"திருவிதாங்கூர் சித்த வைத்திய சங்கம் நடத்தும், சித்த மருத்துவக்
கல்லூரிக்கு, சித்த மருத்துவப் பட்டப் படிப்புக்கு, மத்திய அரசு
அனுமதியளிக்க வேண்டும்" என, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், புதுக்கடை அருகில், முஞ்சிறையில்,
ஏ.டி.எஸ்.வி.எஸ்., சித்த மருத்துவக் கல்லூரி உள்ளது. அகில திருவிதாங்கூர்
சித்த வைத்திய சங்கம், இந்தக் கல்லூரியை நடத்துகிறது. 1905ம் ஆண்டு முதல்,
இந்தக் கல்லூரி செயல்படுகிறது. மருத்துவமனையும் இயங்குகிறது. 2001ம் ஆண்டு
முதல், சித்த மருத்துவத்தில், பட்டப் படிப்பை (பி.எஸ்.எம்.எஸ்.,) நடத்தி
வருகிறது.
இதற்கான அனுமதியை, மத்திய சுகாதாரத் துறை வழங்கி வந்தது. கடந்த ஆண்டு,
மார்ச் மாதம், கல்லூரியை, இந்திய மருத்துவத்துக்கான மத்திய கவுன்சில் ஆய்வு
செய்தது. "போதிய ஆசிரியர்கள் இல்லை; மருத்துவமனையில், உள்நோயாளி,
புறநோயாளிகள் போதிய அளவில் இல்லை" என, சித்த மருத்துவப் பட்டப்
படிப்புக்கு, அனுமதி வழங்க மறுத்து விட்டது.
ஆகஸ்ட் மாதம், மத்திய சுகாதாரத் துறை, இந்த உத்தரவை பிறப்பித்தது. இதை
எதிர்த்து, சென்னை ஐகோர்ட்டில், ஏ.டி.எஸ்.வி.எஸ்., சித்த மருத்துவக்
கல்லூரி சார்பில், மனுத் தாக்கல் செய்யப்பட்டது.மனுவை, நீதிபதி
அரிபரந்தாமன் விசாரித்தார். மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர்
டி.ஆர்.ராஜகோபாலன் ஆஜரானார்.
நீதிபதி அரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு: கல்லூரி மற்றும்
மருத்துவமனையை, 60 ஆண்டுகளுக்கும் மேல், திருவிதாங்கூர் சித்த வைத்திய
சங்கம் நடத்தி வருகிறது. இந்திய மருத்துவ மத்திய கவுன்சிலின் பரிந்துரைகளை,
மத்திய சுகாதாரத் துறை ஏற்கவில்லை என்றால், புதிதாக ஆய்வு நடத்தி, அறிக்கை
பெற்றிருக்கலாம்.
இந்தியாவின் தென்முனையில், கல்லூரி உள்ளது. ஒரு லாரியில் ஏற்றக்கூடிய
அளவுக்கு, ஆவணங்களை எடுத்துக் கொண்டு, டில்லி வர வேண்டும், என, கூற
முடியாது. மத்திய கவுன்சிலின் சான்றிதழை நம்பவில்லை என்றால், மீண்டும்
ஆய்வு நடத்த உத்தரவிட்டிருக்கலாம். ஆனால், கல்லூரி தரப்பில் அனைத்து
ஆவணங்களையும் எடுத்து வர தவறி விட்டது, என, மத்திய அரசு கூறியுள்ளது.
மத்திய கவுன்சிலின் வழக்கறிஞர், 25 ஆசிரியர்கள் இருந்தால் போதுமானது,
என, கூறியுள்ளார்; ஆனால், கல்லூரியில், 27, ஆசிரியர்கள் உள்ளனர். இந்திய
மருத்துவ முறையில், கல்வி போதிக்கப்படுகிறது. அலோபதி மருத்துவக்
கல்லூரிகளை, இதனுடன் ஒப்பிடக்கூடாது.
எனவே, மத்திய சுகாதார அமைச்சகத்தின் கீழ் வரும், "ஆயுஷ்" துறையின்
உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. 40 மாணவர்களை கொண்டு, சித்த மருத்துவத்தில்
பட்டப் படிப்பு நடத்துவதற்கு, 2011-12 மற்றும் 2012-13ம் கல்வியாண்டுக்கு,
உடனடியாக அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு, நீதிபதி அரிபரந்தாமன்
உத்தரவிட்டுள்ளார்.