தவெகவின் முதல் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
*✍️. தீர்மானம்.1*
இஸ்லாமியர்களின் உரிமைகளைப் பறிக்கும் வக்பு சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும்:
நாடு முழுவதும் உள்ள வக்பு சொத்துகளைப் பதிவு செய்து வெளிப்படை தன்மையுடன் நிர்வகிப்பது என்ற காரணத்தைக் கூறி. வக்பு சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திடீரெனக் கொண்டு வந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, கூட்டுக் குழு ஆய்வுக்கு இந்த மசோதா அனுப்பப்பட்டது. இக்குழுவில் எதிர்க்கட்சி உறுப்பினர்களை விட, ஆளும் கூட்டணி உறுப்பினர்களின் ஆதரவு பலமாக இருந்த காரணத்தினால் புதிய திருத்தங்களைக் கூட்டுக்குழு ஏற்றுக்கொண்டது.
இதையடுத்து, கூட்டுக்குழுவில் பரிந்துரைக்கப்பட்ட மாற்றங்கள், வக்பு சட்டத் திருத்த மசோதாவில் சேர்க்கப்பட்டன. இதற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதிய நிபந்தனைகளை உருவாக்கி, இஸ்லாமிய மக்களின் அதிகாரத்தைப் பறிக்கும் வகையிலும், இதுவரை அவர்கள் பயன்படுத்தி வந்த உரிமைகளை நசுக்கும் வகையிலும் கொண்டு வரப்பட்ட வக்பு சட்டத் திருத்த மசோதாவை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு வலியுறுத்துகிறது
வக்பு சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்து, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநில அரசுகள் சட்டசபைகளில் தீர்மானங்கள் நிறைவேற்றியுள்ளன. இந்த விவகாரத்தில் மாநில அரசுகளின் கோரிக்கைகளையும் ஒன்றிய அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். வக்பு சட்டத் திருத்த மசோதா வழியாகச் சிறுபான்மை மக்களை அச்சத்தில் ஆழ்த்தக் கூடாது என்று இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது
*✍️. தீர்மானம் 2.*
மீனவர் போராட்டத்திற்கு ஆதரவு மற்றும் அவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு எட்டப்பட வேண்டும்
தமிழக மீனவர்களை எப்போதும் மதித்துப் போற்றும் இயக்கம், தமிழக வெற்றிக் கழகம். நம் வெற்றித் தலைவர் அவர்களும், தான் எப்போதும் மீனவர்களின் பக்கம் நிற்கும் மீனவ நண்பன் என்றே தன் செயல்பாடுகளால் நிரூபித்து வருகிறார். அந்த உணர்வுடன் மீனவர்களுக்காக எத்தகைய எல்லைக்கும் தமிழக வெற்றிக் கழகம் செல்லும் என்பதையும் இப்பொதுக்குழு தெரிவித்துக்கொள்கிறது.
கடந்த 40 ஆண்டுகளாக, இதுவரை 800க்கும் அதிகமான தமிழக மீனவர்கள். இலங்கைக் கடற்படையால் தாக்கிக் கொல்லப்பட்டுள்ளனர். இப்போது வரை அது தொடர்ந்துகொண்டே இருக்கிறது. தற்போதும் கூட, தாங்கொணாக் கொடுமைக்கு ஆளாகி உள்ள நம் தமிழக மீனவர்கள் கண்ணீருடனும் கண்டனக் குரலுடனும் போராட்டக் களத்திற்கு வந்துள்ளனர். ஆனாலும் மீனவர்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுத்து நிறுத்தக்கூடிய நிரந்தரத் தீர்வு பற்றி. ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் இதுவரை யோசித்ததே இல்லை என்பது வருத்தத்திற்கும் கண்டனத்திற்கும் உரியது.
குஜராத் மற்றும் இதர மாநில மீனவர்களைப் போலவே, ஒன்றிய அரசின் பிரதமர். தமிழக மீனவர்களையும் சமமாகக் கருதித் தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
*✍️. தீர்மானம்-3.*
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கக் கூடாது:
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில், புதிய விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துப் போராடும் பொதுமக்களையும் விவசாயப் பெருங்குடி மக்களையும் நம் தமிழக வெற்றிக் கழத்தின் வெற்றித் தலைவர் சந்தித்த மறுநாளே, மக்கள் பாதிக்காத வண்ணம் புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் சார்பாக ஒரு விளக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதில், மக்கள் பாதிக்காத வண்ணம் என்றால் எப்படி என்கிற விளக்கம் இல்லவே இல்லை. விவசாயிகள் நலனுக்கெனத் தனி பட்ஜெட் போடுகிறோம் என்று மார்தட்டும் வெற்று அரசு. 2025-26ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் பணிகள் விரைவுபடுத்தப்படும் என்று தெரிவித்திருப்பது முழுக்க முழுக்க மக்கள் நலன் மற்றும் விவசாயிகள் நலனுக்கு எதிரான துரோகச் செயலே ஆகும்.
