மின்னல் தாக்குதல்களில் இருந்து தப்பிப்பது எப்படி?
சமீபத்தில் மின்னல் தாக்கி நான்கு சகோதரிகள் மரணமடைந்த செய்தி
நம் அனைவரையும் துக்கமடையச் செய்தது.
அவர்களை இழந்து வாடும்
அவர்தம் சொந்தங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் உரித்தாகுக.
இக்கட்டுரை வழி
மின்னல் தாக்குதல்களில் இருந்து உயிர் பிழைப்பது எப்படி? என்பதைக் காண்போம்.
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
மின்னல்களிடம் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வதற்கு முன்
மின்னல்கள் ஏன்? எப்படித் தோன்றுகின்றன? என்பதைக் குறித்து நாம் அறிந்திருக்க வேண்டும்.
மின்னல் என்பது ஒரு இயல்பான வானியல் நிகழ்வு.
தினசரி நாம் வாழும் பூமி 80 லட்சம் மின்னல்கள் தாக்குதல்களுக்கு உள்ளாகின்றது. இதன் வழியாக
நமது வளி மண்டலமும் பூமியும் பேட்டரியைப் போல் தங்களைத் தாங்களே சார்ஜ் செய்து கொள்கின்றன.
மின்னல் ஏற்படும் போது
கனப்பொழுதில் மிக மிக அதிகமான அளவு மின்சாரம் உண்டாகி, அது தான் செல்லும் வழியைத் தேடி பூமியிலோ அல்லது மேகங்களுக்குள்ளோ அடைந்து கொள்கிறது.
இடிமின்னலுடன் கூடிய வானிலை நிலவும் போது உண்டாகும் க்யூமுலோ நிம்பஸ் மேகங்கள் மெல்ல மெல்ல மேலே எழத்துவங்குகின்றன.
அந்த மேகக்கூட்டங்களின் மேல் பக்கம் காளிபிளவர் போல இருக்கும்.
இந்த மேகங்கள் 30000 அடியை நெருங்கும் போது, மின்னல்கள் ஏற்படும் நிலையை அடைகின்றன.
இத்தகைய மேகங்களுக்குள்,
பளு அதிகமான நீர் துளிகள் மேகத்திற்கு கீழே நெகடிவ் சார்ஜுடன் இருக்கும்
பளுக்குறைவான ஐஸ் துகள்கள் மேகத்திற்கு மேலே பாசிடிவ் சார்ஜை அதிகரித்துக் கொண்டே இருக்கும்.
இவ்வாறு மேகத்திரளின் எடை கூடக்கூட
இந்த இருபகுதிகளுக்கு இடையேயான
மின்னேற்ற வித்தியாசம் அதிகமாகிக் கொண்டே செல்ல..
மின்னல்கள் உள்ளேயே தோன்ற ஆரம்பிக்கும்.
இந்த மேகத்திரள் கீழே இறங்கி வர
தரைக்கு சில நூறு மீட்டர்கள் உயரத்தில் மேகம் வரும் போது,
தரையில் உயரமான பகுதியில் இருக்கும்
கட்டிடங்கள், மரங்கள், செல்போன் கோபுரங்கள் உள்ளிட்டவற்றில் இருந்து பாசிடிவ் சார்ஜ், நிலை மின் தூண்டல் (Electro static induction) மூலம் தூண்டப்படும்.
நாம் தலை கோதும் சீப்பை வைத்து பட்டாடையில் இரண்டு மூன்று தடவை தடவி விட்டு நமது கைகளில் வைத்தால் ரோமங்கள் எழுந்து நிற்பதும் இந்த நிலை மின் தூண்டலால் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கீழிருந்து நிலத்தில் இருந்து மேல்நோக்கி ஈர்க்கப்படும் இந்த பாசிடிவ் சார்ஜ் ஒருபக்கம். (upward leader)
மேலிருந்து மேகத்தில் இருந்து கீழ்நோக்கி
இறங்கத் துடிக்கும் நெகடிவ் சார்ஜ் மறுபக்கம். ( stepped leader)
இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று
தொடர்பு கொள்ளும் போது
இணைப்பு ஏற்படுகிறது.
அந்த இணைப்பு வழியாக
ஒட்டுமொத்த மின்சாரமும் நிலத்தில் கீழிறங்குகிறது.
