எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசை பட்டியல் வெளியீடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 405 இடங்கள் கிடைக்க வாய்ப்பு சென்னை நேரு விளையாட்டரங்கில் கலந்தாய்வு நாளை தொடக்கம்
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, கலந்தாய்வு சென்னையில் நாளை தொடங்குகிறது. இதில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 405 இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் 26 அரசு மற்றும் 15 தனியார் மருத்துவக் கல்லூரிகள், 2 அரசு மற்றும் 18 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் 2020-21ம் கல்வி ஆண்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் மாணவர்கள் விண் ணப்பித்தனர். அரசு ஒதுக்கீட்டு இடங் களுக்கு 24,712 பேரும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 14,511 பேரும் விண்ணப்பித்திருந்தனர். பரிசீலனைக்குப்பின் அரசு ஒதுக்கீட்டுக்கு 23,707, நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 14,276 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.
இதற்கான தர வரிசைப் பட்டியலை சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர் சென்னையில் நேற்று வெளி யிட்டார். சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, மாணவர் தேர்வுக்குழு செயலாளர் ஜி.செல்வ ராஜன் ஆகியோர் அப்போது உடன் இருந்தனர்.
அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் நீட் தேர்வில் 720-க்கு 710 மதிப்பெண்கள் எடுத்த திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவிலைச் சேர்ந்த ஆர்.ஜன் அகில இந்திய அளவில் 8-வது இடத்தையும் தமிழக அளவில் முதலிடத்தையும் பிடித்தார். நாமக்கல்லைச் சேர்ந்த மோகனபிரியா ரவிச்சந்திரன் (705) 2-வது இடத்தையும் சென்னை புழுதிவாக்கத்தைச் சேர்ந்த ஜி.ஸ்வேதா (701) 3-வது இடத்தையும் பிடித்தனர்.
தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் தலா 5 மாணவர்களும் மாணவிகளும் இடம்பெற்றுள்ளனர். நிர்வாக ஒதுக்கீட்டுக்கான தரவரிசையில் ஷமீல் கல்லாடி 700 மதிப்பெண்களுடன் முதலிடத்தையும் அம்மு மரியம் அனில் (695) 2-ம் இடத்தையும் ஜெய் முரேகர் (691) 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
தமிழகத்தில் 313 எம்பிபிஎஸ் இடங் கள், 92 பிடிஎஸ் இடங்கள் என மொத்தம் 405 இடங்கள் 7.5 சதவீதம் உள் ஒதுக் கீட்டின்படி அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. இந்த இடங்களுக்கு விண்ணப்பித்த 972 பேரில் 951 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதன்படி, நீட் தேர்வில் 644 மதிப்பெண் கள் எடுத்த தேனி பெரியகுளம் சில்வார் பட்டியைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர் ஜீவித் குமார் முதலிடம் பிடித்தார். கள்ளக்குறிச்சி எஸ்.அன்பரசன் (646) 2-வது இடத்தையும் சென்னை எஸ்.திவ்யதர்ஷினி (620) 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
அரசு ஒதுக்கீட்டுக்கான தரவரிசைப் பட்டியலில் மாநில அரசு கல்வித் திட்டத்தில் படித்த 15,885 பேர், சிபிஎஸ்இ உள்ளிட்ட மத்திய பாடத்திட்டங்களில் படித்த 7,822 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் 9,596 பேர் நடப்பாண்டு படித்த வர்கள். 14,111 பேர் பழைய மாணவர்கள்.
சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜய பாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: தரவரிசைப் பட்டியல்கள் www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org என்ற இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. கலந்தாய்வு 18-ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. முதலில் சிறப்பு பிரிவினருக்கும் அடுத்ததாக 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறும். இதையடுத்து, பொதுப் பிரிவு கலந்தாய்வு தொடங்கும்.
கரோனா தொற்று தடுப்பு விதி முறைகளின்படி கலந்தாய்வு நடைபெற உள்ளது. தினமும் 500 மாணவர் கள் அழைக்கப்படுவார்கள். மாணவருடன் வர ஒருவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். எந்த தேதி, நேரத்தில் கலந்தாய்வுக்கு வரவேண்டும் என்று எஸ்எம்எஸ் மூலமும் இணையதளத்திலும் தகவல் தெரிவிக்கப்படும். மாணவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்க 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.