தமிழகத்தில் 9 மற்றும் 11ம் மாணவர்களுக்கு பிப்ரவரி 8ம் தேதி முதல் பள்ளிகளை திறக்க அரசு அனுமதி வழங்கி உள்ள நிலையில், மற்ற வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்குவது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்.
அமைச்சர் விளக்கம்:
கொரோனா பரவல் காரணமாக கடந்த வருட மார்ச் மாதத்தில் மூடப்பட்ட பள்ளிகள் தமிழகத்தில் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19 முதல் நேரடி வகுப்புகள் தொடங்கி உள்ள நிலையில், வரும் பிப்ரவரி 8ம் தேதி முதல் 9, 11ம் வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இந்நிலையில் மற்ற வகுப்புகளுக்கு (1 முதல் 8) பள்ளிகள் திறப்பு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு தேர்வு அட்டவணை வெளியிடப்படப்பட்டவுடன் வினா வங்கி கையேடு வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் ஹைடெக் லேப் உள்ளது என கூறிய அமைச்சர், நீட் மற்றும் ஜேஇஇ படத்திட்டங்களை குறைப்பது குறித்து மத்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும் ஏன் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி யூடியூப், கியூஆர் கோடு மற்றும் கல்வி தொலைக்காட்சி என பல்வேறு வழிமுறைகளில் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார். பின்னர் 9 முதல் 12ம் வகுப்புகள் தவிர்த்து மற்ற மாணவர்களுக்கும் பிப்ரவரி மாதத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என தெரிவித்த அமைச்சர், பிற மாநிலங்களில் 6ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது குறித்து முதல்வர் கவனித்து வருவதாக கூறியுள்ளார்.