ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் 25-10-2024 அன்று நடைபெறுதல் - கூடுதல் கூட்டப் பொருள் சேர்க்கை (Addendum) - சார்பு - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 1342/A11 /பமேகு/ஒபக/2024, நாள். 22-10-2024...
SMC Meeting on 25-10-2024 - Agenda Addendum - SPD Proceedings, Dated : 22-10-2024
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் 25.10.2024 - கூடுதல் கூட்டப் பொருள் சேர்க்கை - சார்ந்த கூடுதல் வழிகாட்டுதல்கள்...
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, சென்னை - 600 006
மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்
ந.க.எண்.1342/அ11/ஒபக/பமேகு/2024, நாள்:22/10/2024.
பொருள்: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – அனைத்து வகை அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுக் கூட்டம் 25-10-2024 அன்று நடைபெறுதல் – கூடுதல் கூட்டப் பொருள் சேர்க்கை (Addendum) - சார்பு.
பார்வை : 1. மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் - ந.க. எண்.1342/C7/பமேகு/ஒபக/2024, நாள்:18.10.2024.
2. Director, Directorate of School Education, Chennai-6, R.C.No. 037289/M1/S1/2024 Dated:17.10.2024
******
பார்வை-1-இன்படி பள்ளி மேலாண்மைக் குழுவின் முதல் கூட்டத்தினை 25.10.2024, வெள்ளிக்கிழமை அன்று பள்ளி மேலாண்மைக் குழு செயல்படும் அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்காண் செயல்முறைகளில் உள்ள கூட்டப் பொருளில் கீழ்க்கண்டவாறு சேர்க்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கூடுதல் கூட்டப் பொருள் சேர்க்கை
அ) போதை பொருள் இல்லாத தமிழ்நாடு (Drug Free Tamil Nadu):
சமூக சீர்கேடுகளில் போதைப் பொருள் பயன்பாடு மிக முக்கியமானதாக உள்ளது. எதிர்கால நற்சமூகத்தை உருவாக்கும் உயரிய பணியினைப் பள்ளிகள் மேற்கொள்கிறது என்றால் அது மிகையாகாது. ஆரோக்கியமான மாணவர் சமூகத்தை சீரழிக்கும் போதைப் பொருள்கள் பயன்பாடு மற்றும் அவற்றால் ஏற்படும் சமூக சீர்கேடுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் எதிர்கால சமூகம் போதைப் பொருள் பயன்பாடு இல்லாத சமூகமாக உருவாகும். இதனை உறுதிசெய்ய பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் எவ்வாறு கீழ்க்காண் செயல்பாடுகளில் உதவமுடியும் என்பதை விவாதித்து தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும்.
a) பார்வை-2-இன்படி அமைக்கப்பட்டுள்ள “பள்ளியளவில் போதைப் பொருள் பயன்பாடு எதிர்ப்பு குழு” வில் பள்ளி மேலாண்மைக் குழுவிலிருந்து ஒருவர் உறுப்பினராக பங்கேற்பதை உறுதிசெய்ய வேண்டும்.
b) பள்ளிகளில் போதைப் பொருள் பயன்பாடு எதிர்ப்பு மன்றங்களை (Anti-drug club) உருவாக்கப்படுவதை பள்ளி மேலாண்மைக் குழு உறுதி செய்ய வேண்டும்.
c) ஒவ்வாரு நாளும் காலை அல்லது மதியம் அல்லது மாலை என வளாகம் முழுவதும் குறிப்பாக கழிவறைகள், விளையாட்டு மைதானம், பள்ளியின் சுற்றுச் சுவரின் இருபுறங்களிலும் புகையிலை, கூல்-லிப், சிகரெட் போன்ற பொருட்கள் கிடக்கின்றனவா என கண்காணிக்க வேண்டும்.
