கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>வெஜ் புலவு, முட்டை மசாலா தயாரிப்பது எப்படி? : பள்ளி சத்துணவு சமையலர்களுக்கு விரைவில் பயிற்சி

பள்ளிகள், அங்கன்வாடி சத்துணவில், பலவகை உணவு வகைகளை சமைப்பது குறித்த பயிற்சி, சத்துணவு சமையலர்கள், உதவியாளர்களுக்கு அளிக்கப்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரே மாதிரியான உணவுத்திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது. குழந்தைகளிடத்தில் தற்போது உணவுப் பழக்க வழக்கம் மாறியுள்ளது. இதனால், சத்துணவுத் திட்டத்தில் சாப்பிடும் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. பள்ளி இடை நிற்றல் மற்றும் ஊட்டச்சத்து குறைவு அதிகரித்ததாக அரசுக்கு தகவல் கிடைத்தது.  இதை மாற்றும் முயற்சியாக, பள்ளிகளில், குழந்தைகள் விரும்பி சாப்பிடும், பல வகை உணவுகளை அளிக்க அரசு முடிவெடுத்தது.  சென்னையில், தாமு உள்ளிட்ட, சில பிரபல சமையல் வல்லுனர்கள், ஊட்டச்சத்து நிபுணர்களின் ஆலோசனையுடன், புதிய உணவுகளை, சத்து குறையாமல் தயாரித்து வழங்க திட்டமிடப்பட்டது.  சென்னை சைதாப்பேட்டை மற்றும் திருச்சி, ஸ்ரீரங்கம் தொகுதியில் உள்ள ஒரு பள்ளியிலும், சோதனை ரீதியாக இந்த திட்டம் அமல்படுத்தப் பட்டது. அப்போது, பலவகை சாதங்களை குழந்தைகள் விரும்பி சாப்பிட்டது கண்டறியப் பட்டது. இதையடுத்து, ஊட்டச்சத்து மிகுந்ததாக, அந்த சாதங்களை தருவது தொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டு, இத்திட்டத்தை, இம்மாதம் 2ம் தேதி, சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதன்படி, 13 சாத வகைகள், மசாலா, மிளகுத்தூள் முட்டை என, நான்கு முட்டை உணவு வகைகள், உருளைக்கிழங்கு பொரியல் உள்ளிட்டவை, வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.  வாரந்தோறும் மாறும் இந்த உணவு வகைகள், சோதனை அடிப்படையில், மாவட்டத்திற்கு ஒரு பகுதியில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்கு முதல்கட்டமாக, சத்துணவு திட்ட சமையலர், அங்கன்வாடி ஊழியர்களுக்கு, பல வகை உணவு சமைப்பது குறித்து பயிற்சியளிக்க சத்துணவுத் திட்டத்துறை முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போது, சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர், சமையல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இப்பணி விரைவில் முடிந்து விடும். மாவட்டம் தோறும் பணியாளர்கள் பற்றாக்குறை இல்லாத பகுதியை தேர்வு செய்து, அதில் உள்ள சமையலர்கள், உதவியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்களுக்கு, பலவகை உணவு சமைத்தல், அதில் சேர்க்க வேண்டிய பொருட்களின் அளவு குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில், கடைகளில் கிடைக்கும், "ரெடிமேட்' பொடி வகைகளை பயன்படுத்தக் கூடாது என்றும், புளியோதரைக்கு தேவையான புளிக்காய்ச்சல், அன்றாடம் தயாரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமையலர்களுக்கான பயிற்சி விரைவில் துவங்க உள்ளது. தொடர்ந்து, பல வகை உணவுகள் மாணவர்களுக்கும், அங்கன்வாடி குழந்தைகளுக்கும் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-11-2024

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 13-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால்:பொருட்பால் அதிகாரம் :தீ நட்பு குறள...