கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்



தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்


செந்தில் பாலாஜி வசம் இருந்த மின்சாரத்துறை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கருக்கு, செந்தில்பாலாஜியின் துறைகளில் மின்சாரத் துறை கூடுதலாக ஒதுக்கீடு


வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமிக்கு, செந்தில்பாலாஜி கவனித்து வந்த மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை கூடுதலாக ஒதுக்கீடு


பத்மநாபபுரம் எம்.எல்.ஏ மனோதங்கராஜ் மீண்டும் அமைச்சராகிறார்


அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு வனத்துறை மற்றும் காதி துறை ஒதுக்கீடு. பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக வனத்துறை மற்றும் காதி துறை ஒதுக்கீடு


இன்று மாலை 6 மணிக்கு ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.




2025-2026 பள்ளிக்கல்வித்துறை மானியக் கோரிக்கை அறிவிப்புகள்



2025-2026 பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையில் இன்று (25.04.2025) வெளியிடப்பட்ட பல்வேறு  அறிவிப்புகள்


Various announcements released today (25.04.2025) in the 2025-2026 School Education Department Grant Request



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



14 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 20 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும்.



>>> அறிவிப்புகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



சட்டப்பேரவையில் பள்ளி கல்வித்துறைக்கான புதிய அறிவிப்புகள்:


அரசுப் பள்ளிகளில் 6 - 8ம் வகுப்பு பயிலும் 13 லட்ச மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் மற்றும் கணிதத் திறன்களை மேம்படுத்தும் வகையில் 'திறன் எண்ணும் முனைப்பு இயக்கம்' ரூ.19 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.


பள்ளி நூலகங்கள் வாயிலாக மாணவர்களின் அறிவுத் தேடல் மற்றும் வாசிப்புத் திறன்கள் மேம்படுத்தப்படும்.


கலைத்திருவிழாப் போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவ  மாணவியர்களுக்குக் ”கலைச்சிற்பி” என்ற தலைப்பில் கோடைக்கால சிறப்பு முகாம் நடத்தப்படும்.


தொழிற்பயிற்சி நிலைய ஆய்வகங்கள் வழியாக 12,000 மாணவர்களுக்கு ரூ.13 கோடி மதிப்பீட்டில் திறன் பயிற்சி அளிக்கப்படும்.


10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100% தேர்ச்சிபெறும் அரசுப் பள்ளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.


புதிய தொடக்கப் பள்ளிகள் 13 தொடங்கப்படும், 38 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும். 


மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் அரசுப் பள்ளிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.


தனியார் சுயநிதி மற்றும் பிற வாரியப் பள்ளிகளில் பணிபுரியும் தமிழ் ஆசிரியர்களுக்கு ரூ.4.94 லட்சம் மதிப்பீட்டில் பயிற்சி வழங்கப்படும்.


 ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அரசின் துறைத் தேர்வுகளுக்கான நூல்கள் வெளியிடப்படும்.


 ரூ.30 கோடி மதிப்பீட்டில் நூலகக் கட்டடங்கள் மறுகட்டமைப்பு செய்யப்படும்.


அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் கருத்தரங்கக்கூடம் அமைக்கப்படும்.


இசைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் உயர்கல்வியில் சேர்க்கை பெறும் வகையில் 10,12ம் வகுப்புகளுக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும்.


மாணவியின் பொய்யான பாலியல் புகாரால் சிதைந்து திசைமாறிய ஆசிரியரின் வாழ்க்கை - 7 ஆண்டுகளுக்கு பிறகு கணவருடன் வந்து மன்னிப்பு கேட்ட மாணவி



மாணவியின் பொய்யான பாலியல் துன்புறுத்தல் புகாரால் சிதைந்து திசைமாறிய ஆசிரியரின் வாழ்க்கை - 7 ஆண்டுகளுக்கு பிறகு கணவருடன் வந்து மன்னிப்பு கேட்ட மாணவி


Teacher's life was shattered and turned upside down by student's false sexual abuse complaint - Student came back with her husband and apologized after 7 years


கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்தவர் ஜோமோன் என்பவர் ஆசிரியர் ஆவார். இவர் பாராமெடிக்கல் கல்வி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இவர் மீது மாணவி ஒருவர் பொய்யான பாலியல் புகார் அளித்தார்.இந்த புகாரினால் அவரது நிறுவனம் மூடப்பட்டது. சிறைக்கு போனார். குடும்பமும் அவரை விரட்டிவிட்டது. இதனால் ஆசிரியர் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் ஏழு ஆண்டுகளுக்கு பின்னர் கணவருடன் வந்து அந்த மாணவி மன்னிப்பு கேட்டார்


கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த 45 வயதாகும் ஜோமோன் ஆசிரியர் ஆவார். இவரது வாழ்க்கை 2017ஆம் ஆண்டு சிறப்பாக போய் கொண்டிருந்தது. இவர் குருப்பந்தரை என்ற இடத்தில் பாராமெடிக்கல் கல்வி நிறுவனம் நடத்தி வந்தார். அந்த நிறுவனத்தில் கொச்சியை சேர்ந்த ஒரு மாணவி படித்து வந்தார். கடந்த 2017ஆம் ஆண்டு கொச்சியைச் சேர்ந்த மாணவி, ஜோமோன் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக குருப்பந்தரை போலீசில் புகார் கொடுத்தார்.


ஆசிரியர் கைது

இதை சரியாக விசாரிக்காத போலீசார், மாணவி புகார் அளித்துவிட்டார் என்ற ஒற்றை காரணத்தையும், உறவினர்கள், நண்பர்கள் ஆவேசப்படுகிறார்கள் என்பதற்காகவும் ஜோமோனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பாலியல் புகாரில் ஜோமோன் சிக்கியதால் அவரது நிறுவனம் நிரந்தரமாக மூடப்பட்டது. இதனால் அவரது குடும்பம் ஒரே நாளில் ஏழ்மைக்கு போனது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் வேறு வேலைகளுக்கு சென்று விட்டனர்.


