போலிச் சான்றிதழ் மூலம் அரசுப்பள்ளியில் இருபது ஆண்டுகளாக தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்த பெண் ஆசிரியர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.
தர்மபுரி மாவட்டம் நெடுமாறன் நகரைச் சேர்ந்தவர் குமணன். இவருடைய மனைவி கண்ணம்மாள் (52). இவர், பாலக்கோடு அருகே உள்ள திம்மராயனஅள்ளி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.
அண்மையில், அரசுப் பள்ளி ஆசிரியர்களின்
கல்விச் சான்றிதழ்கள் தணிக்கை செய்யப்பட்டது. இதில் கண்ணம்மாளின் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ் போலியாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மாவட்டக் கல்வி அலுவலர் சண்முகவேல் மாவட்டக் குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தார். இந்தப் புகாரின்பேரில், தலைமை ஆசிரியர் கண்ணம்மாள் மீது மோசடி, போலி ஆவணம் தயாரித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து, அவரை பள்ளிக்கல்வித்துறை வெள்ளிக்கிழமை (அக். 24) பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.