கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Medical லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Medical லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அரசு மாதிரிப் பள்ளியில் பயின்று NEET தேர்வு எழுதிய 74 மாணவர்களில் 32 பேருக்கு MBBS பயிலும் வாய்ப்பு

 


துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளியில் பயின்று நீட் தேர்வு எழுதிய 74 மாணவர்களில் 32 பேருக்கு எம்பிபிஎஸ் சீட்

அரசு கல்லூரிகளில் கிடைக்க வாய்ப்பு


திருச்சியை அடுத்த துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளியில் படித்து நீட் தேர்வு எழுதிய 74 மாணவர்களில் 32 பேருக்கு, முதல் முயற்சியிலேயே அரசு மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்பில் சேர வாய்ப்பு கிடைத்துள்ளது.


துவாக்குடியில் உள்ள அரசு மாதிரிப் பள்ளியில் அறிவியல், கணிதம் பாடப்பிரிவில் 2025-26 கல்வி ஆண்டில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களில் 74 பேருக்கு பாடத்திட்டத்துடன் நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டன.


இந்நிலையில் நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட தர வரிசை பட்டியலில் இப்பள்ளி மாணவர் எஸ்.மாதவ்(564 மதிப்பெண்கள்) உட்பட 4 மாணவர்களுக்கு அகில இந்திய ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் 28 பேருக்கு தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் வாய்ப்பும் உருவாகி உள்ளது.


இதில், பட்டியலின மாணவர் பிரிவில் சஞ்சய் தரன் மாநிலத்தில் 2-ம் இடம், பழங்குடியினர் பிரிவில் மாணவி தீபிகா 3-ம் இடம், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம் பிரிவில் வனிஷா 5-ம் இடம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் ஜனுஜா 7-ம் இடம், பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் கே.கோபிகிருஷ்ணன் 15-ம் இடம் என 5 பேர் மாநில அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.


நிகழாண்டில் இப்பள்ளியில் பயின்ற 32 பேர் முதல் முயற்சியிலேயே எம்பிபிஎஸ் படிப்பில் சேரும் வாய்ப்பை பெற உள்ளனர். இது தவிர, அரசு பல் மருத்துவக் கல்லூரிகளில் பிடிஎஸ் படிப்பிலும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் சீட் கிடைக்க வாய்ப்புள்ளது.


இதுகுறித்து கல்வியாளர்கள் கூறியதாவது: துவாக்குடி அரசு மாதிரிப் பள்ளியில் பயின்று நீட் தேர்வெழுதிய 74 மாணவர்களில் 32 பேர் முதல் முயற்சியிலேயே நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று எம்பிபிஎஸ் படிப்பில் சேர உள்ளனர்.


பொதுவாக போட்டித் தேர்வு பயிற்சி மையங்களின் வெற்றி சதவீதம் சராசரியாக 10 முதல் 15 சதவீதம்தான் இருக்கும். ஆனால், துவாக்குடி அரசு பள்ளி பயிற்சி மையத்தின் வெற்றி கிட்டத்தட்ட 50 சதவீதமாக இருப்பது மிகப்பெரும் சாதனை என அவர்கள் தெரிவித்தனர்.


பொது பணியிட மாறுதல் வெளிப்படையாக நடத்தப்படும் - அமைச்சர் அருண்ராஜ்

 


பல்வேறு பதவிகளில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்களுக்கும் மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் பொது பணியிட மாறுதல் கலந்தாய்வின் மூலம் வெளிப்படையாக நடத்தப்படும் என்றும் காலி பணியிடங்களின் விபரம் கலந்தாய்விற்கு முன்னதாகவே துறை இணைய தளத்தில் முழுமையாக வெளியிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் மாண்புமிகு மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர். கோ.க. அருண்ராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார்.


இது குறித்த கடிதம்


>>>  தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



டாக்டர். கோ.க. அருண்ராஜ் 

மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்


தலைமைச் செயலகம், சென்னை -600 009.


அலுவலக கடித எண்.05/2026, நாள் - 27.05.2026


சுற்றறிக்கை


பெரருள்


மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை - பணியிட மாறுதல் வேண்டி மாண்புமிகு அமைச்சர் அலுவலகத்தை நாடும் பணியாளர்கள் - உயர் அலுவலர்களின் அனுமதியின்றி அணுகுவது குறித்து - சில அறிவுரைகள் வழங்குதல் – குறித்து.


மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் உத்தரவின்படி மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் பல்வேறு பதவிகளில் பணிபுரியும் அனைத்துப் பணியாளர்களுக்கும் பொது பணியிட மாறுதல் கலந்தாய்வின் மூலம் வெளிப்படையாக நடத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும் காலி பணியிடங்களின் விபரம் கலந்தாய்விற்கு முன்னதாகவே துறை இணைய தளத்தில் முழுமையாக வெளியிடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


மாண்புமிகு மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்


நகல் - 1) அரசு செயலர்,

மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை. தலைமைச் செயலகம், சென்னை -600 009.


2) இயக்குநர், மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம், கீழ்பாக்கம், சென்னை.


3) இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம், சென்னை-6.


4) இயக்குநர், பொது சுகாதாரம் மற்றம் நோய்த்தடுப்பு மருந்துத்துறை, சென்னை-6.


சின்னம்மை நோய் (Chicken Pox) குறித்த முழுமையான தகவல்கள்

 


சின்னம்மை நோய் (Chicken Pox) குறித்த முழுமையான தகவல்கள் 


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை

தற்போதைய வெயில் காலத்தில் சின்னம்மை தொற்றுக்கு உள்ளாகி வருவதைக் காண்கிறோம். 


"Chich-Pois" எனும் பிரெஞ்சு மொழிச் சொல்லுக்கு "பச்சை பட்டாணி" ( Chick peas) என்று பொருள். 


சின்னம்மை ஏற்படும் போது உடல் முழுவதும் பச்சை பட்டாணி அளவில் கொப்புளம்  தோன்றியதால் "சிக்கன் பாக்ஸ்" என்று அழைக்கப்படுகிறது. மற்றபடி நாம் உண்ணும் சிக்கனுக்கும் இந்த சின்னம்மைக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. 

 

பொதுவாக 

சின்னம்மைக்கு எந்த  மருத்துவ சிகிச்சையும்  தேவை இல்லை எனும் மூடநம்பிக்கை இன்னும் நமது சமூகத்தில் நிலவி வருகிறது.

அதைப் போக்கும் முகமாக இந்த விழிப்புணர்வுக்  கட்டுரை அமையும். 


சின்னம்மை எனும் சிக்கன் பாக்ஸ் - வேரிசெல்லா சோஸ்டர் வைரஸ் மூலம் உண்டாகும் தொற்று நோயாகும். 


காற்றின் மூலம் பரவும் தொற்று நோய் என்பதால் தொற்றுக்குள்ளானவர் தும்மும் போதும் இருமும் போதும் அருகில் இருந்து அதை சுவாசிப்பவர்களுக்கு எளிதில்  பரவி விடும். 


இதனோடு கொப்புளங்கள் தோன்றும் நிலை வரும் போது தோலோடு தோல் உரசுவதாலும் தொற்றுப் பரவல் நடக்கிறது.


வைரஸ் தொற்று உடலுக்குள் சென்றதில் இருந்து நோயின் அறிகுறி தொடங்க சராசரியாக இரண்டு வாரங்கள் எடுக்கும்.


காய்ச்சல்

உடல் சோர்வு 

தொண்டை வலி

தலை வலி ஆகியன முதல் ஐந்து முதல் ஏழு நாட்கள் இருக்கும். 


அதன்பின், உடல் முழுவதும் சிவப்பு நிற படை தோன்றி நெஞ்சுப் பகுதி, பின்புறம், முகம் என கொப்புளங்கள் உருவெடுத்து உடல் முழுவதும் பரவும். 


இரண்டாவது வாரத்தின் முடிவில் கொப்புளங்கள் சருகாகி விழுந்து விடும். 


கொப்புளங்கள் தோன்றுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பில் இருந்து, அவை சருகாகி விழும் வரை பிறருக்குத் தொற்றுப் பரவும் நிலையில் இருக்கும். 


ஏன் சின்னம்மைக்கு மருத்துவ சிகிச்சை அவசியம்   ? 


பொதுவாக குழந்தைகளுக்கு இந்தத் தொற்று ஏற்படும் போது பெரிய பாதிப்புகள் இன்றி மறையும் என்பது உண்மை தான். ஆனால் வளர் இளம் பருவத்தினர், வயது வந்தோர், முதியோர், கர்ப்பிணிகள், எதிர்ப்பு சக்தி குன்றியோர்க்கு ஏற்படும் போது நோயின்  தீவிரமாக வெளிப்படும். 


முறையான சிகிச்சை அளிக்காவிட்டால் 

சிலருக்கு நிமோனியா எனும் தீவிர நுரையீரல் தொற்று , எண்கஃபாலைட்டிஸ் எனும் மூளை அழற்சி , கொப்புளங்களில் பாக்டீரியா தொற்று ஆகியவை ஏற்படலாம். 


சின்னம்மைக்கு 

ஏசைக்ளோவிர்/ வேல்ஏசைக்ளோவிர் ஆகிய மாத்திரைகள் சிறப்பாக செயல்பட்டு நோயின் தீவிரத்தையும் நோயின் காலத்தையும் குறைக்கக் கூடியதாக உள்ளன. 


முக்கியமாக இந்த மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரையின் கீழ், தோல் படை மற்றும் கொப்புளங்கள் தோன்றத் துவங்கிய 24 மணிநேரத்திற்குள் எடுக்கும் போது சிறந்த பலனைத் தருகிறது.  


இதுவன்றி சின்னம்மை ஏற்பட்டு குணமானவர்களுக்கு, வைரஸின் ஒரு பகுதி அவர்களின் நரம்பு மண்டலத்தில்  நெடிய துயில் நிலைக்குச் சென்று அமைதி காத்திருக்கும். தனக்கான தோதான சூழல் வரும் போது ( அந்த நபரின் எதிர்ப்பு சக்தி குறையும் போது) மீண்டும் உயிர்ப்பு பெற்று அக்கி எனும் ஹெர்பிஸ் சோஸ்டர் நோயை ஏற்படுத்தும். அக்கி என்பது தோலில் திராட்சை பழம் போல தோற்றம் கொண்ட ஒன்றோடு ஒன்று நெருங்கி ஒட்டி இருக்கும் கொப்புளங்களுடன் கடுமையான வலியை ஏற்படுத்தக் கூடிய நோயாகும். 


ஒரு வயதுக்குள் சின்னம்மை ஏற்பட்டிருந்தாலும் சரி, அந்த நபர் முதியவராக ஆன பின்பும் கூட அதாவது அறுபது வயதைக் கடக்கும் போது மீண்டும் வெளிவந்து அக்கியை ஏற்படுத்தலாம்.

அந்த நோய்க்கும், 

ஏசைக்லோவிர் மருந்தை உடனடியாகக் கொடுப்பதன் மூலம் நோயின் தீவிரத்தைக் கட்டுப்படுத்த முடியும்.


