"தேசிய தர ஆய்வு மற்றும் அங்கீகார குழுவின் (நாக்), அங்கீகாரம் பெறாத
பல்கலை மற்றும் கல்லூரிகளுக்கு, மத்திய அரசின் நிதி உதவி கிடைக்காது' என,
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில், "நாக்'
அங்கீகாரம் பெற்ற, 12 பல்கலைகள், 161 கல்லூரிகளுக்கான அங்கீகார காலம்
முடிவடைந்தும், அங்கீகாரத்தை புதுப்பிக்காமல் இருப்பதாக, "நாக்'
தெரிவித்துள்ளது. பல்கலைக் கழக மானியக் குழு (யு.ஜி.சி.,)வின் கீழ், தேசிய
தர ஆய்வு மற்றும் அங்கீகார குழு இயங்கி வருகிறது. பல்கலை மற்றும்
கல்லூரிகளில் உள்ள அடிப்படை கட்டமைப்பு வசதிகள், ஆசிரியர்களின் தரம்,
ஆராய்ச்சி திட்டங்களில், கல்வி நிறுவனங்கள் மற்றும் மாணவ, மாணவியரின் பங்கு
ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்படும். மேலும், தேசிய மற்றும்
சர்வதேச அளவிலான செயல்பாடுகளில், கல்வி நிறுவனங்கள் மற்றும் அதில் பயிலும்
மாணவ, மாணவியரின் பங்கு என்பது உட்பட, பல்வேறு அம்சங்களை, "நாக்' குழு
ஆய்வு செய்து முடிவெடுக்கும். ஒரு முறை பெறப்படும் அங்கீகாரம்,
ஐந்து ஆண்டுகள் வரை செல்லத்தக்கதாக இருக்கும். அதன்பின், மீண்டும் தேசிய
குழுவிற்கு விண்ணப்பித்தால், குழு அதிகாரிகள், சம்பந்தப்பட்ட கல்வி
நிறுவனங்களுக்கு நேரில் வந்து ஆய்வு செய்து, தகுதி இருந்தால், மீண்டும்
அங்கீகாரம் வழங்க சிபாரிசு செய்வர் .உயர்கல்வி நிறுவனங்களை பொறுத்தவரை,
"நாக்' அங்கீகாரம் பெற்றிருந்தால், சிறப்பு வாய்ந்த கல்வி நிறுவனங்களாகக்
கருதப்படுகின்றன. மேலும், "நாக்' அங்கீகாரம் இருந்தால், மத்திய அரசின்
பல்வேறு நிதி உதவிகளும் வழங்கப்படுகின்றன. மத்திய அரசின் நிதி
உதவியைப் பெற, "நாக்' அமைப்பின், அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.எனினும்,
நாடு முழுவதும் உள்ள பல்கலை மற்றும் கல்லூரிகள், "நாக்' அங்கீகாரம் பெற
ஆர்வம் காட்டுவதில்லை. தமிழகத்தில், சென்னை பல்கலை, அண்ணா பல்கலை, காமராஜர்
பல்கலை, பெரியார் பல்கலை, பாரத் பல்கலை உள்ளிட்ட, 12 பல்கலைகள், 161
கல்லூரிகள் மட்டும், "நாக்' அங்கீகாரம் பெற்றிருந்தன.ஆனால், இந்த பல்கலைகள்
மற்றும் கல்லூரிகளின் அங்கீகார காலமும், காலாவதியாகி விட்டது என்றும்,
அங்கீகாரத்தை புதுப்பிக்கவில்லை என்றும், "நாக்' தெரிவித்துள்ளது.
இந்த
விவகாரம் குறித்து, அண்ணா பல்கலை துணைவேந்தர் காளிராஜ் (பொறுப்பு)
கூறுகையில், ""உயர்கல்வி நிறுவனங்கள், "நாக்' அங்கீகார தகுதி பெறுவது
அவசியம். நாங்கள், "நாக்' அங்கீகாரம் பெற விண்ணப்பித்து உள்ளோம். விரைவில்,
"நாக்' குழு, பல்கலைக்கு வரும் என, எதிர்பார்க்கிறோம்,'' என்றார்