பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தேதி மாற்றப்பட்டு, புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது...
அரசு பள்ளி மாணவர்களின் 7.5 சதவீத இட ஒதுக்கீடுக்கும், கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. அண்ணா பல்கலை இணைப்பில் செயல்படும் இன்ஜினியரிங் கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த ஆண்டு, 13 ஆயிரம் மாணவர்கள் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர். அதாவது, 1.75 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். அவர்களில், 1.45 லட்சம் பேர் மட்டும் கட்டணம் செலுத்தியுள்ளனர்.
இவர்களுக்கு, நாளை மறுதினம் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, 7ம் தேதி கவுன்சிலிங் துவங்கும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.இந்த தேதியில், நேற்று மாற்றம் செய்யப்பட்டு, புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. புதிய அட்டவணைப்படி, வரும், 14ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. 17ம் தேதி முதல், அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில், சேர்க்கை நடக்கிறது.
பின், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், விளையாட்டு பிரிவினருக்கும் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. 24ம் தேதி வரை இந்த ஒதுக்கீடு நடக்கிறது.பின், பொது பாடப்பிரிவு மற்றும் தொழில்கல்வி மாணவர்களுக்கு, 27ம் தேதி கவுன்சிலிங் துவங்குகிறது. பொது பிரிவுக்கு, அக்., 17; தொழில்கல்விக்கு அக்., 5ல் கவுன்சிலிங் முடிகிறது.அக்., 19 முதல், 23 வரை துணை கவுன்சிலிங்கும்; அக்., 24 மற்றும் 25ம் தேதிகளில், பழங்குடியினர் மற்றும் அருந்ததியர் பிரிவு ஒதுக்கீடும் நடக்கிறது. அக்., 25ம் தேதியுடன் கவுன்சிலிங் முடிகிறது.