கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்க நமக்குத் தேவை கண்ணியமான கற்பனை - சமஸ்...


திருச்சியில் செய்தியாளராக இருந்தபோது, கல்வியாளர் கிராமியன் பழக்கமானார். நகரின் பாரம்பரிய அடையாளங்களில் ஒன்றான கி.ஆ.பெ.விசுவநாதம் பள்ளியில் அவர் தலைமையாசிரியராக இருந்தார். லத்தீன் - அமெரிக்க இலக்கியப் புத்தகங்கள் இறைந்து கிடக்கும் பெரிய மேஜையின் பின்னணியிலேயே அவருடைய கண்ணாடி கச்சித மீசை முகம் நினைவுக்கு வரும். உலகம் முழுவதும் இலக்கியத்தில் நிகழும் புதிய போக்குகள், ஐரோப்பியக் கல்வித் துறையின் அப்போதைய மாற்றங்கள், அமெரிக்கத் தொழில்நுட்பத்தின் பாய்ச்சல்கள் என்று பேச நிறைய வைத்திருப்பார். குழந்தைகளுக்குப் பள்ளிக்கூடங்களே காலை உணவு வழங்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, தமிழ்நாட்டில் அவர்தான் முதலில் அப்படி ஒரு திட்டத்தைச் சமூகப் பங்களிப்போடு தன் பள்ளிக்கூடத்தில் அறிமுகப்படுத்தினார்.


பள்ளிக்கூடங்களில் மதிய உணவு வழங்குவதில் தமிழ்நாடு முன்னோடி என்றாலும், பெரும்பாலான குழந்தைகளுக்கு அது போதுமானதாக இருப்பதில்லை. கணிசமான குழந்தைகள் பசியோடு அல்லது அரை வயிறு உணவோடு பள்ளிக்கூடம் வருகின்றனர். காலைப் பிரார்த்தனைக் கூட்டங்களில் மயங்கிச் சரியும் பிள்ளைகள், வகுப்புகளில் முழுக் கவனம் செலுத்த முடியாத பிள்ளைகள், சவலைக் கண்களோடு வளையவரும் பிள்ளைகள் இவர்களைத் தன் அறைக்கு அழைத்து கிராமியன் அடிக்கடி பேசுவார். பசியோடு எவ்வளவு பேர் பள்ளிக்கூடத்துக்கு வருகின்றனர், படிப்புக்குப் பசி எவ்வளவு பெரிய சத்ரு என்பதை உணர்ந்தார். “கூலி வேலைக்குச் செல்வோர் – அது வெளிவேலைக்குச் செல்லும் ஆண்களாக இருந்தாலும் சரி, வீட்டுவேலைக்குச் செல்லும் பெண்களாக இருந்தாலும் சரி – காலையில் வேலைக்கு ஓட வேண்டும். வசதியும் கிடையாது, நேரமும் கிடையாது. வெறும் டீ பன் வயிற்றோடுதான் பல பிள்ளைகள் பள்ளிக்கூடம் வருகின்றனர். மேலும், நாம் மதிய உணவு வழங்கினாலும் ஒரு குழந்தைக்குத் தேவைப்படும் முழு ஊட்டச்சத்தை அது பூர்த்திசெய்துவிடுவதில்லை.”


பள்ளிக்கூடத்தில் பணியாற்றும் ஆசிரியர்களே உணவுக்கான செலவைப் பகிர்ந்துகொள்ளும் திட்டமாகவே காலை உணவுத் திட்டம் கிராமியனால் தொடங்கப்பட்டது. பணி ஓய்வின்போது கிடைக்கும் தொகையில் ஒரு பகுதியைப் பள்ளியின் மேம்பாட்டுக்கு வழங்கும் மரபு கி.ஆ.பெ.விசுவநாதம் பள்ளியில் உண்டு. பல ஆசிரியர்கள் காலை உணவுக்குத் தங்கள் கொடையை வழங்கினார்கள். இச்செயல்பாட்டால் தாக்கம் பெற்றார் விசாலாட்சி. திருச்சியின் இன்னொரு பாரம்பரியமிக்க பள்ளிக்கூடமான சேவா சங்கம் பள்ளியில் அவர் ஆசிரியையாக இருந்தார். தன்னுடைய ஓய்வூதிய நிதியிலிருந்து ஒரு தொகையைப் பள்ளி நிர்வாகத்திடம் அளித்து தன்னுடைய பள்ளியிலும் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட காரணமானார். அங்குள்ள ஏனைய ஆசிரியர்களும் தங்களை இணைத்துக்கொண்டனர்.