ஜாமீனில் வந்தார்

அதன்பின்னர் ஜாமீனில் வெளிவந்த ஜோமோன் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அவரது குடும்பத்தினர் அவரை ஏற்க மறுத்து விட்டார்கள். இதனால் குடும்பத்தை பிரிந்த ஜோமோன், தனிமையில் வாடினார். இதைத்தொடர்ந்து அவர் மாற்று வேலை செய்து ஏழ்மை நிலையில் வாழ்க்கையை கழித்து வந்தார்.


திருமணம் நடந்தது

இதற்கிடையே புகார் கொடுத்த மாணவிக்கு திருமணமானது. அவர் தனது கணவருடன் சந்தோஷமாக வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் பாலியல் புகாரால் ஆசிரியர் ஜோமோன் ஏழ்மையின் எல்லைக்கு சென்று விட்டது குறித்து மாணவிக்கு தெரியவந்தது. தன்னால் தான் இப்படி நடந்தது என்று மிகுந்த மனவேதனை அடைந்தார்.


மன்னிப்பு கேட்டார்

இதையடுத்து அந்த மாணவி நேற்று முன்தினம் ஜோமோனின் குடும்ப தேவாலயத்திற்கு கணவருடன் சென்று திருப்பலிக்கு இடையே ஆசிரியர் ஜோமோன் மற்றும் உறவினர்களிடம் மன்னிப்பு கேட்டார். அப்போது அந்த மாணவி, மற்றவர்களின் தூண்டுதலின்பேரில் பொய் புகார் கூறியதாகவும், ஆசிரியர் ஜோமோன் நிரபராதி என்றும் கண்ணீர் மல்க தெரிவித்தார்.


நீதிபதியிடம் வாக்குமூலம்

அத்துடன் நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் ஆஜராகி ஜோமோன் மீது சிலரின் தூண்டுதலால் பொய் புகார் கொடுத்ததாக வாக்குமூலம் கொடுத்து மன்னிப்பு கேட்டார். அத்துடன் தனது புகாரையும் வாபஸ் பெற்றார். இதைதொடர்ந்து ஜோமோனை இந்த வழக்கில் இருந்து கோர்ட்டு விடுவித்தது. இதுகுறித்து ஆசிரியர் ஜோமோன் கூறுகையில், 'என் மீதான பாலியல் புகாரில் நான் நிரபராதி என விடுவிக்கப்பட்டுள்ளேன். இதனை அறிந்ததும் என்னுடைய குடும்பத்தினரும் என்னை ஏற்றுக் கொண்டனர்' என்று கூறினார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பேசு பொருளாக மாறி இருக்கிறது.


பொய் புகார்கள்

ஒரு மாணவி புகார் அளித்துவிட்டாலே ஒரு ஆசிரியரை பாலியல் குற்றவாளி என்று அறிவிப்பது எந்த வகையிலும் ஏற்க முடியாத ஒன்றாக இருப்பதாக பல ஆசிரியர்கள் இந்த செய்தியைப் பகிர்ந்து நியாயம் கேட்டு வருகிறார்கள். ஏனெனில் சரியாகப் படிக்காத மாணவியை படிக்க சொல்லி கண்டிக்கும் ஆசிரியர்கள் மீது பாலியல் புகார் அளிப்பது ஆங்காங்கே நடக்கிறது. கண்டித்த ஒரே காரணத்திற்காக ஆசிரியர்களின் நேர்மை, சமூகத்தில் அந்தஸ்து, நற்பெயர் என எல்லாமே போய்விடுகிறது.


போக்சோ வழக்கு

பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை பாலியல் குற்றவாளிகளாகவே ஊடகங்களும் சித்தரிப்பதும் இதற்கு காரணம். போக்சோ வழக்கிலும் பொய்யான புகார் அளிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு உள்ளது. காதல் கைகூடாத போது, பொய்யான புகார் அளிப்பதும் நடக்கிறது. யார் மீது வேண்டுமானாலும் போக்சோ வழக்கில் புகார் அளித்து உள்ளே தள்ள முடியும். சிறுமிகள் யார் மீது தவறான குற்றச்சாட்டை கூறி புகார் அளித்தாலும், அவர் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டியது வரும். ஏனெனில் சட்டம் அந்த அளவிற்கு பெண்களுக்கே சாதகமாக உள்ளது. போக்சோ வழக்கும், பாலியல் வழக்கும் அப்பாவிகளை பழிவாங்கும் கருவிகளாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த இரண்டையும் அப்பாவிகள் பாதிக்காத அளவிற்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.



திருக்குவளையில் உள்ள கலைஞர் படித்த பள்ளியிலிருந்து பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை உரையை எழுதத் தொடங்கினார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்

 


திருக்குவளையில் உள்ள கலைஞர் படித்த பள்ளியிலிருந்து பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை உரையை எழுதத் தொடங்கினார் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள்




ஏப்ரல் 24ஆம் தேதி சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ள பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை உரையை திருவாரூர் மாவட்டம் திருக்குவளையில் உள்ள கலைஞர் படித்த பள்ளியிலிருந்து எழுதத் தொடங்கினார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்



JEE - 2ஆம் கட்ட முதன்மை தேர்வு முடிவுகள் வெளியீடு


JEE - 2ஆம் கட்ட முதன்மை தேர்வு முடிவுகள் வெளியானது


↔️ பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளில்  சேர்வதற்கான JEE-2ம் கட்ட முதன்மை தேர்வு முடிவுகள் வெளியானது


↔️ 24 மாணவர்கள் 100% மதிப்பெண்,  தமிழக அளவில் பிரதீஷ் காந்தி என்ற மாணவர் முதலிடம்


நாய் கடித்து பள்ளி மாணவன் உயிரிழப்பு

 


நாய் கடித்து பள்ளி மாணவன் உயிரிழப்பு 


Schoolboy dies after being bitten by dog


தெரு நாய் கடித்து 8ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு


ஸ்ரீபெரும்புதூர் அருகே தெரு நாய் கடித்து 8ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வடக்குப்பட்டு ஊராட்சி புதிய காலனி பகுதியை சேர்ந்தவர் சிவசங்கர். இவருடைய மகன் விஸ்வா (13). அரசு உயர்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

 

இதனிடையே கடந்த 7 ஆம் தேதி வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த போது விஸ்வாவை நாய் கடித்துள்ளது. இதன் காரணமாக அவரது பெற்றோர்கள் ரெட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்று சிகிச்சை மேற்கொண்டுள்ளனர்.



இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் விஷ்வாவிற்கு வயிற்றுவலி மற்றும் தலைவலி ஏற்பட்டதால் பெற்றோர்கள் ஒரகடம் அருகே மாத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு சிறுவனை அழைத்துச்சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், விஸ்வா சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஒரகடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



தெருநாய்களுக்கு உணவு வைப்பதையும், அவற்றின் அதீத பெருக்கத்துக்கு துணையாக இருப்பதையும் சில பணக்காரர்கள் பெருமையாக கருதுகின்றனர். அவர்கள் காரில் செல்வதால் ஏழை எளிய நடுத்தர வர்க்க மக்கள் நடந்தும், இரு சக்கர வாகனங்களிலும் செல்லும் பொழுது, தெரு நாய்களால் துரத்தப்பட்டும், கடிபட்டும் துன்பப் படுவதைக் குறித்து அவர்கள் கவலை கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டினை சமூக ஆர்வலர்கள் எழுப்புகின்றனர். 


ஆகவே, அரசு தெருநாய்களுக்கு உணவு வைப்போரை அவற்றின் பராமரிப்பு செலவுகளை ஏற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தெருநாய்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


உள்ளூர் விடுமுறை ஈடு செய் வேலை நாள் மாற்றம்


உள்ளூர் விடுமுறை ஈடு செய் வேலை நாள் மாற்றம்


Local holiday compensation working day change


 நார்த்தாமலை தேர் விடுமுறை ஈடு செய் வேலை நாள் 26-04-2025 ஆம் தேதிக்கு மாற்றம்



பள்ளிக்கல்வித்துறைக்கு சாதனையாளர் விருது வழங்கியது இந்திய தனித்துவ அடையாள ஆணையம்

 


தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறைக்கு சாதனையாளர் விருது வழங்கியது ஒன்றிய அரசின் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் UIDAI


The Union Government's Unique Identification Authority of India presented the Achievement Award to the School Education Department of the Government of Tamil Nadu.


பள்ளிகளில் மாணவர்களின் ஆதார் பதிவை துல்லியமாக மேற்கொண்டதில் தமிழ்நாடு முதலிடம் - மத்திய அரசின் UIDAI பாராட்டு




ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநிலத் திட்ட இயக்ககம் இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்திடமிருந்து 770 ஆதார் பதிவுக் கருவிகளைக் கொள்முதல் செய்து, தமிழ்நாடு மின்னணு நிறுவனத்திடம் (ELCOT) ஒப்படைத்துள்ளது. தமிழ்நாடு மின்னணு நிறுவனம் ஆதார் பதிவுகளை மேற்கொள்வதற்கு தேவையான ஆதார் தரவு உள்ளீட்டாளர்களைத் தெரிவு செய்து அவர்களுக்கு பயிற்சியினை வழங்கி அனைத்து மாவட்டங்களிலும் ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது. “பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு” எனும் இத்திட்டம் 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி கோயம்புத்தூர் மாவட்டம் காளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களால் துவக்கிவைக்கப்பட்டது. இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அரசாணை எண்.72 நாள்.11.03.2024-ல் வெளியிடப்பட்டது.


இத்திட்டமானது தொடர்ந்து 2024-25-ஆம் கல்வியாண்டில் ஆதார் பதிவு மேற்கொள்பவர்களைக் கொண்டு இப்பணி அனைத்துப் பள்ளிகளிலும் மேற்கொள்ளப்பட்டது. இதன் வாயிலாக நாளது வரை ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் மேற்கொள்ளப்பட்டுள்ள விவரம் பின்வருமாறு.


பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் மொத்த எண்ணிக்கை: 1,12,81,426


ஆதார் புதிய பதிவு மேற்கொள்ளப்பட்டவர்கள் எண்ணிக்கை:13,437


கட்டாய பயோமெட்ரிக் புதுப்பித்தல் மேற்கொள்ளப்பட்டவர்கள் எண்ணிக்கை : 16,06,961


ஏற்கெனவே புதுப்பித்தல் மேற்கொள்ளப்பட்டவர்களில் கண்டறியப்பட்டவர்கள் : 62,25,210


ஒட்டுமொத்த மாணவர் எண்ணிக்கையில் 70 சதவீத மாணவர்களுக்கு புதிய ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிகழ்வானது இத்திட்டத்திற்கு ஒரு மைல்கல் ஆகும்.


​பள்ளிக் குழந்தைகளின் நலனிற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கிடுவதுடன் “பயிலும் பள்ளியிலேயே ஆதார்” என்ற இச்சிறப்புத்திட்டத்தின் வாயிலாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் எவரும் அழைக்கப்படாமல் அவரவர் பயிலும் பள்ளியிலேயே இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, சிறந்த இலக்கினை தமிழ்நாடு மட்டுமே எட்டியுள்ளது. இந்த சாதனையை பாராட்டி இந்திய அரசின் தனித்துவ அடையாள ஆணையமானது தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கு “சாதனையாளர் விருது” வழங்கி கௌரவித்துள்ளது.




வரலாற்றில் முதல் முறையாக தமிழ்நாடு அரசின் வழக்கில், குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிர்ணயித்தது உச்சநீதிமன்றம்


வரலாற்றில் முதல் முறையாக தமிழ்நாடு அரசின் வழக்கில், குடியரசுத் தலைவருக்கு காலக்கெடு நிர்ணயித்தது உச்சநீதிமன்றம்


ஆளுநர் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க வேண்டும் என உத்தரவு


மாநில மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் முடிவு: குடியரசுத் தலைவருக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு


மாநில மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் முடிவு எடுக்கப்பட வேண்டும் என குடியரசு தலைவருக்கு காலக்கெடு நிர்ணயித்துள்ள உச்சநீதிமன்றம், முடிவெடுப்பதற்கு முன் உச்சநீதிமன்றத்தை அணுகுவது விவேகமானது என்று தெரிவித்துள்ளது.


