'பிக்சட் டிபாசிட்' புதுப்பிக்காவிடில் வட்டி குறைப்பு...
'வங்கிகளில் வாடிக்கையாளர்கள் வைத்துள்ள நிரந்தர வைப்புத் தொகை கணக்கிற்கான அவகாசத்தை புதுப்பிக்க தவறினால் அந்த தொகைக்கு சேமிப்பு கணக்கிற்கான வட்டி மட்டுமே வழங்கப்படும்' என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இது குறித்து வங்கி அதிகாரிகள் கூறியதாவது: வங்கி வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட தொகையை நிரந்தர வைப்புத் தொகையாக வங்கிகளில் செலுத்தி இருப்பர். அந்த வைப்புத் தொகை கணக்கிற்கான அவகாசம் முடியும் நிலையில் தானாகவே வங்கிகளில் புதுப்பித்துக் கொள்ளப்படும். தற்போது இந்த நடைமுறையை மாற்றி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இதன்படி நிரந்தர வைப்புத் தொகை கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் அதன் அவகாசம் முடியும் தருவாயில் வங்கிகளுக்கு சென்று புதுப்பித்துக் கொள்ளும் விண்ணப்பத்தை வழங்க வேண்டும். அப்படி செய்தால் நிரந்தர வைப்புத் தொகைக்கான வட்டி வழங்கப்படும். அதேநேரத்தில் புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தை வழங்கத் தவறினால் அந்த வைப்புத் தொகைக்கான வட்டி சேமிப்பு கணக்குக்கான வட்டியாக குறைக்கப்படும்.
தற்போது நிரந்தர வைப்புத் தொகைக்கு 5 சதவீத வட்டியும் மூத்த குடிமக்களுக்கு 5.5 சதவீத வட்டியும் வழங்கப்படுகிறது. நிரந்தர வைப்புத் தொகையை புதுப்பிக்கத் தவறினால் இந்த வட்டி விகிதம் 2.9 சதவீதமாக குறைக்கப்படும். இந்த வட்டி விகிதம் வங்கிகளுக்கிடையே வேறுபடும். எனவே வாடிக்கையாளர்கள் நிரந்தர வைப்புத்தொகை கணக்கை புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தை தவறாமல் வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.