கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

>>>ஆசிரியர்கள் பற்றாக்குறையால் தனியார் பள்ளிகளுக்கு நெருக்கடி

தமிழகத்தில், ஒட்டுமொத்தமாக, ஒரே நேரத்தில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு, அரசு பள்ளிகளில் பணி கிடைத்துள்ளதால், அவர்கள் ஏற்கனவே வேலைபார்த்த தனியார் பள்ளிகளில் இருந்து பாதியிலேயே வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால், தனியார் பள்ளிகள் ஆசிரியர் பற்றாக்குறையால் தவிப்புக்கு உள்ளாகியுள்ளன. பொது தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவியரின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது. தமிழகத்தில், கடந்த ஆண்டு வரை, அரசு பள்ளிகளில் காலியாகும் ஆசிரியர் பணியிடங்கள், பதிவு மூப்பு அடிப்படையில் நிரப்பப்பட்டு வந்தது. இதனால் ஒவ்வொரு முறையும் அதிக பட்சம், 5,000 ஆசிரியர்கள் வரை மட்டுமே பணிநியமனம் செய்யப்பட்டது. ஆனால், அதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகளுக்கு, பல மாதங்கள் வரை காலதாமதம் ஆனது. தற்போது பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமின்றி, முதுகலை பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் என, அனைத்து ஆசிரியர் பணியிடங்களும் தகுதித்தேர்வு அடிப்படையில் நியமனம் செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் அடிப்படையில், அக்டோபர் மாதத்தில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில், 18 ஆயிரம் பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர்களும், டி.ஆர்.பி., தேர்வின் மூலம், 3,000 முதுகலை ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும், நேற்று முன்தினம் சென்னையில் நடந்த விழாவில், பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும், டிச., 24ம் தேதி, பணியில் சேர உள்ளனர். இவர்களில், 90 சதவீதத்துக்கும் மேல், தனியார் பள்ளிகளில் பணிபுரிந்து வந்தனர். இவர்கள், 3,000 ரூபாய் முதல், 8,000 ரூபாய் வரை, மட்டுமே சம்பளமாக பெற்று வந்தனர். தற்போது, அரசு பணியில் சேர்ந்தவுடன், குறைந்தது, 18 ஆயிரத்துக்கும் மேல் சம்பளம் பெறுவதால், தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் திளைக்கின்றன. இவர்கள் தற்போது பணிபுரிந்து வரும், தனியார் பள்ளிகளில் இருந்து, விலகி அரசுப்பணிக்கு செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் பெரும்பாலான தனியார் பள்ளிகளில், 20 சதவீதம் முதல், 50 சதவீதம் வரை, ஆசிரியர்கள் பணியிடம் காலியாகியுள்ளது. அரசுப்பணி, சம்பளம் அதிகம் ஆகிய காரணங்களால், இவர்களை, தனியார் பள்ளியிலேயே தக்க வைப்பதற்கான முயற்சிகளும் செல்லுபடியாகவில்லை. அதிலும் குறிப்பாக, எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 பாடம் எடுத்த, பல ஆண்டு அனுபவமுள்ள ஆசிரியர்கள் பலர், கல்வியாண்டில் நடுவில், விலகி போவது, தனியார் பள்ளிக்கு பெரும் பின்னடைவையும், தேர்ச்சி விகிதம் குறையுமே என்ற கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. அதிலும் மாணவ, மாணவியர் மத்தியில், புது ஆசிரியர் மூலம் எப்படி தேர்வை சந்திப்பது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து தனியார் பள்ளி நிர்வாகி ஒருவர் கூறியதாவது: நடந்து முடிந்த ஆசிரியர் தகுதித்தேர்வை பொறுத்தவரை, ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட நிலையில், 3 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சியடைந்தனர். பள்ளிகளில் தொடர்ந்து பாடம் நடத்தி வருபவர்களால், இத்தேர்வை எளிதில் எதிர்கொள்ள முடிந்தது. இதனாலேயே தேர்ச்சி பெற்றவர்களில் பெரும்பாலானோர் தனியார் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களாக உள்ளனர். ஒட்டுமொத்தமாக அவர்கள் பணியிலிருந்து விலகுவதால், பல பள்ளிகளுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 தேர்ச்சி விகிதம், தனியார் பள்ளிகளை பொறுத்தவரை மிக முக்கியம். அப்பாடம் நடத்தும் ஆசிரியர்கள் பாதி கல்வியாண்டில், விலகுவதால், அந்த இடத்துக்கு பொருத்தமானவர்களை உடனடியாக நியமிப்பதும் கடினம். அதுமட்டுமின்றி, ஆசிரியருக்கும், மாணவருக்கும் இருந்த அதே தொடர்பு, மீண்டும் உருவாகவே மூன்று மாதம் ஆகிவிடும். அதற்குள் தேர்வு வந்து விடும் நிலை உள்ளது. இதனால் நடப்பாண்டில், பல பள்ளிகள் எதிர்பார்க்கும் தேர்ச்சி விகிதம் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கனமழை விடுமுறை அறிவிப்பு - 26.11.2024

    கனமழை காரணமாக 26-11-2024 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools on 26-11-2024...