கல்வி பாடப் பிரிவுகளில் ஓய்வுபெற்ற ஆசிரியர்களின், 1,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாததால், மேல்நிலைப் பள்ளிகளில், தொழில் கல்வி பாடப் பிரிவுகள் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசின், மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ், 1978ம் ஆண்டு, தொழில் கல்வி பாடப்பிரிவு துவங்கப்பட்டது. மாணவர்களின் தொழில்திறன் மேம்பாட்டிற்கு, பிளஸ்1, பிளஸ் 2 வகுப்புகளில் வர்த்தகம், விவசாயம், பொறியியல் உள்ளிட்ட, ஆறு பிரிவுகளின் கீழ், மின் மோட்டார் பழுது பார்த்தல், கணக்கு தணிக்கை பயிற்சி உள்ளிட்ட, 66 பாடப்பிரிவுகள் செயல்பட்டு வந்தது.
இப்பிரிவுகளில் படித்து, உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு, 4 சதவீதம் பொறியியல் கல்லூரிகளிலும், 10 சதவீதம் பட்டயப் பிரிவுகளிலும், கலை கல்லூரிகளில், 25 சதவீதமும் இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. பாடப்பிரிவுகள் துவங்கப்பட்ட போது, அகடமிக் பிரிவுகளை ஒப்பிடும் போது, தொழில்கல்வி பிரிவுகளில், 3:1 என்ற அடிப்படையில், மாணவர்கள் சேர்க்கை இருந்தது. தற்போது, 8:1 என்ற அளவிற்கு, மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.
ஓய்வுபெறும் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதே, இந்நிலைக்கு முக்கிய காரணம். கடந்த, 1978 முதல் 1990 வரை தொழில் கல்வி பாடப்பிரிவு ஆசிரியர்கள், 5,300 பேர் நியமனம் செய்யப்பட்டனர். தற்போது, 1,000 ஆசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். இந்த பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. சில பள்ளிகளில், இப்பணியிடங்களில் பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில், மிகவும் சொற்ப சம்பளத்திற்கு, ஆசிரியர்களை நியமித்து உள்ளனர்.
பல பள்ளிகளில், ஆசிரியர்கள் நியமிக்காமல், மாணவர்கள் சேர்க்கை இல்லை என்ற தவறான காரணங்கள் கூறி, பள்ளிகளில், இத்துறை மூடப்பட்டு வருகிறது. இதுகுறித்து, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழில் கல்வி ஆசிரியர்கள் சங்க மாநில பொது செயலர் நல்லப்பன் கூறியதாவது:
கடந்த, 2007 ம் ஆண்டு முதல் ஆசிரியர் பணி நியமனம் செய்யவும், ஓய்வுபெற்ற ஆசிரியர்களின், காலி பணியிடங்களை நிரப்பவும், எவ்வித நடவடிக்கையும், அரசு மேற்கொள்ளவில்லை. மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் பள்ளிகளில், இப்பிரிவுகள் துவக்கப்படுவதும் கிடையாது.
மத்திய அரசு, கடந்த முறை தொழிற்கல்வி மேம்பாட்டுக்காக, 100 கோடி நிதி ஒதுக்கியது. இந்த நிதி, எப்படி பயன்படுத்தப்பட்டது என்பது புரியவில்லை. தொழில் கல்வி ஆசிரியர்களுக்கு, பல பாகுபாடுகள் காட்டப்படுகின்றன. பணி மூப்பு, தகுதிக்கு ஏற்ப, பிற ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் எவ்வித பதவி உயர்வும், எங்களுக்கு இல்லை என்பது, வேதனைக்குரியது.
மேலும், 27 ஆண்டுகள் பணிபுரிந்தும், நடைமுறை சிக்கல் என்ற பெயரில், 400 ஆசிரியர்கள் ஓய்வூதியம், பிற உதவிகள் ஏதும் இன்றி, ஓய்வு பெற்று உள்ளனர். இதுபோன்று, தொழில் கல்வி பாடப்பிரிவில் பாகுபாடு காட்டுவது சரியல்ல. இதற்கு, அரசு, உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.