கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>காலும் கை கொடுக்கும்!

 
கேன்சரை உலகத்தை விட்டே விரட்டுவதே டெர்ரி பாக்ஸுடைய இலட்சியமாக இருந்தது !! வரலாற்றில் நாம் படிக்க வேண்டிய பக்கங்கள் !!!

டெர்ரி ஃபாக்ஸுக்கு அப்போது 18 வயது. தனக்கு கேன்சர் என்பதை நம்பவே முடியாமல் இருந்தார். அவரது காலில் தீராத கடுமையான வலி இருந்து வந்தது. அதற்கு காரணம், அவருக்கு நடந்த கார் விபத்து என்று நம்பிக் கொண்டிருந்தார். மருத்துவர்களோ கேன்சர் என்றார்கள். முழங்காலுக்க
ு கீழே காலை எடுத்தே ஆகவேண்டும், இல்லாவிட்டால் உயிருக்கு உலை வைத்துவிடும் என்று எச்சரித்தார்கள். விளையாட்டுத் துறையில் எவ்வளவோ சாதிக்க வேண்டிய கனவுகள் அவருக்கு இருந்தது. தன் தாய்நாடான கனடாவுக்கு தடகளத்துறையில் பதக்கங்களை குவிக்கும் லட்சியம் இருந்தது. லட்சியம் வெறும் கனவாகவே முடிந்துவிடுமோ என்று டெர்ரி மனம் வெதும்பினார்.

விளையாட்டுக் காதலரான டெர்ரி சிறுவயதில் கால்பந்து, ரக்பி, பேஸ்பால் மற்றும் டைவிங் ஆகிய விளையாட்டுகளில் தீவிர ஆர்வம் செலுத்தினார். பள்ளிப் பருவத்தில் கூடைப்பந்து மீது தீராத வெறி அவருக்கு இருந்தது. அப்போது ஐந்தடி உயரம் மட்டுமே இருந்த டெர்ரி அசாத்தியப் பயிற்சி மூலமாக சிறப்பான வீரராக திகழ்ந்தார். டெர்ரியின் தந்தை ரோலி ஃபாக்ஸ் ஒருமுறை தன் மகனைப் பற்றி குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது. “டெர்ரியை விட சிறந்த வீரர்கள் பலர் இருந்திருக்கலாம். அவர்கள் டெர்ரியை விட சிறப்பாக அவனோடு விளையாடியிருக்கலாம். ஆனாலும் வெற்றிக்கனியை சுவைக்கும் வரை டெர்ரி சோர்வடையாமல் விளையாடிக் கொண்டேயிருப்பான். அவன் வெற்றியின் சிகரத்தைத் தொடும் வரை எதிராளியும் அவனோடு விளையாடித்தான் ஆகவேண்டும்”. டீனேஜ் வயதுகளில் டைவிங் விளையாட்டுகளில் டெர்ரி வெற்றி மீது வெற்றி கண்டார்.

நவம்பர் 12, 1976. எதிர்பாராத அந்த கார் விபத்து. அரை டன் எடையை ஏற்றிவைத்திருந்த டிரக் ஒன்றின் மீது அவர் பயணித்த கார் மோதியது. டிரைவர் எந்த சேதாரமுமின்றி வெளியே வர, டெர்ரிக்கு மட்டும் வலது முழங்காலில் நல்ல அடி. ஆயினும் விரைவில் குணம்பெற்று வழக்கமான விளையாட்டுகளை விளையாடி வந்தார். அடுத்த ஆண்டு மீண்டும் அடிப்பட்ட இடத்திலேயே வலி அதிகமாக, மருத்துவர்கள் பரிசோதித்து ‘கேன்சர்’ என்றார்கள். டெர்ரியின் லட்சியங்களில் இடி விழுந்தது. தொடையில் தொடங்கி, முழங்காலுக்கு கீழாக காலை முற்றிலுமாக வெட்டி எறிவதைத்தவிர வேறு வழியே இல்லை.

