பொறியியல் சேர்க்கையில், விளையாட்டுப் பிரிவுக்கான மொத்த இடங்கள் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக, நாளை (5ம் தேதி) நடக்க வேண்டிய விளையாட்டுப் பிரிவு சேர்க்கை கலந்தாய்வு, 9, 10ம் தேதிகளுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு நாளை முதல் துவங்க திட்டமிடப்பட்டிருந்தது. நாளை, விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீட்டு இடங்களை நிரப்ப கலந்தாய்வு நடக்கும் என, ஏற்கனவே அண்ணா பல்கலை அறிவித்திருந்து. இதற்காக, விளையாட்டுப் பிரிவின் கீழ் விண்ணப்பித்த மாணவ, மாணவியருக்கு, 2ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்புப் பணியை, அண்ணா பல்கலை நடத்தி வருகிறது.
இந்நிலையில், பொறியியல் சேர்க்கையில், விளையாட்டுப் பிரிவுக்கான ஒதுக்கீட்டு இடங்களை, 100ல் இருந்து, 500ஆக அதிகரித்து, முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்தார். இதன் காரணமாக, கலந்தாய்வு தேதியை, 9, 10ம் தேதிகளுக்கு தள்ளிவைத்து அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.
இதுகுறித்து பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்திரியராஜ் கூறியதாவது: விளையாட்டுப் பிரிவுக்கான இடங்களை தமிழக அரசு உயர்த்தி அறிவித்ததும், கூடுதலாக இன்றே (நேற்றே) பல மாணவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைத்தோம். இன்றே இரு பிரிவு மாணவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடந்தது. 500 இடங்களை நிரப்ப, 1,900 மாணவர்களை அழைக்கிறோம்.
மாணவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டியிருப்பதால், 5ம் தேதிக்குப் பதிலாக, 9, 10ம் தேதிகளில், விளையாட்டுப் பிரிவு சேர்க்கை கவுன்சிலிங் நடக்கும். விளையாட்டுப் பிரிவுக்கான, "ரேங்க்&' பட்டியல், 6ம் தேதி வெளியிடப்படும்.
பொறியியல் கலந்தாய்வில் மட்டுமே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மருத்துவப் படிப்பு சேர்க்கையில், சிறப்புப் பிரிவிற்கான கலந்தாய்வு, திட்டமிட்டபடி 5ம் தேதி நடக்கும் என்று ரைமண்ட் உத்திரியராஜ் கூறினார்.