கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

குட்டிக்கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குட்டிக்கதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

>>>காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம்

ஒரு ஞானியை அணுகிய சீடன், காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.

அதற்கு அந்த ஞானி, "அது இருக்கட்டும். முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போ. அங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோ, அதை எடுத்துக் கொண்டு வா. ஆனால் ஒரு நிபந்தனை. நீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது." என்றார்.

கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான். ஞானி, "எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? " என்று கேட்டார்.

சீடன் சொன்னான், "குருவே, வயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்தது. அதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன். இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டன. அவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன். அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளே. வந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது."

புன்முறுவலோடு ஞானி சொன்னார், "இது தான் காதல்!".

பின்னர் ஞானி, "சரி போகட்டும், அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வா. ஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனை. ஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது."

சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான். ஞானி கேட்டார், "இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா? "

சீடன் சொன்னான், "இல்லை குருவே, இதை விட அழகான செடிகள் இருக்கின்றன. ஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன். நிபந்தனைப்படி, ஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை".

இப்போது ஞானி சொன்னார், "இது தான் திருமணம்!".

>>>20 ஆண்டுகள்...!

ஒரு பெண்மணி நடு இரவில் தூக்கத்தில் எழுந்து தன் கணவர் அருகில் இல்லாததை உணர்ந்து அவரைத் தேடினார்..!

வீடு முழுவதும் தேடி, கடைசியில் அவர் சமையலையறையில் அமர்ந்திருந்ததை­க் கண்டார், அவருக்கு முன்னால் காபி இருந்தது.

அவர் ஆழ்ந்த சிந்தனையில் சுவரை வெறித்துப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.

இடையிடையே கண்ணில் வழியும் கண்ணீரைத் துடைத்தபடி காபியை அருந்திக் கொண்டிருப்பதைக் ­ கண்டார்.

திருமணமானவர்கள் ­ கீழே படிக்கவேண்டாம் :

>>>சாதுர்யம்!

முன்னொரு காலத்தில், கிருஷ்ணபுரம் எனும் நாட்டில் மன்னன் ஒருவன் ஆட்சி செய்து வந்தான். அவனுக்கு ஒரு கண் மட்டுமே தெரியும். மற்றொரு கண்ணில் பார்வை கிடையாது.

ஒருநாள், மன்னனுக்கு தன்னை ஓவியமாகப் பார்க்க வேண்டும் என்று ஆசை எழுந்தது. உடனே, "அமைச்சரே! என்னை ஓவியமாக வரைபவருக்கு ஆயிரம் பொற்காசுகள் அளிக்கப்படும் என்று அறிவியுங்கள்" என்றார்.

தண்டோரா மூலம் நாடு முழுவதும் செய்தி அறிவிக்கப்பட்டது. வரதன், ராமன் மற்றும் மஹிஷா என்ற மூன்று ஓவியர்கள் வந்தனர். வரதனும் ராமனும் மஹிஷாவை கேலி செய்தனர். "நீ ஒரு பெண். உன்னால் எங்களை வெல்ல முடியாது" என்றார்கள். அவளோ இதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை.

மன்னர், மூவருக்கும் தன்னை வரைவதற்காக ஆளுக்கொரு அறை ஏற்பாடு செய்திருந்தார். ஒருவர் வரைவது மற்றவருக்குத் தெரியாது. ஆகவே, மூவரும் ஒவ்வொரு மாதிரியாக வரைந்திருந்தார்கள். அவர்கள் வரைந்து முடித்தபின் மன்னர் அந்த ஓவியங்களை காணச் சென்றார்.

முதலில் வரதன் வரைந்த ஓவியத்தைப் பார்த்தார். அதில் மன்னரின் ஒரு கண் பார்வை இல்லாமல் இருந்தது. இதை கவனித்த அரசர் கோபமடைந்து, "என்னிடம் இருக்கும் குறையை இப்படியா வெளிப்படுத்துவாய்?" என்று ஆத்திரத்துடன் கத்திவிட்டு வெளியேறினார்.

பிறகு ராமன் இருந்த அறைக்குள் நுழைந்தார். அவன் மன்னருக்கு இரு கண்களுமே தெரியும்படி வரைந்திருந்தான். மன்னர் மேலும் ஆத்திரப்பட்டார். "உள்ளதை உள்ளபடி வரை" என்று அவனை விலக்கிவிட்டு மஹிஷாவின் ஓவியத்தை காணச் சென்றார்.

மஹிஷாவோ, மன்னரின் முகத்தை பக்கவாட்டில், அதாவது பார்வை இல்லாத கண் தெரியாதபடி வரைந்திருந்தாள். மன்னர் முகம் மலர்ந்தது. "சபாஷ்! நீதான் சாதுர்யத்துடன் செயல்பட்டிருக்கிறாய். உனக்கே பரிசு" என்று ஆயிரம் பொற்காசுகளை கையில் கொடுத்தார்.

மஹிஷாவும் சந்தோஷமடைந்தாள்.

>>>சொர்க்கம்....

 