இது அப்படியே திருச்சியின் பல பள்ளிகளுக்குப் பரவலானது. அதற்குக் காரணமாக இருந்தவர் பேராசிரியர் சிவக்குமார். இந்த மனிதர், தன் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் இத்திட்டத்தைத் தொடங்கியதுடன் ஒவ்வொரு பொதுப் பள்ளியாகச் சென்று அங்குள்ள ஆசிரியர்களிடம் பேசி, இப்படியொரு திட்டத்தின் அவசியத்தை உணர்த்தினார். பள்ளி ஆசிரியர்கள் மட்டும் அல்லாது, கொஞ்சம் வசதியான பெற்றோர், அந்த வட்டாரத்தின் வணிகர்கள், பிரமுகர்கள் என்று வாய்ப்புள்ளவர்களையெல்லாம் ஒன்றிணைத்து ஒவ்வொரு பள்ளியிலும் கொடையாளர்கள் குழுக்களை அமைத்தார். அரிசிக் கடைக்காரர்களிடமிருந்து அரிசி, மளிகைக் கடைக்காரர்களிடமிருந்து மளிகைப் பொருட்கள், காய்கறிக் கடைக்காரர்களிடமிருந்து காய்கறிகள், வாய்ப்புள்ளபோது மீன், இறைச்சி இப்படியெல்லாமும்கூடக் கொடைகள் திரட்டப்பட்டன. திருச்சியின் முன்முயற்சிதான் காலை உணவுத் திட்டம் நோக்கி தமிழக அரசியலர்கள் முன்னகரக் காரணமாக இருந்தது.


மு.க.வும் ஜெ.வும்

பத்தாண்டுகளுக்கு முன்பு முதல்வராக இருந்த நாட்களில் கருணாநிதி காலை உணவுத் திட்டத்தைக் கொண்டுவருவது தொடர்பாக யோசித்தார். தமிழக மாணவர்களிடையே நிலவும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்கும் ஒரு வழியாக இத்திட்டம் பரிசீலிக்கப்பட்டது. இதைக் காட்டிலும், ‘சத்துணவில் வாரத்துக்கு ஐந்து முட்டை வழங்கும் திட்டம்’ சிக்கனமானதாக அவருக்குச் சொல்லப்பட்டதன் விளைவாக அது நோக்கி நகர்ந்தார். அடுத்து, முதல்வரான ஜெயலலிதா காலை உணவுத் திட்டத்தை யோசித்தார். ‘அம்மா உணவகத் திட்டம்’ உதித்தபோது இது பின்தள்ளப்பட்டது. 2016 அதிமுக தேர்தல் அறிக்கையில் காலை உணவுத் திட்டத்தை ஜெயலலிதா அறிவிப்பாக வெளியிட்டபோது, அடுத்து வரும் ஆட்சியில் இத்திட்டம் நிறைவேறுவதற்கான நம்பிக்கை துளிர்த்தது. ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் முதல்வரான பழனிசாமி தனியார் தொண்டு நிறுவனம் நோக்கி அதுவும் சென்னையில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் என்று காலை உணவுத் திட்டத்தை நகர்த்தியபோது அந்த நம்பிக்கை மீண்டும் கீழே தள்ளப்பட்டது.


