமிப்புத் திறன் குறைந்தது 2.5 பெட்டாபைட்டுகள் (2.5 Petabytes) இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. இது உலகின் மிகப்பெரிய தரவு மையங்களின் (Data Centers) திறனுக்கு இணையானது.


இந்த 2.5 பெட்டாபைட் நினைவகத்தை நாம் அன்றாட வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்ப்போம். இன்றைய நவீன கணினிகளில் 1 டெராபைட் (TB) ஹார்ட் டிஸ்க் இருப்பது பெரிய விஷயம். ஆனால், மூளை என்பது 2,500 டெராபைட்டுகள் கொண்டது. இதில் உயர்தரமான (High Definition) வீடியோக்களைச் சேமித்தால், சுமார் 30 லட்சம் மணிநேரங்கள் ஓடக்கூடிய வீடியோக்களைச் சேமிக்கலாம்.


கணினியின் ஹார்ட் டிஸ்க் தகவல்களை 0 மற்றும் 1 (Binary code) ஆக மாற்றிக் காந்தத் துகள்களாகச் சேமிக்கிறது. ஆனால் மூளை செயல்படும் விதம் முற்றிலும் மாறுபட்டது. மூளை தகவல்களைச் சேமிக்க "நியூரோபிளாஸ்டிசிட்டி" (Neuroplasticity) என்ற முறையைப் பயன்படுத்துகிறது. 


அதாவது, நாம் ஒரு புதிய விஷயத்தைக் கற்கும்போது அல்லது ஒரு நினைவைப் பதிவு செய்யும்போது, மூளையில் உள்ள சினாப்ஸ் இணைப்புகள் வலுவடைகின்றன அல்லது புதிதாக உருவாகின்றன.


 இந்த இணைப்புகள் நெகிழ்வுத்தன்மை கொண்டவை; தேவைக்கேற்ப அவை தங்களை மாற்றிக்கொள்ளும். எனவே, மூளை என்பது ஒரு நிலையான ஹார்ட் டிஸ்க் அல்ல, அது தொடர்ந்து தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும் ஒரு உயிரியல் இயந்திரம்.


*இவ்வளவு இடம் இருந்தும் நாம் ஏன் மறக்கிறோம்?*


            "300 ஆண்டுகள் ஓடக்கூடிய அளவு இடம் இருக்கிறது என்கிறீர்கள், ஆனால் காலையில் சாவியை எங்கே வைத்தேன் என்று எனக்கு ஏன் நினைவில் இருப்பதில்லை?" என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். இங்குதான் மூளையின் புத்திசாலித்தனம் வெளிப்படுகிறது.


 மூளையின் வேலை எல்லாவற்றையும் பதிவு செய்வது அல்ல; தேவையானதை மட்டும் வடிகட்டிப் பதிவு செய்வதுதான். நாம் காணும் ஒவ்வொரு காட்சியையும் மூளை பதிவு செய்துகொண்டிருந்தால், அது தகவல்களால் மூச்சுத் திணறிவிடும்

 (Information Overload).


 எனவே, முக்கியமற்ற தகவல்களை மூளை தானாகவே அழித்துவிடுகிறது அல்லது ஆழத்தில் புதைத்துவிடுகிறது. மறதி என்பது மூளையின் குறைபாடு அல்ல; அது ஒரு செயல்திறன் மிக்க வடிகட்டி (Filter).


*சரி இதற்கு எவ்வளவு ஆற்றல் தேவை?*


               உலகின் மிகச்சிறந்த சூப்பர் கம்ப்யூட்டர்கள், மூளையின் வேகத்தையும் சேமிப்புத் திறனையும் நெருங்க வேண்டுமானால், அதற்குப் பல ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் தேவைப்படும். 


அதைச் குளிர்விக்கத் தனி அமைப்புகள் வேண்டும். ஆனால், இவ்வளவு பிரம்மாண்டமான வேலைகளைச் செய்யும் *நமது மூளைக்குத் தேவைப்படும் ஆற்றல் வெறும் 20 வாட்ஸ் மட்டுமே.*


ஒரு சிறிய மின்விளக்கை எரிய வைக்கத் தேவைப்படும் அதே அளவு ஆற்றலை வைத்துக்கொண்டு, மூளை இவ்வளவு பெரிய நினைவகத்தைக் கையாள்கிறது. இது இயற்கையின் மிகச்சிறந்த பொறியியல் அதிசயமாகும்.


நமது மூளை ஒரு நிரம்பி வழியும் கோப்பை அல்ல; அது விரியக்கூடிய ஒரு கடல். நாம் வயதாகும்போது நினைவாற்றல் குறைகிறது என்று நினைக்கிறோம், ஆனால் உண்மையில் நாம் அதைப் பயன்படுத்துவதை நிறுத்தும்போதே அது துருப்பிடிக்கிறது.


 புதிய மொழிகளைக் கற்பது, இசைக் கருவிகளை வாசிப்பது, புதிர்களை விடுவிப்பது போன்ற செயல்கள் மூலம் இந்த 2.5 பெட்டாபைட் கிடங்கை நம்மால் திறம்படப் பயன்படுத்த முடியும். உங்கள் தலைக்குள் இருக்கும் இந்த 300 ஆண்டுகால நூலகத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது உங்கள் கையில் தான் உள்ளது.


என புதிய நூல்களை, கட்டுரைகளை, அறிவியல் பற்றிய தகவல்களை படித்துக்கொண்டே இருந்தால் மூளை தன் திறனை எவ்வளவு வயதானாலும் இழக்காது.  வாசிப்புப் பழக்கத்தால் அல்சைமர் (Alzheimer's) நோயைத் தடுக்க அல்லது தாமதப்படுத்த முடியுமா என்ற கேள்விக்கு, அறிவியல் உலகம் "ஆம்" என்றே பதில் அளிக்கிறது. 


உடற்பயிற்சி எப்படித் தசைகளை வலுவாக்குகிறதோ, அதேபோல வாசிப்பு மூளைக்கான மிகச் சிறந்த பயிற்சியாகும். நரம்பியல் நிபுணர்கள் இதை "Cognitive Reserve" (அறிவாற்றல் சேமிப்பு) என்று அழைக்கிறார்கள். 