கேன்சருக்கு போதிய மருத்துவமில்லை என்பதை டெர்ரி அறிந்தார். கேன்சர் ஆராய்ச்சிக்கு ஏராளமான பணம் செலவிடப்பட வேண்டியதின் அவசியத்தை உணர்ந்தார். ஒவ்வொரு கனடியரிடமும் ஒரு டாலர் வசூலித்து, கேன்சர் ஆராய்ச்சிக்காக மிகப்பெரிய தொகையை திரட்ட முன்வந்தார். கனடா முழுவதும் தொடர்ச்சியான மாரத்தான் ஓட்டம் ஓடி பணத்தை திரட்ட முடிவெடுத்தார். இந்த ஓட்டத்துக்கு ‘நம்பிக்கை ஓட்டம்’ என்று பெயரும் வைத்தார். இந்த இடத்தில் இன்னொன்றையும் சொல்ல வேண்டியிருக்கிறது. டெர்ரிக்கு இதயப்பிரச்சினையும் இருந்து வந்தது. அவர் ஓட்டத்தை தொடங்குவதற்கு ஒரு வாரம் முன்பாக இதயநிபுணர் ஒருவர் டெர்ரியை சந்தித்து, “தயவுசெய்து இந்த விபரீதமுயற்சியை எடுக்க வேண்டாம். இவ்வளவு பெரிய ஓட்டத்தை ஓடுமளவுக்கு உங்கள் இதயம் இடம் கொடுக்காது” என்று வேண்டுகோள் விடுத்தார். டெர்ரி சம்மதிக்கவில்லை. தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தார்.

ஒட்டுமொத்தமாக எட்டாயிரம் கிலோ மீட்டர்கள் ஓட வேண்டியிருந்தது. மாரத்தான் மரபுப்படி ஒரு நாளைக்கு நாற்பத்தி ஐந்து கிலோ மீட்டர் தூரம் ஓடுவதின் அடிப்படையில் 185 நாட்களில் நாட்டையே ஓடிக்கடக்க திட்டமிட்டார் டெர்ரி. அதற்கு முன்பாக நியூயார்க் நகரில் நடந்த மாரத்தான் ஓட்டம் ஒன்றில் செயற்கைக்காலோடு ஒருவர் ஓடியதை அறிந்தபின்னரே, இந்த சிந்தனை டெர்ரிக்கு வந்திருந்தது.

1980, ஏப்ரல் 12ஆம் நாள் அட்லாண்டிக் கடற்கரை ஓரத்தில் தொடங்கிய அவரது ஓட்டத்தின் இலக்கு நாட்டின் மறுகரையில் இருந்த பசிபிக் கடற்கரை. செயற்கைக்காலோடு மிக நீண்ட, அதே நேரம் தொடர்ச்சியாக ஆறுமாதங்களுக்கு ஒருவர் தன்னலமின்றி, கேன்சர் ஆராய்ச்சிக்கு பணம் திரட்ட ஓடுகிறார் என்பதை கேள்விப்பட்ட கனடிய மக்கள் அவர் ஓடிய நகரங்களில் எல்லாம் பிரம்மாண்ட வரவேற்பு அளித்தார்கள். ஒவ்வொரு கனடியரும் தம் பங்காக ஒரு டாலரை கையளித்தார்கள்.

ஒட்டாவா, ஒண்டாரியோ நகரங்களை அவர் கடந்தபோது கிட்டத்தட்ட மூவாயிரம் கிலோ மீட்டரை கடந்திருந்தார். மக்களின் வரவேற்பு அவருக்கு மிகுந்த நம்பிக்கையை தந்திருந்தது. “நான் சாலையில் காணும் ஒவ்வொருவருமே எனக்கு நம்பிக்கை தருகிறார்கள். நல்லது நடக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் ஒவ்வொருவரிடமும் இருக்கிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்பாக இதுபோன்ற முயற்சியை யாராவது மேற்கொண்டிருந்தால் கேன்சர் நோயை குணப்படுத்தக்கூடிய மருத்துவமுறையை ஒருவேளை நாம் இப்போது கண்டறிந்திருக்கலாம்” என்று பேசினார்.

இதற்கிடையே கேன்சர் தன் வேலையை காட்ட ஆரம்பித்திருந்தது. ஃபாக்ஸின் நுரையீரலை தன் கோரப்பசிக்கு இரையாக்கிக் கொண்டது. அவரது இடது நுரையீரலில் எலுமிச்சைப்பழ அளவுக்கு கேன்சர் கட்டி உருவெடுத்திருந்தது. செப்டம்பர் 1, 1980ஆம் நாளன்று தனது தொடர்ச்சியான ஓட்டத்தை பாதியில் டெர்ரி பாக்ஸ் நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 143 நாட்களில் 5,373 கிலோ மீட்டர்களை அவர் கடந்திருந்தார். டெர்ரி பாக்ஸின் ஓட்டம் தடைப்பட்டதுமே நாடு முழுவதும் தன்னெழுச்சியாக மக்கள் மாரத்தான் போட்டிகள் ஆங்காங்கே நடத்தப்பட்டு பெரும் பணம் திரட்டப்பட்டது. டெர்ரி பாக்ஸ் தேசிய நாயகனாக போற்றப்பட்டார். ஒட்டுமொத்தமாக மக்களிடையே இரண்டரைக்கோடி டாலர்கள் திரட்டப்பட்டது. ஒரு கனடியரிடம் ஒரு டாலர் என்ற டெர்ரியின் கனவு நனவானது.