சின்னம்மை கண்ட ஆரோக்கியமான நிலையில் உள்ளவர்களில் 20% பேருக்கும், எதிர்ப்பு சக்தி குன்றியோரில் 50% பேருக்கும் அவர்கள் வாழ்வின் பிற்பகுதியில் அக்கி ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்பதை அறிக. 


யாருக்கெல்லாம் சின்னம்மை தீவிரத்துடன் வெளிப்படும் வாய்ப்பு உள்ளது? 


எதிர்ப்பு சக்தி குன்றச் செய்யும் சிகிச்சையில் இருப்பவர்கள் குறிப்பாக அதிக அளவில் ஸ்டீராய்டு மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்கள், 


புற்று நோய் சிகிச்சையில் இருப்பவர்கள், மனித எதிர்ப்பு சக்தி குன்றச் செய்யும் வைரஸ் தொற்றுக்கு உள்ளானோர், கர்ப்பிணிமார்கள், கட்டுப்பாடற்ற நீரிழிவு இருப்பவர்கள், குறைமாதத்தில் பிறந்த குழந்தைகள், குறைவான எடை கொண்ட ஊட்டச்சத்து குறைபாடு கொண்ட குழந்தைகள், ஒரு வயதுக்குட்பட்ட சிசுக்கள், 60+ வயதைத் தாண்டிய முதியோர் 

ஆகியோருக்கு சின்னம்மை தொற்று ஏற்படும் போது தீவிரத்துடன் வெளிப்படக்கூடும். எனவே அதிக கவனம் தேவை. உடனடியாக சிகிச்சை தொடங்கப்பட வேண்டும். 


சின்னம்மை ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ள வழிகள் உள்ளனவா? 


ஆம். சின்னம்மைக்கு எதிரான தடுப்பூசியை நமது குழந்தைகளுக்கு 

முதல் தவணை - 12 முதல் 15 மாதங்களுக்குள்ளும் 

இரண்டாவது தவணையை  - 4 முதல் 6 வயதிலும் வழங்கலாம். 


இந்தத் தடுப்பூசி 70 முதல் 90%  தொற்றுகளைத் தடுக்கவும், 95% தீவிரத் தொற்றுகளைத் தடுக்கும் ஆற்றல் கொண்டிருக்கிறது. 


இந்தத் தடுப்பூசியை, 

சின்னம்மை ஏற்பட்டவருடன் தொடர்பில் இருந்த குழந்தைக்கு மூன்று நாட்களுக்குள் வழங்கினால் நோயின் தீவிரம் குறைவதைக் காணலாம். 


எனது குழந்தைக்கு சின்னம்மை தடுப்பூசி போட்டும் சின்னம்மை வந்து விட்டதே. ஏன்? 


சின்னம்மை தடுப்பூசி நோய்த் தொற்றை 70-90% தடுக்கும் என்று ஆய்வுகளில் நிரூபணமாகியிருப்பதால், 10-30% பேருக்கு தடுப்பூசி போட்டிருந்தாலும் தொற்று ஏற்படலாம். ஆயினும் தீவிர நோய் நிலை ஏற்படாமல் தடுப்பூசி காக்கும். 


இதுவரை சின்னம்மை தொற்று ஏற்படாத வயது வந்தோரும் கூட இந்தத் தடுப்பூசியை இரண்டு தவணை - நான்கு மாத இடைவெளியில் போட்டுக் கொள்ளலாம். 


அக்கிக்கு எதிரான தடுப்பூசியும் 50+ வயதினருக்குக் குறிப்பாக நீரிழிவு மருத்துவப் பயனாளிகளுக்கென சந்தையில் உள்ளது. 

தேவைப்படுவோர் அக்கி ஏற்படாமல் இருக்க இந்தத் தடுப்பூசியை இரண்டு தவணை -  இரண்டு முதல் ஆறு மாத இடைவெளியில் பெற்றுக் கொள்ளலாம். 


வீட்டில் ஒருவருக்கு சின்னம்மை ஏற்படும் போது என்ன செய்ய வேண்டும்? 


சின்னம்மை ஏற்பட்டவரிடம் இருந்து வீட்டில் பிறருக்கும் தொற்று பரவாமல் இருக்க - தொற்று கண்டவரைத் தனிமைப் படுத்த வேண்டும். நோயின் அறிகுறிகள் தோன்றிய ஒருவரை தனிமைப்படுத்துவதற்குப் பெயர் "ISOLATION" ஆகும். 


கொப்புளங்கள் தோன்றியதில் இருந்து அவை சருகாகி உலரும் வரை இந்தத் தனிமைப்படுத்துதல் தொடர வேண்டும். 


இதற்கடுத்த படியாக, 

தொற்று கண்ட நபருடன் நேரடித் தொடர்பில் இருந்த அவரது வீட்டினர் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். 

தொற்று கண்டவருடன் தொடர்பில் இருந்து, இன்னும் நோயின் அறிகுறிகள் தோன்றாதவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதை "QUARANTINE" என்கிறோம். 


தற்காலத்தில் இந்த குவாரண்டைன் என்பது சரியாகப் பின்பற்றப்படுவதில்லை.  அதனால் தொற்றுப் பரவல் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. 


பொதுவாக ஒரு குடும்பத்தில் முதலில் தொற்று கண்டவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவும் போது, இரண்டாவது தொற்று கண்டவருக்கு முன்னவரை விட தீவிரமாக நோய் வெளிப்படுவதைக் காண முடிகின்றது. 


இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில், சின்னம்மை தொற்று வீட்டில் உள்ள முதியோர்களுக்கும் அதிகமாக ஏற்பட்டு தீவிரத் தொற்றை ஏற்படுத்துகிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. 


கொப்புளங்கள் தோன்றிய  24 மணிநேரத்திற்குள், அவர்களுக்கு ஏசைக்லோவிர் / வால்ஏசைக்லோவிர் மருத்துவ சிகிச்சை கிடைத்திடச் செய்ய வேண்டும். 


- தொற்று கண்டவரின் விரல் நகங்களை வெட்டி விட வேண்டும்.  கைகளில் துணி கையுறை அணிவிக்கலாம். இது கொப்புளங்களில் ஏற்படும் அரிப்பின் போது அதிகமாக சொரிந்து காயம் ஏற்படாமல் தடுக்க உதவும். 

- அரிப்பு ஏற்படும் போது காலமைன் லோசன் தடவலாம்.

வேறு எந்த வலி நிவாரணி களிம்போ வேறு வகையான தைலங்களோ தடவுதல் கூடாது. 

- தினமும் லேசான  வெந்நீரில் உடலை ஒத்தி எடுக்கலாம். இது கொப்புளங்கள் மீது பாக்டீரியா தொற்று ஏற்படாமல் தடுக்க உதவும். 

- நீராகாரங்களாகப் பருகக் கொடுக்கலாம். 

- அரிப்புக்கும் காய்ச்சலுக்கும் மருத்துவர் பரிந்துரையில் சிகிச்சை எடுக்க வேண்டும்

- கொப்புளங்கள் சருகாகி உலர்ந்ததும் குளியல் போட்டு விட்டு வீட்டை விட்டு வெளியே வரலாம். 


அபாய அறிகுறிகள் குறித்த கவனம் தேவை - 

சின்னம்மை ஏற்பட்டவருக்கு இரண்டாவது வாரத்தில் 

- பிதற்றல் நிலை 

- அதீத தலை வலி

- வலிப்பு 

- மூர்ச்சை நிலை 

- மூச்சுத் திணறல் 

- தலை சுற்றல் 

- வயிற்று வலி

ஆகியன ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து தீவிர சிகிச்சை வழங்கிட வேண்டும். 


சின்னம்மை தானே என்று லேசாக எடுத்துக் கொள்ளாமல் 

அதற்கு வழங்க வேண்டிய மருத்துவ சிகிச்சையையும் 

அதற்குரிய சரியான வழிகாட்டுதல்களையும் கடைபிடித்தால் நோயின் தீவிரத்தையும் 

காலத்தையும் அதன் பாதிப்புகளையும் நம்மால் குறைத்திட முடியும். 


நன்றி இந்து தமிழ் 

மறையாத கட்டுக் கதைகள் - 3 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை





மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை, பெற்றோர்களின் அனுமதி பெற்ற பின் மாணவர்களுக்கு வழங்கிடுமாறு அறிவுறுத்தல்




 சுகாதாரத் துறையிலிருந்து பெறப்படும் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை, பெற்றோர்களின் அனுமதி பெற்ற பின் மாணவர்களுக்கு வழங்கிடுமாறு அறிவுறுத்தல்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



ந.க. எண்.09077/அ5/2024, நாள் 06.10.2025


அறிவிப்பு


6 OCT 2025 


திருச்சிராப்பள்ளி


சுகாதாரத் துறையிலிருந்து பெறப்படும் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை, பெற்றோர்களின் அனுமதி பெற்ற பின் மாணவர்களுக்கு வழங்கிடுமாறு அனைத்து வகை உயர் மேல்நிலை பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.


06/10/25


மாவட்டக் கல்வி அலுவலர் 

திருச்சிராப்பள்ளி


பெறுநர்


அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்/மேல்நிலை பள்ளித் தலைமை ஆசிரியர்கள், திருச்சிராப்பள்ளி கல்வி மாவட்டம்.



மார்பகப் புற்று நோயைக் கண்டறிய சுயமாக செய்து கொள்ளும் எளிய பரிசோதனை குறித்த விளக்கம்

 


மார்பகப் புற்று நோயைக் கண்டறிய சுயமாக செய்து கொள்ளும் எளிய பரிசோதனை குறித்த செய்முறை விளக்கம் 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை 


சுய மார்பகப் பரிசோதனை 


இருபது வயதைக் கடந்த அனைத்து மகளிரும் மாதம் ஒருமுறை 

தங்களின் மாதவிடாய் காலம் முடிந்து ஒரு வாரத்திற்குப் பிறகு பின்வரும் சுய மார்பகப் பரிசோதனையை கட்டாயம் செய்யவும் 


முதல் படி 

பாருங்கள் 


முகம் பார்க்கும் கண்ணாடி முன் நின்று கொண்டு தங்களின் இருபக்க தோள்பட்டைகளையும் நேராக வைத்துக் கொண்டு கைகளை கீழே தொங்க விட்டுக் கொள்ளுங்கள். 

இப்போது தங்களின் இருபக்க  மார்பகங்களிலும் 

அளவிலோ

வடிவத்திலோ

நிறத்திலோ ஏதேனும் மாற்றத்தை காண்கிறீர்களா? 

ஏதேனும் வீக்கத்தைக் காண்கிறீர்களா? 


இப்போது உங்களின் இரு கைகளையும் மேலே தூக்கிக் கொண்டு மேற்கூறியவற்றைப் பார்க்கவும். 


இரண்டாவது படி 

உணர்தல்


தங்களின் தோள்பட்டைப் பகுதிக்குக் கீழ் தலையைணையை வைத்துப் படுத்துக் கொண்டு, தங்களின் இடது கையை வைத்து வலது புற மார்பகத்தையும் 

வலது கையை வைத்து இடது புற மார்பகத்தையும் தொட்டு உணர்ந்து பாருங்கள். 