ஒரு பெரிய மனிதன். இந்த உலகத்தில் மிகவும் வசதியாக வாழ்ந்தான்.
ஒரு நாள் அவன் உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டு சொர்க்கத்துக்குப் போனான்.
அங்கே போன பிறகுதான் தெரிந்தது... சொர்க்கத்தின் வாசல் கதவு மூடி இருந்தது.
மூடிய கதவின் முன்னால் போய் நின்றான்.
‘‘இங்கே யாருமே இல்லையா?’’ என்று உரக்கக் கத்தினான். பதில் இல்லை.
‘‘நான் ஒரு பெரிய மனிதன் வந்திருக்கிறேன். கதவைத் திறந்து விடு!’’
சற்று நேரத்தில் சித்ரகுப்தன் அங்கே வந்தான்.
உடனே இந்தப் பெரிய மனிதன், தனது சட்டைப்பையிலிருந்து பத்து ரூபாய் நோட்டை எடுத்து அவன் கையில் திணித்தான்.
‘‘இந்தா... இதை வெச்சுக்கோ... சீக்கிரம் கதவைத் திற... நான் உள்ளே போகணும்!’’
சித்ரகுப்தன் சிரித்தான்.
‘‘இதெல்லாம் உங்கள் பூலோக நடைமுறை கள்--& லஞ்சம் கொடுக்கறது, கதவைத் திறக்கச் சொல்றது... அதெல்லாம் இங்கே ஒண்ணும் எடுபடாது!’’
‘‘அப்படின்னா நான் எப்படி உள்ளே வர்றது?’’
‘‘சொர்க்கத்துலே நுழையறதுக்கான அனு மதிச் சீட்டு கொண்டு வந்திருக்கியா?’’
‘‘அனுமதிச் சீட்டா? அது எங்கே கிடைக்கும், சொல். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. வாங்கிக்கலாம்.’’
‘‘அதைக் காசு கொடுத்து வாங்க முடியாது!’’
‘‘வேறே எப்படி வாங்கறது?’
‘‘அடுத்தவர்களுக்கு ஏதாவது உதவி செஞ்சாத்தான் அது கிடைக்கும்.’’
‘‘என்ன சொல்றே நீ?’’
‘‘பூலோகத்துலே நீ செய்யுற புண்ணிய காரியங்கள்தான் சொர்க்கத்துலே நுழையறதுக்கான அனுமதிச் சீட்டு!’’
‘‘இப்ப நான் உள்ளே வர என்ன வழி?’’
‘‘பூலோகத்துலே நீ யாருக்காவது... ஏதாவது உதவி செஞ்சிருக்கியா?’’
பெரிய மனிதன் ரொம்ப நேரம் யோசித்தான்.
பிறகு சொன்னான்: ‘‘ஒரு முறை ஒரு கிழவிக்கு 10 காசு தானம் கொடுத்திருக்கேன்.... அப்புறம் இன்னொரு நாள் ஓர் அநாதைப் பையனுக்கு ஐந்து காசு கொடுத்திருக்கேன்.’’
‘‘கொஞ்சம் பொறு!’’ என்று சொல்லிவிட்டு சித்ரகுப்தன் உள்ளே போனான்.
கொஞ்ச நேரம் கழித்து வெளியே வந்தான்.
‘‘உள்ளே போய் சொர்க்கத்தின் தலைவர்கிட்டே உனது கதையைச் சொன்னேன். அவர் உடனே உத்தரவு போட்டுட்டார்!’’
‘‘என்ன உத்தரவு?’’
‘‘அந்தப் பதினஞ்சு காசை உன்கிட்டே திருப்பிக் கொடுத்துடச் சொன்னார்!’’
‘‘அப்புறம்?’’
‘‘உன்னை நரகத்துக்கே அனுப்பி வெச்சுடச் சொன்னார்!’’ பெரிய மனிதன் மயங்கி விழுந்தான்.
ஆன்மிக உலகில் பயணம் செய்கிறவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பாடம்:
காசு கொடுத்து சொர்க்கத்தை வாங்க முடியாது; ஆனால், கருணையைக் கொடுத்து அதைச் சுலபமாக வாங்க முடியும்!

நன்றி : ஐயா தென்கச்சி கோ.சுவாமிநாதன்

>>>அமெரிக்காவுக்கு ரோடு...!

கடவுள்: மனிதா, உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்?

மனிதன்: இந்தியாவிலேர்ந்து அமெரிக்காவிற்கு ரோடு போட்டுச் கொடு சாமி!!


கடவுள்: அது கஷ்டமாச்சே…கடல்ல எப்பிடிப்பா ரோடு போட முடியும் வேறு ஏதாவது கேள்.


மனிதன்: அப்ப என் மனைவி பேச்சைக் குறைக்கணும், நான் சொல்றதை மட்டும்தான் கேட்கணும், எதிர்த்து பேசக்கூடாது ...!!! அப்படி செய்யுங்க...சாமி...!!

கடவுள்: அமெரிக்காவுக்கு ரோடு சிங்கிளா, டபுளா…?

>>>மருத்துவரும் மெக்கானிக்கும்...

ஒரு முறை மெக்கானிக் கடைக்கு ஒரு பிரபல இதய அறுவை சிகிச்சை மருத்துவர் தனது காரை சரி செய்ய வந்திருந்தார்.

தனது காரை கடையில் விட்டுவிட்டு காத்திருந்தார்.

அப்போது மற்றொரு கார் ஒன்றை சரி பார்த்துக் கொண்டிருந்த ஒரு மெக்கானிக், அந்த மருத்துவரை அழைத்து ஒரு நிமிடம் பேச வேண்டும் என்றார்.

மருத்துவரும் மெக்கானிக் அருகில் வந்தார்.

மெக்கானிக் தான் சரி செய்து கொண்டிருந்த கார் எஞ்சினைக் காண்பித்து, பாருங்கள் நாங்களும் காரின் இதய‌ம் போ‌ன்ற எ‌ஞ்‌சினை திறந்து அதில் உள்ள வால்வுகளை சரி செய்து கொடுக்கிறோம். அதுவும் புதிது போல் இயங்குகிறது. இதையேத் தான் நீங்களும் செய்கின்றீர்கள். ஆனால் உங்களுக்கு நிறைய பணம், புகழ், பெயர் கிடைக்கிறதே என்றார்.

அதற்கு அந்த மருத்துவர், மிகவும் நிதானமாகவும், அமைதியாகவும், புத்திசாலித்தனமாகவும் பதிலளித்தார்.

இருவருக்கும் வித்தியாசம் இருக்கிறது. நாங்கள் இதயம் இயங்கிக் கொண்டிருக்கும்போது செய்கிறோம். உ‌ங்களா‌ல் அது முடியுமா என்றார்.

>>>பஞ்சாப் நாடோடிக் கதை....

 
ஒரு நரி ஆற்றுப் பக்கம் தண்ணீர் குடிக்கப் போனது. எதிர்க்கரையில் இருந்த ப்ளம் மரங்களில் நிறைய பழங்கள் பழுத்துக் குலுங்கிக்கொண்டு இருந்தன. என்ன செய்வது, அந்த நரிக்கு நீச்சல் தெரியாதே.... ஏக்கத்தோடு பழங்களைப் பார்த்துக்கொண்டு இருந்தது நரி.

அந்தப் பக்கமாக ஒரு முதலை வந்தது. ‘‘முதலைக் கண்ணு, இங்கே வாயேன்’’ என்றது நரி.


‘‘அந்த ப்ளம் பழம் எவ்வளவு அழகா இருக்கு பாத்தியா? என்னை உன் முதுகிலே தூக்கிட்டுப் போனா நாம ரெண்டு பேரும் அந்தப் பழங்களைச் சாப்பிடலாம்’’ என்றது நரி.

