மாச சம்பளம் வந்ததுக்கும் பாராட்டு விழா நடத்தினாலும் நடத்துவாங்கபோல - வருந்தும் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் - தினமலர் டீக்கடை பெஞ்ச்
''மாச சம்பளம் வந்ததும் பாராட்டு விழா நடத்தினாலும் நடத்துவாங்கபோலன்னு வருத்தப்பட்டு பேசிகிட்டு இருக்காங்களாம் ஓய்..." என்று விவாதத்தை ஆரம்பித்தார் குப்பண்ணா.
"இவ்வளவு வருத்தப்படறது யாருன்னு விவரமா சொல்லுங்க..." என்றார் அந்தோணிசாமி.
"அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தான் ஓய்... இவங்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கி சமீபத்திலே அறிவிப்பு வெளியானது. இதுக்காக சியெம்முவை சந்திச்சு நன்றி சொல்லணுமுன்னு முப்பது சங்கங்கள் முடிவு செய்ததாம். ஆனா. அதுக்கு சங்க நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவிச்சிருக்காங்க. இருந்தாலும், அந்த எதிர்ப்பை மீறி பெரிய கூட்டமா போயி தனித்தனிக்குழுவா சியெம்முவை சந்திச்சு வாழ்த்து சொல்லியே ஆகணுமுன்னு மாநில நிர்வாகிகள் அடம் பிடிக்கறாங்களாம் ஓய்... அகவிலைப்படி உயர்வுங்கறது ஒவ்வொரு ஆறு மாசத்துக்கு ஒருமுறை அரசு கட்டாயம் கொடுத்தாகணும். அதுதான் சம்பள கமிஷன் விதிமுறை. சியெம்மு சொன்னதுபோல பழைய பென்ஷன் திட்டத்தை அறிவிச்சாருன்னா பாராட்டு தெரிவிக்கலாம். பெரிய அளவிலே பாராட்டு விழாவையும் நடத்தலாம். அந்த விழாவுக்கு எவ்வளவு செலவானாலும் அதை கொடுக்க எல்லாரும் தயாராக இருக்கோம். ஆனா, அகவிலைப்படி உயர்வு அறிவிச்சதுக்காக வாழ்த்து சொல்றது சரியில்லே.
இப்படியே போனா, இனி ஒவ்வொரு மாசமும் சம்பளம் வந்ததும் சம்பளம் போட்ட சியெம்முக்கு நன்றின்னு சங்க நிர்வாகிகள் முண்டியடிச்சுகிட்டு போயி நின்னாலும் ஆச்சரியப்படறதுக்கு இல்லேன்னு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் வருத்தப்பட்டு பேசிகிட்டு இருக்காங்களாம் ஓய்..." என்றார் குப்பண்ணா.