தமிழ்நாடு அரசு அனுப்பிய மசோதாக்கள் மீது முடிவெடுக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்துவதாக அவருக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் கடந்த 8ஆம் தேதி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயித்து உத்தரவிட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, "சட்டப்பேரவை நிறைவேற்றிய ஒரு மசோதாவை நிறுத்திவைத்து குடியரசுத் தலைவருக்கு அனுப்ப ஆளுநர் முடிவு செய்தால் அது தொடர்பாக அமைச்சரவை ஆலோசனைப்படி ஒரு மாத காலத்துக்குள் ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும்.


அமைச்சரவையின் ஆலோசனைக்கு புறம்பாக அந்த மசோதாக்களை நிறுத்திவைப்பதாக இருந்தால், ஆளுநர் அதிகபட்சமாக 3 மாதங்களுக்குள் அவற்றை திருப்பி அனுப்ப வேண்டும். அதேவேளை அந்த மசோதாக்கள் மாநில சட்டப்பேரவையில் மறுநிறைவேற்றம் செய்யப்பட்டு மீண்டும் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டால் அந்த மசோதாக்கள் மீது ஒரு மாதத்துக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும். மசோதாக்கள் குடியரசு தலைவருக்கு ஆளுநரால் பரிந்துரைக்கப்படுமானால் அவற்றின் மீது குடியரசு தலைவர் 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்” என தீர்ப்பளித்தது.


மசோதாக்கள் மீது சட்ட ஆலோசனையை உச்சநீதிமன்றத்திடம் கேட்க குடியரசுத் தலைவருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. மாநில ஆளுநர்களுக்கு கிடையாது. இதை சுட்டிக்காட்டியுள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள், “ஆளுநர்கள் மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்தால், அவர் உச்ச நீதிமன்றத்திடம் ஆலோசனை பெறுவது விவேகமானது. அரசியலமைப்பின் பிரிவு 143இன் கீழ் ஒரு மசோதா குறித்த சட்ட ஆலோசனையை குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்றத்திற்கு பரிந்துரைப்பது கட்டாயம் அல்ல. என்றபோதிலும், விவேகமான ஒரு நடவடிக்கையாக, குடியரசுத் தலைவர் உச்சநீதிமன்றத்தின் கருத்தைப் பெற வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். ஆளுநர் மசோதாக்களை அரசியலமைப்பு நீதிமன்றங்களுக்கு பரிந்துரைப்பதற்கான வழிமுறை மாநில அளவில் இல்லாததால் இது மிகவும் அவசியமானது.” என்று தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.


மேலும், "ஒரு மசோதா சட்டமாக மாறுவதற்கு முன்பு அதன் அரசியலமைப்பு செல்லுபடியாகும் தன்மை குறித்து கருத்து தெரிவிக்கும் அதிகாரம் அரசியலமைப்பு நீதிமன்றங்களுக்கு உண்டு. ஒரு தவறான மசோதா சட்டமாக மாறினால் இயற்கையாகவே பல்வேறு சிக்கல்கள் ஏற்படும். எனவே, முன்கூட்டியே அத்தகைய ஒரு சட்டம் இயற்றப்படாமல் தடுக்கப்படுமானால் அது நேரத்தையும் பொது வளங்களையும் மிச்சப்படுத்தும். மேலும், பொருத்தமான திருத்தங்களை சட்டமன்றம் மேற்கொள்வதற்கும் வாய்ப்பும் கிடைக்கும்.” என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.


அரசு ஊழியர்கள் அரசின் முன் அனுமதி பெற்று புத்தகம் எழுதலாம்



 அரசு ஊழியர்கள் அரசின் முன் அனுமதி பெற்று புத்தகம் எழுதலாம்


அரசு ஊழியர்கள் அரசின் முன் அனுமதி பெற்று புத்தகம் எழுதலாம். ஆனால் அதில், அரசை விமர்சிக்க கூடாது' என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து, தலைமை செயலர் முருகானந்தம் உத்தரவை பின்பற்றி, ஆசிரியர்கள் உள்ளிட்ட பள்ளிக்கல்வி சார்ந்த அதிகாரிகளுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நுாற்றாண்டை முன்னிட்டு, அரசு ஊழியர்களின் எழுதும் திறனை அரசு அங்கீகரிக்கிறது. எழுதும் திறமையுள்ளோர் இலக்கியம், சிறுகதை, நாடகம், கட்டுரை, கவிதை, அரசின் கொள்கைகள், துறை சார்ந்த விளக்கங்கள் அடங்கிய நுால்களை எழுதும் முன், அரசின் அனுமதியை பெற வேண்டும்.


அதேபோல, அரசின் மீதான விமர்சனமோ, எதிரான கருத்துக்களோ, தாக்குதலோ இடம் பெறாது; மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் கருத்துக்கள் இடம் பெறாது என்ற நிபந்தனையுடன் கூடிய முன் அனுமதி பெறாமல், கலைப்பணிகளில் ஈடுபடவோ, புத்தகத்தை வெளியிடவோ கூடாது.


அத்துடன், முன் அனுமதி பெறாமல், வெளியீட்டாளரிடம் இருந்து ஊதியமோ, காப்புரிமை தொகையோ பெறக்கூடாது. புத்தகத்தை விற்பனை செய்வதற்கோ, ஊக்குவிப்பதற்கோ தன் நேரத்தையும், அரசாங்க செல்வாக்கையும் பயன்படுத்தக் கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தமிழில் பொறியியல், மருத்துவப் படிப்புகள்: முதலமைச்சருக்கு தமிழ் அறிஞர்கள் வேண்டுகோள்

 

 

தமிழில் பொறியியல், மருத்துவப் படிப்புகள்: முதலமைச்சருக்கு தமிழ் அறிஞர்கள் வேண்டுகோள்


பொறியியல், மருத்துவப் படிப்புகளை தமிழில் கொண்டுவர வேண்டும். தமிழ் வழியில் படிப்போருக்கு கட்டணச் சலுகை மற்றும் வேலைவாய்ப்பு உறுதியை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்' என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு வலியுறுத்தி 34 தமிழறிஞர்கள், ஊடகவியலாளர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.