d) போதைப் பொருட்களை பயன்படுத்தும் மாணவர்களை அடையாளம் கண்டு பள்ளியளவில் போதைப் பொருள் பயன்பாடு எதிர்ப்பு குழு ஆசிரியர் ஒருங்கிணைப்பாளருக்கு தெரியப்படுத்த வேண்டும்.
e) பள்ளி அருகில் வாசலில் கடைகளில் விற்கும் பொருட்கள் என்னென்ன என குழுவாக முன்னறிவிப்பு இல்லாமல் சென்று கவனித்து ஆசிரியர் ஒருங்கிணைப்பாளருக்கு தெரியப்படுத்த வேண்டும்.
f) பார்வை-2-இல் போதை எதிர்ப்பு மன்றச் செயல்திட்டங்களில் (2024-2025) கொடுக்கப்பட்டுள்ள செயல்பாடுகளை நடைமுறைப்படுத்த பள்ளியுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
g) அனைத்துப் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதன் மூலம் மாணவர்களின் உடல், மனநலப் பாதுகாப்பை மேம்படுத்த பள்ளி மேலாண்மைக் குழு உதவ வேண்டும்.
ஆ) பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் (POCSO)
பாலியல் தீங்குகளிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் வகையில் குழந்தைகளிடம் பாதுகாப்பான தொடுதல், பாதுகாப்பற்ற தொடுதல் மற்றும் குழந்தைகளுக்குப் பாலியல் தொந்தரவுகள் குறித்தும் அத்தீங்குகளிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பது குறித்தும் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் விவாதித்து விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு ஏற்படுத்துவது.
a) பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் ஆதரவான சூழலை உருவாக்க வேண்டும்.
b) பாலியல் துன்புறுத்தல் குறித்து நம்பிக்கையானவர்களிடம் தெரிவிப்பது மற்றும் அதுகுறித்துப் புகாரளிப்பதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடம் ஏற்படுத்த வேண்டும்.
c) மாணவர்களிடையே ஏற்படும் நடத்தை மாற்றங்களை கண்காணித்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆசிரியர்கள் மேற்கொள்ள கேட்டுக்கொள்ள வேண்டும்.
d) உள் புகார் குழு (Internal Compliant Committee-ICC)
பணியிடத்தில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம், 2013 [The Sexual Harassment of Women at Workplace (Prevention, Prohibition and Redressal) Act, 2013] அடிப்படையில் ஆண், பெண் இருவரும் இணைந்து பணி செய்யும் இடங்களில் உள் புகார் குழு (Internal Compliant Committee-ICC) ஒன்று அனைத்து வகையான அரசுப் பள்ளிகளிலும் இருக்க வேண்டும். எனவே பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் உள் புகார் குழுவை ஏற்படுத்த பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
இ) பள்ளிக் கல்வித் துறையின் அழைப்பு மைய எண் 14417 மற்றும் குழந்தைகள் உதவி மைய எண் 1098:
a) அரசின் நலத்திட்டங்கள், பாடத் திட்டங்கள், தேர்வு முறைகள் மற்றும் மேற்படிப்பு சார்ந்த விவரங்கள், வளரிளம் பருவத்தினருக்கான மனநிலை சார்ந்த அறிவுரைகள், தேர்வுக்காக தயார்ப்படுத்துதல், தேர்வை எதிர்கொள்வது மற்றும் தேர்வு முடிவுகள் குறித்த பயத்தைப் போக்குதல் போன்ற தகவல்கள், ஆலோசனைகளை 14417 இலவச அழைப்பு மைய எண் வாயிலாக பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பொது மக்கள் அறிந்துகொள்ள முடியும் என்பது குறித்து பள்ளி மேலாண்மைக் குழுவில் அவசியம் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
b) குழந்தைகள் நலன், பாதுகாப்பு, குழந்தைத் திருமணங்கள் தடுப்பு சார்ந்த சந்தேகங்கள், மற்றும் தகவல் அளித்திட 1098 குழந்தைகள் உதவி மைய எண்ணை தொடர்புகொள்ளலாம் என்கிற விழிப்புணர்வை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே ஏற்படுத்த வேண்டும்.
