தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், 6 கோடியே 10 லட்சத்து 44 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர்.
தமிழகத்தில் இன்னும் 5 மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்டந்தோறும் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, 6 கோடியே 10 லட்சத்து 44 ஆயிரத்து 358 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3 கோடியே 1 லட்சத்து 12 ஆயிரத்து 370.
பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 3 கோடியே 9 லட்சத்து 25 ஆயிரத்து 603. மூன்றாம் பாலின வாக்காளர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்து 385. ஆண் வாக்காளர்களைவிட, பெண் வாக்காளர்கள் 8 லட்சத்து 13 ஆயிரத்து 233 பேர் அதிகம் உள்ளனர். தமிழகத்திலேயே ஆறு லட்சத்து 55 ஆயிரம் எண்ணிக்கையுடன் சோழிங்கநல்லூர் தொகுதியில் அதிக வாக்காளர்கள் உள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் கீழ்வேளூர் குறைந்த வாக்காளர்கள் கொண்ட தொகுதி. அங்கு 1,73,107 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர் பட்டியல் விவரங்களை elections.tn.gov.in இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம், முகவரி மாற்றம், தொகுதி மாற்றம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள டிசம்பர் 15ஆம் தேதி வரை மண்டல அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலரிடம் விண்ணப்பிக்கலாம்.
இதுதவிர, அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நவம்பர் 21 மற்றும் 22, டிசம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. அதிலும் பொதுமக்கள் பங்கேற்று திருத்தங்களை மேற்கொள்ளலாம்.
சென்னை மாநகராட்சியில் வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலின்படி, 16 சட்டமன்ற தொகுதிகளில் 39.40 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதன்படி சென்னையில் 19,39,694 ஆண் வாக்காளர்கள், 19,99,995 பெண் வாக்காளர்கள், 1015 இதர வாக்காளர்கள் என்று மொத்தம் 39,40,407 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.