மேலும் இது, சொல்வது ஒன்று. செய்வது ஒன்றாக இருக்கும் இந்த அரசின் இரட்டை வேடக் கபடதாரிப் போக்கையே காட்டுகிறது. தமிழக மக்கள் பக்கம் எப்போதும் நிற்கும் தமிழக வெற்றிக் கழகம், அரசின் இந்தக் கபட நாடகச் செயலை மிகக் கடுமையாக எதிர்க்கிறது. மேலும், புதிய விமான நிலையத்தை யாருக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லாத வண்ணம், விவசாய நிலங்களை, நீர்நிலைகளை, இயற்கைச் சூழல்களை அழிக்காமல், வேறு இடத்தில்தான் அமைக்க வேண்டும் என்றும் ஒன்றிய அரசையும் தமிழ்நாடு அரசையும் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு வலியுறுத்துகிறது
*✍️. தீர்மானம்-4.*
இருமொழிக் கொள்கையில் உறுதி:
அனைத்து மொழிகளையும் மதிப்போம். தனிப்பட்ட முறையில் யார் வேண்டுமானாலும், எந்தப் பள்ளியிலும் படிக்கலாம், எந்த மொழியையும் கற்கலாம். அது அவரவரின் தனிப்பட்ட உரிமை என்பதில் தமிழக வெற்றிக் கழகம் உறுதியாக உள்ளது. ஆனால், கூட்டாட்சி உரிமையை மீறி, மாநில சுயாட்சி உரிமைக்கு எதிராக ஒரு மாநில அரசின் மொழிக் கொள்கையை, கல்விக் கொள்கையைக் கேள்விக் குறியாக்கி, வேற்று மொழியை வலுக்கட்டாயமாக அரசியல் ரீதியாகத் திணிப்பதை ஒருபோதும் ஏற்க முடியாது. முரட்டுப் பிடிவாதத்துடன் மும்மொழிக் கொள்கையைத் திணிக்க முயலும் ஒன்றிய அரசுக்குக் கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதுடன், தமிழ்நாட்டுக்கு எப்போதும் இருமொழிக் கொள்கை தான் என்பதை இப்பொதுக்குழு திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறது
*✍️. தீர்மானம் -5.*
நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு தேவையில்லை:
நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு செய்யும் போது வடமாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை பல மடங்கு உயரும் என்றும், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் தொகுதிகள் எண்ணிக்கை சரியும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது, ஒன்றிய அரசின் மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைச் சிறப்பாகக் கடைப்பிடித்ததற்கான தண்டனை என்றே தமிழக மக்கள் கருதுகிறார்கள்.
மாநிலங்களிடையே ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கும் தொகுதி மறுசீரமைப்பு தேவையற்றது. இப்போது இருக்கும் தொகுதிகளான 543 என்ற எண்ணிக்கையே காலவரையின்றி தொடர வேண்டும் என்பதே தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாடாகும். எனவே தொகுதி மறுசீரமைப்பு முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
*✍️. தீர்மானம் – 6.*
மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்:
ஒன்றியப் பிரதமர் அவர்கள் மாநில முதல்வராக இருந்த போது, மாநில வளர்ச்சிக் கூட்டத்தில் பங்கேற்று அந்த மாநில நலனுக்காகக் குரல் கொடுத்தார். ஆனால் தற்போது அவரே பிரதமராக இருக்கக் கூடிய ஒன்றிய அரசானது, பிற மாநிலங்களின் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் பாராளுமன்றப் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்டு, ஒன்றிய அரசின் அதிகாரத்தை மையப்படுத்தி, மாநில அரசின் அதிகாரத்தை மட்டுப்படுத்தி, மாநில சுயாட்சியை முடக்கும் வேலையைச் செய்து வருகிறது.
