15 நாட்களுக்குள் அனைத்தையும் உரியவரிடம் வங்கிகள் ஒப்படைக்க வேண்டும்: ரிசர்வ் வங்கி உத்தரவு
உயிரிழந்த வாடிக்கையாளரின் வங்கிக் கணக்குகளை செட்டில் செய்வது தொடர்பாக, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ., எனப்படும் இந்திய ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ள வரைவு சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: உயிரிழந்த வாடிக்கையாளரின் டெபாசிட் கணக்குகள், லாக்கர் டிபாசிட்கள், பாதுகாப்பில் உள்ள பொருட்கள் ஆகியவற்றை கேட்டு, குடும்பத்தினர் அல்லது நியமனதாரர் விண்ணப்பிப்பது வழக்கம். அதுபோன்ற விண்ணப்பம் பெறப்பட்ட நாளில் இருந்து 15 நாட்களுக்குள், அனைத்தையும், உரியவரிடம் வங்கிகள் ஒப்படைக்க வேண்டும். வங்கிகள், டிபாசிட் கணக்குகளின் தொகையை ஒப்படைக்க 15 நாட்களுக்கு மேல் எடுத்துக் கொண்டால், தாமதமாகும் நாட்களுக்கு 4 சதவீத ஆண்டு வட்டியை கணக்கிட்டு வழங்க வேண்டும்.
லாக்கர் கணக்கை முடிக்க 15 நாட்களுக்கு மேல் எடுத்துக் கொண்டால், தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் வங்கி தரப்பில் 5,000 ரூபாய் வழங்க வேண்டும். வங்கித் துறையில், 'கிளெய்ம்' நடைமுறைகளை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த உத்தரவுகள் வெளியிடப்படுகின்றன. காரணமின்றி வங்கிகள் தரப்பில் ஆகும் தாமதத்தைத் தவிர்க்க, அபராதம் விதிக்கப்படும்.
'நாமினி' எனப்படும் நியமனதாரர் இருந்தால், உயிரிழந்தவரின் இறப்புச் சான்றிதழை, அரசு அடையாள ஆவணத்துடன் அதற்குரிய படிவத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
நாமினி உயிருடன் இல்லாவிட்டால், வாரிசுதாரரின் 15 லட்சம் ரூபாய் வரையான கிளெய்முக்கு, நீண்ட நடைமுறைகளை தவிர்த்து எளிமைப்படுத்தப்பட்ட வழிமுறைகளை வங்கிகள் கையாள வேண்டும்.
வாரிசுதாரரின் சுய உறுதிமொழி, மற்ற வாரிசுதாரர்களிடம் இருந்து பெறப்படும் ஆட்சேபனை இல்லை என்ற கடிதம் ஆகியவை அவசியம். அதிக தொகை கணக்குகளின் கிளெய்முக்கு, உத்தரவாத பத்திரங்கள் உள்ளிட்ட கூடுதல் ஆவணங்களை பெற வேண்டும். இவற்றுக்கான படிவங்களை, வங்கிகளின் இணையதளங்களிலும் நேரிலும் கிடைக்கச் செய்ய வேண்டும்.
எதிர்பாராத அசம்பாவிதம் ஏற்பட்டால், நாமினி நியமிப்பதன் பலன்கள் சிக்கலை குறைக்கும் என்பது குறித்து வாடிக்கையாளர்கள் அறியும் வகையில் வங்கிகள் விளம்பரப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.