மூன்றாவது படி 

உணர்தல் 


உங்களின் நடு மூன்று விரல்களின் உள்ளங்கைப் பகுதியைக் கொண்டு அங்குலம் அங்குலமாக தங்களின் மார்பகங்களை அழுத்திப் பரிசோதனை செய்யுங்கள். 


தங்களின் மூன்று விரல்களையும் தட்டையாக சேர்த்து வைத்துக் கொண்டு சீரான அழுத்தத்தைக் கொடுத்து இந்த பரிசோதனையைச் செய்யுங்கள்.  


சிறிய சிறிய வட்ட வடிவில் தங்களின் விரல்களை வைத்து அழுத்திப் பார்க்க வேண்டும். இவ்வாறு தங்களின் மார்பகம் முழுமையையும் பரிசோதனை செய்திருக்க வேண்டும். 


ஒவ்வொரு முறை வட்ட வடிவில் அழுத்தம் தருவதற்கு இடையிலும் விரல்களை எடுக்காமல் தொடர்ந்து பரிசோதனை செய்யவும். 


வெளிப்புறத்தில் இருந்து சுற்றுப் பகுதிகளை பரிசோதனை செய்து கொண்டே உட்பக்கம் வந்து இறுதியில் முலைக் காம்பு வரை அழுத்தம் தந்த பரிசோதனை செய்திருப்பதை உறுதி செய்யவும். 


இந்தப் பரிசோதனையில் 

ஏதேனும் வீக்கம், 

கட்டி இருப்பது போன்ற உணர்வு, தோல் பகுதி ஆரஞ்சுப் பழ தோல் போன்று தடிமனாக இருத்தல் போன்றவற்றை பரிசோதிக்கவும்


அப்படியே அந்தப் பக்கம் இருக்கும் 

கக்கம் (Arm pit) பகுதியை அழுத்தி அங்கு ஏதேனும் கழலை வீக்கம் இருக்கின்றதா? என்பதை பரிசோதிக்கவும். 


நான்காவது படி 

உணர்தல் 


தங்களது முலைக்காம்பை மெதுவாகப் பிதுக்கிப் பார்க்க வேண்டும். 

முலைக் காம்பில் இருந்து 

நீர் போன்ற , பால் நிற அல்லது மஞ்சள் நிற திரவமோ அல்லது ரத்தமோ வெளியேறுகிறதா என்பதைப் பார்க்கவும். 


ரத்தம் வெளியேறுவது புற்று

நோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். 


ஐந்தாவது படி

பார்த்தல் & உணர்தல் 


மேற்கூறிய அனைத்து படிநிலைகளையும் மற்றொரு மார்பகத்திலும் செய்ய வேண்டும்.


ஏதேனும் வித்தியாசமாகத் தெரிந்தால் உடனே தங்களின் மருத்துவரை நாட வேண்டும். 


இந்தப் பரிசோதனையை மாதம் ஒரு முறை செய்வதன் மூலம்  தங்கள் மார்பகங்களில் நேரும் மாற்றங்களை உடனே இனங்கண்டு மருத்துவ உதவியை நாட முடியும். 


முப்பது வயதைக் கடந்தோர்

வருடம் ஒருமுறையேனும் மருத்துவரிடம் நேரடி மார்பகப் பரிசோதனை  செய்து கொள்வது நல்லது. 


விரைவான நோய் கண்டறிதல் மூலம்

துரிதமான சிகிச்சை அளித்து

வியத்தகு முன்னேற்றம் அடைந்து

முழுமையான நோய் குணம் பெற முடியும். 


எனதருமை தாய்மார்களே சகோதரிகளே இன்றே தொடங்கிடுவீர் சுய மார்பகப்பரிசோதனையை... 


நன்றி 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை





Antibiotic Resistance - தவிர்க்கும் வழிமுறைகள்



Antibiotic Resistance - தவிர்க்கும் வழிமுறைகள்


ஆன்டிபயாட்டிக் ரெசிஸ்டெண்ஸ் 

தவிர்க்க சில எளிய டிப்ஸ் 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை


ஆண்டிபயாடிக்குகள்  கண்டறியப்படாத  காலகட்டத்தில் , அதாவது 19ஆம் நூற்றாண்டு வரை 


  புண்கள், கீறல்கள், விலங்குகளிடம்  கடிபடுவது என்பது போன்ற சாதாரண நிகழ்வுகளினால் ஏற்படும் காயங்கள் சீழ்  வைத்து அது ஆறாமல்  பெரிதாகி உடல் முழுவதும் பரவி இறந்து வந்தனர். 


பென்சிலின் என்ற ஆண்டிபயாடிக்கை  ஃப்ளெமிங் கண்டறியும் முன் நடந்த முதல் உலகப்போரில் போர் காயங்கள் ஆறாமல் முற்றிப்போய்  இறந்த மக்கள் தொகை பல மில்லியன்கள். 


அதற்குப்பிறகு பல ஆண்டிபயாடிக்குகள்  கண்டறியப்பட்டு பாக்டீரியாக்களுக்கு எதிராக நாம் தொடுக்கும் போரில்  நமக்கு சிறந்த ஆயுதங்களாக  செயல்பட்டு வருகின்றன. 


எதிரிகளும் நம்மை விட அதி வேகமாக பல்கிப்பெருகும்  ஆற்றலுடன்  இருப்பதால் நமது ஆயுதங்களுக்கு எதிராக அவர்களை தகவமைத்துக்கொள்கிறார்கள். 


எனவே இது நமக்கும் பாக்டீரியாக்களுக்கும் இடையே நடக்கும் தொடர் யுத்தமாகவே  இருக்கிறது. 


இதில் எதிரி நம்மை விட பலம் கூடினால் நம் நிலை பிரச்சனைக்குள்ளாகும். 


உலகின் கடைசி ஆண்ட்டிபயாடிக்கும் வேலை செய்யாத நிலை இப்போதே வந்து விட்டது. இதை Total Drug Resistance என்கிறோம்


இந்த நிலையை 

காச நோய் எனும் Tuberculosis இல் அதிகம் பார்க்க முடிகிறது. 


எத்தனை விலை உயர்ந்த ஆண்ட்டிபயாடிக்குகள்  கொடுத்தும் நிலைமை சரியாகாமல் நோயாளிகள் இறந்து வருகிறார்கள். 


இத்தனை ஆபத்தான

ஆண்ட்டிபயாடிக்  ரெசிஸ்டெண்ஸை நம்மளவில் தவிர்ப்பது எப்படி ? 


1. எந்த ஒரு உடல் சார்ந்த பிரச்சனையாக இருந்தாலும் குடும்ப மருத்துவரை சந்திக்க வேண்டும் என்ற கொள்கையை வைத்துக்கொள்ள வேண்டும். நாமாக நேரே  மருந்தகங்களுக்குச்  சென்று ஆண்டிபயாடிக்  மாத்திரைகளை  எடுக்கக்கூடாது. 


2. பெரும்பாலும் மழை சீசன்களில்  வரும் சளி மூக்கடைப்பு  காய்ச்சலுக்கு  வைரஸ்களே  காரணம். ஆகவே இவற்றுக்கு  ஆண்ட்டிபயாடிக்  எனும் பாக்டீரியாக்களை  எடுத்து ப்ரயோஜனமே  இல்லை. 

மருத்துவர்களும் இவ்வகை வைரஸ் தொற்றுகளுக்கு  ஆண்டிபயாடிக்  பரிந்துரைப்பதை  நிறுத்த வேண்டும். மேலும் நோயாளிகளும்  மருத்துவர்களை ஆண்டிபயாடிக்  பரிந்துரை செய்யுமாறு  வற்புறுத்தக்கூடாது. 


என்னை சந்திக்கும் பலரும் முதல் இரண்டு நாள் ஏதாவது ஒரு ஆண்டிபயாடிக்கை  எடுத்து விட்டு தான் என்னை சந்திக்கின்றனர்  என்பதை பதிவு செய்கிறேன். பெரும்பாலும் குழந்தைகளுக்கு அவர்களின் தாயார் முந்தைய ப்ரிஸ்க்ரிப்சனை  வைத்து ஆண்ட்டிபயாடிக்  சிரப்  வாங்கி கொடுத்து விடுகின்றனர். 


இவனுக்கு க்ளாவம் ( ஒரு ஆண்டிபயாடிக்  பெயர்)  கொடுத்தா தான் சார் கேட்கும்..  என்று நமக்கே டஃப் கொடுக்கும் தாய்மார்களை கடந்தே வருகிறேன். இந்த விசயத்தில் மருத்துவர் பேச்சை கேட்பது தான் சிறந்தது தாய்மார்களே. 

நீங்களாக ஆண்டிபயாடிக்  ஆரம்பித்து குழந்தைக்கு நன்மை செய்வதில்லை. 


3. மருத்துவர் ஆண்ட்டிபயாடிக் பரிந்துரைக்கும் கால அளவை  "ஒரு கோர்ஸ்" ( course of antibiotic)  என்று 

அழைக்கிறோம் 


இந்த கோர்ஸ் என்பது குறிப்பிட்ட நோயின் தன்மை பொறுத்தும் பரிந்துரைக்கப்படும் ஆண்ட்டிபயாட்டிக்கின்  தன்மை பொறுத்தும் மாறுபடும் 


ஒருவருக்கு காலை இரவு இருவேளையும்  அடுத்த ஐந்து நாட்களுக்கும் ஒரு ஆண்ட்டிபயாடிக்  எழுதப்பட்டால் அதை அவ்வாறே எடுக்க வேண்டும். 

இரண்டு நாட்களில் நோயின் அறிகுறிகள் (symptomatic relief)  குணமாகிவிடும். ஆனால் நோயை ஏற்படுத்திய கிருமிகள் இன்னும் முழுமையாக இறந்திருக்காது . அதனால் இத்தோடு நோய் சரியாகி விட்டது என்று மாத்திரையை விட்டால் மீண்டும் வில்லன்  எழுந்து வருவான் . எனவே கிருமிகளை  முழுவதுமாக  அழிக்க வேண்டும் என்பதே நமது குறி. 


இன்னும் சிலர் மருத்துவர்  காலை இரவு 

500mg மாத்திரை என்று எழுதிய மாத்திரையை அரையாக  ஒடித்து  காலை இரவு 250mg என்று சாப்பிடுவார். 


கேட்டால் எனக்கு பவர் ஒத்துக்காது  என்பார். 

ஆனால் அவர் போடும் 250மில்லிகிராம் எனும் பவரில் எதிரிகளான  கிருமிகள் வெகு சீக்கிரமாக ஆண்டிபயாடிக்  ரெசிஸ்டெண்சை  வளர்த்துக்கொள்ளும்.  


அப்போது அவருக்கு நோய் குணமானதாக  தெரிந்தாலும். நாளடைவில் அவருக்கு அந்த மருந்து வேலையே செய்யாமல் போய் விடும்.


இதே போன்று தான் காலை இரவு என்று இரு வேளை எழுதிய மாத்திரைகளை ஒரு வேளை மட்டும் போடுவது. 


இது எதற்கு சமம் என்றால் 

 வங்கிக்கு பகல் நேரத்தில் மட்டும் காவலாளி வைத்து விட்டு இரவு நேரத்தில் வைக்காமல் விடுவதற்கு சமம். 