ஜி.எஸ்.டி. மூலம் நிதி அதிகாரத்தையும், நீட் மூலம் கல்வி அதிகாரத்தையும், மும்மொழித் திணிப்பின் மூலம் மொழி அதிகாரத்தையும், தொகுதி மறுசீரமைப்பு என்ற முறையில் மாநில அரசுகளிடையே பிளவினை ஏற்படுத்த முயல்வதையும், வேளாண் சட்டங்கள் மூலம் வேளாண் கொள்கைகளை மாநில அரசிடமிருந்து ஒன்றிய அரசு பறிப்பதையும் இப்பொதுக் குழு கண்டிக்கிறது. அதிகாரம் ஒன்றிய அரசிடம் குவியாமல், மாநில அரசுக்குப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
*✍️. தீர்மானம் 7*
பாலியல் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க, சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் தேவை:
மாநில அரசுக்குச் சுமார் 50 ஆயிரம் கோடி வருமானம் வரும் டாஸ்மாக் நிறுவனத்தினாலும், கட்டற்ற போதைப் பொருட்களின் புழக்கத்தினாலும் தமிழகத்தில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பே கேள்விக்குறியாகி வருகிறது. பள்ளிச் சிறார்களே போதைக்கு அடிமையாகி, வளரும் தலைமுறையே போதையால் சீரழிந்து வருகிறது. இந்தப் போதைப் பொருட்களால், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாள்தோறும் அதிகரித்த வண்ணமே உள்ளன.
மது மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை உருவாக்காமல், போதைப் பொருட்கள் தமிழகத்தில் சரளமாகப் புழங்கும் நிலையை உருவாக்கியுள்ள தி.மு.க. அரசை தமிழக வெற்றிக் கழகப் பொதுக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. பெண்கள் மீதான பாலியல் புகார்களை விசாரிக்கச் சிறப்புப் புலனாய்வுக் குழுக்களை ஏற்படுத்த வேண்டும். அதில் முன்னாள் பெண் நீதிபதிகள் மற்றும் முன்னாள் காவல்துறை உயர் அதிகாரிகள் இடம்பெற வேண்டும். குழந்தைகள், பெண்கள் மீதான பாலியல் சீண்டல்கள் மற்றும் வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கத் தமிழக அரசு, சிறப்பு விரைவு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். இந்தச் சிறப்பு நீதிமன்றங்கள். 90 நாட்களுக்குள் விசாரித்துத் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
தற்போதைய அரசு இதைச் செய்யத் தவறும் பட்சத்தில், இந்த அரசுக்குத் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். மேலும், வரும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் ஆதரவுடன் அமையும் தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் மது மற்றும் போதைப் பொருட்களுக்கு எதிராக சட்டம் இயற்றப்பட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக தனித்துறை உருவாக்கப்படும் என இப்பொதுக்குழு தெரிவித்துக்கொள்கிறது
*✍️. தீர்மானம் 8.*
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம்:
அரசு ஊழியர்கள். ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துதல் உள்ளிட்ட பத்து அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருடக்கணக்காகப் போராடி வருகின்றது. லட்சக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரம் சம்பந்தப்பட்ட இப்போராட்டத்தை இந்த வெற்று விளம்பர மாடல் அரசு கண்டுகொள்ளாமல், மறைமுகமாகப் பழிவாங்குவது போல் நடந்துகொள்கிறது. இது முழுக்க முழுக்க ஏமாற்று வேலையே ஆகும்.
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று போலி வாக்குறுதி அளித்து, சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அக்கோரிக்கைகளை நிறைவேற்றாமல் ஏமாற்றிவிட்டு, மீண்டும் அவர்களைப் போராட்டக் களத்தில் தள்ளியதற்காகத் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்க வேண்டும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம், தன் மனப்பூர்வமான ஆதரவை இப்பொதுக்குழு வாயிலாகத் தெரிவித்துக்கொள்கிறது
*✍️. தீர்மானம் – 9*
சட்டம் ஒழுங்கு சீர்கேடு அரசுக்குக் கண்டனம்:
கள்ளம் கபடமற்ற பச்சிளம் சிறுமிகள் முதல் பெண்கள் வரை யாருக்கும் பாதுகாப்பான சூழல் இல்லை. பள்ளிச் சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை கொடூர வன்முறைச் செயல்களில் ஈடுபடும் கட்டுப்பாடற்ற சூழல் ஏற்பட்டுள்ளது. போதைப் பொருள் புழக்கம், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே தாராளமாகிவிட்டது. வேறு எப்போதும் இல்லாத வகையில் இத்தகைய கொடும் சூழல் மேலும் மேலும் பெருகி வருதலுக்குக் காரணம், சட்டம் ஒழுங்கு சீர்கேடே அன்றி வேறில்லை.
