அரசுப்பள்ளியில் நடந்த ஆண்டுவிழாவில் மாணவர்கள் கட்சி சார்ந்த துண்டுடன் சாதியப்பாடலுக்கு நடனமாடியதால் சர்ச்சை
Controversy as students dance to a caste song with a party-related towel at an anniversary celebration at a government school
கிருஷ்ணகிரி மாவட்டம் - சோப்பனூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த ஆண்டுவிழாவில் மாணவர்கள் கட்சி சார்ந்த துண்டுடன் சாதியப்பாடலுக்கு நடனமாடியதால் சர்ச்சை
கிருஷ்ணகிரியில் அரங்கேறி இருக்கிறது ஒரு அதிர்ச்சி நிகழ்வு. அரசுப் பள்ளி ஆண்டு விழா நிகழ்ச்சியில் பாமக துண்டை கழுத்தில் போட்டுக் கொண்டு சாதி பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்கள் மாணவர்கள். இதை அடுத்து பெற்றோர்கள் ஆசிரியர்களுடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
பள்ளிகளில் கொலை, கொள்ளை சம்பவம், போதைப் பொருள் பயன்பாடு, தவறை தட்டிக் கேட்கும் ஆசிரியர்கள் மீது தாக்குதல், தவறான பாலியல் புகார் என மாணவர்கள் அத்துமீறி வருகின்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டிய பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளோ, அனைத்துக்கும் ஆசிரியர்களையே பலியாக்குவதால் ஆசிரியர்கள் புலம்பித் தவிக்கின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சோப்பனூர் கிராமத்தில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றிருக்கிறது. விளையாட்டுப் போட்டிகள், கவிதை, போட்டி, கட்டுரை போட்டி என பல போட்டிகள் நடைபெற்ற நிலையில் மாலையில் கலை நிகழ்ச்சிகள் நடந்துள்ளது. தங்களது திறமைகளை மாணவர்கள் வெளிப்படுத்தி உள்ளனர். அப்போது மாணவர்கள் திடீரென கழுத்தில் பாமக துண்டை போட்டுக்கொண்டு மறுமலர்ச்சி படத்தில் இடம்பெற்ற பாடலுக்கு நடனமாடி இருக்கின்றனர்.
அது மட்டுமல்லாமல் நடனம் ஆடும் போது வன்னியர் சங்கத்தின் முன்னாள் தலைவரான காடுவெட்டி குரு, சந்தன கடத்தல் வீரப்பன் ஆகியோர் படம் பொறித்த டீசர்ட்களையும் அணிந்தபடி நடனமாடி இருக்கின்றனர். இதனால் அங்கிருந்த பிற மாணவர்களும் பெற்றோர்களும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து பள்ளி நிர்வாகத்துடன் அவர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனடியாக பாடல் நிறுத்தப்பட்டு மாணவர்கள் நடனமாட அனுமதிக்கப்படவில்லை.
இதையடுத்து குறிப்பிட்ட சமூகத்தினர் ஏன் அப்பாடலுக்கு நடனம் ஆடக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அரசுப் பள்ளியில் சாதி ரீதியான பாடலுக்கு நடனமாடியதோடு பாமக கட்சித்துண்டை கழுத்தில் அணிந்து கொண்டு ஆடியது அதிர்ச்சி அளிப்பதாக கூறிய பெற்றோர், இது தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். தற்போது மாணவர்கள் ஆடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. பள்ளி ஆண்டு விழாவில் நடனம் ஆடினால், அதற்கு முன்னதாகவே பயிற்சியில் ஈடுபட்டு இருப்பார்கள். அப்படி மாணவர்கள் சாதியப் பாடலுக்கு நடனம் ஆடுவது தெரிந்தும் அதை எப்படி அனுமதித்தார்கள்? அப்போது இல்லை என்றாலும், நிகழ்ச்சி நடக்கும் போது மாணவர்கள் ஆடியதை எப்படி அனுமதித்தனர் என கேள்வி எழுப்புகின்றனர் பெற்றோர்.
>>> காணொளியை காண இங்கே சொடுக்கவும்...