பகல் நேரத்தில் மாத்திரை போடுவதால் மூர்ச்சை நிலைக்கு செல்லும் கிருமிகள் அடுத்த ஷிப்ட்டு  மாத்திரை போடாததால்  மீண்டும் எழுந்து நம்மை அடிக்கும்.  இதுவும் ரெசிஸ்டெண்சை  வரவழைக்கும். 


4. கால்நடை மற்றும் இறைச்சிக்காக கோழிகள் வளர்ப்புத்துறையில் மனிதனுக்கு  பயன்படும் ஆண்ட்டிபயாடிக்  உபயோகத்தை குறைக்க வேண்டும். முறைப்படுத்த வேண்டும். கடந்த ஜூலை மாதம் இதன் ஒரு பகுதியாக மனிதனுக்கு ஆபத்து நேரத்தில் பயன்படும் கோலிஸ்டின்  எனும் உயிர்காக்கும் ஆண்ட்டிபயாடிக்கை கால்நடைகளில் உபயோகிப்பதை  இந்திய அரசு தடை செய்துள்ளது வரவேற்கத்தக்கது.   


4. முடிந்த அளவு தொற்று நோய்களால்  பாதிக்கப்படுவதை  தவிர்த்தால் , ஆண்டிபயாடிக்  போடும் நிலையை ஏற்படுத்திக்கொள்ளாமல்  இருக்கலாம். 


வைரஸ் காய்ச்சல் பரவும் சீசன்களில்  கைகளை  அடிக்கடி சோப் போட்டு கழுவுவது  , 

இருமும்  போதும் தும்மும்  போதும் கைக்குட்டை  கொண்டு மூக்கையும்  வாயையும்  மூடுவது, தண்ணீரை வடிகட்டி  காய்ச்சி குடிப்பது, பொதுவெளியில்  மலம் கழிக்காமல்  இருப்பது, சளி பிடித்தவர் அடுத்தவருக்கு கை குலுக்காமல்  இருப்பது, குழந்தைகளுக்கு  முத்தம் கொடுக்காமல் இருப்பது போன்ற சாதாரண அன்றாட நடவடிக்கைகள்  மூலம் நாம் நோய் கிருமி  தொற்றுகளில் இருந்து காத்துக்கொள்ள முடியும். 


5. கர்ப்பிணிகள் / குழந்தைகள் / முதியோர்கள்/ நீரிழிவு நோயர்கள் / கான்சர்  பாதித்து சிகிச்சை எடுப்பவர்கள் / மருத்துவ காரணங்களுக்காக ஸ்டீராய்டு  எடுப்பவர்கள் 


மிக மிக இன்றியமையாத தேவையின்றி உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை எடுக்கும் மருத்துவமனைகளுக்கு வேறு நோயாளிகளைப்  பார்க்க செல்லாமல் தவிர்க்கலாம். காரணம் இது போன்ற எந்த ஆண்ட்டிபயாடிக்குக்கும் கேட்காத பெரிய சூப்பர் பக்  வகை கிருமிகள் அனைத்தும் உள் நோயாளிகளை அட்மிட் செய்து பார்க்கும் மருத்துவமனைகளில் இருக்கும். இதை HAI  என்று சுருக்கமாக  அழைக்கிறோம். 

HAI  என்றால் Hospital Acquired Infection என்கிறோம். 

இந்த வகை கிருமிகள் பரவாமல் இருக்க பல கிருமித்தொற்றுப்பரவல்  தடுப்பு நடவடிக்கைகளை மருத்துவமனையில் கடைபிடிக்கிறோம். 


( சரி சார்.. எங்கள தேவையில்லாம வர வேண்டாம்னு சொல்லிட்டீங்க.. ஆனா நீங்க டாக்டர்ஸ், நர்ஸ்களாம்  அங்க தான சார் வேலை பாக்குறீங்க.. உங்களுக்கு பாதுகாப்பு ? என்று நீங்கள் கேட்பது புரிகிறது 


இதற்கு பதிலாக.. 

குணா படத்தின் பாடலை எடுத்துக்காட்டுகிறேன் 

நன்றி இசை ஞானி / கலை ஞானி 


"என்ன காயம் ஆன போதும் என் மேனி தாங்கிக்கொள்ளும் உந்தன் மேனி தாங்காது செந்தேனே .....எந்தன் காதல் என்ன என்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது ..எந்தன் சோகம் உன்னை தாக்கும் என்றென்னும் போது வந்த அழுகை நின்றது மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது ................!!!" 

😄😄


சரி..  ஃபரூக் டாக்டர் சொல்லிட்டாரு.. நான் குழந்தை பெத்துக்க  ஆஸ்பத்திரிக்கு  வரமாட்டேன். வீட்ல தான் குழந்தை பெத்துப்பேன்.  ஆஸ்பத்திரல  HAI  இருக்கு என்றெல்லாம் கூறிவிடாதீர்கள் சகோதரிகாள் 🙏😄


நம் உடல் ரீதியான ஆரோக்கிய ரீதியான தேவைக்கன்றி அடிக்கடி மருத்துவமனைக்கு விசிட் செல்வது தான் தவறு. 

மேற்சொன்ன மக்கள் இன்பேசண்ட்டுடன் அட்டெண்டராக தங்குவதைக்  கூட மறுபரிசீலனை  செய்யலாம். 


6. சளி இருமல் போன்று தொற்று இருப்பவர்கள் முடிந்தவரை அடுத்த வீட்டுக்கு/ அடுத்த ஊருக்கு / அடுத்த நாட்டுக்கு பயணம் செய்யாமல் இருக்கலாம். இதனால் ஒரு இடத்தில் இருக்கும் தொற்று மற்றொரு இடத்திற்கு பரவாமல் இருக்கும். ஆனால் இது அந்த அளவு ப்ராக்டிகலாக  தோன்றவில்லை. காரணம் ஒரு சளி வந்தது என்பதற்காக ப்ளைட்  டிக்கெட்டை யாரும் கேன்சல் செய்ய முடியாது. 

இருப்பினும்  கிருமித்தொற்று இருந்தால் 

முடிந்தவரை பயணங்களை  தவிர்த்தல் சிறந்தது. 


சிந்திப்போம் மக்களே. 

மாற்றம் நம்மிடம் இருந்து தொடங்க வேண்டும். 

மாற்றம் ஒன்றே மாறாதது.


Dr.A.B.ஃபரூக் அப்துல்லா

பொது நல மருத்துவர்

சிவகங்கை


Bajaj Pygmy Go 178MM Mini Fan with LED Lighting | Rechargeable | USB Charging | 4-hours Battery Backup | 3 Speed | 2-Light Brightness Setting | High Speed | Portable【Blue】


https://amzn.to/4oRIpth




புரூஸ்லி இறந்தது எப்படி? - hyponatremia என்றால் என்ன? - அதிகமாக தண்ணீர் பருகுவதால் ஆபத்து உண்டா?



புரூஸ்லி இறந்தது எப்படி? 


ஹைப்போநாட்ரீமியா என்றால் என்ன? 


அதிகமாக தண்ணீர் பருகுவதால் ஆபத்து உண்டா? 


How did Bruce Lee die? - What is hyponatremia? - Is there a danger in drinking too much water?


தற்காலத்தில் இளையோரிடத்தில் யார் விரைவாக 

அதிக குளிர்பானம் / பீர் உள்ளிட்ட திரவங்களைப் பருகுகிறார்கள் என்று போட்டிகள் நடப்பதைக் காண முடிகிறது. 

இவை உயிருக்கு ஆபத்தானவை. 


எப்படி வாருங்கள் புரூஸ்லீயின் மரணம் வழி பாடம் கற்போம் 


டாக்டர்.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை 


ஹாங்காங் நகரில் 20.7.1973 அன்று 

ஹாலிவுட் அதிரடி மன்னன் புரூஸ்லீ சந்தேகத்துக்கிடமான முறையில் மரணமடைந்தார்


அவருக்கு விஷம் வைக்கப்பட்டதாகவும் 

பயிற்சி செய்யும் போது தலை சுவரில் மோதி அதனால் ஏற்பட்ட மூளை ரத்தக்கசிவால் மரணம் ஏற்பட்டது

மூவர் கொண்ட குழு அவரை கொலை செய்து விட்டதாகவும்  கூறப்பட்டு வந்த நிலையில் 


தற்போது ஸ்பானிஷ் ஆராய்ச்சியாளர்கள் மீண்டும் அவரது மரணம் குறித்து ஆராய்ச்சி செய்து 


அவர் அதிகமாக தண்ணீர் பருகியதால் ஹைப்போநாட்ரீமியா ஏற்பட்டு அதன் விளைவால் மரணமடைந்திருக்கலாம் என்கின்றனர்


புரூஸ்லீ அவர்கள் இறந்த அன்று என்ன நடந்தது என்பதைப் பார்ப்போம் 


புரூஸ்லீ இறந்த அன்று காலை 

மாரிஜூவானா எனும் மருந்தை உடல் வலிக்காக உட்கொண்டு விட்டு 

பெட்டி டிங் பேய் எனும் அவரது நண்பரின் வீட்டிற்குச் சென்று 

வரவிருக்கும் படத்தின் சில காட்சிகளை நடித்துப் பயிற்சி செய்கிறார். 


இரவு 7.30 மணிக்கு தலை சுற்றல் , குமட்டல் , தலைவலி ஏற்படவே 


தலைவலி மாத்திரையான "EQUAGESIC" மாத்திரையை டிங் பேய் அவருக்கு வாங்கிக் கொடுக்கிறார்


அதை உட்கொண்டு சற்று நேரம் ஓய்வெடுத்த புரூஸ்லீயை 9.30 மணிக்கு சென்று பார்க்கிறார் 


ஆள் மயங்கிக்கிடக்கிறார்


மருத்துவர் வரவழைக்கப்படுகிறார்


அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு உடனே கொண்டு செல்லப்பட்டு

இறுதி கட்ட முயற்சிகள் செய்யப்படுகின்றன 


எனினும் சிகிச்சை பலனின்றி ப்ரூஸ்லி மரணமடைகிறார். 


பிரேத பரிசோதனை அறிக்கையில் 

விஷமோ / வேறு வெளி/உள் காயங்களோ இல்லை 


ஆனால் அவரது மூளை நார்மலாக இருக்க வேண்டிய எடையை விட சற்றுக் கூடுதலாக இருந்தது. அவரது மூளை 1575கிராம் இருந்தது. 

சாதாரணமாக நமது மூளை 1200-1300 கிராம் எடை கொண்டது. 


உடனே அவரது மரணத்திற்கான காரணம் ஈக்விஜெசிக் மாத்திரையை உட்கொண்டதால் ஏற்பட்ட அலர்ஜியினால் மூளையில் நீர் சுரந்து (CEREBRAL EDEMA)  இறந்து விட்டார் என்று எழுதப்பட்டு விட்டது. 


ஆனால் அதற்கு முன்பாக மே மாதத்திலும் இதே போன்று 

தலைவலி, வாந்தி, மயக்கம், கிறுகிறுப்பு போன்றவற்றால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார். 