மின்சாரம் என்றால் உங்கள் வீட்டு
என் வீட்டு அளவில்லை ( 240 வோல்ட்)
நூறு மில்லியன் முதல் 1 பில்லியன் வோல்ட் எனும் அசாதாரண அளவில்
மின்சாரம் கீழிறங்குகிறது.
மின்னல் உருவாவது புரிகிறது.
இடி எப்படி தோன்றுகிறது?
மின்னல் உருவாகும் போது ஏற்படும் இத்தனை அதிக மின்சாரம்
அதனைச் சுற்றியுள்ள காற்றை ஒரே நேரத்தில் பல ஆயிரம் செல்சியஸ் அளவுக்கு சூடாக்கி , காற்றை விரிவடையச் செய்கிறது. இதன் விளைவாக,
வெடிப்பு உருவாகி பலத்த சத்தம் எழுகிறது. அது தான் நாம் கேட்கும் "இடி" .
மின்னல் முதலில் தோன்றுகிறது.
அதன் விளைவாக இடி உருவாகிறது.
மின்னல் - ஒளி என்பதால் வேகமாகப் பயணம் செய்து நம்மை முதலில் அடைகிறது. ஒளியின் வேகம் ஒரு நொடியில் மூன்று லட்சம் கிலோமீட்டர்.
இடி - ஒலி என்பதால் மெதுவாகப் பயணம் செய்து நம்மை சற்று நேரத்திற்குப் பிறகு அடைகிறது. ஒலியின் வேகம் என்பது ஒரு நொடிக்கு கால் கிலோமீட்டருக்கு சற்று அதிகம்.
இவ்வாறாக மின்னல் இடி உருவாகும் அறிவியலை அறிந்து கொண்டோம்.
இனி மின்னல் தாக்குதல்களில் இருந்து நம்மைப் பாதுகாப்பதைக் குறித்துக் காண்போம்.
நிகழ்கால / வருங்கால வானிலை நிலவரங்களைக் கவனித்து வர வேண்டும். அதன் வழியாக, இடி மின்னலுடன் கூடிய வானிலை நிலவுமா என்பதை அறிந்து இயன்றவரை வெளிப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. குறிப்பாக மலையேற்றங்கள், ட்ரெக்கிங்கை மின்னல் நிலவக்கூடும் வானிலை அபாயம் உள்ள நாட்களில் கட்டாயம் தவிர்த்து விட வேண்டும்.
இடி மின்னல் வெளியே அடித்தால், கட்டாயம் வெளியே செல்லுதல் கூடாது.
தவிர்க்க வேண்டும்.
"இடி அடித்தால்
வீட்டுக்குள் இரு"
இதுவே காலங்காலமாக நாம் கடைபிடித்து வரும் பழக்கம். அதைத் தொடர்ந்து கடைபிடிப்போம்.
ஒருவேளை, நீங்கள் வெளியே இருக்கும் போது இடி மின்னல் தாக்கத் துவங்கினால்,
உடனடியாக வீட்டுக்குள்/ காண்க்ரீட் மோட்டார் அறை ஆகியவற்றுக்குள் செல்ல வேண்டும்.
அல்லது மேல் பக்கம் கூரையுள்ள காருக்குள் சென்று ஜன்னல்களை முழுவதுமாக மூடிக்கொண்டு உள்ளேயே இருக்க வேண்டும்.
ஒளிந்து கொள்ள வீடு இல்லாதபட்சத்தில்
இருக்கும் இடத்தில் அப்படியே குத்தவைத்து
(SQUATTING POSITION) அமர்ந்து கால்களை ஒன்றாக வைத்துக் கொண்டு தலையை உள்பக்கமாக சுருட்டி வைத்து காதுகளை கைகளைக் கொண்டு மூடி வைத்து உட்கார்ந்திருக்க வேண்டும்.
தரையில் படுக்கக் கூடாது.
கட்டாயம் தனியாக இருக்கும் மரங்கள்,
செல்போன் கோபுரங்கள், மலை முகடுகள் ஆகியவற்றைத் தவிர்த்து விட வேண்டும்.
உயரமான இடங்களில் மின்னல் அடிக்க வாய்ப்பு அதிகம்.