பள்ளிக் குழந்தைகளுக்கு உணவளித்தல் தர்மம் இல்லை; உணவை அரசிடமிருந்து பெறுதல் குழந்தைகளுடைய உரிமை; உணவளிப்பது அரசின் கடமை. ஏன் நம்முடைய அரசு தன் குழந்தைகளை யார் முன்போ கையேந்த நிறுத்த வேண்டும் என்ற கேள்வி பலர் நெஞ்சத்தையும் அழுத்திக்கொண்டிருந்தது. இச்சூழலில்தான் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் ‘காலை உணவுத் திட்ட’த்துக்கு மீண்டும் உயிர் கொடுத்திருக்கிறது. திமுக, அதிமுக இரண்டுமே இத்திட்டத்தை நோக்கி கண்களைத் திருப்பியிருக்கின்றன. அதேசமயம், ‘பள்ளிக் குழந்தைகளுக்கு காலையில் பால் வழங்கப்படும்’ என்ற வாக்குறுதியோடு நிறுத்திக்கொண்டிருக்கின்றன. அதிமுக கூடுதலாக, ‘தனியார் பங்களிப்போடு சிற்றுண்டி’ என்று தன்னுடைய இப்போதைய திட்டத்தை விஸ்தரிக்க விழைகிறது. காலை உணவுக்கான நிதியைத் திரட்டுவதை இரு கட்சிகளுமே ஒரு சவாலாகக் கருதுவதாலேயே பாலோடு தங்கள் நேரடிப் பொறுப்பை நிறுத்திக்கொள்ள விரும்புகின்றன என்கிறார்கள். பிரச்சினை நிதிக் குறைப்பாடு அல்ல; பார்வைக் குறைபாடு.


உலகம் எப்படி இருக்கிறது?

உலகின் பல நாடுகள் தம் குழந்தைகளுக்குப் பள்ளிக்கூடத்திலேயே உணவு அளிக்கும் திட்டத்தைச் செயல்படுத்துகின்றன. முழுச் செலவையும் அரசே ஏற்பது, பகுதிச் செலவைச் சமூகத்திடமிருந்து பெறுவது, பெற்றோருடன் பகிர்ந்துகொள்வது, மானிய விலையில் உணவு வழங்குவது என்று பல்வேறு நிதியாதார முறைகள் கையாளப்படுகின்றன. ஒரு அரசு சாரா நிறுவனத்தின் நிபந்தனைக்கு உட்பட்டுக் குழந்தைகளை அவர்கள் முன் கையேந்தச்செய்யும் அவலத்தைக் குடிமக்களை மதிக்கும் எந்த அரசும் செய்வதில்லை. நிதி வறுமை அல்ல; கண்ணிய வறுமையும் கற்பனை வறுமையுமே இந்தியாவின் பெரிய சமூகப் பிரச்சினை. ‘ஏழைக் குழந்தைகள்தானே... கொடுப்பதைப் பெற்றுக்கொள்ளட்டும்!’ என்ற எண்ணம் நம் சமூகத்தையே பீடித்திருக்கிறது.


உலகெங்கும் மக்கள் நல அரசுகள் தம் குழந்தைகளின் நலனுக்காகவும் அவர்களுடைய உணவுக்காகவும் இன்று எப்படியெல்லாம் சிந்திக்கின்றன என்று நம் சமூகம் முதலில் கண்களைத் திறந்து பார்க்க வேண்டும்.


பின்லாந்து உதாரணம்

கல்விக்கு இன்று சர்வதேசம் முன்மாதிரியாகக் கருதும் நாடு பின்லாந்து. ‘மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த உணவு பரிமாறும் அறையும், அங்கு மாணவர்கள் செலவிடும் நேரமும் கல்வியிலிருந்து பிரித்துப் பார்க்க முடியாதது’ என்று சொல்கிறது பின்னிஷ் கல்வி வாரியம். ‘ஊட்டச்சத்துமிக்க உணவு மட்டும் அல்ல; உணவருந்தும் அறைகளில் உரையாடிக்கொண்டே சாப்பிடுவதற்கான சிறப்பான சூழலும், உணவை அழகாகக் காட்சிப்படுத்துவதும்கூட முக்கியமானது’ என்று சொல்லும் பின்லாந்து, மழலையர் பள்ளி முதல் மேனிலைப் பள்ளி வரை எல்லாப் பள்ளிகளிலும் சூடான சரிவிகித ஊட்டச்சத்து நிரம்பிய உணவை அளிக்கிறது. ‘உணவுத் தட்டில் பாதி காய்கறிகளாக இருக்க வேண்டும்; உருளைக்கிழங்கு, அரிசி கால் தட்டு இருக்க வேண்டும்; வாரம் இரு முறை மீன் அவசியம் கொடுக்கப்பட வேண்டும்; இறைச்சி அல்லது சோயாபீன்ஸ், முளைவிட்ட பயிர்கள், ஆடை நீக்கப்பட்ட பால், புளிக்கவைக்கப்பட்ட தயிர் உணவில் சேர்க்கப்பட வேண்டும்; பழங்கள், பருப்புவிதைகள் சேர்க்கப்பட்ட ஐஸ்க்ரீம் அளிக்கப்பட வேண்டும்’ என்று ஏராளமான வழிமுறைகள் பின்லாந்து அளிக்கும் உணவில் உண்டு. வான்கோழி சூப், வேகவைத்த உருளையுடன் பரிமாறப்படும் சால்மன் மீன் பின்லாந்து தன் குழந்தைகளுக்கு அளிக்கும் உணவில் அவர்களுக்குப் பிடித்தமானது.