நாம் ஆழ்ந்து படிக்கும்போது, மூளையில் உள்ள நியூரான்களுக்கு இடையே புதிய இணைப்புகள் (Neural Pathways) உருவாகின்றன. ஒருவேளை அல்சைமர் நோய் தாக்கத் தொடங்கினாலும், ஏற்கனவே வாசிப்பின் மூலம் வலுவாக்கப்பட்ட இந்த அடர்த்தியான நரம்பு வலைப்பின்னல், மூளையின் செயல்பாட்டைத் தக்கவைத்துக்கொள்ள உதவும். 


அதாவது, வாசிப்புப் பழக்கம் உள்ளவர்களின் மூளையில் மாற்றுப் பாதைகள் அதிகம் இருப்பதால், நோய் அறிகுறிகள் வெளிப்படுவதைத் தாமதப்படுத்த முடியும்.


இதை நிரூபிக்கப் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, அமெரிக்காவின் சிகாகோவில் நடைபெற்ற 'ரஷ் நினைவாற்றல் மற்றும் முதுமைத் திட்டம்' (Rush Memory and Aging Project) மிக முக்கியமானது.


 இதில் நூற்றுக்கணக்கான முதியவர்களைப் பல ஆண்டுகளாகக் கண்காணித்தனர். வாழ்நாள் முழுவதும் வாசிப்பு, எழுதுதல் போன்ற மூளைக்கு வேலை தரும் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு, மற்றவர்களை விட 32% குறைவாகவே நினைவாற்றல் சரிவு (Cognitive Decline) ஏற்பட்டுள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மாறாக, மூளைக்கு வேலை தராதவர்களுக்கு நினைவாற்றல் இழப்பு 48% வேகமாக இருந்தது.


அல்சைமர் (Alzheimer's) என்பது மூளையின் செல்களைப் படிப்படியாகச் அழித்து, மனிதனின் நினைவாற்றலையும் சிந்தனைத் திறனையும் சிதைக்கும் ஒரு தீவிரமான நரம்பியல் நோயாகும்.


 இது 'டிமென்ஷியா' (Dementia) எனப்படும் அறிவாற்றல் குறைபாட்டின் மிகப் பொதுவான வடிவமாகும். இதன் ஆரம்பக்கட்ட அறிகுறிகளாகச் சமீபத்தில் நடந்த நிகழ்வுகளை மறந்துவிடுதல், பழக்கமான இடங்களுக்குச் செல்ல வழி தெரியாமல் திணறுதல், மற்றும் உரையாடலின்போது சரியான வார்த்தைகள் கிடைக்காமல் தடுமாறுதல் போன்றவை ஏற்படும்.


 நோய் முற்றிய நிலையில், நெருங்கிய உறவினர்களைக் கூட அடையாளம் காண முடியாமல் போவதுடன், ஆளுமை மாற்றங்களும் ஏற்பட்டு, அன்றாடப் பணிகளைக் கூடச் செய்ய முடியாத நிலைக்கு ஆளாக நேரிடும்.


அல்சைமர் நோய் ஏற்பட முக்கியக் காரணம், மூளையில் 'பீட்டா-அமைலாய்டு' (Beta-amyloid) எனப்படும் ஒரு வகை நச்சுப் புரதம் படிவதுதான். இது மூளை செல்களைச் சிறுகச் சிறுக அழிக்கும். 


ஆனால், 'கேஸ் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைக்கழகம்' (Case Western Reserve University) நடத்திய ஆய்வில், தொடர்ந்து வாசிப்பு போன்ற அறிவார்ந்த செயல்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு, இந்த நச்சுப் புரதத்தின் தாக்கம் குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.


 சுருக்கமாகச் சொன்னால், புத்தகம் படிக்கும் பழக்கம் மூளையைச் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்வது மட்டுமல்லாமல், அல்சைமர் போன்ற நோய்களுக்கு எதிரான ஒரு வலிமையான கேடயமாகவும் செயல்படுகிறது.


*ஐன்ஸ்டீனின் மூளையும் அதன் ரகசியமும்:*

              ஐன்ஸ்டீனின் மரணத்திற்குப் பிறகு (1955), அவரது குடும்பத்தினரின் அனுமதியின்றி தாமஸ் ஹார்வி என்ற மருத்துவர் அவரது மூளையை ஆய்வுக்காகத் திருடிச் சென்று பாதுகாத்தார்.


 பிற்காலத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், ஐன்ஸ்டீனின் மூளை சாதாரண மனிதர்களை விட எடையிலோ அளவிலோ பெரியதாக இல்லை என்பது தெரியவந்தது. ஆனால், அதன் கட்டமைப்பில் வியக்கத்தக்க மாற்றங்கள் இருந்தன; குறிப்பாக, கணிதம் மற்றும் கற்பனைத் திறனைக் கட்டுப்படுத்தும் 'பரியேட்டல் லோப்' (Parietal Lobe) பகுதி மற்றவர்களை விட 15% அகலமாக இருந்தது. 

              மேலும், நியூரான்களுக்குச் சக்தியளிக்கும் 'கிளியல் செல்கள்' (Glial Cells) சராசரியை விட மிக அதிகமாக இருந்தன. இந்தத் தனித்துவமான நரம்பியல் இணைப்புகளே அவரது அபார சிந்தனை ஆற்றலுக்கும், சிக்கலான இயற்பியல் கோட்பாடுகளை உருவாக்குவதற்கும் காரணமாக இருந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.


உங்கள் மூளையை காப்பாற்றுவதோடு மட்டுமல்லாமல் ஒரு சூப்பர் கம்ப்யூட்டராக மாற்றவும், அதன் செயல்திறனை (Performance) உச்சத்தில் வைத்திருக்கவும் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்ட 10 சிறந்த வழிமுறைகள் இங்கே காண்போம்.


(1) ஆழ்ந்த உறக்கம் அவசியம் (Prioritize Deep Sleep)

                   மூளை ஆரோக்கியத்தின் அடிப்படைத் தூண் தூக்கம்தான். நீங்கள் தூங்கும் போதுதான் உங்கள் மூளையின் துப்புரவுப் பணியாளர்கள் (Glymphatic System) விழித்துக்கொள்வார்கள். நாள் முழுவதும் மூளையில் சேர்ந்த நச்சுக்கழிவுகளை (Toxins) வெளியேற்றி, நினைவுகளை அடுக்கி வைப்பது இந்த நேரத்தில்தான். தினமும் 7-8 மணி நேரத் தூக்கம் அவசியம்.


