மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் கவிதை ,
ஆனந்த விகடன் இதழிலிருந்து....
கோயில் திண்ணை மறு வருடம்
கோணிப் பையே குடையாக
செருப்பே இல்லா நடைப் பயணம்
என்றே வளர்ந்தது என் கல்வி
முழுதாய் கற்றது கோவையில் தான்
எல்லாம் அரசுப் பள்ளியில்தான்
இருந்தும் நிலவில் நீர் கண்டேன்
எப்படி என்று பலர் கேட்டார்
தாய்மொழிக் கல்வியின் பலனென்று
வாய்மொழி கொண்டு நானுரைத்தேன்
அந்ததோ இன்று எனதூரில்
ஆங்கோர் தாயும் மடிந்தாளே
அவளது மகனை பள்ளியிலே
ஆங்கிலக் கல்வியில் கற்பிக்க
அவளது ஏழ்மை துரத்தியதால்
தீயில் கருகிச் செத்தாளாம்
சேதியைக் கேட்டு நான் நொந்தேன்.
ஏழ்மை என்பது பணத்தாலா?
அறியா மனத்தின் நிலையாலா?
அரசுப் பள்ளி பாழல்ல
அன்னைத் தமிழும் பாழல்ல
அன்னைத் தமிழும் பாழல்ல
அறியா மனமே பாழென்பேன்
இதை அனைவரும் உணரும் வகையாக
வீடுகள் தோறும் சேர்த்திடுவோம்
இனியொரு தாய் வேகும் முன்னே
அறியா நிலையைத் தீயிட்டழிப்போம்!