அதிக நேரம் மொபைல் போன் பயன்படுத்துவோருக்கு, காதுகள் கேட்காமல் போகும்
அபாயம் இருக்கிறது என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.முன்பெல்லாம் காதில்
முணுமுணுப்பு, விசில் ஒலி, சங்கு ஊதுவது போன்ற சத்தங்கள் 60 வயதினரிடையே
தான் ஏற்பட்டது. மொபைல் போன்களை தொடர்ந்து பயன்படுத்துவதால், இப்போது 20
வயதினர் கூட இப்பாதிப்புக்கு ஆளாகின்றனர். மொபைல் போனிலிருந்து வெளிவரும்
கதிர்வீச்சினால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு 50 சதவீதம் அதிகம் எனவும்
டாக்டர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது உலக காது கேளாதோர் வாரம் (செப்.,24 - 30)
கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நேரத்தில் காதுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்
விஷயங்களில், கவனம் செலுத்துவது அவசியம்.இளைஞர்கள், "இயர்போனில்' தினமும்
சில மணி நேரமாவது பாடல்களை கேட்கின்றனர். மொபைல் போன் மியூசிக்
பிளேயர்களில், அதிக ஒலியுடன் பாடல் கேட்பவர்களுக்கு, எப்போதும் மொபைலில்
பேசிக்கொண்டு இருப்பவர்களுக்கு நிச்சயம் காதில் பாதிப்பு ஏற்படும்.
80 டெசிபலுக்கும் அதிகமான ஒலியை, தொடர்ந்து நான்கு மணி நேரம் கேட்டால்
காதுகள் செவிடாகிவிடும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது. இயர்போனில்
குறைந்த அளவு ஒலியை வைத்து, பாடல்களை சிறிது நேரம் மட்டுமே கேட்க
வேண்டும்.சாலைகளில் காணப்படும் ஒலி மாசுபாடு, உடலளவிலும், மனதளவிலும்
பாதிப்புகளை உண்டு ஏற்படுகிறது. இது குறித்த விழிப்புணர்வு,
ஒவ்வொருவருக்கும் ஏற்பட வேண்டும். அப்போது தான் இப்பாதிப்பில் இருந்து மீள
முடியும்.