தமிழகத்தில் முதல் மற்றும் இரண்டாம் ஆண்டு கல்லூரி மாணவர்களுக்கு கல்லூரிகள் திறப்பு குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் முக்கிய அறிவிப்பை இன்று வெளியிட்டு உள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக கடந்த வருட மார்ச் மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. பின்னர் தொற்று குறைந்த காரணத்தால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு பள்ளி, கல்லூரிகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் டிசம்பர் மாத மத்தியில் இறுதியாண்டு கல்லூரி மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. பிற ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
முதலாம் ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்களுக்கு நேற்று முதல் தமிழகம் முழுவதும் வகுப்புகள் தொடங்கப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி செயல்பட அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். அதில் பொறியியல், கலை-அறிவியல், பாலிடெக்னிக் உட்பட அனைத்து கல்லூரிகளிலும் முதல் மற்றும் 2ம் ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்குவது குறித்து இன்னும் 2 நாட்களில் அறிவிக்கப்படும் என தெரிவித்து உள்ளார்.
மேலும் கல்லூரிகளில் ஒரு வகுப்பறையில் 30 மாணவர்கள் வீதம், ஒரு நாளைக்கு காலை, மாலை என இரு நேரம் வகுப்புகள் நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் கூறி உள்ளார். ஏற்கனவே முதல் மற்றும் 2ம் ஆண்டு மாணவர்களுக்கு விரைந்து கல்லூரிகளை திறந்து நேரடி வகுப்புகளை தொடங்குமாறு கல்லூரி பேராசிரியர்கள் கோரிக்கை வைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.