கட்டாயம் மின்சார கம்பிகள், இரும்பு வேலிகள், காற்றலைகளைத் தவிர்த்து விட வேண்டும்.
குளம், குட்டை, ஏரி, நீச்சல் குளம் உள்ளிட்ட
நீர்நிலைகளின் அருகில் இருக்கக் கூடாது.
கூட்டமாக மலைப் பகுதிகளுக்குச் சென்றிருக்கும் போது மின்னல் தாக்குவது தெரிந்தால், கூட்டத்தினர் ஒன்றாக இருக்கக் கூடாது. பிரிந்து பல தாழ்வான இடங்களுக்குச் சென்று விட வேண்டும்.
ஒரே இடத்தில் பலரும் இருக்கும் போது மின்னல் வெட்டினால் அனைவருக்கும் உயிராபத்து ஏற்படும். அதனால் உதவிக்கு ஆள் இல்லாமல் போய் விடும்.
மின்னல் / இடி இடிக்கும் போது
வீட்டுக்குள் இருக்கும் போது,
கட்டாயம் வயர்களுடன் தொடர்பு கொண்ட
லேண்ட் லைன் தொலைப்பேசிகள்,
தொலைக்காட்சி பெட்டிகள் உள்ளிட்ட எதையும் தொடக்கூடாது.ரேடியோ உபயோகிக்கக் கூடாது. செல்போன்கள் உபயோகிக்கலாம்
இடி மின்னல் அடிக்கும் போது மொட்டை மாடிக்குப் போவதை தவிர்த்து விட வேண்டும்.
மின்னல் அடிக்கும் போது வீட்டில் உள்ள
தண்ணீர் குழாய்களைப் பயன்படுத்தக் கூடாது. பாத்திரம் கழுவுவது, ஷவரில் குளிப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஒருவேளை மின்னல், கட்டடத்தைத் தாக்கினால், குழாய்கள் வழியாக மின்சாரம் பாய்ந்து நீர் வழியாக வருவதற்கு வாய்ப்பு அதிகம்.
கட்டாயம் ஜன்னல் மற்றும் கதவுகளுக்கு அருகில் உட்காரக் கூடாது.
காண்க்ரீட் தரைகளில் நேரடியாக படுக்கவும் கூடாது.
வெளியே இடி சத்தம் கேட்பது நின்று
முப்பது நிமிடங்கள் கழித்தே வெளியே செல்ல வேண்டும்.
மேற்கூறிய அனைத்தையும் கடைபிடித்து மின்னல் தாக்குதல் ஏற்படாமல் தற்காத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது மின்னல் தாக்கிய நபர்களுக்குச் செய்ய வேண்டிய முதலுதவி
இதோ
மின்னல் தாக்கிய நபரிடம் எந்த மின்சார பாய்ச்சலும் இருக்காது. எனவே அச்சம்
இல்லாமல் முதலுதவி செய்யலாம்.
மின்னல் தாக்கிய நபரின் பாதுகாப்புக்காகவும் உங்களின் பாதுகாப்புக்காகவும், மின்னல் தாக்க வாய்ப்பு குறைவான இடத்திற்கு அந்த நபரை மாற்றி விட வேண்டும்.
மின்னல் தாக்குதல்களால், மின்சார தாக்குதல்கள் போல
"இதய செயலிழப்பு" ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
பாதிக்கப்பட்ட நபருக்கு இதயத்துடிப்பு மற்றும் சுவாசம் இருக்கிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.
சுவாசம் மற்றும் இதயத்துடிப்பு இல்லாத சூழ்நிலையில்,
உடனே சிபிஆர் (கார்டியோ பல்மொனரி ரிசசிடேசன்) செய்யப்பட வேண்டும்.
அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வேண்டும்.
தங்களது அலைப்பேசியில் "டாமினி (Damini lightening app) டவுன்லோடு செய்து தங்கள் பகுதியில் மின்னல் ஆபத்து குறித்து முன்கூட்டிய தகவல்களைப் பெறலாம்.
இக்கட்டுரை வழியாக
மின்னல் தோன்றுவது எப்படி?
மின்னல் தாக்குதல்களில் இருந்து பாதிப்பு ஏற்படாமல் தவிர்ப்பது குறித்தும்
முதலுதவி குறித்தும் அறிந்தோம்
நன்றி
Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.