பின்லாந்து சொல்லும் முக்கியமான செய்தி, ‘நல்ல கல்வியும் பள்ளிக்கூடத்தில் அளிக்கப்படும் ஊட்டச்சத்துமிக்க உணவும் பிரித்துப் பார்க்க முடியாதது. இது செலவல்ல; முதலீடு.’


பிரான்ஸ் உதாரணம்

கொஞ்சம் பெரிய நாடு உதாரணத்துக்கு பிரான்ஸ் செல்வோம். பிரான்ஸ் பள்ளிக்கூடங்களில் உணவு சாப்பிடுவது கல்வியின் ஓர் அங்கம். குழந்தைகள் எப்படிச் சேர்ந்து சாப்பிடுவது, உணவைப் பகிர்ந்துகொள்வது, உணவானது எப்படிச் சத்துமிக்கதாக இருக்க வேண்டும் என்பதும் படிப்பின் ஒரு பகுதியாகப் பார்க்கப்படுகிறது. உணவில் சைவத்துக்கும் ஓர் இடம் இருக்க வேண்டும் என்று போராட்டங்கள் நடைபெறும் அளவுக்கு அசைவத்தைக் குழந்தைகளுக்குத் தரும் நாடு பிரான்ஸ். பிராணிகளின் புரதம், பாலாகவோ பால் பொருட்களாகவோ உணவில் சேர்க்கப்பட வேண்டும். மாதத்தில் குறைந்தது நான்கு முறை இறைச்சியும், நான்கு முறை மீனும் தருகிறார்கள்; ஏனைய நாட்களில் முட்டை, பாலாடைக்கட்டி உணவில் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு உணவுவேளையும் 45 நிமிடங்கள். குழந்தைகள் நிதானமாக மென்று சாப்பிடுவதும் முக்கியம் என்று அரசு கருதுகிறது. ஒவ்வொரு வாரமும் பள்ளிக்கூடத்தில் என்ன உணவு என்பது மாணவர்களின் வீடுகளுக்கு முன்கூட்டித் தெரிவிக்கப்படுகிறது. வீடுகளிலும் அதையே செய்து மாணவர்களுக்குச் சலிப்பு ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக இந்த முன்னேற்பாடு. ஆண்டுக்கு இரு முறை உணவைச் சாப்பிட்டுப் பார்க்க பள்ளிக்குப் பெற்றோர்கள் வரவழைக்கப்படுகின்றனர்; வீட்டிலும் ஊட்டச்சத்து மிக்க உணவு அளிக்க உற்சாகப்படுத்தப்படுகின்றனர்.


பிரான்ஸ் சொல்லும் முக்கியமான செய்தி, ‘குழந்தைகளுக்கான உணவில் எடுத்துக்கொள்ள வேண்டிய பிரதான அக்கறை ஊட்டச்சத்து; உணவில் குழந்தைகளின் விருப்பத்துக்குமான இடம்.’