இது தொடர்பாக தமிழ் எழுச்சிப் பேரவை செயலாளர், முனைவர் பா.இறையரசன் உள்ளிட்ட தமிழறிஞர்கள், முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எழுதிய கடிதத்தில், 'தமிழுக்காக தங்களின் ஆக்கப்பூர்வமான பணிகளுக்குப் பாராட்டுகள். தங்களால் கொண்டு வரப்பட்ட பள்ளி, கல்லூரிகளில் தமிழ் ஒரு பாடமாக இருப்பது கட்டாயம், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் ஒதுக்கீடு ஆகிய திட்டங்களைப் பாராட்டுகிறோம். பொறியியல், மருத்துவம் ஆகிய பட்டப்படிப்புகளைத் தமிழில் பயிற்றுவிக்க வேண்டும்.


தமிழ்நாட்டில் முன்பே பொறியியல், மருத்துவம் தமிழ் வழிக்கல்வி முயற்சிகள் நடந்து, பொறியியலில் ஓரளவு தமிழ் நூல்கள் உள்ளன. ஆங்கில நூல்கள் வைத்துப் பாடம் நடத்தினால், உடனே துணை நூல்கள் தர அறிவியல் அறிஞர்களும் பதிப்பகங்களும் தயாராக உள்ளனர். பொறியியலில் கலைஞர் கருணாநிதி அவர்கள் பெருமுயற்சி எடுத்து கொண்டு வந்த இரண்டு படிப்புகள் மட்டும் உள்ளன; அவற்றில் 90 சதவீதம் வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன என்று கூறுகின்றனர். இதுவே நல்ல வெற்றி.


எனவே, வரும் கல்வியாண்டில் பொறியியல், மருத்துவ படிப்புகளை தமிழில் பயில முன்வரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 50 சதவீதம் கட்டணத் தள்ளுபடியும், வேலைவாய்ப்பு உறுதியும் கொடுத்து நடைமுறைப்படுத்த வேண்டுகிறோம்" என்று தெரிவித்துள்ளனர்.


அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதை ஏற்க முடியாது - அலுவலர்களுக்கு உயர்நீதிமன்றம் கண்டிப்பு


சிலரை மகிழ்விக்க அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதை ஏற்க முடியாது - அலுவலர்களுக்கு உயர்நீதிமன்றம் கண்டிப்பு


Misuse of power to please a few is unacceptable - High Court reprimands officials


 அதிகாரிகள் தங்களது அதிகாரத்தை நேர்மையான, உண்மையான, உரிய காரணங்களுக்காக பயன்படுத்தப்பட வேண்டும். அந்த அதிகாரத்தை யாரையோ மகிழ்விப்பதற்காக பயன்படுத்தினால் ஏற்க முடியாது என உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.


தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் வட்டாரக் கல்வி அலுவலக கண்காணிப்பாளராக பணிபுரிபவர் நீலநாராயணன். இவர் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டைக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். இதை ரத்து செய்யக் கோரி நீலநாராயணன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். 


இதனை விசாரித்து நீதிபதி பட்டு தேவானந்த் பிறப்பித்த உத்தரவு : மனுதாரர் தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலக கண்காணிப்பாளராக பணிபுரிந்த போது, சில ஆசிரியர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டதில் தவறு இருப்பதால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளார்.

 

அதன் பின்னர் நடந்த விசாரணையில் மனுதாரர் கூறியது உறுதி செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் மோசடியில் தொடர்புடைய ஆசிரியர்கள் மனுதாரருக்கு பல்வேறு பிரச்சினைகள் கொடுத்து வந்துள்ளனர். தூத்துக்குடி மாவட்ட புதிய முதன்மைக் கல்வி அலுவலர் பொறுப்பேற்றதும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியை சேர்ந்தவர்கள் புகார் அளித்துள்ளனர்.


இந்தப்புகாரை பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் விசாரிக்காமல் மனுதாரரை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் தாக்கல் செய்த பதில் மனுவில், மனுதாரர் மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்யும் வகையில் எந்த விவரங்களும் இல்லை எனக் கூறப்பட்டிருந்தது. அரசு தரப்பில், “மனுதாரருக்கு எதிராகக் குற்றம் சுமத்திய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், நிர்வாகத்தை சுமூகமாக்கும் நோக்கில் மனுதாரர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்” எனத் தெரிவிக்கப்பட்டது.


மனுதாரர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், யாரை திருப்திப்படுத்த பள்ளிக்கல்வி துறையின் இணை இயக்குனர் அவசரமாக பணியிட மாற்ற உத்தரவைப் பிறப்பித்தார் என்பதையும், அதற்கான அவசரத் தேவை என்ன? என்பதையும் நீதிமன்றத்தால் புரிந்து கொள்ள இயலவில்லை. ஆசிரியர்களோடு இணக்கமான உறவை மேற்கொள்ளவில்லை என்பதற்காக பணியிட மாற்றம் செய்யும் உத்தரவு மிகவும் விசித்திரமாக உள்ளது.


நெல்லை, தூத்துக்குடி மாவட்ட ஆசிரியர்களுடன் மனுதாரரால் இணக்கமான உறவைப் பேண இயலவில்லை எனில் திருப்பத்தூர் மாவட்ட ஆசிரியர்களுடன் மட்டும் அது எப்படி சாத்தியமாகும்? உரிய காரணங்களுக்காக பணியிட மாற்றம் செய்யப்பட்டால், அதில் நீதிமன்றம் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. அதிகாரத்தை நேர்மையாக, உண்மையான, உரிய காரணத்துடன் பயன்படுத்தப்பட வேண்டும். அதிகாரத்தை யாரையோ மகிழ்விப்பதற்காக பயன்படுத்தினால் அது ஏற்கத்தக்கது அல்ல.