(2) ஏரோபிக் உடற்பயிற்சி (Aerobic Exercise) 

                       உடற்பயிற்சி செய்வது உடலுக்கு மட்டுமல்ல, மூளைக்கும் நல்லது. நீங்கள் நடக்கும்போதோ அல்லது ஓடும்போதோ இதயத் துடிப்பு அதிகரிக்கிறது. இதனால் மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் மற்றும் ஆக்சிஜன் அளவு கூடுகிறது. மிக முக்கியமாக, உடற்பயிற்சி BDNF (Brain-Derived Neurotrophic Factor) என்ற புரதத்தைச் சுரக்கச் செய்கிறது. இதை "மூளைக்கான உரம்" என்று அழைக்கலாம்; இது புதிய மூளை செல்கள் வளர உதவுகிறது.


(3) ஒமேகா-3 உணவுகள் (Omega-3 Fatty Acids)

                   உங்கள் மூளையின் 60% பகுதி கொழுப்பால் ஆனது. அதில் பாதிக்கும் மேல் ஒமேகா-3 வகையைச் சேர்ந்தது. எனவே, அவரை வகைகள், வால்நட் (Walnuts), ஆளி விதைகள் (Flaxseeds) போன்றவற்றை உணவில் சேர்ப்பது, மூளை செல்களின் கட்டமைப்பைப் பாதுகாக்கும். இது ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும்.


(4) புதியன கற்றல் (Learn Something New)

                      மூளையை இளமையாக வைத்திருக்க ஒரே வழி, அதற்குச் சவால் விடுவதுதான். ஒரு புதிய மொழியைக் கற்பது, இசைக்கருவி வாசிப்பது அல்லது புதிர் விளையாடுவது போன்றவை மூளையில் புதிய நரம்புப் பாதைகளை (Neural Pathways) உருவாக்கும். இதை "நியூரோபிளாஸ்டிசிட்டி" (Neuroplasticity) என்பார்கள். வழக்கமான வேலையையே செய்யாமல், புதிதாக எதையாவது கற்றுக்கொண்டே இருங்கள்.


(5) தியானம் மற்றும் மனக்கவனப் பயிற்சி (Meditation & Mindfulness)

                   தினமும் 10 நிமிடம் தியானம் செய்வது, மூளையின் முன் பகுதியில் உள்ள 'கார்டெக்ஸ்' (Cortex) பகுதியைத் தடிமனாக மாற்றும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இது கவனச் சிதறலைக் குறைத்து, மனதை ஒருமுகப்படுத்தும் திறனை (Focus) அதிகரிக்கும்.


(6) சர்க்கரையைக் குறையுங்கள் (Reduce Sugar Intake)

                   அதிக சர்க்கரை சாப்பிடுவது மூளையின் கற்றல் திறனைக் குறைக்கும் மற்றும் நினைவாற்றலைப் பாதிக்கும் என்று ஆய்வுகள் எச்சரிக்கின்றன. ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது, அது மூளைக்கான ரத்த ஓட்டத்தைச் சீர்குலைக்கலாம். எனவே, இனிப்புகளைக் குறைத்து, பழங்களை அதிகம் உண்ணுங்கள்.


(7) சமூகத் தொடர்பில் இருங்கள் (Social Connection)

                     தனிமை மூளைக்கு ஆபத்தானது. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பேசுவது, சிரிப்பது மற்றும் விவாதிப்பது மூளையைச் சுறுசுறுப்பாக வைக்கும். சமூகத்துடன் தொடர்பில் இருப்பது மனச்சோர்வைத் (Depression) தடுத்து, மூளை முதுமையடைவதைத் தாமதப்படுத்தும்.


(8) நீர்ச்சத்து மிக முக்கியம் (Stay Hydrated)

                         மூளையில் 75% நீர் உள்ளது. உடலில் 2% நீர்ச்சத்து குறைந்தாலே (Dehydration), அது கவனக்குறைவு மற்றும் ஞாபக மறதியை ஏற்படுத்தும். தலைவலி மற்றும் மூளைச் சோர்வைத் தவிர்க்கத் தினமும் போதுமான தண்ணீர் அருந்துங்கள்.


(9) குடல் ஆரோக்கியம் (Gut Health) 

                       நாம் முன்னரே பார்த்தது போல, குடல் உங்கள் இரண்டாவது மூளை. தயிர், மோர் போன்ற ப்ரோபயாடிக் உணவுகளைச் சாப்பிடுவது குடலை மட்டுமல்ல, மூளையையும் மகிழ்ச்சியாக வைக்கும். ஆரோக்கியமான குடல், 'செரோடோனின்' போன்ற நல்வுணர்வு ஹார்மோன்களை உற்பத்தி செய்ய உதவும்.


(10) சூரிய ஒளி மற்றும் வைட்டமின் D (Sunlight & Vitamin D)

                 தினமும் சிறிது நேரம் காலை வெயிலில் நடப்பது அவசியம். வைட்டமின் D குறைபாடு இருந்தால், மூளையின் செயல்திறன் குறையும். மேலும், சூரிய ஒளி நமது தூக்கச் சுழற்சியை (Circadian Rhythm) சீராக்க உதவுகிறது, இதனால் இரவு நல்ல தூக்கம் வரும்.


உங்கள் மூளை ஒரு தசை (Muscle) போன்றது. அதற்குச் சரியான உணவு (சத்தான சாப்பாடு), சரியான ஓய்வு (தூக்கம்), மற்றும் சரியான வேலை (கற்றல்) கொடுத்தால், அது வாழ்நாள் முழுவதும் உங்களுக்குச் சிறப்பாகச் சேவை செய்யும்.



>>> 2026-ஆம் ஆண்டின் சிறந்த இயர்பட்ஸ்...