இந்தச் சீர்கேட்டிற்கு ஒரே காரணம், கையாலாகாத தற்போதைய ஆளும் அரசு மட்டுமே. ஆட்சிக்கு வந்து நான்காண்டுகள் ஆகியும் சட்டம் ஒழுங்கைச் சீர்ப்படுத்த இயலாத அரசு, தன் பொறுப்பற்ற தன்மையை ஒப்புக்கொண்டு, மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்க வேண்டும். மேலும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டத் தேவையான நடவடிக்கைகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு வலியுறுத்துகிறது.
*✍️. தீர்மானம் -10*
டாஸ்மாக்கின் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு விவகாரத்தில் உரிய விசாரணை வேண்டும்:
ஒன்றிய அரசின்கீழ் இயங்கும் அமலாக்கத் துறை, டாஸ்மாக் அலுவலகங்கள் மற்றும் அது தொடர்புடைய நிறுவனங்கள் / நபர்கள் சார்ந்த இடங்களில் நடத்திய சோதனையில், பல்லாயிரம் கோடி ரூபாய் அளவிற்குக் கணக்கில் வராத. சட்டத்திற்குப் புறம்பான முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது.
ஒன்றிய பா.ஜ.க. அரசும் தமிழ்நாட்டின் அரசும் மறைமுக உறவுக்காரர்கள் என்பதால் இந்த விவகாரத்தில் முறையான, நியாயமான விசாரணை நடக்குமா என்ற சந்தேகமும் எழாமல் இல்லை. டாஸ்மாக் நிறுவனம் மீது தொடர்ச்சியாக எழுந்துவரும் முறைகேடுகள் மூடி மறைக்கப்பட்டே வருகின்றன. டாஸ்மாக் மட்டுமின்றி, அனைத்து அரசுத் துறைகளிலும் வெளிப்படைத்தன்மை இல்லாது, ஊழலை ஊக்குவிக்கும் வகையிலான அதிகார மையமாகவே அரசு இயந்திரம் செயல்பட்டு வருகிறது.
ஆகவே. டாஸ்மாக் முறைகேடு குறித்து, முறையான விசாரணை நடத்தி. உண்மையை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும். தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி. பாரபட்சமின்றித் தண்டிக்க வேண்டும் எனத் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது
*✍️. தீர்மானம் – 11.*
சமூக நீதியை நிலைநிறுத்த, சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வு நடத்த வேண்டும்:
அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க ஒரே வழியான, உண்மையான சம நீதி. சமத்துவ நீதி, சமூக நீதியை வழங்கும் சாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு முன்னோட்டமாக, அதற்கான ஆய்வைத் தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசைச் சார்ந்து இருக்காமல், தெலங்கானா போன்ற மாநிலங்களில் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கான ஆய்வை அந்தந்த மாநில அரசுகளே தங்களது சொந்தச் செலவில் நடத்தியுள்ளன.
சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தாமல், சமூக நீதி, இடஒதுக்கீடு என்று ஆளும் திமுகவினரும், பாஜகவினரும் மேடைக்கு மேடை பேசி, மக்களை ஏமாற்றி வருகின்றனர். இந்த விவகாரத்தில் கபட நாடகமாடுவதை நிறுத்திவிட்டு, சாதிவாரிக் கணக்கெடுப்புக்கான ஆய்வு நடத்தும் பணிகளைத் தமிழ்நாடு அரசு முன்னெடுக்க வேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.
*✍️. தீர்மானம் 12.*
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குப் பொது வாக்கெடுப்பே ஒரே தீர்வு:
நம்முடைய தொப்புள்கொடி உறவுகளான இலங்கைத் தமிழர்கள். இதுவரை சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். சொந்த நாட்டிலேயே அடிமைகள் போலச் சுதந்திரம் அற்றவர்களாக இருக்க வேண்டிய நிலைமை. அவர்களுக்குக் காலங்காலமாக இருந்து வருகிறது.
