கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

7 ஆண்டாக உயர்த்தப்படாத கிரீமிலேயர் வரம்பு - இரு மடங்காக உயர்த்த வேண்டும் - பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசு அறிக்கை...


7 ஆண்டாக உயர்த்தப்படாத கிரீமிலேயர் வரம்பு - இரு மடங்காக உயர்த்த வேண்டும் - பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாசு அறிக்கை...


மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான கிரிமீலேயர் வருமான வரம்பு  ரூ. 8 லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டு 7 ஆண்டுகளாகிவிட்ட நிலையில் இன்று வரை அந்த வரம்பு உயர்த்தப்படவில்லை. கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், அதை பரிசீலிக்கக் கூட மத்திய அரசு முன்வராதது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை பெரும் வருத்தத்திலும், மன உளைச்சலிலும் ஆழ்த்தியுள்ளது.


இந்தியாவில் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் கிரீமிலேயர் என்ற தத்துவம் பின்பற்றப்பட வேண்டும் என்று இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. மண்டல் ஆணைய பரிந்துரைப்படி, மத்திய அரசின் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு  வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 1992ஆம் ஆண்டில் அளித்த தீர்ப்பில் கிரீமிலேயர் என்ற தத்துவத்தை திணித்தது. அதன்படி, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் அனைவருக்கும் 27% இட ஒதுக்கீடு வழங்கப்படாது. மாறாக, அவர்களில் கிரீமிலேயர் என்றழைக்கப்படும் உயர்வருவாய் பிரிவினருக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படும்; குறைந்த வருவாய் உள்ளவர்களுக்கு மட்டுமே ஓபிசி இட ஒதுக்கீடு வழங்கப்படும். 1993-ஆம் ஆண்டில் கிரீமிலேயர் முறை அறிமுகப்படுத்தப்பட்ட போது, அதற்கான ஆண்டு வருமான வரம்பு ரூ. 1 லட்சமாக இருந்தது. அதன்பின் பணவீக்கமும், வருமானமும் குறிப்பிடத்தக்க அளவில் உயராததால் 11 ஆண்டுகளாக கிரீமிலேயர் உச்சவரம்பு உயர்த்தப்படவில்லை.


2004-ம் ஆண்டில் ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்ட கிரீமிலேயர் வரம்பு, அதன்பின் 2008-ம் ஆண்டில் ரூ.4.5 லட்சம், 2013-ஆம் ஆண்டில் ரூ. 6 லட்சம் எனப் படிப்படியாக உயர்த்தப்பட்டு, 2017-ஆம் ஆண்டில் ரூ. 8 லட்சம் என்ற அளவை அடைந்தது. அதன்பின் 2020, 2023 ஆகிய ஆண்டுகளில் கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்பட்டிருக்க வேண்டும்; ஆனால், அவ்வாறு உயர்த்தப்படாததால் தான் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் பெரும்பான்மையினரால் 27% இட ஒதுக்கீட்டை பெற முடியாத நிலை உருவாகியுள்ளது.


2020-ம் ஆண்டில் ஏற்பட்ட கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கொரோனா பெருந்தொற்று காரணமாகவும்,  கிரீமிலேயர் வரம்பை கணக்கிடுவதில் ஊதியம் மற்றும் வேளாண்மை  வருவாயையும்  சேர்த்துக் கொள்ளலாம் என்ற வல்லுனர் குழு பரிந்துரையை செயல்படுத்துவதற்கு  எழுந்த எதிர்ப்பு ஆகியவற்றின் காரணமாக அம்முயற்சி தடைபட்டது. அதற்குப் பிறகு 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அந்த ஆண்டில் அதற்கான முயற்சிகளைக் கூட மத்திய அரசு மேற்கொள்ளவில்லை என்பது வருத்தமான உண்மை.


கிரீமிலேயர் வரம்பை உயர்த்த வேண்டும் என்று பல ஆண்டுகளாக நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. அண்மையில் இது தொடர்பான வினா ஒன்றுக்கு நாடாளுமன்றத்தில் விடையளித்த மத்திய சமூகநீதித்துறை இணை அமைச்சர் வீரேந்திரகுமார், ‘‘பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை பெறுவதற்கான கிரீமிலேயர் வரம்பு  ஆண்டுக்கு ரூ.8 லட்சமாக உள்ளது. இதுவே போதுமானது என்று மத்திய அரசு கருதுகிறது. இது தொடர்பாக தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடமிருந்து எந்த பரிந்துரையும் கோரப்படவில்லை’’ என்று கூறினார். மத்திய அரசின் இந்த நிலைப்பாடு முற்றிலும் தவறானது; கள நிலைக்கு முற்றிலும் எதிரானது ஆகும்.


2017ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 7 ஆண்டுகளில் பணவீக்கம் கடுமையாக உயர்த்திருக்கிறது; அதை சமாளிக்கும் வகையில் பல்வேறு ஆதாரங்களில் இருந்து கிடைக்கும் வருமானமும் உயர்ந்துள்ளது. அதற்கு இணையாக கிரீமிலேயர் வரம்பு 2020ஆம் ஆண்டில் ரூ.12 லட்சமாகவும், 2023ஆம் ஆண்டில் ரூ.15 லட்சமாகவும் உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யப்படாததால் கடந்த சில ஆண்டுகளில் வருவாய் அதிகரித்த பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கிரீமிலேயர்களாக கருதப்பட்டு, இட ஒதுக்கீட்டு வரம்பிலிருந்து நீக்கப்பட்டு விட்டனர். இதை விட பெரிய சமூக அநீதி இருக்க முடியாது.


கிரீமிலேயர் வரம்பை உயர்த்துவதற்கான பரிந்துரையை மத்திய அரசுக்கு தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் வழங்குவது வழக்கம். ஆனால், எட்டாவது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் காலாவதியாகி இரு ஆண்டுகள் நிறைவடையவிருக்கும் நிலையில், இன்று வரை ஒன்பதாவது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக்கப்படவில்லை. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் வழக்கு தொடரப்பட்ட பிறகு தான், ஆணையத்திற்கு புதிய தலைவரும், ஒரே ஓர் உறுப்பினரும் நியமிக்கப்பட்டனர். ஆனாலும், ஆணையம்  இன்னும் செயல்படாமல் தான் கிடக்கிறது. ஒன்பதாவது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் குறித்த தேதியில் அமைக்கப்பட்டிருந்தால், அதன் பரிந்துரைப்படி கிரீமிலேயர் வரம்பு உயர்த்தப்பட்டிருக்கக் கூடும்.


கல்வியிலும், சமூக நிலையிலும் மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சமூகநீதி வழங்க வேண்டியது மத்திய அரசின் கடமை ஆகும். அக்கடமையை நிறைவேற்றும் வகையில்,  கிரிமீலேயர் வரம்பை இப்போதுள்ள ஆண்டுக்கு ரூ.8 லட்சம் என்ற அளவிலிருந்து, இரு மடங்காக, அதாவது ரூ.16 லட்சமாக உயர்த்தி மத்திய அரசு ஆணையிட வேண்டும். அத்துடன் ஒன்பதாவது தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமித்து,  அதை முழு அளவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Suspension of a teacher who slept in a government school asking students to press his feet

  அரசுப் பள்ளியில் மாணவர்களை கால் அழுத்த சொல்லி, தூங்கிய ஆசிரியர் பணியிடை நீக்கம்  Suspension of a teacher who slept in a government school ...