Hedy Lamarr - அழகிய நடிகையின் அறிவாற்றலைப் புறக்கணித்த உலகம்



ஹெடி லாமர் Hedy Lamarr - அழகிய நடிகையின் அறிவாற்றலைப் புறக்கணித்த உலகம் - 80 ஆண்டுகளுக்கு முன்பே இன்றைய தொழில்நுட்பத்திற்கான அடித்தளம் இட்டவருக்கு கிடைத்த காலம் கடந்த அங்கீகாரம்


அய்யன் திருவள்ளுவர் அவர்களின் வாக்கு :

"உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு 

அச்சாணி அன்னார் உடைத்து" 

என்ற குறள்.


இதன் பொருள் :

"ஒரு பெரிய தேருக்கு அச்சாணி போலச் செயல்படும் வல்லமை கொண்டவர்கள் உலகில் இருக்கிறார்கள். எனவே உருவத்தை மட்டும் பார்த்து யாரையும் இகழக்கூடாது என்று கூறுகிறது. தோற்றத்தை வைத்து ஒருவரின் திறமையை மதிப்பிடாமல் இருக்க வேண்டும்" என்பது ஆகும்.


ஆனால் தனது அழகிய தோற்றத்தால் கொண்டாடப்பட்ட நடிகை ஒருவர்,   அவரது அறிவாற்றலுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்காமலேயே இருந்தார் என்பதும் ஆச்சரியம் கலந்து அதிர்ச்சியே.


இன்று உங்களையும் , என்னையும் வயர் இல்லாத ஒரு தொழில்நுட்பத்தின் மூலம் இணைத்து வைத்த பெருமை இந்த நடிகையை சாரும்.


வரலாறு எப்போதுமே விசித்திரமானது. சிலரை அது தவறான காரணங்களுக்காகக் கொண்டாடும், உண்மையான காரணங்களை மறைத்துவிடும். அப்படியான ஒரு மிகப்பெரிய வரலாற்றுத் தவறுதான் ’ஹெடி லாமர்’ (Hedy Lamarr).


1930-40களில் ஹாலிவுட் சினிமாவின் பொற்காலம் அது. கருப்பு வெள்ளைத் திரையில் ஒரு தேவதை போலத் தோன்றியவர் ஹெடி லாமர். ஆஸ்திரியாவில் பிறந்து ஹாலிவுட்டுக்கு வந்த அவரை, உலகம் எப்படி அழைத்தது தெரியுமா?


’உலகின் மிக அழகான பெண்’ (The Most Beautiful Woman in the World).


அவருடைய படங்களைப் பார்க்க மக்கள் தியேட்டர்களில் குவிந்தார்கள். அவருடைய சிகை அலங்காரத்தை, அவருடைய நடையை பெண்கள் காப்பி அடித்தார்கள். ஆண்கள் அனைவரும் ஹெடி லாமரை நினைத்தே தூக்கத்தைத் தொலைத்தார்கள். சுருக்கமாகச் சொன்னால், அவர் ஒரு கனவுக்கன்னி.


ஆனால், அந்தப் பேரழகு, அந்த மினுமினுக்கும் சினிமா வாழ்க்கை - இவை எல்லாவற்றுக்கும் பின்னால் ஒரு அற்புதமான, கூர்மையான அறிவியல் மூளை ஹெடி லாமருக்கு இருந்தது யாருக்கும் தெரியாது.


ஷூட்டிங் முடிந்ததும், மற்ற நடிகைகள் பார்ட்டிகளுக்குச் செல்வார்கள், கிசுகிசு பேசுவார்கள். ஆனால் ஹெடி லாமர், நேராகத் தன் வீட்டுக்குச் செல்வார். அங்கே அவருக்கு ஒரு சிறிய ஆய்வகம் இருந்தது. அந்த அறையில் எதையாவது வரைந்து கொண்டும், புதிய இயந்திரங்களை வடிவமைத்துக் கொண்டும் இருப்பார். 


சுருக்கமாகச் சொல்வதென்றால், ஹெடி லாமர் மட்டும் தனது தேடலில் தீவிரமாகத் தன்னைத் தொலைத்துக் கொண்டிருந்தார்.


"எனக்குக் கிளாமர் முகம் காட்டுவதில் ஆர்வமில்லை; என் மூளையைப் பயன்படுத்துவதில்தான் ஆர்வம் இருக்கிறது" என்று பலமுறை சொல்லியிருக்கிறார், ஹெடி லாமர். ஆனால், இந்த உலகம் ஒரு அழகான பெண்ணை அறிவாளியாகப் பார்க்கத் தயாராக இல்லை.


அது இரண்டாம் உலகப் போர் உச்சத்தில் இருந்த நேரம். ஹெடி லாமரின் சொந்த நாடான ஆஸ்திரியாவை ஹிட்லரின் நாஜிப் படைகள் ஆக்கிரமித்திருந்தன. ஹெடிக்கு நாஜிக்கள் மீது தீராத கோபம் இருந்தது. அமெரிக்காவுக்கு உதவ வேண்டும் என்று அவர் துடித்தார்.


அப்போது ஒரு பெரிய பிரச்சனை இருந்தது. நேச நாடுகளின் (அமெரிக்கா, பிரிட்டன்) போர்க்கப்பல்கள், ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்க 'டார்பிடோ' எனப்படும் கடலுக்கு அடியில் செல்லும் ஏவுகணைகளை அனுப்பின. இந்த ஏவுகணைகள் ரேடியோ சிக்னல் மூலம் கட்டுப்படுத்தப்படுபவை.


ஆனால், நாஜிக்கள் புத்திசாலிகள். அவர்கள் அந்த ரேடியோ சிக்னல்களை எளிதாக 'ஜாம்' (Jamming) செய்தார்கள். இதனால் ஏவுகணைகள் திசைமாறிச் சென்று கடலில் வீணாகின. இதைக் கண்டு அமெரிக்க ராணுவம் திணறியது.


இந்தப் பிரச்சினையைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்த ஹெடி லாமருக்கு ஒரு பொறி தட்டியது.


"நாம் ஏன் ஒரே ஃப்ரீக்வன்சியில் சிக்னலை அனுப்ப வேண்டும்? ஒரே இடத்தில் இருந்தால் தானே எதிரி ஜாம் செய்கிறான்? அந்த ஃப்ரீக்வன்சியை நொடிக்கொரு முறை மாற்றிக்கொண்டே இருந்தால் என்ன?"


