பள்ளி மாணவர்களுக்கு தொண்டை அடைப்பான், கக்குவான், ரணஜன்னி போன்ற நோய்த் தொற்று பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் ஆண்டுதோறும் பொது சுகாதாரத் துறை சார்பில் தடுப்பூசி போடப்படுகிறது. அதன்படி, 1-ம் வகுப்பு (6 வயது) படிக்கும் மாணவர்களுக்கு டிபிடி (டிப்தீரியா பெர்டூசிஸ் டெட்டனஸ்) தடுப்பூசி, 5-ம் வகுப்பு (10 வயது), 10-ம் வகுப்பு (16 வயது) படிக்கும் மாணவர்களுக்கு டிடி (டெட்டனஸ் டிப்தீரியா) தடுப்பூசியும் போடப்படுகிறது.
தற்போது கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப் படவில்லை. எனவே பள்ளிக் குழந்தைகளுக்காக சிறப்பு முகாம் நடத்தி தடுப்பூசி போட சுகாதாரத் துறையினர் திட்டமிட்டுள்ளனர். அதன்படி பள்ளிக் குழந்தைகளுக்கான தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் கோவையில் இன்று (திங்கள்கிழமை) தொடங்கி டிசம்பர் மாதம் 18-ந் தேதி வரை நடக்கிறது. அதன்படி திங்கள், வியாழன், வெள்ளிக்கிழமை ஆகிய 3 நாள்களில் அந்தந்த கிராமங்களிலுள்ள அங்கன்வாடி மையங்கள், அரசுஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி போட உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சுகாதார துறை அதிகாரிகள் கூறுகையில், கோவை மாவட்டத்தில் 5 முதல் 6 வயது வரை உள்ள 48,365 மாணவர்கள், 10 வயதுள்ள 52,169 மாணவர்கள், 16 வயதுள்ள 50,652 மாணவர்கள் என மொத்தம் 1 லட்சத்து 51 ஆயிரத்து 186 மாணவர்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது. அவர்கள், சிறப்பு முகாம்களில் பங்கேற்று கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றனர்.