சென்னை பல்கலைக்கழகத்தில், பெண் கல்வி, சமூக சேவை உள்ளிட்ட, ஐந்து புதிய துறைகளுக்கு, செனட் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
சென்னை பல்கலையில், செனட் கூட்டம்
நடந்தது. அதில் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் விவரம்: முதுகலை
படிப்பில், 55 சதவீதம் மதிப்பெண் எடுத்தால் மட்டுமே, மாணவர்கள்,
பிஎச்.டி.,யில், சேர முடியும் என்ற விதி உள்ளது. இதை, 50 சதவீதமாக குறைக்க
வேண்டும் என, செனட் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
மாணவர்களின் ஆராய்ச்சி கட்டுரைக்கு, இந்திய பேராசிரியர், வெளிநாட்டு
பேராசிரியர், மாணவரின் வழிகாட்டி ஆகிய மூவர் அடங்கிய குழு ஒப்புதல்
அளிக்கும். இக்குழுவில், வெளிநாட்டு பேராசிரியர் இடம் பெற கூடாது என, ஒரு
பிரிவினரும், இடம் பெற வேண்டும் என, மற்றொரு பிரிவினரும் நீண்ட விவாதத்தில்
ஈடுபட்டனர். கடந்த, 2007ல், கொண்டாட வேண்டிய, சென்னை பல்கலை, நூற்றாண்டு
நூலக விழா, தாமதமாக, 2012ல், கொண்டாடப்பட்டது குறித்து விவாதம் நடந்தது.
பல்கலையில், "நெட்வொர்க் சிஸ்டம் அண்ட் இன்பர்மேஷன் டெக்னாலஜி",
"பயோ-இன்பர்மேஷன்", "மெட்ரியல் சைன்ஸ்", "சமூக சேவை", "பெண் கல்வி" ஆகிய,
ஐந்து புதிய துறைகளை துவக்க, ஒப்புதல் வழங்கப்பட்டது. சென்னை பல்கலை,
தொலைதூர கல்வி மூலம் கல்வி கற்க, வெளிநாடு மற்றும் இந்தியாவின் பல
பகுதிகளில், கல்வி மையங்கள் உள்ளன. இவற்றில், துபாயில், "கேமஸ் எஜூகேஷனல்
இன்ஸ்டிடியூட்" என்ற மையத்தில், 2008ல், கோடிக்கணக்கில் மோசடி நடந்துள்ளது.
இதன் மேல் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் விவாதம் நடந்தது.
எம்.எல்.ஏ.,க்கள் ஆப்சென்ட்: பல்கலை துறை தலைவர்கள்,
கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட, 108
பேர், செனட் குழு உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களில், அ.தி.மு.க.,
எம்.எல்.ஏ.,க்கள் வெற்றிவேல், கலைராஜன், ராஜலட்சுமி, தி.மு.க., எம்.எல்.ஏ.,
ராஜா, தே.மு.தி.க., எம்.எல்.ஏ., அனகை முருகேசன், மா.கம்யூ., எம்.எல்.ஏ.,
சவுந்திரராஜன் ஆகிய ஆறு எம்.எல்.ஏ.,க்கள், பங்கேற்கவில்லை. மொத்தம், 108
பேரில், 66 பேர் மட்டுமே, செனட் கூட்டத்தில் பங்கேற்றனர்.