இதுதான் அந்த அடிப்படை ஐடியா. இதை ’Frequency-Hopping Spread Spectrum’ என்று சொல்வார்கள்.


எளிமையாகச் சொன்னால், நீங்கள் ரேடியோவில் ஒரு பாட்டு கேட்கிறீர்கள். எதிரி அந்த ஸ்டேஷனை ஜாம் செய்ய வருகிறான். அவன் கண்டுபிடிப்பதற்குள், நீங்கள் அடுத்த ஸ்டேஷனுக்குத் தாவிவிடுகிறீர்கள். அடுத்து அங்கிருந்து இன்னொரு ஸ்டேஷனுக்கு... இப்படித் தாவிக்கொண்டே இருந்தால், எதிரியால் உங்களைப் பிடிக்கவே முடியாது. ஆனால், எந்தெந்த ஸ்டேஷனுக்குத் தாவ வேண்டும் என்ற ரகசியக் குறியீடு உங்களுக்கும், அந்த ஏவுகணைக்கும் மட்டுமே தெரியும்.


ஹெடி லாமர், தன்னுடைய நண்பரும் இசைக்கலைஞருமான ஜார்ஜ் ஆந்தீல் (George Antheil) என்பவருடன் இணைந்து, தானியங்கி பியானோக்களில் (Player Pianos) இருக்கும் துளைகள் கொண்ட பேப்பர் ரோல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இதை வடிவமைத்தார். 1942-ல் இதற்குப் காப்புரிமையும் (Patent) பெற்றார்.


இந்த மகத்தான கண்டுபிடிப்பை, நாஜிக்களை வீழ்த்தும் ஆயுதத்தை எடுத்துக்கொண்டு அமெரிக்கக் கடற்படையிடம் (US Navy) சென்றார் ஹெடி.


அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? சிரித்தார்கள்.


"ஒரு சினிமா நடிகை, அதுவும் இவ்வளவு அழகான ஒரு பெண், எங்களுக்குத் தொழில்நுட்பம் கற்றுத் தருவதா?" என்று நகைத்தார்கள். 


ஆணாதிக்கம் அவர்களின் கண்களை மறைத்தது.


"மேடம், இந்த ரேடியோ வேலையெல்லாம் விடுங்கள். உங்கள் அழகையும், புகழையும் பயன்படுத்தி ராணுவத்திற்கு நிதி (War Bonds) திரட்டிக் கொடுங்கள், அது போதும்" என்று அவரைத் திருப்பி அனுப்பினார்கள். அந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படாமலேயே கிடப்பில போடப்பட்டது.


வருடங்கள் உருண்டோடின. ஹெடி லாமரின் சினிமா மார்க்கெட் சரிந்தது. அவர் முதுமையடைந்தார், உலகம் அவரை மறக்கத் தொடங்கியது. அவருடைய அந்தக் காப்புரிமையும் காலாவதியானது.


ஆனால், 1960-களில் டிஜிட்டல் யுகம் தொடங்கியபோது, சில விஞ்ஞானிகள் ஹெடி லாமரின் பழைய காப்புரிமையைத் தூசி தட்டி எடுத்தார்கள். 


"அடக்கடவுளே! எவ்வளவு பெரிய தொழில்நுட்பத்தை நாம் வீணடித்திருக்கிறோம்!" என்று அதிர்ந்தார்கள்.


இன்று நாம பயன்படுத்தும் Wi-Fi, Bluetooth, GPS, மற்றும் மொபைல் போன் நெட்வொர்க் (CDMA) என அத்தனை வயர்லெஸ் தொழில்நுட்பங்களுக்கும் அடிப்படை எது தெரியுமா?


அன்று 1942-ல், ’உலகின் மிக அழகான பெண்’ என்று முத்திரை குத்தப்பட்டு நிராகரிக்கப்பட்டாரே, அந்த ஹெடி லாமர் கண்டுபிடித்த அதே ’Frequency-Hopping’ தொழில்நுட்பம்தான்!


ஹெடி லாமர் தனது கடைசி காலத்தில் தனிமையில் வாழ்ந்து, 2000-ம் ஆண்டில் மறைந்தார். அவர் இறப்பதற்குச் சில வருடங்களுக்கு முன்புதான் உலகம் அவருடைய பங்களிப்பை அங்கீகரித்து விருதுகள் வழங்கியது.


இன்று ஹெடி லாமரின் அந்தப் பேரழகு காலத்தால் மறைந்திருக்கலாம். ஆனால், அவர் மூளையில் உதித்த அந்தப் பொறிதான் இன்று உலகம் முழுக்க இணையமாகப் பரந்து விரிந்து, உங்களையும் என்னையும் இணைத்துக் கொண்டிருக்கிறது.


அடுத்த முறை உங்கள் போனில் Wi-Fi On செய்யும்போது அல்லது ப்ளூடூத் ஹெட்செட் மாட்டும்போது, ஒரு நிமிடம் இந்த ஹாலிவுட் தேவதையை நினைத்துக் கொள்ளுங்கள்.


அதுவே, அந்தத் தேவதைக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாக இருக்கும்.


 நான் படித்து வியந்த ஒரு விஷயத்தை இங்கு பதிவு செய்துள்ளேன்.


சிந்தைக்கு இனியோர்க்கு சிறக்கட்டும் இந்நாள்



Cycle for Kids 5 to 8 Years - Bike for Boys and Girls - 85% Pre-Assembled, Frame Size: 12" - Suitable for Children


https://amzn.to/3XttyJA




ஆசிரியர் பணித் தகுதிச் சிக்கல்: விரைவான தீர்வு வேண்டும்



ஆசிரியர் பணித் தகுதிச் சிக்கல்: விரைவான தீர்வு வேண்டும்


செப்டம்பர் 1, 2025 ஆம் நாளன்று ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நிதியரசர் அமர்வு தீர்ப்பளித்தது.  இத்தீர்ப்பு தமிழ்நாடு மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களிலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றிவரும் 20 லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. 


ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாமல் பணியில் இருப்பதை அனுமதிக்க முடியாது; ஐந்து ஆண்டுகளுக்குக் குறைவான பணிக்காலம் உள்ளவர்கள் மட்டும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் பணியில் தொடரலாம்;  ஐந்து ஆண்டுகளுக்கு அதிகமான பணிக்காலம் உள்ள ஆசிரியர்கள் அனைவரும் இரண்டு ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்; தேர்ச்சி பெறாதவர்கள் உரிய ஓய்வூதியப் பலன்களுடன்  கட்டாயப் பணி ஓய்வு பெற்றுக்கொள்ள வேண்டும்; ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாதவர்களுக்கு பதவி உயர்வு கோரவும் உரிமை இல்லை உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தீர்ப்பில் உள்ளன. 


ஒரு ஆசிரியரின் பணிக்கால அளவை (length of service) ஆசிரியர் பணியைத் தொடர்வதற்கும் பதவி உயர்வு பெறுவதற்கும் உரிய  தகுதியாக ஏற்றுக் கொள்ள முடியாது என்பதும் தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது. ஆசிரியர் பதவி உயர்வுகள் மற்றும் சம்பள உயர்வுகள், பணிக்காலம் அல்லது பணி மூப்பு (seniority) அடிப்படைக்கு மாறாக பணி மதிப்பீட்டின் அடிப்படையில் மட்டுமே பின்பற்றப்படும் என்று தேசியக் கல்விக் கொள்கை 2020 இல் கூறப்பட்டுள்ளதை தீர்ப்பு வழிமொழிந்துள்ளது. 


கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பினால் நாடு முழுவதும் 20 லட்சத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் பணிப் பாதுகாப்பு நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.  இருந்தாலும் “ஒரு சட்டத்தின் செயல்பாட்டை ஒருபோதும் தீமையாகக் கருத முடியாது” என்று தீர்ப்புரை அறிவுறுத்துகிறது. ஆனால், புதிய பணி நியமனத்திற்கென்று ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிக்கப்பட்டு 15 ஆண்டுகள் கடந்த பிறகு   நீதிமன்ற உத்தரவு மூலமான செயல்பாட்டினால் திடீரென்று பணிப் பாதுகாப்பு நெருக்கடிகள் ஏற்படுவதை எதிர்பாராத செயல்பாடாகவே ஆசிரியர் சமூகம் கருதுகிறது.  


இந்நிலையில், ஆசிரியர் இயக்கங்கள் முன் வைக்கும் தீர்ப்பு மறு சீராய்வுக்கான சட்டப்படியான நியாயங்களைப் பொதுச் சமூகம் பகுப்பாய்வு செய்வதும் அவசியமானது. ஒருவர் ஆசிரியர் பணிக்கான உரிய கல்வித் தகுதிகளுடன் நியமனம் பெற்று 20 அல்லது 30 ஆண்டுகளுக்கு மேல் பணி அனுபவம் பெற்றிருந்தாலும் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாமல் பணியில் நீடிக்க முடியாத நிலை தீர்ப்பினால் ஏற்பட்டுள்ளது.  அனுபவமே நல்ல ஆசிரியர் (Experience is the Best Teacher) என்ற உலகியல் உண்மை, ஆசிரியர் தகுதித் தேர்வுத் தீர்ப்பில் விதி விலக்காக அமைந்துள்ளது. இது மூத்த ஆசிரியர்களின் கல்விப் பங்களிப்புகளையும் ஆசிரியர் பணி அனுபவங்களையும் கேள்விக்கு உள்ளாக்குகிறது. 


சிறப்பான கல்விப் பணிக்காக மத்திய அரசின் விருதையோ மாநில அரசின் விருதையோ பெற்றுள்ள  ஆசிரியர்கள்; பெற்றோர் மற்றும் உள்ளூர் சமூகத்தால் கொண்டாடப்படும் ஆசிரியர்கள்; கற்பித்தலில் புதுமை படைத்த ஆசிரியர்கள் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கில் உள்ளனர்.  ஆனால், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால் அவர்களும் ஆசிரியர் பணியில் தொடரவும் முடியாது. பதவி உயர்வும் பெற முடியாது. எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சியை அனைத்து ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கான  கட்டாயத் தகுதிகளில் ஒன்றாக எடுத்துக் கொள்வது ஆசிரியர் பணிக்கான தொழில்முறை நெறிக்குப் (Professional Ethics) பொருந்துவதாக அமையவில்லை.    


25 ஆண்டுகளுக்கு மேல் பணி அனுபவம் பெற்ற ஆசிரியர்களும் இரண்டு ஆண்டுகளுக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்பதால் ஆசிரியர்களின் கற்பித்தல் பணிகளில் பாதிப்புகள் உருவாகும். 50 வயதைக் கடந்த நிலையில் முழுநேரக் கற்பித்தல் கடமையில் ஈடுபடும் ஒரு ஆசிரியர் பணித் தகுதிக்கான போட்டித் தேர்வுக்கும் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்படுவது இயற்கை நீதிக்கு உட்பட்டதல்ல. 


ஆசிரியர் தகுதித் தேர்வு ஏழு ஆண்டுகளுக்கு மட்டும் செல்லுபடியாகும் என்று தேசிய ஆசிரியர் கல்விக்கான அமைப்பு (NCTE) பிப்ரவரி 11, 2011 ஆம் நாள் வெளியிட்ட வழிகாட்டுதலில் அறிவிக்கப்பட்டது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் வேலை வாய்ப்பைக் கவனத்தில் கொண்டு ஆசிரியர் தகுதித் தேர்வுத் தேர்ச்சி வாழ்நாள் முழுவதும் செல்லத்தக்கது என்ற நீட்டிப்பு பத்தாண்டுகளுக்குப் பின்னர் முன் தேதியிட்டு வழங்கப்பட்டது. எனவே, தர்க்க நியாயங்களின் அடிப்படையில் பார்க்கும் பொழுது 25 ஆண்டுகளுக்கு மேல் உரிய கல்வித் தகுதிகளுடன் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வுக்கான தகுதிகளில் ஒன்றாக ஆசிரியர் தகுதித் தேர்வுத் தேர்ச்சியை கட்டாயப்படுத்துவது இயற்கை நீதிக்கு முரணாக உள்ளது. 