‘‘அச்சச்சோ! எங்க அம்மா திட்டுவாங்க. என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறவர் கூடத்தான் நான் சேர்ந்து போகணும்னு சொல்லி இருக்காங்க’’ என்றது முதலை.


நரிக்கோ ப்ளம் பழத்தின் மீது உள்ள ஆசை அடங்கவில்லை. ‘‘நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்’’ என்று முதலையிடம் சொன்னது. முதலைக்கு வெட்கமாக, சந்தோஷமாக இருந்தது.


‘‘கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணு’’ என்றது.


‘‘செய்யறேன். ஆனா, இப்போ எனக்கு பசி மயக்கம். உடனடியா ப்ளம் பழம் சாப்பிடணுமே...’’


‘‘சரி, என் முதுகிலே ஏறிக்கோ. உன்னை அக்கரையிலே விடறேன்’’ என்றது முதலை.


அக்கரைக்குப் போய் ஆசை தீருமட்டும் ப்ளம் பழங்களைச் சாப்பிட்டது நரி.


மீண்டும் முதலையின் முதுகில் சவாரி செய்து இக்கரைக்கு வந்தது நரி. கரையில் இறங்கி, ‘‘நான் போய் கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டு வர்றேன்’’ என்று சொல்லிவிட்டு ஓடியது.


நரி வரும் வரும் என்று ஆவலோடு காத்திருந்தது முதலை. நரி வரவில்லை. அது தன்னை ஏமாற்றிவிட்டது என்று முதலைக்குப் புரிந்தது. நரியை மீண்டும் பார்த்தால் தக்க பாடம் கற்றுத்தர முடிவு செய்தது.


சில நாட்கள் கழித்து, நரி அந்தப் பக்கமாக வருவதை முதலை பார்த்தது. நரி ஆற்றில் வாய் வைத்ததும் முதலை, நரியின் காலைக் கவ்வியது. உடனே நரி, ‘‘முதலைக் கண்ணம்மா, உன்னைத் தேடித்தான் வந்தேன். ஆனா வர்ற அவசரத்துல என் ஒரு காலை வீட்டுல வெச்சுட்டு வந்துட்டேன். அதை எடுத்துட்டு வந்துடறேன்’’ என்றது. முதலை நரியின் காலை விட்டது. நரி போய்விட்டது.


முதலை எவ்வளவு காத்திருந்தும் நரி வரவில்லை. மீண்டும் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முதலை, ஆற்றிலிருந்து புறப்பட்டு நரியின் குகைக்குள் போய் ஒளிந்துகொண்டது. வெளியே போயிருந்த நரி, குகைக்குத் திரும்பியது. வாசலில் முதலையின் காலடித் தடம்! முதலை உள்ளே இருக்கிறதா, இல்லையா என்று தெரியவில்லை. நரி, ‘‘அன்பு மனைவியே, நான் வீட்டுக்குத் திரும்பிவிட்டேன். என்னை வரவேற்றுப் பாடமாட்டியா?’’ என்றது.


குகைக்குள் இருந்து சத்தம் வரவில்லை. ‘நரி திரும்பவும், ‘‘செல்ல மனைவியே நான் வீட்டுக்கு வந்துவிட்டேன். ‘அன்புக் கணவர் ஐயாவே வீட்டுக்கு உள்ளே வந்துடுங்க. குட்டிக்கு வாங்கிட்டு வந்ததெல்லாம் குட்டி கையிலே தந்துடுங்க’னு எப்பவும் பாடுவியே, அதைப் பாடினாதான் உள்ளே வருவேன்’’ என்றது நரி.


குரலை மாற்றிக்கொண்டு முதலை அந்தப் பாட்டைப் பாடியது.


அவ்வளவுதான்... முதலை உள்ளே இருப்பதைத் தெரிந்து கொண்ட நரி ஓட்டம் பிடித்தது!

>>>அரசியல்வாதியின் "பவர்...!"

ஒரு பலசரக்கு வியாபாரி,ஒரு ஆசிரியர்,ஒரு அரசியல்வாதி மூவரும் ஒரு காட்டுக்குள் சென்ற போது வழிதவறிப் போயிற்று.மிகுந்த அலைச்சலுக்குப் பின் ஒரு விவசாயியின் வீட்டைக் கண்டு பிடித்தனர். விவசாயியிடம் ஒரு இரவு தங்குவதற்கு அனுமதி கேட்க,விவசாயி சொன்னார்,''உங்களில் இருவர் தங்க அறை கொடுக்க முடியும்.மூன்றாவது நபர் ஆடு,பசு,பன்றி இவை தாங்கும் கொட்டகையில் தான் தூங்க வேண்டும்,''ஆசிரியர் ,''நான் போய் அங்கு படுத்துக் கொள்கிறேன்.''என்றார்.மற்ற இருவரும் அறையில் போய் படுத்துக் கொண்டனர்.

கொஞ்ச நேரம் ஆனவுடன் கதவு தட்டப்பட்டது.கதவைத் திறந்த போது அங்கு ஆசிரியர் நின்று கொண்டிருந்தார்.''என்னால் அந்த நாற்றத்தைத் தாங்க முடியவில்லை.''உடனே பலசரக்கு வியாபாரி,''சரி,சரி,நான் அங்கு போய் தூங்குகிறேன்,''என்று கூறி கொட்டகைக்குச் சென்றார்.

ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் கதவு தட்டப்பட்டது. திறந்து பார்த்தால் வியாபாரி வாந்தி எடுத்துக் கொண்டே நிற்கிறார்.இறுதியாக அரசியல்வாதி ,தான் அங்கு போவதாகக் கூறிச் சென்றார்.

ஐந்து நிமிடத்தில் கதவு தட்டப்பட்டது.ஆசிரியரும்,வியாபாரியும் கதவைத் திறந்து பார்த்தனர்.இப்போது ஆடு,பசு,பன்றி இவையெல்லாம் நின்று கொண்டிருந்தன.

>>>மதிப்பும் மரியாதையும்....

''மிரட்டியும் பயமுறுத்தியும் பெறும் மதிப்பும் மரியாதையும் நிலைக்குமா?''

''நிலைக்காது... ஒருமுறை சார்லி சாப்ளின் வெளியே சென்று வீடு திரும்பும்போது அவருடைய கோட்டுப் பையில் யாருடைய தங்க கைக் கடிகாரமோ இருந்தது. அதை அவர் காவல் துறையிடம் ஒப்படைத்தார். அது பத்திரிகையில் விளம்பரப்படுத்தப்பட்டது.