எந்த ஊழியரையும் நீதியின்றி காயப்படுத்தக் கூடாது. அது அவரை மட்டும் அல்லாமல் அவரது குடும்பத்தினரையும் காயப்படுத்தும். ஊழல், தவறான நோக்கத்தில் செயல்படும் ஊழியர்களுக்கு பணியிட மாற்றம் வழங்க எந்த தயக்கமும் தேவையில்லை. சில ஊழியர்களை துன்புறுத்தும் நோக்கில் பணியிட மாறுதல் அதிகாரம் பயன்படுத்தப்படக் கூடாது. இந்த வழக்கில் மனுதாரரை இடமாற்றம் செய்த உத்தரவு நீதியற்றது.


ஊழியர்கள் அல்லது சங்கங்களால் அளிக்கப்படும் புகார்கள் அல்லது அவர்களால் நடத்தப்படும் போராட்டங்களின் முழு விவரத்தையும் விரிவாக ஆராயாமல் இடமாறுதல் வழங்கியதாக கூறப்படும் காரணங்களை ஏற்க இயலாது. இதுபோன்ற நடைமுறைகள் அனுமதிக்கப்பட்டால், எந்த அரசு ஊழியரும் நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் பணியாற்ற முடியாது. எனவே, பள்ளிக்கல்வித்துறையின் இணை இயக்குனர் மனுதாரரை பணியிட மாற்றம் செய்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்


வெயிலின் தாக்கம் அதிகரிப்பு - மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

 


வெயிலின் தாக்கம் அதிகரிப்பு - மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - மாவட்ட ஆட்சியர் செய்தி வெளியீடு 


வேலூர் மாவட்டத்தில் 5 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும் என்பதால் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் - ஆட்சியர் சுப்புலட்சுமி அறிவுறுத்தல்





ஆசிரியர் தகுதித் தேர்வு நிலைப்பாட்டில் தமிழ்நாடு அரசு இரட்டை வேடம் - சிறுபான்மையினர் பள்ளி நிர்வாகிகள் அதிருப்தி



ஆசிரியர் தகுதித் தேர்வு நிலைப்பாட்டில் தமிழ்நாடு அரசு இரட்டை வேடம் - சிறுபான்மையினர் பள்ளி நிர்வாகிகள் அதிருப்தி - நாளிதழ் செய்தி 


Tamil Nadu government's double standard in Teacher Eligibility Test - minority school correspondents unhappy


"ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) குறித்து தமிழ்நாடு அரசு இரட்டை வேடம் போடுகிறது," என சிறுபான்மையினர் பள்ளி நிர்வாகிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.


மத்திய அரசின் அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம் 23.8.2010 முதல் நடைமுறைக்கு வந்தது. அதன் கீழ் அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனங்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு டி.இ.டி. (TET) தேர்வு கட்டாயமாக்கப்பட்டது.


ஆனால், தமிழகத்தில் உள்ள சிறுபான்மையினர் (மைனாரிட்டி) பள்ளிகள் TET விலக்கு பெற்றிருந்தன.


இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட ஒரு வழக்கில், அரசு பள்ளி ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேவை என உத்தரவு வழங்கப்பட்டது. இதில், சிறுபான்மையினர் பள்ளிகள் விலக்கு பெறும் வகையில் தனியாக வகைப்படுத்தப்பட்டன.


பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதால், பல ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு வழக்குகள் தொடரப்பட்டது. சில வழக்குகள் உச்ச நீதிமன்றத்திலும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.


அப்போது, தமிழ்நாடு அரசு சார்பில் “ஆசிரியர் பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேவையில்லை; அது பணி நியமனங்களுக்கு மட்டுமே உண்டு” என மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.


வழக்குகள் நீடித்ததால், கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு நிறுத்தப்பட்டிருந்தது.


ஆசிரியர் சங்கங்கள் நடத்திய போராட்டங்களால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. அதன் பின்னர், தமிழ்நாடு அரசு தானாகவே மேல்முறையீட்டை திரும்ப பெற்றது.


இந்த நிலையில், மதுரை உயர்நீதிமன்றத்தில் நடந்த மற்றொரு வழக்கில், உதவிபெறும் சிறுபான்மையினர் பள்ளிகள் உட்பட அனைத்து வகை கல்வி நிறுவனங்களுக்கும் ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் என உத்தரவு வழங்கப்பட்டது.


இதனால் இதுவரை ஆசிரியர் தகுதித் தேர்வு விலக்கு பெற்றிருந்த சிறுபான்மையினர் பள்ளிகளின் ஆசிரியர் நியமனங்கள் சந்தேகத்திற்குள்ளாகி உள்ளது.


தொடரும் குழப்பங்கள்


இதைப் பற்றி தமிழ்நாடு அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பு செயல் தலைவர் கனகராஜ் கூறியதாவது:


> "இவ்விஷயத்தில், தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் ஒரு நிலைப்பாடு, உயர்நீதிமன்றத்தில் வேறு ஒரு நிலைப்பாடு எடுத்துள்ளது. மேல்முறையீட்டை திரும்ப பெற்ற பிறகும், அதனைத் தொடர்ந்து பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை கல்வித்துறை அதிகாரிகளுக்கு அரசு தெளிவாக வழிகாட்டவில்லை.


> இதனால், மேல்முறையீட்டிற்கு முந்தைய நிலையைத் தொடர்ந்து கல்வித்துறை செயல்பட்டது. அதேபோல், மதுரை உயர்நீதிமன்ற வழக்கிலும் அதிகாரிகள் அந்த நிலைப்பாட்டையே பின்பற்றினர்.


> அரசின் இரட்டை வேட நிலைப்பாட்டால், சிறுபான்மையினர் பள்ளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன," எனக் குறிப்பிட்டார்.