ஏப்ரல் 1, 2010 ஆம் நாள் கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு மத்திய அரசின் அறிவிப்பின்படி தேசிய ஆசிரியர் கல்விக்கான அமைப்பு (NCTE) ஆசிரியர் பணி நியமனத்திற்கான குறைந்தபட்சத் தகுதிகளை சட்டத்தின் பிரிவு 23 (1) இன் அடிப்படையில் ஆகஸ்ட் 23, 2010 இல் அறிவித்தது.  இந்த அறிவிப்பாணை (notification) மூலம் ஆசிரியர் பணி நியமனத்திற்கான குறைத்தபட்சத் தகுதிகளில் ஒன்றாக ஆசிரியர் தகுதித் தேர்வுத் தேர்ச்சியும் புதிதாகச் சேர்க்கப்பட்டது. ஆனால், இந்த அறிவிப்பாணை வெளியிடப்படும் நாளுக்கு முன்னர் உரிய கல்வித் தகுதிகளுடன் பணியில் நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் எவரும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறத் தேவையில்லை என்று அறிவிப்பாணையில் சொல்லப்பட்டது. தற்போது வரை இதில் எந்தத் திருத்தமும் செய்யப்படவில்லை. கல்வி அதிகார அமைப்பு ஆசிரியர்களுக்கு வழங்கியுள்ள சட்டப்படியான பணிப் பாதுகாப்பை உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதியரசர் அமர்வு ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளவில்லை.  


உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு தேசிய ஆசிரியர் கல்விக்கான அமைப்பு  வகுத்துள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விலக்களிக்கப்பட்ட விதிகளுக்கு முரணாக உள்ளது. எனவே, தேசிய ஆசிரியர் கல்விக்கான அமைப்பு சார்பிலும் நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு முன் வைக்கப்பட வேண்டும். அதற்கான பொறுப்பும் கடமையும் இவ்வமைப்பிற்கு உள்ளது. 


கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாளுக்கு முன்னர் கல்வி அதிகார அமைப்பு வகுத்த குறைந்தபட்சத் தகுதிகளுடன் பணி நியமனம் பெற்றவர்களும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று இன்று வரை தேசிய ஆசிரியர் கல்விக்கான அமைப்பும் மத்திய, மாநில கல்வித் துறைகளும் ஆசிரியர்களுக்கு அறிவிக்கவில்லை. ஆசிரியர்களின் குறைந்தபட்சக் கல்வித் தகுதித் தளர்வு நீட்டிப்புக்காக 2017 கல்வி உரிமைச் சட்டத் திருத்தத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற அவசியமில்லை என்று விலக்களிக்கப்பட்டவர்களுக்கும் நிபந்தனை இடம்பெறவில்லை என்பதையும் நீதிமன்றத்தின் மறு சீராய்வுக்கு உட்படுத்த வேண்டும்.  


ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் ஆசிரியர் நியமனத்திற்காக உருவாக்கப்பட்டுள்ளது. சட்டம் நடைமுறைக்கு முன்னர் பணியில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களும் பதவி உயர்வுக்கு இதே தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது இயற்கை நீதிக்கும் கல்வி நீதிக்கும் ஆசிரியர் பணி மாண்புக்கும் முரணாக அமைந்துள்ளது என்பதும் எடுத்துரைக்கப்படவேண்டும். ஒரு ஆசிரியரின் பதவி உயர்வுக்கு பணிக்கால அளவு மற்றும் பணி மூப்பு இவற்றோடு தனித்துவமான கல்விப் பங்களிப்புகளையும் உள்ளடக்கிய நெறிமுறைகளை தேசிய ஆசிரியர் கல்விக்கான அமைப்பு உருவாக்குவதே சரியாக அமையும்.  


ஆசிரியர் இயக்கங்கள் மட்டுமல்லாமல் தமிழ்நாடு அரசு உள்ளிட்ட வேறு சில மாநில அரசுகளும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதில் இருந்து சட்டப்படியான விலக்களிக்கப்பட்ட ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்ய தீர்ப்பு மறு சீராய்வுக்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.  தற்போதைய சிக்கலுக்கான தீர்வை நீதிமன்றத்தின் மூலமாக மட்டுமே கோர முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. 


நீதி மன்றத்தின் மூலம் விரைவான தீர்வு கிடைப்பதே ஆசிரியர் சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் நீங்குவதற்கும் ஆரோக்கியமான கல்விச் சூழலுக்கும் வழி வகுக்கும். மேலும் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நீதிமன்ற வழக்குகளால் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான பள்ளிகளின் தலைமை ஆசிரியர் பதவி உயர்வுத் தடைகள் நீங்கவும் விரைவாக வழி பிறக்கவேண்டும். 


சு.மூர்த்தி, 

ஒருங்கிணைப்பாளர், 

கல்வி மேம்பாட்டுக் கூட்டமைப்பு. 

moorthy.teach@gmail.com



Instagramன் 15 ஆண்டுகள் - நேர்மறை மற்றும் எதிர்மறை விசயங்கள்



Instagramன் 15 ஆண்டுகள் - நேர்மறை மற்றும் எதிர்மறை விசயங்கள் 


இன்ஸ்டாவுக்கு இன்று வயது 15


அக்டோபர் 6: வெறும் புகைப்படப் பகிர்வுத் தளமாகத் தொடங்கி, இன்று ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களின் அன்றாட வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்து, அவர்களின் உணவு, பயணம், ஃபேஷன் மற்றும் நுகர்வுக் கலாச்சாரம் என அனைத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தி, இன்ஸ்டாகிராம் தனது 15 ஆண்டுகளை இன்று நிறைவு செய்கிறது.


இன்ஸ்டாகிராமின் வரலாறு: ஓர் ஆரம்ப வெற்றி


2010ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி, கெவின் சிஸ்ட்ரோம் மற்றும் மைக் க்ரீகர் ஆகிய இரண்டு அமெரிக்கர்களால், புகைப்படப் பகிர்வுக்கான சமூக வலைத்தளமாக Instagram அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில், அதன் ஃபில்டர்கள் (Filters) மூலம் செல்போனில் எடுக்கும் சாதாரணப் படங்களுக்கும் ஒரு அழகிய மெருகூட்டலை வழங்கியதால், அறிமுகப்படுத்தப்பட்ட சில மாதங்களிலேயே இது மாபெரும் வெற்றி பெற்றது. இதன் பிரம்மாண்ட வளர்ச்சியைக் கண்ட ஃபேஸ்புக் (Meta) நிறுவனம், வெறும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின், இன்ஸ்டாகிராமை விலைக்கு வாங்கியது.