ஜப்பானிய உதாரணம்

ஆசிய உதாரணத்துக்கு ஜப்பான் செல்வோம். உணவுக் கல்வி அங்கே சட்டக் கட்டாயம். நாட்டின் கலாச்சாரம், சுகாதாரத்துடனும் இணைத்துப் பார்க்க வேண்டியது உணவு என்கிறது ஜப்பான். உள்ளூர் பாரம்பரிய உணவு. ஊட்டச்சத்துக்கு முன்னுரிமை. உணவின் கூடவே தன்னுடைய சுயசார்புக் கலாச்சாரத்தையும் மாணவர்களுக்குப் புகட்டுகிறது ஜப்பான். பள்ளிகளில் தயாராகும் உணவைப் பரிமாறுவதில் மாணவர்களும் பங்கேற்கிறார்கள். சாப்பிட்டு முடித்ததும் சாப்பாட்டுக் கூடத்தையும் சாப்பிட்ட தட்டுகளையும் பாத்திரங்களையும் சுத்தப்படுத்துவதிலும் மாணவர்களின் பங்களிப்பு உண்டு. பெரும் தொகையைக் குழந்தைகளின் உணவுக்காகப் பகிர்ந்துகொள்கிறது ஜப்பானிய அரசு. இளவயதில் குடிமக்களின் ஆரோக்கியத்துக்காக முதலீடுசெய்யப்படவில்லை என்றால், பிற்பாடு அவர்களுக்கான மருத்துவத்துக்காகச் செலவிட வேண்டியிருக்கிறது என்று ஜப்பான் சொல்கிறது.


ஜப்பான் சொல்லும் முக்கியமான செய்தி, ‘குழந்தைகளுக்கான உணவு ஒரு நாட்டின் கலாச்சாரத்துடனும் சுயாட்சித்தன்மையுடனும் பிணைக்கப்பட்டது.’


பிரேசில் உதாரணம்

வளர்ந்த நாடுகளுக்கு அப்பாற்பட்ட உதாரணத்துக்கு பிரேசில் செல்வோம். பொருளாதாரத்தில் நம்மைக் காட்டிலும் பின்தங்கிய நாடான பிரேசிலில், உணவு என்பது குடிமக்களின் அடிப்படை உரிமை. அரசமைப்புச் சட்டம் இதை உறுதிப்படுத்துகிறது. பிரேசிலில் பள்ளிக்கூட உணவு நாட்டின் உணவு உத்தியின் ஒரு அம்சம்; அது கல்வி, வேளாண்மை, உடல்நலம், உணவுப் பாதுகாப்பு ஆகியவற்றுடன் பிணைந்தது. குழந்தைகளின் ஆரோக்கியத்துடன் உள்ளூர் உணவும், குடும்ப விவசாயமும், புதிய வேலைவாய்ப்புகளும், பிராந்தியப் பொருளாதாரமும் இணைக்கப்பட்டுள்ளன.


பிரேசிலின் பெரும் பண்ணைகள் கரும்பு, காபி, ஆரஞ்சு, சோயா சாகுபடிக்குப் பேர்போனவை என்பதால், மக்கள் உண்ணும் உணவுப்பொருட்கள் சிறு விவசாயிகளின் நிலங்களிலிருந்தே விளைவிக்கப்படுகின்றன. பெரும் பண்ணையாளர்களுடன் போட்டியிட முடியாத சூழலில் சிறு விவசாயிகள் பலர் நம்மூரைப் போல விவசாயமே வேண்டாம் என்று நிலங்களைத் தரிசாகப் போட்டுவிட்டு நகரங்களை நோக்கி வேலை தேடி நகர்கின்றனர். குழந்தைகளுக்கான உணவு அளிப்பதோடு, சிறு விவசாயிகளையும் பாதுகாக்க முற்பட்ட பிரேசில் அரசு, ‘குழந்தைகளுக்கான உணவு தானியங்களில் மூன்றில் ஒரு பங்கை உள்ளூர் விவசாயிகளிடமிருந்து வாங்க வேண்டும்’ என்று ஏற்பாட்டை உருவாக்கியது. இது சிறு விவசாயத்தின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டதோடு, குழந்தைகளுக்கு நஞ்சற்ற உணவு கிடைக்கவும் வழிவகுத்தது. குழந்தைகளுக்காக ரசாயன உரம், பூச்சிக்கொல்லிகளைத் தவிர்த்து, பாரம்பரிய வேளாண் முறைப்படி தானியங்களை விளைவிக்கிறார்கள் பிரேசில் விவசாயிகள். இது நீங்கலாக, பள்ளிக்கூடங்களிலேயே தோட்டங்களும் பராமரிக்கப்படுகின்றன; அங்கிருந்தும் காய்கள், பழங்கள் பெறப்படுகின்றன. குழந்தைகளும் ஆசிரியர்களும் வளர்த்தெடுக்கும் இத்தோட்டங்களில் உள்ளாட்சி நிர்வாகங்களும் பங்கெடுத்துக்கொள்கின்றன.