ஆளுநருக்கு என தனி விருப்புரிமை இருக்க முடியாது - சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு






 அமைச்சரவையின் ஆலோசனைப் படியே ஆளுநர் செயல்பட முடியும் - ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்ட அனைத்து மசோதாக்களும் ஒப்புதல் அளித்ததாகக் கருதப்படும் - சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு


The Governor can only act on the advice of the Cabinet - All bills suspended by the Governor will be deemed to have been approved - Supreme Court makes a sweeping ruling using special powers


அனைத்து மசோதாக்களுக்கும் ஒப்புதல் - ஆளுநர் துணைவேந்தர்களை நியமிக்க முடியாது -   உச்சநீதிமன்றம்


ஆளுநர் ரவி நிறுத்திவைத்த 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


ஆளுநர் மீதான வழக்கு 


தமிழக அரசால் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்பதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவது கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது.


குறிப்பாக பல்கலைக்கழக வேந்தராக முதல்வரை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றியுள்ளது. ஆனால், அதனை ஆளுநர் ஆர்.என்.ரவி இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது.


தற்போது இந்த வழக்கில், ஆளுநர் ரவி நிறுத்தி வைத்த, திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளித்ததாக கொள்ளப்படும். ஆளுநர் அனுப்பிய மசோதாக்கள் மீதான ஜனாதிபதியின் நடவடிக்கையும் செல்லாது. அரசமைப்பு சாசனம் 200-வது பிரிவின் படிதான் ஆளுநர் செயல்பட வேண்டும்.


உச்சநீதிமன்ற தீர்ப்பு

மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது குறித்து ஆளுநர்கள் ஒரு மாதத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. அமைச்சரவை ஆலோசனைபடியே ஆளுநர்கள் செயல்பட வேண்டும். ஆளுநருக்கு என பொதுவாக தனி விருப்புரிமை இருக்க முடியாது.


மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்ததை ஏற்க முடியாது. மசோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதே பல்வேறு தீர்ப்புகளில் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதன்மூலம், தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டத் திருத்த (2வது) மசோதா உட்பட 10 மசோதாக்களுக்கு உச்சிநீதிமன்றம் ஒப்புதல் அளித்திருப்பதால், ஆளுநருக்கு பதிலாக மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின் இனி பல்கலைக்கழகங்களின் வேந்தராக செயல்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.



வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.853 ஆக உயர்வு - மத்திய அரசு அறிவிப்பு


வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.853 ஆக உயர்வு - மத்திய அரசு அறிவிப்பு


Domestic cooking gas cylinder price hiked to Rs. 853 - Central Government announcement


நள்ளிரவு முதல் நாடு முழுவதும் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு


மானிய விலையில் வீட்டு உபயோகத்திற்கான சமையல் சிலிண்டர் பெறுபவர்களுக்கு 853 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவை சந்தித்துள்ள நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையுமென எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ. 2 மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதேவேளை, கலால் வரி உயர்த்தப்பட்டபோதும் பெட்ரோல், டீசல் விலையில் உயர்வு இருக்காது என்று எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.


கலால் வரி உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது சமையல் எரிவாயு உருளை விலையையும் மத்திய அரசு உயர்த்தியுள்ளது. அதன்படி, வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் 50 ரூபாய் விலை உயர்த்தப்படுவதாக மத்திய பெட்ரோலியத்துறை மந்திரி ஹர்தீப் சிங் பூரி இன்று அறிவித்துள்ளார்.


அதன்படி, விலை உயர்வு அடிப்படையில் மானிய விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுபவர்களுக்கு சிலிண்டர் 853 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. அதேபோல், உஜ்வாலா திட்டத்தின் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் பெறுபவர்களுக்கு சிலிண்டர் 550 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


கலால் வரி அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

5ஆம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை



 5ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை


சென்னை பல்லாவரம் அடுத்த பொழிச்சலூர் எம்.ஜி.ஆர். நகர் மூர்த்தி தெருவைச் சேர்ந்தவர் லாசர். இவரது மகள் ரோஷினி (10 வயது). இவர், பொழிச்சலூர் ஊராட்சி பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார். இவரது தாய் கவுசல்யா வேலைக்கு சென்று வருகிறார். அவர் வேலைக்கு சென்று விட்டு வருவதற்குள் வீட்டு வேலைகளை செய்து வைக்கும்படி மகள் ரோஷினியிடம் கூறிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் ரோஷினி, வீட்டு வேலைகள் எதுவும் செய்யாமல் இருந்ததாக தெரிகிறது.


இதனால் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தால் தனது தாய் தன்னை அடிப்பாரோ? என பயந்த மாணவி ரோஷினி, தனது தம்பி கண் எதிரேயே வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. இதுபற்றி சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


7000 கிராமங்களில் கைம்பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் முடிவுக்கு வந்ததாக அறிவிப்பு




மகாராஷ்டிராவில் சுமார் 7000 கிராமங்களில் கைம்பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் முடிவுக்கு வந்ததாக அறிவிப்பு


Maharashtra declares end to oppression of widows in around 7000 villages


       சமூக மாற்றம்


* மகாராஷ்டிராவில் சுமார் 7000 கிராமங்களில் கணவனை இழந்த கைம்பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள் முடிவுக்கு வந்துள்ளன. கிராம சபைகள் மூலம் இதற்கான அறிவிப்பு வெளியீடு


* கோயில் பூஜைகள், திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளில் கைம்பெண்கள் கலந்துகொள்வதை தடுக்கக் கூடாது எனவும்,


* இதற்காக கிராமங்களில் கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிப்பு


பெரியார் உள்ளிட்ட சமூக சீர்திருத்தவாதிகளின் முயற்சிகளால் 70 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இத்தகைய கொடுமைகள் தமிழ்நாட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


காலம் கடந்தாலும் இம்மாநிலங்கள் தற்போது மேற்கொண்டுள்ள சமூக சீர்திருத்தம் வரவேற்கத்தக்க மாற்றம் ஆகும்


ராமேஸ்வரம் விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் உரை



 ராமேஸ்வரம் விழாவில் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் உரை


ராமேஸ்வரத்தில் நடைபெறும் விழாவில், ‘வணக்கம், என் அன்பு தமிழ் சொந்தங்களே' எனக்கூறி தமிழில் உரையை தொடங்கிய பிரதமர் மோடி.