மறுநாள் சாப்ளினுக்கு ஒரு கடிதம் வந்தது. அதில், 'ஐயா, நான் ஒரு திருடன். உங்கள் அபிமானி. நான்தான் அந்தத் திருட்டு வாட்ச்சை தங்கள் பையில் போட்டேன். என் பரிசாக அதை ஏற்றுக்கொள்ளவும்’ என்று இருந்தது. சாப்ளின் அந்தக் கடிதத்தையும் காவல் துறையில் ஒப்படைத்தார். அதுவும் விளம்பரப்படுத்தப்பட்டது.

மறுநாள் சாப்ளினுக்கு ஒரு பார்சலும் கடிதமும் வந்தது. அதில், 'ஐயா! அந்த தங்க வாட்ச் என்னிடம் இருந்து திருடப்பட்டதுதான். ஆனால், நான் அந்தத் திருடனைவிட தங்கள் மேல் அதிக மதிப்பு வைத்துள்ளேன். எனவே, அந்த வாட்ச்சையும் இத்துடன் அனுப்பியுள்ள தங்க செயினையும் என் பரிசாக ஏற்றுக்கொள்ளவும்’ என்று இருந்தது.

இப்படித் தாமாக போட்டி போட்டுக்கொண்டு வரும் மதிப்பும் மரியாதை யும்தான் என்றென்றும் நிலைக்கும்!''

>>>தடுக்கி விழுந்தாலும் தப்பில்லை!

>>>ரகசியம் பேசலாமா?

கடைவீதியில் நடந்து வந்துகொண்டிருந்தார் சாக்ரடீஸ். எதிரில் தென்பட்ட ஒருவர், ''உங்கள் நண்பனைப் பற்றி ஒரு ரகசியம் சொல்லட்டுமா?'' என்றார்.

உடனே சாக்ரடீஸ், ''நீங்கள், என்னிடம் சொல்லப் போவது உண்மைதானா!'' என்றார் சாக்ரடீஸ்.

''தெரியவில்லை... கேள்விப்பட்ட தகவல்!'' என்றார் அவர்.

''அது நல்ல விஷயமா?''

''இல்லை. எதிர்மறையானதுதான்''

''அந்த ரகசியத்தை கேட்பதால் ஏதேனும் பலன் உண்டா?''

''கிடையாது''

இதைக்கேட்ட சாக்ரடீஸ், ''நீ சொல்லும் ரகசியம் உண்மையல்ல; நல்ல விஷயமும் அல்ல; அதனால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. எனவே, நீ அதை என்னிடத்தில் சொல்ல வேண்டியதே இல்லை'' என்று கூறிவிட்டு நடக்க ஆரம்பித்தார்.

>>>தேடித் தீர்ப்போம் !

சூஃபி ஞானி முல்லா நசுருத்தீனிடம் ஒருவர் வந்து, ஒரு கிராமத்தின் பெயரைச் சொல்லி, ''இந்த ஊருக்குச் செல்ல எத்தனை நாட்கள் ஆகும்'' என்று கேட்டார்.

முல்லாவோ ''அது உங்களைப் பொறுத்தது'' என்றார். ''இதென்ன பதில்? நேரடியாக நான்கு நாட்கள் ஐந்து நாட்கள் என்று சொல்ல மாட்டீரா? என்னைப் பொறுத்தது என்றால் எனக்குப் புரியவில்லையே'' என்றார்.

முல்லா சொன்னார்: ''அந்த ஊரைக் கடந்து வந்து விட்டீர்கள்... அது உமக்குப் பின்னால் இருக்கிறது. நீர் திரும்பினால் விரைவிலேயே போகலாம். இப்போது நின்றபடியான திசையில் பயணத்தைத் தொடர்ந்தால், உலகையே சுற்றிக் கொண்டு நீர் வந்து சேர வேண்டும். திரும்பி பயணிக்கும் எண்ணம் உமக்கு உண்டா என்று எனக்கு எப்படித் தெரியும். அதனால்தான் அது உம்மைப் பொறுத்தது என்றேன்...''

நம்மில் எத்தனை பேர் திரும்பிப் பார்க்கத் தயாராக இருக்கிறோம்..? நமது துக்கங்கள், துயரங்கள் எல்லாமே உள்ளிருந்து புறப்பட்டவை. ஆனால் அவற்றைத் தீர்க்கும் வழியை மட்டும் நாம் வெளியில் தேடுகிறோம். கவலையை மறக்க, நம்மை நாமே ஏமாற்ற ஆயிரம் உபாயங்களை மேற்கொள்கிறோம்.

ஹோட்டல், சினிமா தியேட்டர், மதுபான கேளிக்கை, நாடகம், தொலைக்காட்சி... இவை எல்லாம் கவலையை மறக்க நாம் வெளியில் தேடும் உபாயங்களே!

பயணம் என்பது, உலகைச் சுற்றிக் கொண்டு ஊர் போகும் முயற்சி. கொஞ்சம் திரும்பி உள்முகமாகப் பயணப்பட்டால், வெகு சமீபத்தில் இருக்கிறது ஊர். அந்த உள்முகப் பயணத்தின் பெயர்தான் தியானம். எத்தனையோ ஞானிகள் தியானத்தின் மூலமாகத்தான் தங்கள் துன்பங்களை வென்றனர்.

புத்தர், தமது மேலாடையில் நிறைய முடிச்சுகளைப் போட்டார். முடிவில் துணியே முடிச்சுகளின் மூட்டையானது. இவற்றை எப்படிப் பிரிப்பது... சீடர்கள் திணறினார்கள்.

புத்தர் 'கடைசியாகப் போட்ட முடிச்சை முதலில் அவிழ்க்க வேண்டும்' என்று கூறி முடிச்சுகளை அவிழ்த்தார். 'நான் போட்ட முடிச்சுகளை நீங்கள் பிரிப்பது கஷ்டம். நானே பிரிப்பது சுலபம். இப்படியே உங்கள் மனத்தில் விழுந்த முடிச்சுகளை நீங்களே அவிழ்ப்பது சுலபம். பிறர் பிரித்துத் தரவேண்டும் என எதிர்பார்ப்பது பலவீனம்' என்றார்.

