கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆசிரியர் தேர்வு வாரியம் கலைப்பு - TNPSC யிடம் ஒப்படைப்பு (நாளிதழ் செய்தி)...


ஆசிரியர் தேர்வு வாரியம், ஆயிரக்கணக்கான வழக்குகளில் சிக்கியுள்ளதால், வாரியத்தை கலைத்து, டி.என்.பி.எஸ்.சி.,யிடம் ஒப்படைக்க, அரசு திட்டமிட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.


தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள், கல்லுாரிகள், பாலிடெக்னிக்குகள் உள்ளிட்டவற்றில் ஆசிரியர் பணி காலியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வழியே நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. பள்ளிக்கல்வி துறையின் ஓர் அங்கமாக செயல்படும், டி.ஆர்.பி.,யில், ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையில், பள்ளி கல்வி இயக்குனர்கள், இணை மற்றும் துணை இயக்குனர்கள், வாரிய உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர் செயலராக செயல்படுகின்றனர்.


குவிந்த வழக்குகள்

ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு, பள்ளி, கல்லுாரி ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வுகள் உள்ளிட்டவை, டி.ஆர்.பி.,யால் நடத்தப்படுகின்றன. கல்லுாரி பேராசிரியர் பணிக்கு, நேரடியாக நேர்முகத் தேர்வு நடத்தி, ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.இந்த நடவடிக்கைகளில் பல்வேறு முறைகேடுகள், விதிமீறல்கள் நடப்பதாக, 10 ஆண்டுகளுக்கு மேலாக புகார்கள் எழுந்துள்ளன.


இது குறித்து, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைகளில் ஆயிரக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றை முடிப்பதற்கே, ஆசிரியர் தேர்வு வாரியத்தினருக்கு நேரம் போதாமல், பணி நியமன நடவடிக்கைகள் அப்படியே கிடப்பில் போடப்படுகின்றன.


இந்த வகையில், உதவி பேராசிரியர் தேர்வு, ஆசிரியர் தகுதி தேர்வு, உடற்கல்வி ஆசிரியர் நியமனம், பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, சிறப்பாசிரியர் தேர்வு என, பல நியமனங்கள் முழுமை பெறாமல், பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. இது குறித்து, முதல்வர் ஸ்டாலின் அரசு, விசாரணையை துவக்கியுள்ளது.


பள்ளி கல்வித்துறை உள்ளிட்ட, பல்வேறு துறைகளை கவனிக்கும், முதல்வரின் முதன்மை தனி செயலர் உதயசந்திரன் மற்றும் பள்ளி கல்வி முதன்மை செயலர் காகர்லா உஷா உள்ளிட்ட அதிகாரிகள், முதற்கட்ட ஆலோசனை நடத்தியுள்ளனர்.


குளறுபடியான வாரியம்

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் பிரச்னைகளுக்கு, அதன் கட்டமைப்பு குறைவு; சரியான திட்டமிடல் இல்லாமை; பணி நியமன ஆணையங்களுக்கு தேவையான சட்ட விதிகள் மற்றும் வெளிப்படை தன்மை இல்லாமை; போதிய அனுபவம் உள்ள தொழில்நுட்ப மற்றும் நிபுணத்துவம் உள்ள பணியாளர்கள் இல்லாமை போன்றவை, முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.


ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு தனியாக சட்ட பிரிவு, 'டிஜிட்டல்' தொழில்நுட்ப துறை எதுவும் இல்லை என்றும், தெரிய வந்துள்ளது. எனவே, வழக்குகளை மட்டுமே எதிர்கொள்ளும் ஆசிரியர் தேர்வு வாரியத்தை, இன்னும் செயல்பட வைப்பது, அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் என, கருத்துகள் பரிமாறப்பட்டுள்ளன.


உயர் கல்விக்கான பல நியமனங்களில், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் சரியான போட்டித் தேர்வோ, நிபுணத்துவமான நேர்முக தேர்வோ, சான்றிதழ் சரிபார்ப்பு போன்றவையோ நடத்தப்படாததும் தெரிய வந்துள்ளது. அதனால், அதிக கல்வித்தகுதி மற்றும் உயர் தரமான பட்டதாரிகள் பலர், அரசு பணிகளில் நியமிக்கப்படாமல், புறக்கணிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.


கலைப்பதே சரி

உயர் கல்வித்துறைக்கு, தனியாக தேர்வு வாரியம் அமைக்கலாம் என, கடந்த அரசில் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஏற்கனவே ஒரு வாரியமே ஒழுங்காக செயல்படாமல், ஆயிரக்கணக்கான வழக்குகளில் சிக்கியுள்ளது. அதை, இரண்டாக பிரித்தால், அரசுக்கான செலவுகள் அதிகரிப்பதுடன், வழக்குகள் இன்னும் அதிகரிக்கும் என்று, அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.


எனவே, அனைத்துக்கும் தீர்வாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தை ஒட்டுமொத்தமாக கலைத்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வழியாகவே நியமனம் மேற்கொள்ளலாம் என, முதற்கட்டமாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக, அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.


நன்றி: தினமலர்


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...