தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில், பி.டி.எஸ்., படிப்பிற்கான காலியிட
விவரங்களை தெளிவாக தெரிவிக்காததால், கலந்தாய்வு, ஒரு மணி நேரம்
பாதிக்கப்பட்டது.
அரசு மற்றும் தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில், காலியாக உள்ள, 125
பி.டி.எஸ்., இடங்களை நிரப்புவதற்கான, இரண்டாம் கட்ட கலந்தாய்வு,
கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி கலையரங்கில், நேற்று நடந்தது.
இந்தக் கல்லூரிகளில், பிரிவு வாரியாக, காலியாக உள்ள, பி.டி.எஸ்.,
இடங்கள் குறித்த விவரம், 15ம் தேதி, இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
இதற்கும், நேற்று கலந்தாய்வுக் கூட்டத்தின் போது, மின்னணு பலகையில்
தெரிவிக்கப்பட்ட காலியிடங்கள் குறித்த விவரத்திற்கும் வேறுபாடு இருந்தது.
இதுகுறித்து, கலந்தாய்விற்கு வந்த மாணவர்களின் பெற்றோர், உறவினர்கள்,
மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகளுடன், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால், காலை, 11:00 முதல், 12:00 மணி வரை, கலந்தாய்வு தடைபட்டது.
இதுகுறித்து, கலந்தாய்வில் பங்கேற்ற, கோவையைச் சேர்ந்த ஒருவர்
கூறியதாவது: மூன்று நாட்களுக்கு முன்பு தான், கல்லூரி வாரியாக, காலியிட
விவரங்கள், இணையத்தில் வெளியிடப்பட்டன. அதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில்
உள்ள, ஒரு தனியார் பல் மருத்துவக் கல்லூரியில், ஓ.சி., பிரிவில் ஒரு இடம்
காலியாக உள்ளதாக, குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஆனால், நேற்று கலந்தாய்வு துவங்கும்போது, அந்த இடம் காலியாக இல்லை என,
தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற குளறுபடிகளால், மருத்துவப் படிப்புகளுக்கான
கலந்தாய்வின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை, தேர்வுக் குழு செயலர் சுகுமார்
கூறியதாவது: கடந்த, 15ம் தேதி, இரண்டாம் கட்ட கலந்தாய்விற்கான உத்தேச
பட்டியல் தான் வெளியிடப்பட்டது. இப்பட்டியல் வெளியிடப்பட்ட போது,
சிறுபான்மை அல்லாத தனியார் பல் மருத்துவக் கல்லூரிகளில் சில, கலந்தாய்வு
துவங்குவதற்கு முதல் நாள் கூட, சிறுபான்மை அந்தஸ்தை பெற்றிருக்கலாம்.
இதனால், குறிப்பிட்ட கல்லூரிகளின், இட ஒதுக்கீட்டு எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு சுகுமார் கூறினார்.