புரூஸ்லீ இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பிருந்து 

திரவ டயட் முறையை கடைபிடித்து வந்ததாகத் தெரிகிறது


உணவாக தண்ணீர்  / கேரட் மற்றும் ஆப்பிள் ஜூஸ் மட்டும் உட்கொள்வதை பழக்கமாக வைத்திருந்திருக்கிறார்


அவரது உடல் வலி காரணமாக அதை சரி செய்யும் முகமாக கோகெய்ன் உட்கொள்ளும் பழக்கமும் இருந்தமையால் அடிக்கடி தாகமெடுத்துக் கொண்டே இருக்கும் 

எனவே தண்ணீரை அளவுக்கதிகமாக குடித்திருக்கிறார்

 

அத்துடன் வலி நிவாரணி மாத்திரையை உட்கொள்ளவும் சிறுநீரகம் சிறிது ஸ்தம்பித்து தண்ணீரை வெளியேற்ற இயலாமல் போயிருக்கும் 

இதன் விளைவாக உடலில் அதிக நீர் சேர்ந்து இருக்கிறது 


நமது உடலில் தண்ணீரின் அளவு கூடும் போது ரத்தத்தில் உள்ள சோடியம் உப்பின் அளவு குறையும். 


சோடியம் அளவு நார்மலாக 135-140 mEq/L இருக்க வேண்டும் 


ஆனால் 

அளவுக்கு அதிகமாக தண்ணீரை குறைவான கால இடைவெளியில் பருகும் போது சிறுநீரகங்கள் ஸ்தம்பிக்கின்றன


தண்ணீரை வெளியேற்ற இயலாமல் வேலைநிறுத்தம் செய்கின்றன 


இப்போது தண்ணீர் கூடுவதால் ரத்தத்தில் உள்ள சோடியம் அளவு குறையும் 

எனவே செல்களுக்கு வெளியே இருக்கும் நீரானது செல்களுக்குள் செல்லும். 

இதனால் செல்கள் வீக்கமடையும். 


மூளையில் இருக்கும் நியூரான்கள் வீக்கமடையும். 

மூளை வீங்கும். இதனால் வலிப்பு ஏற்படும் . தலை சுற்றும். கோமா ஏற்பட்டு மரணம் சம்பவிக்கும். 


இது போன்ற நிலையை 

"ACUTE HYPONATREMIA" என்று அழைக்கிறோம் 


சாதாரணமாக நமது சிறுநீரகங்கள் ஒரு மணிநேரத்திற்கு ஒரு லிட்டர் தண்ணீரை சுத்தம் செய்து வெளியேற்றும் சக்தி பெற்றவை 


ஒரு நாளைக்கு 20-25 லிட்டர் வரை வெளியேற்றும் சக்தி பெற்றவை. 


ஆயினும் ஒரே நேரத்தில் நான்கு ஐந்து ஆறு லிட்டர் என தண்ணீரை லபக் லபக் என்று பருகினால் சிறுநீரகங்கள் ஸ்தம்பிக்கும்


ரத்தத்தில் சோடியம் அளவுகள் குறையும். 


இதனால் தலை வலி , தலை சுற்றல் , வாந்தி , மயக்கம் போன்றவை ஏற்படும் என்ற விழிப்புணர்வு தேவை


அதற்காகவே இந்தப் பதிவு 


இதே போன்ற ஒரு நிகழ்வை 

ஒரு கேஸ் ரிப்போர்ட்டாக பதிந்துள்ளார்கள்


24 வயதுடைய நான்கு வாரமே ஆன  குழந்தையின் தாய் ஒருத்தி

20 மணிநேரம் தண்ணீர் உணவு  அருந்தாத விரதத்தில் (DRY FASTING)  ஈடுபடுகிறாள். 

விரத நேரத்திலும் தான் ஈன்ற குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கிறாள். 


விரதத்தை முடிக்கும் நேரத்தில் 

பால் சுரப்பு குறைவாக இருக்கவே


4 லிட்டர் தண்ணீரை அருந்துகிறாள். 


சற்று நேரத்தில் தலைவலி ஏற்படுகிறது. 

அதற்கு தலைவலி மாத்திரை ஒன்றை உட்கொள்கிறாள்


உடனே தலைசுற்றல் ஏற்படுகிறது / தலைவலி இன்னும் அதிகமாகிறது


அதிர்ஷ்டவசமாக

மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு ஹைப்போநேட்ரீமியா கண்டறியப்பட்டு முறையாக மருத்துவம் பார்த்து மீள்கிறாள்


ஒருவேளை புரூஸ்லீ போன்று கண்டுகொள்ளாமல் தூங்கி இருந்தால் இறந்திருக்கக் கூடும். 


இதில் நாம் அறிவது யாதெனில் 


அதீத உடல் உழைப்பு / மாரத்தான் ரன்னிங்/ ஜிம் வொர்க் அவுட்டுகளுக்குப் பின் 

வெறும் நீரை மட்டும் பல லிட்டர்கள் குடிப்பது ஆபத்தானது. 


கட்டாயம் சோடியம் உள்ளிட்ட தாதுக்கள் நிறைந்த எலக்ட்ரோலைட் திரவத்தை உட்கொள்ள வேண்டும் 


அப்படி அதிக திரவம் பருக வேண்டிய சூழ்நிலை வந்தால் 

நீரில் ஓ ஆர் எஸ் கலந்து பருக வேண்டும். எக்காரணம் கொண்டும் வெறும் நீரை பல லிட்டர்கள் ஒரே நேரத்தில் பருகுதல் தவறு. 


தண்ணீரை அளவுடன் பருக வேண்டும். 

ஒரு நாளைக்கு 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் பருகினாலும் முறையான இடைவெளிவிட்டு பருக வேண்டும். 


நான் பலர் கூறுவதைக் கேட்டிருக்கிறேன்

காலை எழுந்ததும் இரண்டு லிட்டர் தண்ணீர் குடிப்பேன் 

வேலை முடித்து வந்ததும் மூன்று லிட்டர் தண்ணீர் குடிப்பேன் என்று கூறுவார்கள் 


இது ஆபத்து நண்பர்களே


சிலர் லேசான வயிற்றுப் போக்குக்கு கூட  எலக்ட்ரோலைட் நிறைந்த ஓ.ஆர்.எஸ் திரவத்தை நீருடன் கலக்கிப் பருகாமல் வெறும் நீரை பல லிட்டர் பருகுவார்கள். 

இதுவும் ஆபத்தில் கொண்டு உய்க்கும் செயலாகும். 


சிறுநீரக கோளாறு

கல்லீரல் கோளாறு 

இதய நோய் இருப்பவர்கள் 

தண்ணீரை அளவுடன் மருத்துவர் பரிந்துரையில் பருக வேண்டும். 

இவர்கள் சற்று அளவு கூடி தண்ணீரைப் பருகினாலும்  ஆபத்து நேரிடும் வாய்ப்பு உண்டு. 


ஒரு நாளைக்கு எவ்வளவு நீர் அருந்தலாம்? 


 அவ்வாறு சரியாக  வரையறுக்க முடியாது. 

சிறுநீர் கழித்தல் ஆறு மணிநேரத்திற்கு ஒரு முறையாவது நடக்க வேண்டும். 

சிறுநீரின் நிறம் அடர் மஞ்சளாக/ சிவப்பு நிறமாக ஆகக்கூடாது. அது சரியான நீர்ச்சத்து இல்லை என்பதைக் காட்டுகிறது. 


வெளிர்மஞ்சள் (STRAW COLOURED URINE)  நிறத்தில் சிறுநீர் இருப்பதே சரியான நிறமாகும்.  


வியர்வை அதிகமாக வெளியேறும் வேலை செய்பவர்கள் அதற்கேற்றவாறு நீர் அருந்த வேண்டும்


பத்து கிலோ வரை எடையுள்ள குழந்தைகளுக்கு  100ml/kg/day 

எனவே பத்து கிலோ எடை இருந்தால் ஒரு லிட்டர் ஒரு நாளைக்கு வரும் 


பத்து கிலோ முதல் இருபது கிலோ வரை எடை இருந்தால் 

1000 ml +  50ml/kg/day ( அடுத்த பத்து கிலோவை மட்டும் கணக்கில் கொள்ள வேண்டும்) 


எனவே இருபது கிலோ குழந்தை என்றால் 

1000 + (50×10) = 1500 மில்லி / நாளைக்கு


இருபது கிலோவுக்கு மேல் இருந்தால் 

முதல் இருபது கிலோவுக்கு 1500 ml + மீதமிருக்கும் கிலோவுக்கு 20ml/kg/day 


குழந்தை 25 கிலோ இருந்தால் 

1500 + (5 × 20) = 1750 மில்லி/ ஒரு நாளைக்கு தேவைப்படும் 


30 கிலோ அதற்கு மேல் இருப்பவர்களுக்கு தோராயமாக அவர்களது உடல் எடையை × 0.033 யால் பெருக்கினால் அவர்கள் கட்டாயமாக பருக வேண்டிய நீரின் அளவு தெரியும். 


மேற்கூறியவை எல்லாம் தோராயமாக கட்டாயம் தேவைப்படும் அளவுகள் .

இதற்கு மிகுதியாகவும் தேவைப்படும் நேரங்களில் கால சூழ்நிலையைப் பொருத்துப் பருகலாம். தவறில்லை. 


சிறுநீரகக் கோளாறு

கல்லீரல் கோளாறு 

இதய கோளாறு இருப்பவர்கள் கட்டாயம் எவ்வளவு நீர் பருக வேண்டும் என்பதை மருத்துவர் முடிவு செய்தவாறு பின்பற்ற வேண்டும். 


எக்காரணம் கொண்டும் ஒரே நேரத்தில் பல லிட்டர் நீரை போட்டிக்காகவோ ஜாலிக்காகவோ குடித்து வீணாக உயிருடன் விளையாடாதீர்கள். 


அளவுக்கு மிஞ்சினால் நீரும் நஞ்சே


ப்ரூஸ்லி இறக்கும் போது அவருக்கு வயது - 32 மட்டுமே 


அனைவரும் இந்த விசயத்தில் அலர்ட்டாக இருப்போம்  


நன்றி 


ஆதாரங்கள் 

1.https://academic.oup.com/ckj/article/15/6/1196/6549578

2.https://www.sciencedirect.com/science/article/pii/S2376060521000286

3.https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC1770067/

4.https://www.ncbi.nlm.nih.gov/books/NBK537231/

5.https://www.tribuneindia.com/news/world/bruce-lee-may-have-died-from-drinking-too-much-water-claims-research-453547


டாக்டர்.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை


Whirlpool 7 kg Magic Clean 5 Star Fully Automatic Top Load Washing Machine Grey (MAGIC CLEAN 7.0 GENX GREY 5YMW)


https://amzn.to/3LPVx3A




கல்லீரல் பாதிப்பு எதனால் ஏற்படுகிறது? சரி செய்வது எப்படி?

 


கல்லீரல் பாதிப்பு எதனால் ஏற்படுகிறது? சரி செய்வது எப்படி? - Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 


கல்லீரல் நோய் முற்றி 

நடிகர் அபினய் அவர்கள் இறந்திருப்பது 

சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி இருக்கிறது. 