இன்று பலரும் தங்கள் கஷ்டங்களை எவரேனும் தீர்க்க மாட்டார்களா என்று தவிக்கின்றனர். ஆனால், இவை நம்மால், நம்மில் உண்டானவை... எனவே நாம்தான் அவற்றை தீர்க்க முடியும்! தீர்ப்போம் !

( சக்தி விகடன் - ’ஆனந்தம் பரமானந்தம்’ தொடரில் சுகி. சிவம் )

>>>நம்பிக்கை....

அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக் காசின் நடுவில் துளை இருந்தது. துளையிட்ட காசு கிடைப்பது அதிர்ஷ்டம் என்று ஒரு நம்பிக்கை. அதனால், 'அதிர்ஷ்டம் என்னைத் தேடி வரும், பணக்காரனாகிவிடுவேன்’ என்று நினைத்தான். அந்தக் காசைத் தன் கோட்டுப் பையில் போட்டுக் கொண்டான்.

அன்று, அவனுக்கு மற்ற நாளைவிட அதிக வருமானம் கிடைத்தது. 'எல்லாம் காசு கிடைத்த நேரம்’ என நினைத்தான். அன்றிலிருந்து அவன் தினமும் கோட்டுப் பையில் இருக்கும் காசை தொட்டுப் பார்த்துக்கொள்வான். வெளியே எடுக்கமாட்டான். சில ஆண்டுகளில் பணம், பதவி அனைத்தும் வந்து சேர்ந்தன.

பல வருடங்களுக்குப் பின், ஒரு நாள் தன் மனைவியிடம், ''அந்தக் காசைப் பார்க்கவேண்டும் போலுள்ளது'' என்றவாறு கோட்டுப் பையில் இருந்து எடுத்தவனுக்கு அதிர்ச்சி!

அந்தக் காசில் துளையே இல்லை. 'என்ன ஆயிற்று?’ என்று குழப்பத்துடன் பார்த்தான். அவன் மனைவி சொன்னாள், ''என்னை மன்னியுங்கள். உங்கள் கோட்டு தூசியாக இருக்கிறதே என்று வெளியே உதறினேன். காசு தெருவில் விழுந்துவிட்டது. எவ்வளவோ தேடியும் கிடைக்கவில்லை. நான்தான் வேறு காசைப் போட்டு வைத்தேன்'' என்றாள்.

''இது எப்போது நடந்தது?'' என்று கேட்டான். ''அந்தக் காசு கிடைத்த மறுநாளே'' என்றாள். அவன் அமைதியாக சிந்தித்தான். 'உண்மையில் அதிர்ஷ்டத்தைக் கொடுத்தது அந்த நாணயம் இல்லை. என்னுடைய நம்பிக்கைதான்.’ என நினைத்தான். முன்பைவிட உற்சாகத்துடன் தனது பணியைத் தொடர்ந்தான்...!

>>>இன்று ஒரு தகவல் !!! சிந்தனைக்கு .....தென்கச்சி கோ.சுவாமிநாதன்

 
ஒரு ஊருல ஒரு முனிவர் இருந்தாரு. ஒரு நாளு அவரப் பாக்க 4 பேரு வந்திருந்தாங்க. முனிவர்கிட்ட அந்த 4 பேரும்,"சாமி ஒலகத்த புரிஞ்சிக்கவே முடியலயே அதுக்கு என்ன வழின்னு" கேட்டாங்க. அதுக்கு அந்த முனிவர் "தெரியலயப்பான்னு" ஒத்த வரில பதில் சொல்லிட்டாரு. ஆனாலும் வந்தவங்க விடாம."என்ன சாமி நீங்க எவ்ளோ பெரிய முனிவர் இதுகூடத் தெரியலைன்னு சொல்லுறிங்களே!" அப்டின்னு கேட்டாங்க. அதுக்கு முனிவர் அவங்ககிட்ட "சரி இப்ப நான்உங்கள ஒரு புஷ்பக விமானத்துல அழைச்சிகிட்டுப் போவேன். போற வழியில ஒரு காட்சிய உங்களுக்கு காட்டுறேன். அது பத்தி உங்களோட கருத்த நீங்க சொல்லனும், கருத்து தப்பா இருந்திச்சின்னா இந்த விமானம் உங்கள கீழ தள்ளிவிட்டுடும்" அப்டின்னாரு. சரின்னு அந்த 4 பேரும் முனிவரோட சேந்து புஷ்பக விமானத்துல ஏறினாங்க.

கொஞ்ச தூரம் போனபிறகு ஒரு எடத்துல ஒரு புலி , குட்டிபோட்டுக்கிட்டு இருந்திச்சி. குட்டி போட்ட பெறகு தனக்கும் தன் குட்டிகளுக்கும் பசிக்கு எற தேடி அந்தப் பக்கமா வர ஆரம்பிச்சிச்சி. இந்தப் பக்கமா ஒரு மான், அதுவும் குட்டி போட்டுட்டு பசிக்கு தண்ணீர் குடிக்கிறதுக்கு அந்தப் பக்கமா வந்திச்சி. மானப் பாத்த அந்தப் புலி சட்டுன்னு அது மேல பாஞ்சி அதக் கொன்னு தானும் சாப்புட்டு தன்னோட குட்டிகளுக்கும் குடுத்திச்சி. அத சாப்புட்ட அந்தப் புலிக் குட்டிங்களுக்கு சந்தோசம். இந்தப் பக்கமா தன் அம்மாவ பரிகுடுத்த மான் குட்டிகளுக்கு வருத்தம். இந்தக் காட்சிய அவங்கிட்ட காட்டின முனிவர் இதப் பத்தி உங்க கருத்து என்னன்னு கேட்டாரு.