ஊட்டச்சத்து மிகுந்த சுகாதாரமான உணவு, நல்ல உடல் ஆரோக்கியம், தரமான கல்வி, சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்காத விவசாயம், உள்ளூர் - கிராமப்புறப் பொருளாதார வளர்ச்சி ஆகிய வலைப்பின்னலை உணவுத் திட்டத்தின் வழி உருவாக்கியிருக்கும் பிரேசில் சொல்லும் முக்கியமான செய்தி, ‘உணவு என்பது ஒரு குடிநபரின் அடிப்படை உரிமை; குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவை வழங்குவது அரசின் கடமை.’


குழந்தைகளைக் கையேந்த விடாதீர்!

இன்று உலகின் சரிபாதிக்கும் மேற்பட்ட ஊட்டச்சத்துக் குறைவான குழந்தைகளைக் கொண்டிருக்கும் நாடு இந்தியா. ஒவ்வொரு வருடமும் ஊட்டச்சத்துக் குறைவால் ஏழு லட்சம் குழந்தைகளின் உயிர்கள் பறிபோகின்றன. தவிர, ஊட்டச்சத்துக் குறைபாடு உடையவர்களே நோய்களுக்கு எளிய இலக்காகின்றனர். நாட்டின் ஆரோக்கியத்தைப் பீடித்திருக்கும் கேடு இது. ஆக, காலை உணவுத் திட்டத்தைத் தனித்து அல்ல; ஏற்கெனவே குழந்தைகளுக்கு உணவு வழங்கும் திட்டத்தின் போதாமையைப் பூர்த்திசெய்யும் ஒரு பகுதியாகவும், ஆரோக்கியமான தேசத்தைக் கட்டமைக்கும் பணியின் ஒரு பகுதியாகவுமே நம்முடைய ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்.


இந்தியாவிலேயே இன்று பொருளாதார வளர்ச்சியில் முன்னணியில் நிற்கும் மாநிலங்களில் ஒன்று தமிழகம். காமராஜர் மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கிய காலத்தை ஒப்பிட, இன்று காலை உணவுத் திட்டத்தைத் தொடங்கிட நிதியாதாரம் இல்லை என்று சொல்ல தமிழக அரசிடம் எந்த நியாயமும் இல்லை. உணவு வெறும் உணவு மட்டும் அல்ல என்பதற்குக் குறைந்தது மூன்று தலைமுறை மனிதர்கள் நம் கண் முன்னே சாட்சியாக நிற்கிறார்கள். குழந்தைகளுக்கான மதிய உணவுத் திட்டத்தில் முன்னோடி என்று தமிழகம் மார் தட்டிக்கொள்ள இங்கு ஏற்கெனவே உள்ள அமைப்பும் ஒரு காரணம். திருச்சி முன்னுதாரணத்தில் மிக முக்கியமான அம்சம், அந்த ஆசிரியர்கள் உதவிகளை வெளியிலிருந்து பெற்றார்கள்; உணவு அந்தந்தப் பள்ளிகளில் அங்கு ஏற்கெனவே உள்ள சமையலர்களாலேயே சமைக்கப்பட்டது; வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது.


தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களுக்கு இப்போது தேவை பின்லாந்து அரசியலர்களைப் போன்றதொரு கண்ணியம், ஜப்பானிய அரசியலர்களைப் போன்றதொரு சுயமாட்சிமை, பிரேசில் அரசியலர்களைப் போன்றதொரு கற்பனை. இதயத்தின் ஆழத்தில் அன்பும் பொறுப்பும் இருந்தால், நம்மால் நம் குழந்தைகளுக்கு முழு உணவும் அளிக்க முடியும்!


- சமஸ், தொடர்புக்கு: samas@hindutamil.co.in

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Conversion to No Commodity Card - Tamil Nadu Government Press Release

பண்டகமில்லா குடும்ப அட்டையாக (No Commodity Card) மாற்றுதல் - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு  பொதுவிநியோகத் திட்டத்தில் குடும்ப அட்டைதாரர்க...