அவரை இழந்து வாடும் அவர்தம் சொந்தங்கள் மற்றும் நண்பர்களுக்கு 

ஆழ்ந்த இரங்கல்களைப் பதிவு செய்து இந்த விழிப்புணர்வுக் கட்டுரையைத் தொடங்குகிறேன். 


கல்லீரல் நோய் என்றாலே அது மது அருந்துவதால் தான் வந்திருக்கும் என்று பலரும் நினைக்கின்றனர். 


இருபது வருடங்களுக்கு முன்பு, 

கல்லீரல் நோய் என்று ஒருவர் வந்தால் 

அவர் அளவுக்கு மீறி மது அருந்தியதால் அவருக்கு கல்லீரல் நோய் வந்திருக்க நூற்றுக்கு நூறு சதவிகிதம் வாய்ப்பு அதிகம். 


ஆனால் இப்போது 

கல்லீரல் நோய் ஏற்படுவதற்கு 

மது மட்டுமே காரணமன்று. 

மதுவுடன் சேர்த்து 

அதிக மாவும் இனிப்பும் உடல் உழைப்பின்மையும் உறக்கமின்மையும் மன அமைதியின்மையும் இப்போது காரணமாகி இருக்கின்றன. 


ஆம்... 

கல்லீரலை பாதிக்கும் 

கல்லீரலில் கொழுப்பு படியும் நோய் 

இரண்டு வகைப்படும் 


முதல் வகை

மதுவினால் ஏற்படுவது 

இதை "ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் நோய்" 


இரண்டாவது வகை

மது அல்லாத காரணங்களால் 

ஏற்படும் "ஃபேட்டி லிவர் நோய்"

வளர்சிதை மாற்ற காரணிகளால் இந்த நோய் ஏற்படுவதால் இதற்கு "MAFLD" 

METABOLIC ASSOCIATED FATTY LIVER DISEASE என்று அழைக்கப்படுகிறது.


பெரும்பாலும் நாற்பதுகளை நெருங்கும்/தாண்டிய  ஆணோ பெண்ணோ 

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுக்கும் போது தற்செயலாக 

தென்படும் "ஃபேட்டி லிவர்" என்ற கண்டுபிடிப்பு 


இப்போது இந்த நோய் இருபது முதல் முப்பது வயது மக்களுக்கும் தென்பட ஆரம்பித்திருக்கிறது. 


உங்களது அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் ரிப்போர்ட்டில்  Fatty liver ( grade 1 /2) என்று குறிப்பிடப்பட்டிருக்கலாம் அல்லது Hepatomegaly with fatty changes என்று குறிப்பிடப்பட்டிருக்கலாம். 


கல்லீரலில் அதிகமான கொழுப்பு தேங்குவதால் ஏற்படும் நிலை தான் இந்த "கல்லீரலில் கொழுப்பு படியும் நோய்" 


நிறைய பேருக்கு தற்செயல் கண்டுபிடிப்பாக தென்படுவதால்  இது "நார்மல்" என்று ஆகிவிடாது. 


 கல்லீரல்  அடிவாங்குகிறது என்பதும். 

அது எழுப்பும் கூக்குரலாகவே இந்த நோயைக் கருத்தில் கொள்ள வேண்டும். 


பொதுவாக கல்லீரல் ஒரு கல்லுளி மங்கன் போன்ற உறுப்பு. 

எதற்கும் அசையாத ஸ்ட்ராங்கான ஒரு உறுப்பு. 


தான் உண்டு. தன் வேலையுண்டு என்று அதன் வேலையைப் பார்க்கும். 


அமிலத்தன்மை கொண்ட மதுவைக்கூட செரிமானம் செய்யும் தன்மை கொண்டது. 

கல்லைக்கூட  செரிமானம் செய்யக்கூடியது.


ஆனால் அப்படிப்பட்ட ஸ்ட்ராங்கான ஒரு உறுப்பையே அசைத்துப்பார்க்கக் கூடியது இந்த "கல்லீரல் கொழுப்பு படியும் நோய்". . 


சமீபத்தில் என்னை உடல் பருமன் என்று சந்தித்த 10 வயது பாலகனுக்கு  ஃபேட்டி லிவர் இருந்தது. மிரண்டு தான் போனேன். 

அவன் எங்கே மது அருந்தினான்? 

மது என்றால் என்னவென்றே அவனுக்குத் தெரியாது.. 


ஆனாலும் அவனது கல்லீரலில் எப்படி கொழுப்பு ஏறியது? 


கல்லீரலில் கொழுப்பு சேருவது இயற்கையானதா? நல்லதா? 


கல்லீரலில் கொழுப்பு சேருவது இயற்கையானது அன்று. 


நல்லதன்று. 


 நிச்சயம் கெட்டது.


 இதை மட்டும் மனதில் நன்றாக இருத்திக் கொள்வோம்.


எதனால் கல்லீரலில் கொழுப்பு சேருகிறது??


கல்லீரலின் பிரதான வேலைகளுள் சில


-க்ளூகோசை -> கொழுப்பாக( triglyceride ) மாற்றி உடலில் சேமிப்பது. 

-லைபோ புரதங்களை உருவாக்குவது 

- ரத்த உறைதலுக்குத் தேவையான காரணிகளை உருவாக்குவது 

- எதிர்ப்பு சக்திக்குத் தேவையான ஆண்டிபாடிகளை உருவாக்குவது 

- ப்ளாஸ்மா புரதங்களை உருவாக்குவது 

- கொழுப்பை செரிமானம் செய்யத் தேவையான பித்த நீரை சுரப்பது 


என்று 

கல்லீரலை சமையல் கூடத்துடன் ஒப்பீடு செய்யலாம்.  


ஒரு உதாரணம் கூறுகிறேன்...


ஒரு கிலோ மாவு வாங்கிக் கொடுத்தால் நமது அம்மா அதில் நமக்கு இட்லி சுட்டுத்தருவார்.

( ஏன் அப்பா சுட மாட்டாரா? அம்மா தான் சுட வேண்டுமா.. என்று கேட்டு விடாதீர்கள். இது  கதை மட்டுமே. வீட்டில் கணவர் மனைவி இருவருமே உணவு சமைக்கலாம்.) 


மீதம் மாவை குளிர் சாதனப்பெட்டியில் வைப்பார். 


ஒரு கிலோ மாவு மூன்று நாளைக்கு வரும் என்பது நம் அம்மாவுக்குத் தெரியும். 


அடுத்த மூன்று நாட்களுக்கு மாவு புதிதாக வாங்கத் தேவையில்லை. ஏனெனில் ஃபிரிட்ஜில் தான் மாவு இருக்கிறதே..! 


ஆனால் அடுத்தநாளும் மறதி கொண்ட நம் அப்பா தெரியாமல் ஒரு கிலோ மாவு வாங்கி வந்துவிட்டால் அம்மா என்ன செய்வார்??


இந்த ஒரு கிலோ புது மாவை ஃபிரிட்ஜில் வைப்பார். ஆக அடுத்த ஆறு நாட்களுக்கு மாவு கைவசம் இருக்கும். 


இப்படி தேவைக்கு மீறி மாவு இருந்தும் தினமும் யாரோ ஒருவர் மாவு/ பரோட்டா என வாங்கி வந்துவிட்டால்.. நம் அம்மா என்ன தான் செய்வார் பாவம்..!!


ஃப்ரிட்ஜும் ஒரு அளவுக்கு மேல் இடம் கொள்ளாது. 

ஒரு கட்டத்துக்கு மேல் கிச்சனே அலங்கோலமாகி விடும். 


இந்த சினாரியோவை நமது கல்லீரலுக்கும் சிந்தித்து பாருங்கள்


மாவுச்சத்து ஒரு வரைமுறைக்குள் இருந்தால் உடல் அதை சக்திக்கு உட்கொண்டுவிடும். 


அது வரம்பு மீறிச் சென்றால் நம் கல்லீரல் அதைக் கொழுப்பாக மாற்றி தொப்பையில், தொடை, இடுப்பு , மார்பு பகுதிகளில் சேமிக்கும். 


மீண்டும் மீண்டும் அதிக மாவுச்சத்து சாப்பிட்டால் , உண்ட வீட்டையே ரெண்டாக்கிய கதையாய் தன்னை உற்பத்தி செய்த கல்லீரலிலேயே கொழுப்பு படிந்து சேர ஆரம்பித்துவிடும். 


ஆக, ஃபேட்டி லிவருக்கு காரணம் அதிக மாவுச்சத்து தான். கொழுப்பு அல்ல 


உங்கள் கல்லீரலில் கொழுப்பு படிவதைப்பார்த்தவுடன் நீங்கள் உண்ணும் மாமிசம் / முட்டை/ பால் போன்றவற்றை  நிறுத்தி விட்டு அதற்குப்பதிலாக அதிகமதிகம் சோறு/ கோதுமை / மைதா என்று உண்பீர்களானால் நிச்சயம் உங்களது ஃபேட்டி லிவர் பிரச்சனை குறையாது. 

அதிகமாகவே செய்யும். 


ஃபேட்டி லிவர் பிரச்சனையில் கொழுப்பு கல்லீரலில் படிவதால்


இந்த கொழுப்பு படிந்துள்ள இடங்கள், நார்மல் கல்லீரலை விட அதிக ஒலி அலையை பிரதிபலிக்கும். அதனால் அந்த இடங்கள் நார்மல் கல்லீரலை விட பழுப்பாகவோ கருப்பாகவோ இருக்கும். 


இதில் grade I என்பது கல்லீரலில் ஆங்காங்கே கொழுப்பு படிந்து காணப்படுவது. நார்மல் கல்லீரலில் கொழுப்பு படியாது. இது ஆரம்ப நிலை. 

 

Grade II என்பது கல்லீரலில் கொழுப்பு அதிகமாக படிவதால், போர்டல் சிறை சரியாக புலப்படாமல் போகும் (portal vein)  இது அடுத்த கட்டம்  


Grade III என்பது கொழுப்பு அதிகமாக கல்லீரலில் படிவதால் உதரவிதானம் (diaphragm) சரியாக புலப்படாது .இது முற்றிய நிலை. 


எனினும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் 

கிரேடிங் செய்யப்படுவது மருத்துவருக்கு மருத்துவர் மாறுபடுகிறது. 


எனவே, என்னைப் பொருத்தவரை 

கிரேடு 2 மற்றும் அதற்கு மேல் கிரேடிங் செய்யப்படும் மக்கள் - 

கட்டாயம் ஃபைப்ரோ ஸ்கேன் (FIBRO SCAN) எனும் இன்னும் துல்லியமான ஸ்கேன் செய்து கல்லீரல் பாதிப்பின் அளவை இன்னும் துல்லியமாக அறிந்து கொள்ள முடியும். ஃபைப்ரே ஸ்கேன் மூலம் எவ்வளவுக்கு எவ்வளவு கல்லீரல் திசு பாதிப்புக்குள்ளாகி தழும்பாகி இருக்கிறது என்பதை அறிய முடியும். 