c) மேற்காண் உதவி மைய எண்களை பள்ளி வளாகம், மக்கள் கூடும் பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈ) விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்களை ஊக்குவிப்பது:
மாணவர்களிடையே விளையாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் பள்ளி வகுப்பு நேரம் முடிந்த பிறகு சிறப்பு விளையாட்டு வகுப்புகள் நடத்திடவும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திடவும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் கீழக்காண் செயல்பாடுகளை மேற்கொள்வது குறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
a) மாணவர்கள் விளையாட்டு பயிற்சிகள் மேற்கொள்ள தேவையான விளையாட்டுப் பொருட்கள், விளைாயட்டு மைதானம் மற்றும் முறையான பயிற்சியாளர் போன்ற ஏற்பாடுகள் நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி (NSNOP) திட்டம் வாயிலாக பெற தீர்மானம் நிறைவேற்றலாம்.
b) ஒவ்வொரு வருடமும் Battery test முறையாக நடத்தப்படுவதை பள்ளி மேலாண்மைக் குழு உறுதி செய்ய வேண்டும்.
c) மாவட்ட, மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்ள மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
d) விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதன் சாதக பலன்கள் குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே ஏற்படுத்த வேண்டும்.
உ) திறந்த வெளி மலம் கழித்தல் தடுத்தல் (Prevention of Open Defecation):
திறந்த வெளி மலம் கழித்தலால் பொது சுகாதாரம் வெகுவாக பாதிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு பல வகையான தொற்று நோய்கள் ஏற்பட இவை முக்கியக் காரணியாக உள்ளது. பள்ளி வளாகம், பள்ளிக்கு வரும் வழியில், தெருக்களில், பொது இடங்களில் மலம் கழிப்பதை தடுத்தல் வாயிலாகப் பொது சுகாதாரம் பாதுகாப்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் ஆலோசித்து தீர்மானங்கள் நிறைவேற்றி, இதுகுறித்து கிராம சபைக் கூட்டங்களிலும் தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும்.
a) பள்ளிகளில் உள்ள கழிவறைகள் போதிய தண்ணீர் வசதியுடன், பயன்படுத்தும் வகையில் இருப்பதை பள்ளி மேலாண்மைக் குழு உறுதி செய்ய வேண்டும்.
b) கழிவறைகள் பயனற்ற நிலையில் இருப்பது, நீரிணைப்பு இல்லாமல் இருப்பது, போதிய எண்ணிக்கையில் கழிவறைகள் இல்லாமல் இருப்பது உள்ளிட்ட தேவைகளை ஆலோசித்து பள்ளி மேலாண்மைக் குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
c) மாணவர்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளிலும் திறந்தவெளி மலம் கழித்தல் பிரச்னைகள் இருப்பின், அதுகுறித்த விவரங்களை பள்ளி மேலாண்மைக்கு குழு கூட்டத்தில் பகிர்ந்து உரிய தீர்மானங்களை நிறைவேற்றி கிராம சபைக் கூட்டங்களில் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
மேற்காண் கூடுதல் கூட்டப் பொருள்களை (Addendum) சேர்த்து பள்ளி மேலாண்மைக் குழுவின் கூட்டத்தில் விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றிட தலைமையாசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்கிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மாவட்டத் திட்ட இயக்குநருக்காக
பெறுநர்:
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள்
(அனைத்து மாவட்டங்கள்)
நகல்: (மின்னஞ்சல் வாயிலாக)
1. அரசுச் செயலாளர், பள்ளிக்கல்வித்துறை, சென்னை-9.
2. அனைத்து மாவட்ட ஆட்சியர்கள்
3. இயக்குநர், பள்ளிக் கல்வித் துறை
4. இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்ககம்