விழாவில் ஆளுநர் ரவி, மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், எல்.முருகன், தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் பங்கேற்பு.


தமிழ்நாட்டின் கட்டமைப்பே மத்திய அரசின் முதன்மை நோக்கம்; கடந்த 10 ஆண்டுகளில் ரயில்வே துறையில் தமிழ்நாட்டில் 7 மடங்கு அதிக நிதி ஒத்துக்கப்பட்டுள்ளது.


இதெல்லாம் செய்த பிறகும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்; அவர்களுக்கு அழுவதற்கு மட்டுமே தெரியும், அழுது விட்டு போகட்டும் - பிரதமர் மோடி.


2014-க்கு முன்பு ரயில்வே துறையில் குறைவாகவே தமிழ்நாட்டிற்கு நிதி கிடைத்தது; அப்போதெல்லாம் கூட்டணியில் யார் இருந்தார்கள் என நான் சொல்லத் தேவையில்லை.


கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக 3 மடங்கு அதிகமான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது; இந்த ஆண்டு ரூ.6,000 கோடிக்கும் அதிகம் ஒதுக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் ஏழை மக்களுக்காக 12 லட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.


10 ஆண்டுகளில் 4 கோடிக்கும் அதிகமானோருக்கு கான்கிரீட் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.


தமிழகத்தில் ஒரு கோடிக்கும் மேலான குடும்பங்களுக்கு குழாய் வழியே குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.


மருத்துவப் படிப்பை தமிழ் மொழியில் வழங்க வேண்டும் என்பது எங்கள் விருப்பம்; ஏழை மாணவர்களும் பயன்பெறும் வகையில் தமிழில் மருத்துவப் படிப்பு வேண்டும்.


மருத்துவப் படிப்பை தமிழில் வழங்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன் - பிரதமர் மோடி.


தமிழ்நாட்டின் மீனவர்கள் மிகவும் கடினமாக உழைப்பவர்கள்.


மத்திய அரசு மீனவர்களின் சங்கட காலங்களில் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கிறது; கடந்த 10 ஆண்டுகளில் 3,700க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கையில் இருந்து மீட்பு.


தமிழக அரசு சார்பில் மத்திய அரசுக்கு எழுதும் கடிதங்கள் ஆங்கிலத்தில் இடம்பெற்றிருக்கும்; தமிழ்நாட்டில் உள்ள தலைவர்களின் கையெழுத்து கூட ஆங்கிலத்தில் உள்ளது.


தலைவர்களின் கையெழுத்தாவது தமிழில் இருக்கக் கூடாதா- பிரதமர் மோடி கேள்வி.


தமிழகத்தில் உள்ள மக்கள் மருந்தகங்கள் மூலம் 80 சதவீத தள்ளுபடி விலையில் மருந்துகள் கிடைக்கிறது.


மலிவு விலை மருந்தகங்கள் மூலம் பொதுமக்களுக்கு ரூ.700 கோடி லாபம்.


தமிழகத்தில் லட்சக்கணக்கான சிறு விவசாயிகளுக்கு பிரதமரின் கிஷான் திட்டத்தின் மூலம் ரூ.12 ஆயிரம் கோடி நிதி.


தமிழகத்தில் மீன்வள கட்டமைப்புகளை மேம்படுத்த மாநில அரசுக்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கி வருகிறது.


ரோலர் கோஸ்டரில் இருந்து கீழே விழுந்து இளம் பெண் உயிரிழப்பு

 


ரோலர் கோஸ்டரில் இருந்து கீழே விழுந்து இளம் பெண் உயிரிழப்பு


* டெல்லி: சானக்யபுரியில் கேளிக்கை பூங்காவில் உள்ள ரோலர் கோஸ்டரில் இருந்து கீழே விழுந்ததில் பிரியங்கா (24) என்ற பெண் உயிரிழப்பு


* விரைவில் திருமணமாகவிருந்த நிலையில், வருங்கால கணவருடன் பூங்காவிற்கு சென்றபோது சோகம். போலீசார் விசாரணை


தென்மேற்கு டெல்லியின் கபாஷேரா பகுதியில் உள்ள ஒரு கேளிக்கை பூங்காவில் (Amusement Park)ரோலர் கோஸ்டர் (Roller Coaster) சவாரி செய்த இளம்பெண் ரோலர் கோஸ்டரில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சாணக்கியபுரியைச் சேர்ந்தவர் பிரியங்கா (24 வயது). இவர் நொய்டாவின் செக்டார் 3-ல் உள்ள ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் நஜாப்கரைச் சேர்ந்த நிகில் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அடுத்த ஆண்டு திருமணம் நடைபெற இருந்தது.



இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை பிரியங்கா, நிகிலுடன் கபாஷேரா பகுதியில் உள்ள ஒரு கேளிக்கை பூங்காவுக்கு சென்றார். பின்னர் இருவரும் அங்கு இருந்த ரோலர் கோஸ்டரில் சவாரி செய்தனர். அப்போது திடீரென ரோலர் கோஸ்டரில் உள்ள சில கம்பிகள் உடைந்ததில் பிரியங்கா ரோலர் கோஸ்டரில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். உடனடியாக அவரை நிகில் மணிப்பால் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.


அங்கு பிரியங்கா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கபாஷேரா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரியங்காவின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.


கேளிக்கை பூங்கா நிர்வாகம் பாதுகாப்பு தரங்களை சரியாக பின்பற்றவில்லை என்று பிரியங்காவின் சகோதரர் குற்றம் சாட்டியுள்ளார். கேளிக்கை பூங்கா நிர்வாகம் இது தொடர்பாக எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செந்தில் பாலாஜி வசம் இருந்த மின்சாரத்துறை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கருக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ள...