"நான் செல்ஃபி எடுக்கிறேன், எனவே நான் இருக்கிறேன்!"


இன்ஸ்டாகிராம் அறிமுகமான குறுகிய காலத்தில், மக்கள் தங்கள் சுய உருவப்படங்களைப் (Selfies) பதிவேற்றுவதற்கான மிகப் பிரபலமான தளமாக இது மாறியது. இதுவே பல புதிய பிரபலங்கள் மற்றும் இன்ஃப்ளூயன்ஸர்கள் (Influencers) உருவாகக் காரணமாக இருந்தது. ஃபேஷன் பதிவர் சியாரா ஃபெராக்னி (Chiara Ferragni) 21 மில்லியன் பின்தொடர்பவர்களையும், கைலி ஜென்னர் (Kylie Jenner) 196 மில்லியன் பின்தொடர்பவர்களையும் கொண்டு, இன்ஸ்டாகிராம் எப்படி தனிநபர்களை உலகப் பிரபலங்களாக மாற்ற முடியும் என்பதை நிரூபித்தனர்.


இது குறித்துப் பேசிய உளவியலாளர் மைக்கேல் ஸ்டோரா, "சமூக வலைத்தளங்களில் ஒருவர் எதையாவது வெளியிடுவதன் மூலம் மட்டுமே அவர் உலகில் இருக்கக்கூடிய 'இணைய யதார்த்தத்தின்' (Cyber Reality) சகாப்தத்தில் நுழைகின்றார். 'நான் செல்ஃபி எடுத்துக்கொள்கிறேன், எனவே நான் இருக்கிறேன்' (I take a selfie, therefore I am) என்ற மனநிலையே இன்று பயனர்களிடம் நிலவுகிறது," என்று குறிப்பிடுகிறார்.அதாவது, ஒருவரின் கவனமாக நிர்வகிக்கப்பட்ட தனிப்பட்ட பிராண்டுக்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான கோட்டினை இன்ஸ்டாகிராம் மழுங்கடிக்கச் செய்துள்ளது.


மாற்றியமைக்கப்பட்ட நுகர்வு மற்றும் வணிகப் பழக்கங்கள்


இன்ஸ்டாகிராமின் இந்த காட்சி ஆதிக்கம், வணிகங்கள் மற்றும் நுகர்வுப் பழக்கங்களிலும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது:


மெய்நிகர் அங்காடிகள் (Virtual Storefronts): இன்ஸ்டாகிராம், ஆடம்பர பிராண்டுகள் மற்றும் ஃபேஷன் லேபிள்களுக்கு விருப்பமான தளமாக மாறியது. 2014 ஆஸ்கர் விருதுகளில் எடுக்கப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போன் செல்ஃபி போன்ற நிகழ்வுகள், பிராண்டுகளுக்கு மாபெரும் விளம்பர வாய்ப்புகளை வழங்கின.


இ-காமர்ஸ் தளம்: கடந்த சில ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட ஷாப்பிங் செயல்பாடு (Shopping Feature) இன்ஸ்டாகிராமை ஒரு நேரடி இ-காமர்ஸ் தளமாக மாற்றியுள்ளது. பயனர்கள் பயன்பாட்டை விட்டு வெளியேறாமலேயே பொருள்களை வாங்க முடியும் என்பதால், இது நிறுவனங்களின் விற்பனைக்கு ஒரு மெய்நிகர் அங்காடி முனையாகப் பயன்படுகிறது.


உணவு மற்றும் பயணப் புரட்சி: உணவகங்கள் தங்கள் உணவு மற்றும் உட்புறக் காட்சிகளின் புகைப்படங்களைப் பதிவிட்டு வாடிக்கையாளர்களை ஈர்க்கின்றன. சமையல் வல்லுநர்கள் தங்கள் குறிப்புகளை எளிதில் பகிரும் தளமாகவும் இது உள்ளது (எ.கா: ஜேமி ஆலிவர் 8.3 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளார்). சிலர் தங்கள் அடுத்த விடுமுறை இடத்தைத் தேர்வுசெய்யக்கூட இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்துகின்றனர்.


இன்ஸ்டாவின் இருண்ட பக்கம்: மற்றவர்களைப் போல் ஆகும் அழுத்தம்


இன்ஸ்டாகிராம் பல நன்மைகளை வழங்கினாலும், அதன் மறுபக்கத்தில் சில சவால்களும் உள்ளன:


'லைக்ஸ்' மோகம்: இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு "லைக்ஸ்களுக்கான" தீராத தேடலை உருவாக்கி அவர்களை அதற்கு அடிமையாக்கியுள்ளது.


தவறான யதார்த்தம்: உளவியலாளர் ஸ்டோரா கூறுகையில், இன்ஸ்டாகிராம், குறிப்பாக இளையவர்களுக்கு, "மற்றவர்களைப் போல தம்மால் வாழ முடியாது என்ற ஒரு தவறான யதார்த்த உணர்வையும்," அவர்களைப் போல ஆகவேண்டும் என்ற கடுமையான அழுத்தத்தையும் கொடுக்கிறது. இது சில சமயங்களில் பேரழிவு தரக்கூடிய உளவியல் விளைவுகளையும் ஏற்படுத்தக்கூடும்.


கடந்த 15 ஆண்டுகளில் இன்ஸ்டாகிராம், உலக மக்களின் சமூக வாழ்க்கை, வணிகம் மற்றும் சுய வெளிப்பாடு ஆகியவற்றை மறுவரையறை செய்துள்ளது என்பதில் சந்தேகமில்லை. எனினும், இதில் பகிரப்படும் அனைத்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட, அலங்கரிக்கப்பட்ட "சிறந்த காட்சிகள்" மட்டுமே என்பதை பயனர்கள் உணர்ந்து செயல்படுவது அவசியம்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Dr. Radhakrishnan Award Presentation Ceremony 2026 - DSE Proceedings

டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழா - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் Dr. Radhakrishnan Award Presentation Ceremony – Proceedi...