இந்த கல்லீரலில் படியும் கொழுப்பானது,  பின்னாளில் கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தி


மது அருந்தாதவர்களுக்கு வரும் கல்லீரல் கொழுப்பு படியும் நோயாக மாறலாம் (NON ALCOHOLIC STEATO HEPATOSIS) இதை சுருக்கமாக  NASH என்று அழைக்கிறோம். 

இத்தகைய நிலையில், கல்லீரல் செல்கள் தொடர்ந்து இடற்பாட்டுக்கு உள்ளாகி மரணமடைந்து தழும்புகளாக மாறிவிடும். 


இவ்வாறு சிறுகச் சிறுக  மீளுருவாக்கம் செய்ய இயலாத நிலையை அடைந்து சுருங்க ஆரம்பித்து விடும். இது கல்லீரல் அழற்சி நோய் (Cirrhosis) எனப்படும். இந்த அளவுக்கு முற்றிய நோயை ரிவர்ஸ் செய்ய இயலாது. 


இது பின்னாளில் கல்லீரல் புற்றுநோய்(HEPATO CELLULAR CARCINOMA)  அல்லது கல்லீரல் செயலிழப்பு(LIVER FAILURE)  வரை இட்டுச்செல்லும் ஆபத்து இருக்கிறது.


நம்மை பயமுறுத்தும் செய்தி யாதெனில்  மேலை நாடுகளில் இருபது வயதைக்கூட எட்டாத பள்ளி செல்லும் பிள்ளைகளிடம் செய்த ஆய்வுகளில் அவர்களில் பெரும்பாலானோருக்கு மது அருந்தாதவர்களுக்கு ஏற்படும் ஃபேட்டி லிவர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 


உண்மையில் நம் நாட்டிலும் அதே அளவு பிரச்சனை இருக்கக்கூடும் ஆனால் யாரும் இங்கு பரிசோதனைக்கான முக்கியத்துவத்தை கொடுப்பதில்லை என்பதால் இருக்கும் பிரச்சனை வெளியே தெரிவதில்லை. 


நாமும் தற்போது ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரம், சாக்லேட், கேக் என்று ரீபைன்டு கார்போஹைட்ரேட்டுகளை வாங்கி குழந்தைகளுக்கு கொடுக்கிறோம். 

இதன் கேடுகளை அறிந்தால் நாம் அப்படி செய்யமாட்டோம் என்றே நினைக்கிறேன்.


குழந்தைகள் எதை உண்ண வேண்டும் . எதை உண்ணக்கூடாது என்பதில் பெற்றோரின் கவனம் என்றும் இருக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 


மேலும், ஃபேட்டி லிவரை அதன் ஆரம்ப நிலையில்   ரிவர்ஸ்/ சரி செய்ய  இயலும்..


எப்படி??


ஃபேட்டி லிவர் எப்படி வந்தது என்பதை அறிந்தோம் அல்லவா..


பிரச்சனை - மாவுச்சத்து அடங்கிய உணவுகளை அளவின்றி தின்றதால் வந்தது. 


அதை உடனே நிறுத்த வேண்டும். 

தினமும் உட்கொள்ளும் மாவுச்சத்தின் அளவைப்

பாதியாகக் குறைக்க வேண்டும் 


இனிப்பு சுவை தரும் அனைத்து உணவுகளையும்  பண்டங்களையும்  நிறுத்த வேண்டும். 


குறை மாவு 

தேவையான புரதம் 

தேவையான ஆரோக்கியமான கொழுப்பு   உணவு முறைக்கு  மாறுவது உங்களுக்கு நன்மை பயக்கும். 


எப்படி???? 


1. மாவுச்சத்து குறைத்து உண்பதால் மேற்கொண்டு க்ளூகோஸ் கொழுப்பாக மாற்றம் அடைவது நின்று விடும்.


2. இந்த உணவு முறையில், நியூட்ரிசனல் கீடோசிஸ் நிலையில், உடல் கொழுப்பை எரிப்பதால், கொஞ்சம் கொஞ்சமாக உள்ளுறுப்புகளில் மண்டிக்கிடக்கும் கொழுப்பும் கரைய ஆரம்பித்து விடும். 


3. நாம் உணவிலேயே தேவையான அளவு கொலஸ்ட்ராலை கொடுத்து விடுவதால் கல்லீரல் தினமும் கஷ்டப்பட்டு கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்ய வேண்டியது இல்லை. இது அதன் பணிச்சுமையை வெகுவாக குறைத்து விரைவில் நலம் பெற உந்து சக்தியாக அமையும். 


உங்களின் உறவினர்களில் யாருக்கேனும் ஃபேட்டி லிவர் இருப்பின் அவருக்கு இந்த டயட்டை பரிந்துரை செய்யுங்கள். 


அவரது கல்லீரலை பிரச்சனை தீவரமாவதற்குள் காக்க ஒரு வாய்ப்பு வழங்குங்கள். 


ஃபேட்டி லிவர் பிரச்சனையை கொலஸ்ட்ரால் மாத்திரைகளாலோ வேறு எந்த குறுக்கு வழியிலோ சரி செய்ய இயலாது. 


எதைத் தின்றதால் அது வந்ததோ

அதை நிறுத்த வேண்டும்.  


சிரோசிஸ் அல்லாத 

ஆரம்ப நிலைகளில்  இருக்கும் ஃபேட்டி லிவர் பிரச்சனை  "குறை மாவு நிறை கொழுப்பு"  உணவுமுறையால் கட்டுப்படும் வாய்ப்பு அதிகம். 


சிரோசிஸ் / முற்றிய ஃபேட்டி லிவர் இருப்பவர்கள் - குடல் மற்றும் கல்லீரல்  நோய் சிறப்பு நிபுணரின் கண்காணிப்பில் தொடர் சிகிச்சை எடுக்க வேண்டும். 


சிரோசிஸ் நோய் ஏற்படும் போது 

கல்லீரல் ஆல்புமின் உற்பத்தியை குறைப்பதால், 

வயிற்றுப் பகுதியில் நீர் கோர்த்து வயிறு வீங்கும், 

உடல் மெலிந்து போகும், 

உணவுக் குழாயில் ரத்த நாளங்கள் புடைப்பு ஏற்படுத்தி பின்னாளில் வெடிப்பு ஏற்பட்டு ரத்தக் கசிவு உண்டாகலாம். 

எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் அடிக்கடி கிருமித் தொற்று ஏற்படலாம். 


சிரோசிஸ் நோயில் மஞ்சள் காமாலை ஏற்படவும் செய்யலாம்.  ஏற்படாமலும் இருக்கலாம். 

கல்லீரல் பாதிப்பு என்றாலே மஞ்சள் காமாலை இருக்க வேண்டும் என்று அர்த்தம் இல்லை. 


சிரோசிஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு 

சிகிச்சையாக "கல்லீரல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை" நிவாரணமாக இருக்கிறது. 

இறந்த கொடையாளரிடம் இருந்து எடுத்து வைக்கும் கல்லீரல் மாற்று சிகிச்சை, உயிருள்ள உறவினரிடம் இருந்து  கல்லீரலின் ஒரு பகுதியை எடுத்து வைப்பது இரண்டாவது வகை. 

இந்த சிகிச்சை முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் இலவசமாக செய்யப்படுகிறது. 

தனியார் மருத்துவமனைகளில் முப்பது லட்சம் வரை செலவினம் வருகிறது. 


இவையன்றி, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய இயலாதோருக்கு சிரோசிஸ் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வயிற்றில் சுரக்கும் நீரை வெளியேற்றுதல், அவ்வப்போது எண்டோஸ்கோபி செய்து ரத்த நாள வெடிப்புகளுக்கு சுருக்கு முடிச்சு போடுதல், கல்லீரலுக்கு உகந்த மருந்துகளை உண்ணுதல் ஆகியவற்றின் மூலம் சிகிச்சை அளிக்கப் படுகிறது. 


புரதச்சத்து மிக்க, கொழுப்புச் சத்து குறைவான, மாவுச்சத்து குறைவான உணவு முறை பரிந்துரைக்கப்படுகிறது. 


மது, சிகரெட் போன்ற தீய பழக்கங்கள் இருப்பின் அவற்றை விட்டொழிக்க வேண்டும். 


தினமும் ஒரு மணிநேரம் நடைபயிற்சி 

எட்டு மணிநேர உறக்கம் 

மன அமைதி பேணும் வாழ்வியல் 

இவையும் கல்லீரல் நலம் பேண முக்கியம். 


சிரோசிஸ் என்பது முடிவுரை அன்று. 

முறையான மருத்துவ சிகிச்சைகள் மூலமும் கண்காணிப்பு மற்றும் சிறப்பான கவனிப்பு  

மூலம் சிறந்த வாழ்வையும் ஆயுள் நீட்சியையும்  உறுதி செய்ய முடியும் 


நன்றி 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை



005 Ink Compatible for Epson Printers : M3140, M3170, M1120, M1140, M1180, M2140, M1140 / M1170 / M1180 Black - Twin Pack Ink Bottle 120ml Each Bottle




https://amzn.to/3WQCGYw


"நோயாளிகள்" என அழைப்பதற்கு பதிலாக "மருத்துவ பயனாளிகள் / மருத்துவ பயனாளர்கள்" என்னும் சொல்லை பயன்படுத்த அரசாணை வெளியீடு



"நோயாளிகள்" என அழைப்பதற்கு பதிலாக "மருத்துவ பயனாளிகள் / மருத்துவ பயனாளர்கள்" என்னும் சொல்லை பயன்படுத்த அரசாணை வெளியீடு 


அரசாணை (நிலை) எண் : 426, நாள் : 30-09-2025 - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மருத்துவர்களையும், மருத்துவமனைகளையும் நாடி வருபவர்களை "நோயாளிகள்" என அழைப்பதற்கு பதிலாக இனிவரும் காலங்களில் "மருத்துவ பயனாளிகள் / மருத்துவ பயனாளர்கள்" என்னும் சொல்லை பயன்படுத்த வேண்டும் என அரசு ஆணையிடுகிறது 


Government Order G.O. (Ms) No.: 426, Dated: 30-09-2025 - As per the instructions of the Hon'ble Chief Minister, instead of calling those visiting doctors and hospitals as "Patients" The government mandates that the term "Medical Beneficiaries" be used in future.


Medical beneficiaries instead of Patients - G.O.



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


கூடுதலாக 10,023 மருத்துவ இடங்களை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்


கூடுதலாக 10,023 மருத்துவ இடங்களை அதிகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்


நாடு முழுவதிலும் உள்ள மத்திய, மாநில மருத்துவக் கல்லூரிகளில் 2029ம் ஆண்டுக்குள் கூடுதலாக 10,023 மருத்துவ இடங்களை சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல். 


5,000 முதுகலை இடங்கள் மற்றும் 5,023 இளங்கலை இடங்களை சேர்க்கும் இத்திட்டத்திற்கு ரூ.15,034.50 கோடி நிதி ஒதுக்கீடு.


அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 4,628 சான்றிதழ் படிப்பு (Allied Health Care Certificate Courses) இடங்களுக்கு உடனடியாக சேர்க்கை நடத்திட, மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு

 

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் காலியாக உள்ள 4,628 சான்றிதழ் படிப்பு (Allied Health Care Certificate Courses) இடங்களுக்கு உடனடியாக சேர்க்கை நடத்திட, மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை முதன்மைச் செயலாளர் உத்தரவு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


கேரளாவில் அதிகரித்து வரும் மூளை உண்ணும் அமீபா பாதிப்பு : பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்



 கேரளாவில் அதிகரித்து வரும் மூளை உண்ணும் அமீபா பாதிப்பு : பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 


கேரளாவில் அதிகரித்து வரும் 

அமீபா மூளைக் காய்ச்சல் பாதிப்பு... 


மூளைக்காய்ச்சலுக்கு  காரணமாக 

இருப்பது

"நிக்லேரியா ஃபவுலேரி" (Naeglaria fowleri)  எனும் ஒரு செல் உயிரி. 


அமீபா என்று உயிரியலில் படித்திருப்போம் தானே..? 

அந்த வகையைச் சேர்ந்த 

பாக்டீரியாக்களை உணவாக உட்கொள்ளும் ஒரு செல் உயிரி இது. 


இந்த நிக்லேரியா  -  அசுத்தமான குளம் , குட்டை , முறையாக க்ளோரினேற்றம் செய்யப்படாத நீச்சல் குளங்கள் போன்றவற்றில் காணப்படும். 


குறிப்பாக குளிர்ச்சியான நீரை விடவும்  வெப்பமான வெதுவெதுப்பான நீரில் வாழும் தன்மை கொண்டவை. 


இந்த அமீபாக்கள் தேங்கியிருக்கும் நீரின் கீழ்ப்பகுதியில் இருக்கும் சேறு சகதியில் வாழும். 

நீரை குளிக்கும் போது கலக்கும் போது மேலே எழும்பி நீரில் கலந்திருக்கும். 


இத்தகைய அமீபாக்கள் வாழும்  நீரில் 

குளிக்கும் போது மூக்குக்குள் நீர் புகும் நிலை ஏற்படும் போது 


மூக்கினுள் க்ரிப்ரிஃபார்ம் தகடு என்ற எலும்பு உள்ளது. இந்த எலும்பில் சிறு சிறு ஓட்டைகள் இருக்கும். அதன் வழி நம் நுகர்தலுக்குத் தேவையான நரம்பு கிளை பரப்பி நாசியின் சுவர்களுக்குள் படர்ந்திருக்கும். 


இந்த அமீபா இருக்கும் நீரை மூக்குக்குள் உள்ளிளுக்கும் போது

நுகர்தலுக்கான நரம்பில் ஒட்டிக்கொண்டு மேலே மூளை நோக்கி ஏறிச்செல்லும் தன்மை கொண்டது. 


உள்ளே நுழைந்ததில் இருந்து மூன்று முதல்  பத்து நாட்களுக்குள்

நோய்க்கான அறிகுறிகளை வெளிப்படுத்தும். 


முதலில் தீவிர காய்ச்சல் 

அடங்காத தலை வலி 

என்று ஆரம்பித்து பிறகு 


மூளைக்காய்ச்சில் அறிகுறிகளான

பின் கழுத்துப் பகுதி இறுக்கம்

குமட்டல் / வாந்தி 

தலை சுற்றல் 

வலிப்பு ஏற்படுதல் 

பேதலிப்பு நிலை 

மூர்ச்சை நிலை 

கோமா 

இறப்பு ஏற்படக்கூடும் 


இந்த அமீபா - நரம்புகளின் நியூரான்களைத் தின்று உயிர்வாழும் தன்மை கொண்டது என்பதால் மூளையைச் சிறுகச் சிறுக உணவாக உட்கொள்ளும். இதனால் இதற்கு மூளை திண்ணும் அமீபா என்ற பெயரும் உண்டு. 


பெரும்பாலும் நோயின் அறிகுறிகள் ஏற்பட்ட ஒரு வாரத்திற்குள் மரணம் சம்பவிக்கும்


மரணத்திற்கான முக்கிய காரணம் 

இந்த நோயின் அறிகுறிகள் அனைத்தும் 

பாக்டீரியா எனும் மற்றொரு ஒரு செல் உயிரி ஏற்படுத்தும் மூளைக்காய்ச்சல் போன்றே இருக்கும் என்பதாலும்

இந்த அமீபா தொற்று அரிதிலும் அரிதானது என்பதாலும் 


நோய் கண்டறிதலில் தாமதம் ஏற்படும் வாய்ப்பு உண்டு. 


இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் - வேனில் காலங்களில் குளம் குட்டைகளில் நீச்சல் குளங்களில் அதிகமானோர் நீராடும் வழக்கம் உள்ளது. 


எனவே கட்டாயம் இந்த நோய் குறித்த விழிப்புணர்வு மருத்துவர்களுக்கும் பொது மக்களுக்கும் இருப்பது பல உயிர்களைக் காக்கும். 


இந்தக் கிருமித் தொற்று ஒரு மனிதரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவாது.  


இந்த அமீபா தொற்று - பாக்டீரியா தொற்று போலவே தெரிந்தாலும் 

பாக்டீரியா கொல்லிகள் என்றழைக்கப்படும் ஆண்ட்டிபயாடிக்குகளுக்கு அடங்காது.


இதற்கென பிரத்யேகமான மருந்தாக 

ஆம்ஃபோடெரிசின் - பி என்பது விளங்குகிறது. 

ஆம்... கோவிட் தொற்று ஏற்பட்ட காலத்தில் உப கொள்ளை நோயாக உருவெடுத்த கருப்பு பூஞ்சை ( ம்யூகார் மைகோசிஸ்) தொற்றுக்கு இந்த மருந்து தான் கேட்டது. 


இந்த அமீபா தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதை 

சரியான நேரத்தில் கணித்து 

மூளை தண்டு வட நீரில் இருந்து இந்த அமீபாவைக் கண்டறிந்து 

உடனடியாக ஆம்ஃபோடெரிசின்- பி  சிகிச்சை வழங்கிட வேண்டும். 


தமிழ்நாட்டில் நிக்லேரியா தொற்றுக்கு உள்ளான 47 வயது நபர் ஒருவருக்கு சரியான நேரத்தில் நோய் கண்டறியப்பட்டு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை வழங்கப்பட்டதில் உயிர்பிழைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்த அமீபா மூளையின் முக்கிய மண்டலங்களை தின்று முடிப்பதற்குள் விரைவாகக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பது அத்தனை எளிதல்ல. 


அதனாலேயே இந்த நோயின் இறப்பு உண்டாக்கும் சதவிகிதம் கிட்டத்தட்ட 100% 


இதுவரை உலகில் ஐநூறுக்கும் குறைவான நோயாளிகளே இந்த அமீபா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக மருத்துவ ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. 


இந்தியாவில் ஐம்பதுக்கும் குறைவான ஆதாரங்களே பதிவாகி உள்ளன. 


எனினும் முறையாகப் ஆவணப்படுத்தப்படாத 

ரிப்போர்ட் செய்யப்படாத

அல்லது தவறுதலாக பாக்டீரியாவினால்/ வைரஸினால் ஏற்படும் மூளைக்காய்ச்சல் என்று ஆவணப்படுத்தப்பட்ட நோயர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம். 


இந்தியாவில் இறப்பிற்கான காரணங்களை பிரேதக் கூறாய்வு மூலம் அறிவது மருத்துவ- சட்ட ரீதியான வழக்குகளுக்கு மட்டுமே கட்டாயமாக உள்ளது என்பதால் 

இது போன்ற மூளைக்காய்ச்சல் மரணங்களில் இந்த அமீபா தொற்றின் பங்கு குறித்து நம்மால் சரியான எண்களை அறிய முடியாமல் போகிறது. 


இந்த அமீபா தொற்று  ஏற்படாமல் எப்படி காத்துக் கொள்வது? 


- தேங்கி இருக்கும் குளம் குட்டை கண்மாய் போன்றவற்றின் அடிப்பகுதி சகதியை இயன்றவரை கிளறி விடாமல் குளிப்பது நல்லது


- இத்தகைய தூய்மையற்ற நீரில் மூழ்கிக் குளிப்பதை கட்டாயம் தவிர்த்து விட வேண்டும். இந்த அமீபா மூக்கு துவாரம் வழியாக மட்டுமே மூளையை அடைய முடியும். 


அசுத்தமான தண்ணீரைக் குடிப்பதால் அந்த நோய் ஏற்படுவதில்லை. 


எனவே மூக்குப் பகுதிக்குள் நீர் செல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 


- நீச்சல் குளங்களில் சரியான முறையில் க்ளோரினேற்றம் செய்யப்படுகிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். 

நீச்சல் பயிற்சி செய்யும் போது நோஸ் க்ளிப் அணிந்து கொள்வது சிறந்தது. 


- சில நேரங்களில் அசுத்தமான நீரில் 

மூக்கு துவாரங்களைக் கழுவுவதாலும் இந்த தொற்று பரவக்கூடும். இஸ்லாமியர்கள் - தொழுகைக்கு முன்பு செய்யும் ஒளு எனும் தூய்மை செய்யும் முறையில் மூக்கு நாசிக்குள் நீரை உறிஞ்சி சுத்தப்படுத்துவர். அத்தகைய நீர் தூய்மையானதாக இருக்கிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். 


 - இது போன்ற குளம் குட்டை கண்மாய்களில் குளித்த பத்து நாட்களுக்குள் காய்ச்சல் / தலைவலி / கழுத்துப் பகுதி இறுக்கம் / வலிப்பு  போன்றவை ஏற்படின் தாமதம் செய்யாமல் உடனடியாக மருத்துவமனையில் அட்மிட் ஆகி 

மருத்துவரிடம் தாங்கள் எப்போது? எங்கு? குளித்தோம் என்பதை தெளிவுபடுத்திட வேண்டும். 

இது விரைவில் நோயைக் கண்டறிய உதவும். 


குளம், குட்டைகளில் கண்மாய்களில் நீச்சல் குளங்களில் குளிக்கும் அனைவருக்கும் இந்தத் தொற்று ஏற்படுவதில்லை. 


அரிதிலும் அரிதாகவே இந்தத் தொற்று ஏற்படுகிறது. 


அது அவரவர் எதிர்ப்பு சக்தியைப் பொருத்தும் அமைகிறது. 


எனவே இந்தத் தொற்று குறித்த அதீத அச்சம் தேவையற்றது. 

மாறாக நிறைய விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. 


வளர்ந்த நாடுகளில் இந்த அமீபா குறித்தும் அமீபா வாழும் நீர்நிலைகள் குறித்தும் விழிப்புணர்வு அதிகம் இருக்கும். 


காலநிலை மாற்றங்களுக்கு உட்பட்டு வரும் 

வெப்ப மண்டல நாடான நமக்கும் அத்தகைய விழிப்புணர்வு தேவை என்பதே இந்தப் பதிவின் நோக்கம். 


நன்றி 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

திருவாரூர் மாவட்டத்திற்கு அக்டோபர் 22ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

  உள்ளூர் விடுமுறை 💢💢💢💢💢💢 திருவாரூர் மாவட்டத்திற்கு அக்டோபர் 22ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு முத்துப்பேட்டை தர்கா கந்தூரி விழாவை...