சென்னை கிரீம்ஸ் சாலையில் இயங்கி வரும், டி.என்.பி.எஸ்.சி.,
அலுவலகத்திற்கு, பாரிமுனையில், 20 கோடி ரூபாய் செலவில், 6 தளங்களுடன் கூடிய
பிரம்மாண்ட கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 1.28 லட்சம் சதுர அடி
பரப்பளவு கொண்ட இந்த கட்டடத்தை, விரைவில் முதல்வர் திறந்து
வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது இயங்கி வரும்
கட்டடத்தில், போதிய அளவிற்கு வசதி இல்லாததால், பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியின் பின் பகுதியில், தனி கட்டடம்
கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆறு தளங்களுடன், 1.28 லட்சம் சதுர
அடி பரப்பளவில், கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
தற்போது, இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. மின் இணைப்பு மட்டும்,
இன்னும் தரப்படவில்லை. ஓரிரு நாளில், இந்தப் பணியும் முடிவடைந்துவிடும்
என, துறை வட்டாரம் தெரிவித்தது. முதலில், 18.27 கோடி ரூபாய் செலவில் கட்ட
திட்டமிடப்பட்டு, பின் கூடுதலாக, 1.59 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டு, பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
பெரிய கூட்ட அரங்கு, 200 பேர் அமர்ந்து தேர்வெழுத வசதியாக ஒரு பெரிய
அறை, கலந்தாய்வுக் கூடம், நேர்முகத் தேர்வு அறைகள், நூலகம், தேர்வர்களின்
குறை தீர்ப்பு மையம் என, பல்வேறு வசதிகள், இக்கட்டடத்தில்
உருவாக்கப்பட்டுள்ளன.
நுழைவாயில் முதல், நேர்முகத்தேர்வு நடக்கும் அறைகள் வரை, அனைத்து
அறைகளிலும், கேமரா பொருத்தப்பட்டு, அனைத்து செயல்பாடுகளையும்
கண்காணிப்பதற்கு, தேர்வாணையம் திட்டமிட்டுள்ளது.
இந்த கட்டடத்தை, விரைவில், முதல்வர் திறந்து வைப்பார் என,
எதிர்பார்க்கப்படுகிறது. இம்மாத கடைசியிலோ அல்லது, அக்டோபர் முதல்
வாரத்திலோ, திறப்பு விழா நடக்கலாம் என துறை வட்டாரம் தெரிவித்தது.