அதுக்கு அந்த 4 பேருல ஒருத்தர் “இது ரொம்ப தப்பு. மான் குட்டிகளுக்கு இப்ப தாய் இல்லாம போச்சேன்னு சொன்னாரு”. ஒடனே அவர அந்த விமானம் கீழ தள்ளிவிட்டுடுச்சு. அடுத்த ஆளப்பாத்து முனிவர் கேட்டாரு,"ஏம்பா உன் கருத்து என்னன்னு?", ஏற்கனவே ஒருத்தன் கீழ விழுந்தத பாத்த ஆளு," இல்ல இது சரிதான், ஏன்னா புலிகளுக்கு இ இரையாகத் தானே மான்கள் இருக்குது அப்படின்னு சொன்னாரு. ஒடனே அவரையும் விமானம் கீழ தள்ளி விட்டுடுச்சு. இதையெல்லாம் பாத்துக்கிட்டு இருந்த அடுத்த ஆளு ரொம்ப உசாரா சொன்னான், “ இது தப்பும் இல்ல சரியும் இல்லன்னு". ஒடனே அவனையும் அந்த விமானம் கீழ தள்ளிடிச்சி. கடைசியா விமானத்தில இருந்தவனைப் பாத்து கேட்டாரு முனிவர்,"ஏம்பா உன் கருத்து என்னன்னு", அதுக்கு அவன் ,"தெரியலயே சாமின்னு", சொன்னான். இந்த மொற அவன அந்த விமானம் கீழ தள்ளல. இரண்டு பேரையும் சொமந்துகிட்டு பயணம் செய்ய ஆரம்பிச்சிச்சி.

இந்தக் கதைய வர்ற நீதி என்னன்னா நம்ம வாழ்க்கைக்கு எது தேவையோ அதை மட்டும் நாம் புரிஞ்சிக்கிட்டா போதும் தேவையில்லாத விசயங்கள தெரிஞ்சிக்க முயற்சி செய்றது அனாவசியம், அது போல தனக்கு அறிவில்லாத விசயங்கள் குறித்து தனக்கு தெரிஞ்சமாதிரி பேசுறதும் அனாவசியம். தெரியாத விசயங்களை தெரியாதுன்னு ஒத்துக்கிறது தான் உத்தமம்.

>>>நாணயம்... நம்பிக்கை!

அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக் காசின் நடுவில் துளை இருந்தது. துளையிட்ட காசு கிடைப்பது அதிர்ஷ்டம் என்று ஒரு நம்பிக்கை. அதனால், 'அதிர்ஷ்டம் என்னைத் தேடி வரும், பணக்காரனாகிவிடுவேன்’ என்று நினைத்தான். அந்தக் காசைத் தன் கோட்டுப் பையில் போட்டுக் கொண்டான்.

அன்று, அவனுக்கு மற்ற நாளைவிட அதிக வருமானம் கிடைத்தது. 'எல்லாம் காசு கிடைத்த நேரம்’ என நினைத்தான். அன்றிலிருந்து அவன் தினமும் கோட்டுப் பையில் இருக்கும் காசை தொட்டுப் பார்த்துக்கொள்வான். வெளியே எடுக்கமாட்டான். சில ஆண்டுகளில் பணம், பதவி அனைத்தும் வந்து சேர்ந்தன.


பல வருடங்களுக்குப் பின், ஒரு நாள் தன் மனைவியிடம், ''அந்தக் காசைப் பார்க்கவேண்டும் போலுள்ளது'' என்றவாறு கோட்டுப் பையில் இருந்து எடுத்தவனுக்கு அதிர்ச்சி!

அந்தக் காசில் துளையே இல்லை. 'என்ன ஆயிற்று?’ என்று குழப்பத்துடன் பார்த்தான். அவன் மனைவி சொன்னாள், ''என்னை மன்னியுங்கள். உங்கள் கோட்டு தூசியாக இருக்கிறதே என்று வெளியே உதறினேன். காசு தெருவில் விழுந்துவிட்டது. எவ்வளவோ தேடியும் கிடைக்கவில்லை. நான்தான் வேறு காசைப் போட்டு வைத்தேன்'' என்றாள்.


''இது எப்போது நடந்தது?'' என்று கேட்டான். ''அந்தக் காசு கிடைத்த மறுநாளே'' என்றாள். அவன் அமைதியாக சிந்தித்தான். 'உண்மையில் அதிர்ஷ்டத்தைக் கொடுத்தது அந்த நாணயம் இல்லை. என்னுடைய நம்பிக்கைதான்.’ என நினைத்தான். முன்பைவிட உற்சாகத்துடன் தனது பணியைத் தொடர்ந்தான்.

>>>மாற்றத்தின் பயன்...?

ஒருவன் தன் கழுதை மேல் சுமை ஏற்றிக் கொண்டிருக்கும் போது எதிரிகள் வருவதைப் பார்த்தான், பயந்துபோய், “கழுதையே வா! நாமிருவரும் ஒடிப்போய்விடலாம­். எதிரிகள் வருகிறார்கள் ” என்றான்.

கழுதை, “நான் வரவில்லை. நீ ஓடு!” என்றது.

”ஏன் என்றான் கழுதைக்கு சொந்தக்காரன்.?”

”எதிரிகளுக்கும் ­ பொதி சுமக்கத்தானே போகிறேன். உன்னுடன் வந்தால் எனக்கு சுமை குறையப்போகிறதா ­?” என்றது.

நீதி: அரசு மாறும்போது, ஏழை மக்களுக்கு நிகழும் ஒரே மாற்றம் எஜமானர்களின் பெயர் மட்டுமே

>>>தைரியம் என்பது தன்னம்பிக்கைக்கு மறுபெயர்...

ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தார். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம்.

வழக்கம் போல் அன்றும் சாளரத்தைத் திறந்த அரசருக்கு ஏமாற்றம்! சூரிய உதயத்துக்குப் பதில் அவர் கண்களில் ஒரு பிச்சைக்காரன் தான் தோன்றினான். போயும் போயும் இவன் முகத்தில் தான் விழிப்பதா என்று கடும் வெறுப்புடன் திரும்பினார் அரசர். திரும்பிய வேகத்தில் சுவற்றில் அவரது தலை அடிபட்டு இரத்தம் கொட்டியது..வலியோ பொறுக்க முடியவில்லை. அத்துடன் கோபம் வேறு பொங்கியது...

பிச்சைக்காரனை இழுத்து வருமாறு கட்டளையிட்டார். காவலர்கள் அவனை இழுத்துக் கொண்டு வந்து மன்னர் முன்னே நிறுத்தினர். அரச சபை கூடியது. தனது காயத்துக்கு காரணமாக இருந்த அந்த பிச்சைக்காரனை தூக்கிலிடுமாறு தண்டனையும் கொடுத்தார்.

பிச்சைக்காரன் கலங்கவில்லை; கலகலவெனச் சிரிக்கத் தொடங்கினான். சபையில் இருந்தவர்கள் திகைப்புடன் விழித்தனர். அரசனுக்கோ, கோபம் கட்டுக்கடங்காமல் போய் விட்டது...பைத்தியக்காரனே! எதற்குச் சிரிக்கிறாய் என்று ஆத்திரத்துடன் கேட்டார்.