எனவே, இலங்கைத் தமிழர்கள் சுதந்திரமாகத் தங்கள் நாட்டிலேயே வாழ்வதற்கும். அவர்களின் உரிமைகளைப் பெறுவதற்கும் நிரந்தரத் தீர்வு காண, ஐ.நா. சபை மூலம் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உலக சமுதாயத்திற்கு இப்பொதுக்குழு வேண்டுகோள் விடுக்கிறது.
பொது வாக்கெடுப்பு மட்டுமே இலங்கைத் தமிழர்களின் வாழ்வில் ஒளியேற்றக்கூடிய ஒரே வழி என்பதை மீண்டும் மீண்டும் தமிழக வெற்றிக் கழகம் தீர்க்கமாக நம்புகிறது. மேலும், இப்பொது வாக்கெடுப்பை, இந்திய ஒன்றிய அரசும் வலியுறுத்தி, இலங்கைத் தமிழர்கள் பக்கம் நிற்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமை என்பதையும். தனது ஏப்ரல் மாத இலங்கைப் பயணத்தின்போது இது குறித்தும் இலங்கை அரசிடம் ஒன்றியப் பிரதமர் உறுதியுடன் வலியுறுத்த வேண்டும் என்பதையும் இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது
*✍️. தீர்மானம்-13.*
பன்னாட்டு அரங்கிற்குத் தந்தை பெரியார் பெயரைச் சூட்டுக:
சென்னை, கிழக்குக் கடற்கரைச் சாலையில், முட்டுக்காடு பகுதியில், தமிழக அரசால் பெரும் பொருட்செலவில், உலகத்தர வசதிகளுடன் அமைக்கப்பட உள்ள பன்னாட்டு அரங்கத்திற்குத் தந்தை பெரியார் அவர்களின் பெயரைச் சூட்டிப் பெருமை சேர்க்க வேண்டும் என தமிழ்நாடு அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.
*✍️ தீர்மானம் -14*
கொள்கைத் தலைவர்களின் வழியில் பயணிப்போம்:
தமிழக வெற்றிக் கழகத்தின் ஐம்பெரும் கொள்கைத் தலைவர்கள் தந்தை பெரியார். அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், வீரமங்கை வேலு நாச்சியார். மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோர் காட்டிய கொள்கை வழியில் சமரசமின்றி மக்கள் பணியில் ஈடுபடுவதே முக்கியக் கடமையாகும் என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது
*✍️. தீர்மானம் -15.*
தலைவருக்கே முழு அதிகாரம்:
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருக்கிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பெண்களின் பேராதரவையும், பேரன்பையும் பெற்றுள்ள நம் கழகத் தலைவர் அவர்கள், தன்னுடைய மக்கள் சந்திப்பு மாநாடுகள், பொதுக்கூட்டங்கள். சுற்றுப்பயணங்கள் மற்றும் தேர்தல் சார்ந்த முடிவுகள் எடுக்கும், பரிபூரண அதிகாரத்தையும் உரிமையையும் நம் கழகத் தலைவர் அவர்களுக்கு அளிப்பது என இப்பொதுக்குழு முழு மனதுடன் முடிவெடுக்கிறது
*✍️. தீர்மானம்-16.*
கழகப் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்:
நம் கழகத் தலைவர் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர், துணைப் பொதுச்செயலாளர். கொள்கைப் பரப்புச் செயலாளர், செய்தித் தொடர்பாளர்கள், சமூக ஊடகப் பிரிவு நிர்வாகிகள் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகள். கழக விதிகளின்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கழக விதிகளின்படி கழகத் தலைவர் அவர்களால் நியமனம் செய்யப்பட்டுள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் என அனைத்து நிர்வாகிகளுக்கும் இப்பொதுக்குழு வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறது
*✍️. தீர்மானம் 17.*
கழகத்திற்காக அயராது பாடுபட்டு மறைந்த கழகச் செயல்வீரர்களுக்கு இரங்கல்:
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மீதும், கழகத்தின் மீதும் அளவற்ற அன்பு கொண்டிருந்த, கழகச் செயல்வீரர்கள். திருநெல்வேலி வடக்கு மாவட்டச் செயலாளர் திரு. சஜி (எ) B.அந்தோணி சேவியர் மற்றும் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மதுரை மாநகர் தெற்கு மாவட்ட மாணவரணித் தலைவர் திரு. U.P.M.ஆனந்த் ஆகியோரின் மறைவுக்கு இப்பொதுக்குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.