கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

207 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டன - நாளிதழ் செய்தி


207 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டன - நாளிதழ் செய்தி 


 207 அரசு பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை பூஜ்ஜியம் ஆன தால், அப்பள்ளிகள் மூடப்பட்டு வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில், 31,332 அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, 18 லட்சத்து 46,550 மாணவ - மாணவியர் படிக்கின்றனர். இதில், பல பள்ளிகளில் ஒற்றை இலக்க எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ளனர். ஒரு மாணவர் படிக்கும் பள்ளிகள் கூட உண்டு. அதுபோன்ற பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஒரு மாணவர் கூட இல்லாத நிலையில், 207 பள்ளிகள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.


இதுகுறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: நான்கு ஆண்டுகளுக்கு முன், கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்தது. கொரோனா முடிந்த பின், மீண்டும் தனியார் பள்ளிகளை நோக்கி பெற்றோர் படையெடுத்து வருகின்றனர். இதனால், அரசு பள்ளிகளில் மாணவ - மாணவியர் சேர்க்கை குறைந்து வருகிறது. இந்த ஆண்டு, ஒரு மாணவர் கூட படிக்கவில்லை என்பதால், 207 பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. மாணவ - மாணவியர் எண்ணிக்கை பூஜ்ஜியமாக உள்ள பள்ளிகளின் ஆசிரியர்கள், வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டு விட்டனர். இப்பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. இவ்வாறு கூறினார். 


அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை, ஒவ்வொரு ஆண்டும் குறைந்து கொண்டே வருகிறது. பெரும்பாலும், தங்கள் ஊர்களுக்கு அருகில் பள்ளிக்கு மாற்றல் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், குக்கிராமங்களில் இயங்கும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில், ஆசிரியர்கள் ஆர்வம் காட்டுவது கிடையாது. இதனால், பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து பூஜ்ஜியம் நிலைக்கு வந்து விடுகிறது. மாணவர்கள் அதிகம் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் இரு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். இரண்டு ஆசிரியர்களை வைத்து, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு எவ்வாறு பாடம் நடத்துவர் என நினைக்கும் பெற்றோர், சமீப காலமாக ஆங்கில வழிக் கல்வி உள்ள தனியார் பள்ளிகளில் குழந்தைகளை சேர்த்து விடுகின்றனர். மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க, அரசு பள்ளிகளில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கினால் மட்டுமே, அரசு பள்ளிகளை மூடும் நடவடிக்கை எதிர்காலத்திலாவது தவிர்க்கப் படும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். 


மாவட்ட வாரியாக எத்தனை? 

மாவட்டம் மூடப்பட்ட பள்ளி எண்ணிக்கை 

நீலகிரி 17 சிவகங்கை 16 திண்டுக்கல் 12 சென்னை 10 ஈரோடு 10 மதுரை 10 கோவை 9 ராமநாதபுரம் 9 துாத்துக்குடி 8 தர்மபுரி 7 திருப்பூர் 7 விருதுநகர் 7 கள்ளக்குறிச்சி 6 சேலம் 6 வேலுார் 6 நாமக்கல் 6 கிருஷ்ணகிரி 5 திருச்சி 5 திருநெல்வேலி 5 செங்கல்பட்டு 4 கன்னியாகுமரி 4 கரூர் 4 தஞ்சாவூர் 4 திருவள்ளூர் 4 விழுப்புரம் 4 திருவண்ணாமலை 3 புதுக்கோட்டை 3 ராணிபேட்டை 3 தேனி 3 கடலுார் 2 தென்காசி 2 திருப்பத்துார் 2 காஞ்சிபுரம் 2 நாகப்பட்டினம் 1 திருவாரூர் 1 மொத்தம் 207 



அண்ணாமலையின் சொந்த ஊர் பள்ளி மூடல் 

தமிழ்நாடு பா.ஜ.க., முன்னாள் தலைவர் அண்ணாமலையின் சொந்த ஊர் கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகில் தொட்டம்பட்டியாகும். கடந்த மக்களவை தேர்தலில், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம், ஊத்துப்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் உள்ள ஓட்டுச்சாவடியில், அண்ணாமலை ஓட்டு செலுத்தினார். தற்போது, மாணவர்கள் இல்லாத காரணத்தால், அந்த பள்ளி மூடப்பட்டுள்ளது




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Leopard attacks 13-year-old at Bannerghatta National Park

பன்னர்கட்டா தேசியப் பூங்காவில் 13 வயது சிறுவனை சிறுத்தை தாக்கிய காணொளி Leopard attacks 13 years old at Bannerghatta National Park  பெங்களூரு...