அரசே...! என் முகத்தில் விழித்ததால் உங்கள் தலையில் சிறு காயம் மட்டும் தான் ஏற்பட்டது. ஆனால், உங்கள் முகத்தில் நான் விழித்ததால், என் தலையே போகப் போகிறதே...அதை நினைத்தேன் சிரித்தேன் என்றான். மன்னன் தலை தானாகவே கவிழ்ந்து விட்டது. தவறை உணர்ந்தவன் தண்டனையை ரத்து செய்து பிச்சைக்காரனை விடுவித்தான்.

தைரியம் என்பது தன்னம்பிக்கைக்கு மறுபெயர். அது இல்லையென்றால், சமயத்தில் உயிரைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போய்விடும்...!

>>>இசையால் வந்த அழகு....

ஒகுய்ஸ்தேன் ரொம்ப நல்லவன். பேரழகன் மட்டும் இல்லை, பேரழகன்' சூர்யா மாதிரியே இவன் முதுகிலும் பெரிய கூன் ஒன்றும் இருந்தது. அதுதான் இவனுக்கு ரொம்ப வருத்தம். பிரமாதமாக வயலின் வாசிப்பான் ஒகுய்ஸ்தேன். இவனோட ஊரில் எந்த விழா நடந்தாலும் அதுல நம்ம ஒகுய்ஸ்தேனோட நிகழ்ச்சி இருக்கும்.

ஒருநாள் பக்கத்து ஊரில் ஒரு நிகழ்ச்சிக்கு போயிட்டு நடுராத்திரி காட்டு வழியா ஊருக்கு திரும்பிட்டு இருந்தான். அந்த காட்டுல மந்திரக் குள்ளர்கள் இருப்பாங்க. அதனால வேகவேகமா நடந்தான். ஆனாலும் அந்த குள்ளர்கள் இவனைப் பார்த்துட்டாங்க. இவன் ரொம்ப பயந்துட்டான்.

அந்த குள்ளர்களுக்கு இசைன்னா ரொம்ப இஷ்டம். இவனோட வயலினைப் பாத்து குஷியாகி... இவனை வாசிக்கச் சொன்னாங்க.

இவனும் குஷியா வாசிச்சான். இவனோட இசையில் மயங்கிப் போன குள்ளர்கள் "உனக்கு என்ன வேண்டுமோ கேள்'' என்றார்கள்.

ஈவனோட அம்மா அடிக்கடி இவன்கிட்ட "இந்த கூன் மட்டும் இல்லைன்னா நீ ராஜகுமாரன் மாதிரியே இருப்பே''ன்னு வருத்தப்படுறது ஞாபகம் வந்தது. அதனால இந்த கூன் மறைந்தாலே போதும்னு கேட்டான்.

"நீ வீடு போய் சேருவதற்குள் உன் கூன் மறைந்துவிடும்'' என்று அனுப்பி வைத்தார்கள் குள்ளர்கள்.

வீட்டை நெருங்கும்போது ஈவனோட கூன் இல்லாம போச்சு. ஊர்ல எல்லோரும் எப்படி இவனுக்கு கூன் மறைஞ்சதுன்னு ஆச்சர்யப்பட்டாங்க. இவன் நடந்ததை சொன்னதும் "முட்டாள்! கூன் மறைய வேண்டும் என்று கேட்டதுக்கு பதில் பெருஞ்செல்வம் கேட்டிருக்கலாமே''னு திட்டினாங்க. "எனக்கு அதில் எல்லாம் விருப்பம் கிடையாது'' என்றான் பேரழகன்.

"நான் போய் வாங்கிட்டு வர்றேன் பாரு''னு பொறாமைக்காரன் ஒருவன் அவனோட புல்லாங்குழலை எடுத்துட்டு போனான். அதே மாதிரி குள்ளர்களை தன் இசையால் சந்தோஷப்படுத்தினான். அவர்களும், "என்ன வேணுமோ கேள்''னு கேட்டாங்க, பெரும் சொத்து வேணும்னு கேட்க நினைத்த பொறாமைக்காரன், பதட்டத்தில் ஒன்றும் புரியாமல், "ஒகுய்ஸ்தேன் விரும்பாதது எல்லாம் எனக்கு வேண்டும்'' என்றான்.

குள்ளர்களும், "நீ வீடு போய் சேருவதற்குள் வந்து சேரும்'' என்று வரம் கொடுத்துவிட்டு கிளம்பினார்கள். வீட்டுக்கு திரும்பி வர வர தன் பின்னால் கனம் சேருவதை உணர்ந்தான் பொறாமைக்காரன். பெருஞ்செல்வம் வந்துவிட்டது என்று சந்தோஷப்பட்டான். வீடு வந்து சேர்ந்ததும்தான் தெரிந்தது ஒகுய்ஸ்தேன் விரும்பாத கூன் விழுந்த முதுகைதான் விரும்பி வரமாக பெற்று வந்திருக்கிறோம் என்று!

>>>சமயோசித புத்தி...!

ஓய்வுக்காக காட்டுக்குச் சென்றபோது தனது செல்ல நாயையும் அழைத்துப் போனார் ஒரு அரசர். அவர் வேட்டையில் மும்முரமாக இருக்க, அங்குமிங்குமாக பாய்ந்துபாய்ந்து காட்டின் வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்திக் கொண்டிருந்தது நாய். பல நிமிடங்களுக்குப் பிறகுதான் தான் வழியைத் தவறவிட்டுவிட்டதை உணர்ந்தது.

அப்போது சற்று தூரத்தில் புலி ஒன்று வருவதைக் கண்டது நாய். அது தன்னை வேட்டையாடத்தான் வருகிறது என்பதையும் உணர்ந்தது. தப்பிப்பது எப்படி என்று எண்ணியபோது எதிரில் சில எலும்புத் துண்டுகளைக் கண்டது. சட்டென ஒரு காரியம் செய்தது அந்த நாய் . புலிக்கு முதுகு காட்டியவண்ணம் எலும்புத் துண்டுகளின் முன் அமர்ந்தது.

புலி அருகில் வந்தவுடன் "ஆஹா...புலியின் மாமிசம் எவ்வளவு சுவை! இன்னும் ஒரு புலி கிடைத்தால் நன்றாக இருக்குமே" என்றது நாக்கைச் சுழற்றியபடியே

அதனைக் கேட்ட புலிக்குக் கிலி பிடித்து, 'நல்ல வேளை இந்த மிருகத்திடமிருந்து தப்பினோம்' என்றெண்ணி மெதுவாகப் பதுங்கிப் பின்வாங்கியது.