1981 ஜூன் 27ஆம் தேதி மருத்துவ சிகிச்சையில் இருந்த டெர்ரிக்கு நிமோனியா காய்ச்சல் தாக்கியது. அவர் கோமா நிலைக்கு சென்றார். மறுநாள், மிகச்சரியாக தனது 23வது பிறந்தநாளுக்கு ஒருமாதம் முன்பாக அவர் மரணமடைந்தார். நாட்டின் பிரதமரும், அவைகளும் அவருக்கு அஞ்சலி செலுத்தின. அவரது இறுதிமரண ஊர்வலம் நாடெங்கும் நேரலையாக ஒளிபரப்பானது. கோடிக்கணக்கான கனடியர்கள் கண்ணீர் சிந்தினர். அதே ஆண்டு டெர்ரி பெயரில் ஒரு அறக்கட்டளை ஒன்றினை உருவாக்கி வருடந்தோறும் ‘டெர்ரி பாக்ஸ் ஓட்டம்’ என்ற பெயரில் மாரத்தான் விழிப்புணர்வு ஓட்டங்களை நடத்தி, கேன்சர் ஆராய்ச்சிகளுக்கு நிதி பெற ஏற்பாடு செய்யப்பட்டது. முதன்முதலில் நடந்த கனடாவில் நடந்த ஓட்டத்தில் சுமார் மூன்று லட்சம் பேர் கலந்துகொண்டார்கள் என்று பதிவாகியிருக்கிறது.

கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் கழிந்த நிலையில், இன்று உலகம் முழுவதும் அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் ‘டெர்ரி ஃபாக்ஸ் ஓட்டம்’ நடைபெறுகிறது. இந்த ஓட்டம் நடைபெறும் நாடுகளில் எல்லாம் டெர்ரியின் தாய்நாடான கனடாவின் தூதரகங்களை இணைந்து இந்த நிகழ்ச்சிகளை நடத்துகிறது.

சமீபத்தில் முதன்முறையாக சென்னையில் டெர்ரி ஃபாக்ஸ் ஓட்டம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் புகையிலைக்கு எதிரான வாசகங்களை கையில் ஏந்தி கலந்துகொண்டார்கள். இனி வருடாவருடம் சென்னையிலும் இந்த ஓட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. நிறைய தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும், கல்லூரி மாணவர்களும் தன்னார்வத்தோடு கலந்து கொண்டு ஓடினர்.

இந்த ஓட்டத்தினை சென்னையில் நடத்த ஐடியா கொடுத்தவர் பதினேழு வயது பள்ளி மாணவர் ஆகாஷ் துபே. கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் ஆகாஷ் சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார். “கேன்சர் சிகிச்சைக்காக எனக்கு ரத்தம் தேவைப்பட்ட போது, முகம் தெரியாத பலரும் தன்னார்வத்தோடு வந்து உதவினார்கள். சென்னையில் இப்படி ஒரு ஓட்டம் நடைபெறுவதே மக்களிடையே கேன்சர் குறித்த விழிப்புணர்வை பரவலாக்குவதற்காகதான்!”“ என்று சொன்னார் ஆகாஷ்.

கனட தூதரக அதிகாரி ஷான் வெட்டிக் கலந்துகொண்டு, இதுவரை டெர்ரி பாக்ஸ் ஓட்டங்கள் மூலமாக 300 மில்லியன் டாலர் அளவுக்கு கேன்சர் ஆராய்ச்சிக்கு நிதி திரட்டப்பட்டிருப்பதாக கூறினார். சென்னையில் திரட்டப்பட்ட நிதி டாடா மெமோரியல் சென்டரின் கேன்சர் ஆராய்ச்சிக்க்கு வழங்கப்படுகிறதாம்.

டெர்ரி பாக்ஸின் லட்சியம் வெறுமனே ஓடுவது மட்டுமல்ல. கேன்சரை உலகத்தை விட்டே ஓட்டுவது. அந்நிலை விரைவில் மருத்துவ ஆராய்ச்சிகள் மூலமாக மலரும் என நம்புவோம்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...