ஒன்பதாம் வகுப்பு எஸ்.சி.,- எஸ்.டி., மாணவிகளுக்கு, மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித் தொகையை, வங்கிகளில் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து மாநிலங்களிலும் இடைநிற்றல் கல்வியை தடுக்கவும், குறைந்தபட்சம் 10ம் வகுப்பாவது கட்டாயம் படிக்கவும், மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. குறிப்பாக, எஸ்.சி., -எஸ்.டி., மாணவிகளின் இடைநிற்றலை தடுப்பதோடு, மேல்படிப்பை தொடரும் வகையில் 9, 10ம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு ஆண்டுக்கு 2,000 ரூபாய் கல்வித் உதவித்தொகை வழங்குகிறது.
அந்தந்த பள்ளி நிர்வாகம் சார்பில், கல்வி உதவித்தொகை வழங்குவதில் முறைகேடு கண்டறியப்பட்டதால், இவ்வாண்டு முதல் உதவித்தொகை தேசிய வங்கி கிளைகள் மூலம் கிடைக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாணவியின் வங்கிக் கணக்கு எண், கிளையின் பெயர், குறியீட்டு எண் போன்ற தகவல்களை முதன்மை கல்வி அலுவலக ஊழியர்கள் சேகரித்து, பள்ளிக்கல்வித் துறைக்கு அனுப்புகின்றனர்.
கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 9ம் வகுப்பு படிக்கும் எஸ்.சி.,- எஸ்.டி.,மாணவிகளுக்கு மத்திய அரசு 2000 ரூபாய் உதவித்தொகையை கடந்த 2009 முதல் வழங்குகிறது.
இத்தொகையை 2 ஆண்டுக்கு எடுக்க முடியாது. 11ம் வகுப்பு சேரும்போது, எடுக்கலாம். மேல் படிப்புக்காகவே இத்தொகை வழங்கப்படுகிறது. முறைகேடுகளை தவிர்க்க, மத்திய மற்றும் மாநில அரசு வழங்கும் கல்வி உதவித் தொகைகள் இனி வங்கிகள் மூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.