இந்த சம்பவத்தை மரத்தின் மேலமர்ந்து கவனித்துக் கொண்டிருந்த குரங்கு ஒன்று, நாயைக் காட்டிக் கொடுப்பதன் மூலம் புலியிடமிருந்து தனக்குப் பாதுகாப்பு தேடிக் கொள்ளலாம் என்றெண்ணி, புலி சென்ற திசையை நோக்கி விரைந்தது. அதனைப் பார்த்த நாய் ஏதோ விவகாரம் எனப் புரிந்து கொண்டதோடு இனி புலியிடமிருந்து ஓடித் தப்பமுடியாது என்பதையும் உணர்ந்து கொண்டது.

குரங்கு புலியிடம் நாயின் தந்திரத்தைக் கூறியதும் கோபம் கொண்ட புலி, "என்னுடன் வந்து அந்த நாய் என்ன பாடு படுகிறது என்பதைப் பார்" என்று உறுமிவிட்டு குரங்கினைத் தன் முதுகில் ஏற்றிக் கொண்டு நாய் இருந்த இடம் நோக்கி விரைந்தது.

குரங்கும் புலியும் சேர்ந்து வருவதைக் கண்ட நாய், பழைய இடத்தில் அமர்ந்த படியே அவற்றைப் பார்க்காதது போல பாசாங்கு செய்து "இன்னொரு புலியைக் கொண்டு வருவதாகச் சொன்ன குரங்கை இன்னும் காணோமே!" என்றது சத்தமாக...

பின் என்ன நடந்திருக்கும் என்று சொல்லத் தேவை இல்லையே...!

>>>தீயோர்க்கு அஞ்சேல்! - சுகி.சிவம்

"தாத்தா... என்ன படிக்கிறீங்க? எனக்கு பரீட்சை இருக்கு... அதனாலே நான் படிக்கிறேன். நீங்கள் ஏன் படிக்கிறீங்க?" என்றபடியே வந்தான் பாபு.

"வாழ்நாள் முழுவதும் கற்க வேண்டும் என்கிறார் வள்ளுவர். இங்கிலாந்தில் வாழ்ந்த லியானர்ட் வெல் பற்றி படித்தேன். எவ்வளவு ஆழமான சிந்தனை அவருக்கு" என்று பாபுவின் ஆவலை தூண்டினார் தாத்தா.

"அவரை பற்றி சொல்லுங்க தாத்தா" என்று நச்சரித்தான் பாபு.

"மக்கள் நடமாட்டமே இல்லாத பாதை, இருட்டுவேளை... கையில் பணத்துடன் குதிரை மீது பயணம் செய்து கொண்டிருந்தார் லியானர்ட் வெல். அப்போது 'நில்' என்று அவரை மிரட்டியபடி எதிரே வந்து துப்பாக்கியை காட்டினான் ஒரு முகமூடி கொள்ளையன்.

"எடு பணத்தை" என்று மிரட்டினான்.

பணத்தை கொடுத்த பிறகும், "ம்... மரியாதையாக குதிரையை என்னிடம் ஒப்படைத்துவிடு" என்று மேலும் மிரட்டினான். அதன்படியே நடந்துகொண்டார் வெல்.

வெற்றிக்களிப்புடன் குதிரை மீது ஏறி புறப்பட தயாரான முகமூடி கொள்ளையனை நிறுத்தி, "உனக்கு வெட்கமாக இல்லையா? உழைத்து உண்ணாமல் திருட்டு தொழில் செய்கிறாயே இது பாவம் இல்லையா?" என்று கம்பீரமாக குரலை உயர்த்தி கேட்டார் வெல். இதை சற்றும் எதிர்பாராத கொள்ளையன், "டேய், நீ மானம் அற்றவன். உயிருக்கு பயந்து பணத்தையும் குதிரையையும் என்னிடம் கொடுத்த கோழை" என்று கேலி பேசினான்.

லியனார்ட் வெல் உறுதியுடன் "மூடனே, நாளை கடவுளின் கேள்விக்கு நீ என்ன பதில் சொல்வாய்? திருடுவது பாவம் என்ற பைபிள் நெறியை நீ அறியாதவனா? இறைவனின் தண்டனைக்கு ஏன் உள்ளாகிறாய்?" என்று கேட்டார்.

அவரது உறுதி மற்றும் தெளிவான பேச்சால் கொள்ளைக்காரன் ஆச்சர்யம் அடைந்தாலும் தப்பிக்கும் நோக்கத்தில் "மேலே பேசாதே... பேசினால் சுட்டுவிடுவேன். சாக பயந்து பணத்தையும், குதிரையையும் கொடுத்த கோழை நீ. எனக்கு புத்தி சொல்கிறாயா?" என்று உறுமினான்.

"போயும் போயும் பணத்துக்காகவோ குதிரைக்காகவோ நான் சாக விரும்பவில்லை. அவற்றை சம்பாதிக்க என்னால் முடியும். இப்போதும் நான் சாவதற்கு தயார். கடவுளுக்கு விரோதமான இழி செயலான திருட்டினால் உனக்கு பாவம் வரும். அந்த பாவத்திலிருந்து உன்னை தடுப்பதால் மரணம் வந்தாலும் அந்த மரணம் ஏற்கத்தக்கது. சுடு என்னை" என்றபடி குதிரைக்கு முன்னே நின்று மார்பை திறந்து காட்டினார் வெல்.

திகைத்துப் போன கொள்ளையன் சற்று தடுமாறினான். இறுதியில் குதிரையில் இருந்து இறங்கி லியானார்ட் வெல்'ஐ தழுவிக் கொண்டு, "பாவத்திலிருந்து என்னை மீட்டுவிட்டாய். அதற்கு நன்றிக் கடனாக திருட்டு தொழிலை விட்டுவிடுகிறேன்" என்று கண்ணீர் விட்டான்" என கதையை சொல்லி முடித்தார் தாத்தா.

"தாத்தா, ஆத்திச்சூடியில் இது பற்றி என்ன சொல்லியிருக்கு?" என்றான் பாபு.

"தீயோர்க்கு அஞ்சேல்" என்றார் தாத்தா.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 08-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால்: பொருட்பால் அதிகாரம்...